இசையும் அரசியலும் - இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடன் ஒரு நேர்காணல்! - நேர்காணலைக் கண்டவர் - ஜோதிகுமார் -
- இசைக்கலைஞர் மொஹமெட் இக்பால் -
- இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடனான (Mohammed Iqbal) இந் நேர்காணல் ‘பதிவுகள்’ இணைய இதழுக்காக எழுத்தாளரும், சமூக,அரசியல் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரினால் நடாத்தப்பட்டது. மொஹமெட் இக்பால் அவர்கள், இலங்கையின் அதிமுக்கிய இசை வல்லுநர்களில் ஒருவர். தனது பல்கலைக்கழக நாட்களில் விக்டர் ஹாரா (Victor Hara) இசைக்குழு என்ற இசைக்குழுவை நடத்தியவர். இன்றுவரை இதே இசைக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ‘கிட்டார்’ இசைகருவியை இசைப்பதிலும், பாடுவதிலும் வல்லுநராக திகழும் திரு. மொஹமெட் இக்பாலின் பங்களிப்பு, இசை உலகில் குறிப்பிடத்தக்கது. இது போன்றே இந்நாட்டின் அரசியலிலும் இவரது இசையின் அதிர்வுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. -
கேள்வி: இதுவரை எத்தனை பாடல்களுக்கு இசையமைத்துள்ளீர்கள்?
பதில்: கிட்டத்தட்ட 40 பாடல்கள். 100 இசை கச்சேரிகள் அளவில் நிகழ்த்தியுள்ளேன். இதில் நான் வீதிகளிலும், தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சாலைகளிலும், சிறு குழுவினரிடையேயும் நடாத்தும் நிகழ்ச்சிகள் கணக்கில் அடங்காதவை ஆகும். இது தவிர சில வருடங்களில் Guitar Festival யும் நடத்தியுள்ளேன். இவைகள் அனைத்தும் மிகுந்த பணத் தேவையை உள்ளடக்குவதாய் உள்ளன. இதனால் இவற்றின் எல்லைப்பாடுகளும் புரிந்துகொள்ளத் தக்கவையே.
கேள்வி: உங்கள் பாடல்களில் முக்கியமான இரண்டை எமது வாசகர்களுக்காக தெரிவு செய்வீர்கள் என்றால் அவை எவை எவையாக இருக்கக் கூடும்?
பதில்: ‘மொனரவில’ என்ற பாடலையும் ‘மினிசா’ என்ற பாடலையும் நான் குறிப்பிடலாம்.
கேள்வி: ‘மொனரவில’ பாடல் எதைப் பற்றியது? அதன் பின்னணி என்ன?
பதில்: 1817இல், ‘ஊவா வெல்லஸ்ஸ’ இடத்தில் நடந்த மாபெரும் போராட்டமே, இலங்கையில் நடந்த, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான, முதலாவது போராட்டம் எனலாம். இதற்கு தலைமை தாங்கியவரே ‘மொனரவில கெப்படிபொல’ எனும் வீரர். இப்போராட்டத்தின் பிறகு கிட்டத்தட்ட 40 ஆயிரம் மக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொன்று குவித்தனர். அவரைப் பற்றிய பாடலே இது.