
16.11.2025, ஞாயிறு வீரகேசரி, தன் முன் பக்கத்திலேயே, பெரிய அளவில், இரு படங்களை வெளியிட்டது. முதலாவது படம்: இந்திய உயர்ஸ்தானிகர் (சந்தோஷ் ஜா சுமந்திரன்-சாணக்கியன் ஆகியோரை சந்தித்து அளவலாவுவது. இரண்டாவது: விடுதலை சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு சந்தித்து ‘சமஷ்டி'யை’ வலியுறுத்துவது. மேற்படி இரு படங்களும், ஒருபுறமிருக்க, ஜேவிபி அரசானது தான் நிறைவேற்ற போவதாய் கூறியுள்ள, புதிய அரசியல் அமைப்பில், 13வது திருத்தத்தை (அதாவது மாகாண சபையினை) உள்ளடக்குவதா அன்றி தூக்கி வீசுவதா என்று தீவிரமாய் சிந்தித்து வரும் இந்நிலையில் ‘சமஷ்டி’ உச்சரிக்கப்படுவது, முக்கியத்துவம் வாய்ந்தது.
மறுபுறத்தில், இந்தியாவை கத்தரிக்க வேண்டுமென்றால், 13ஐ கத்தரித்தாக வேண்டும் என்பது முதல் விதி. மேலும், தமிழ் மக்களை தொடர்ந்து கனவு நிலையிலேயே ஆழ்த்தி வைத்திருக்க வேண்டுமென்றாலும், முதலில் 13ஐ கத்தரித்தாக வேண்டும், என்பது இரண்டாவது விதி. இவ்விரு விதிகளுமே, எமது புலம்பெயர் அரசியலுக்கு உவப்பானது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், 13ஐ தூக்கியெறிவது, மறுபுறத்தில் ‘சமஷ்டி’யை உள்ளடக்கவே செய்யும். மொத்தத்தில், இவை அனைத்தையும் சுருக்கினால், அது சமஷ்டியா அல்லது 13 என்றா என்பதில்தான், ஒருவகையில், முடியும். இப்பின்னணியிலேயே, இவ்விரு சந்திப்புகளும் முக்கியத்துவம் பெறுவன.
ஆக, இவ் இழுபறிகள், அனைத்துமே, வடக்கு அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு உவப்பாக இருந்துள்ளதோ, அதுபோலவே, எமது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் இவ்விழுபறிகள், உவப்பானதாகவே இருக்கின்றன. காரணம், இந்நாட்டின், மாபெரும் அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவ் ஆட்சியை வலிதான முறையில் அவர்கள் தக்க வைத்து கொண்டதும் மேற்படி அரசியல் சார்ந்தது என்பதில் ஐயமில்லை.
மறுபுறம், இப்போக்குகள், அதாவது, சமஷ்டியை வலியுறுத்துவதும் (பொன்னம்பலம் குழுவினர்) மற்றும், இதற்கெதிராய் மாகாண சபைகளை அல்லது மாகாண சபை தேர்தலை வலியுறுத்தும் சுமந்திரன் போன்றோர், ஆகிய இருவருமே, இந்தியாவுக்கு இஷ்டப்பட்டவர்களாகவே தோற்றுவர். இருந்தும், இம்முரண்களை அடிப்படையாக கொண்டு, இயங்கும் இந்தியாவின் இந்திய-இலங்கை வெளியுறவு கொள்கையை கண்ணோட்டமிடுமிடத்து, அங்கே சிற்சில மாற்றங்கள் அண்மை காலங்களில் ஏற்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.