கனடாவில் சிறுகதை இலக்கியம்- ஒரு பார்வை! - மைதிலி தயாநிதி -
இக்கட்டுரையானது கனடாவிலே இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஏறத்தாழ 35 ஆண்டுகளாகத் தமிழில் படைத்த சிறுகதை இலக்கியம் பற்றிய ஒரு பருந்துப் பார்வை ஆகும். இது எனது வாசிப்பு அனுபவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை அன்று என்பதை மனதில் இருத்திக் கொண்டு மேலே வாசிக்கவும். வன்முறை காரணமாக 1983 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையிலிருந்து தமிழர் அகதிகளாகக் கனடாவில் தஞ்சம் தேடியமையே ”கனடாத் தமிழ் இலக்கியம்” எனும் நாடு வாரியான இலக்கிய வகையின் தோற்றப்பாட்டிற்குக் காரணமாய் அமையும். இவ்வாறு கனடாவிற்கும், ஐரோப்பாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் புலம் பெயர்ந்தவர்கள் படைத்த இலக்கியத்தைப் புகலிட இலக்கியம் என்றும், புலம் பெயர்ந்தவர் இலக்கியம் என்றும் அழைத்தார்கள். இரண்டையும் ஒரே பொருளில் வழங்குபவர்களும் உண்டு. அதே சமயம், புகலிட இலக்கியம் என்பது புலம் பெயர் இலக்கியத்திலிருந்து வேறுபட்டது என வாதிடுவோரும் உண்டு. பேராசிரியர் பாலசுந்தரம் தாம் எழுதிய கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் எனும் நூலில் கனடாத் தமிழ் இலக்கியம் என்ற சொற்பிரயோகத்தையே பயன்படுத்துகின்றார்.
கண்டம் வாரியாக அல்லது நாடு ரீதியாகக் கதைகளை நோக்கும் முறைமையை 1994 ஆம் ஆண்டில் தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும், இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ. வும் வெளியிட்ட பனியும் பனையும் எனும் நூலில் அவதானிக்கலாம். அத்தொகுப்பில் உள்ள கதைகளை ஆஸ்திரேலியக்கதைகள், ஐரோப்பியக்கதைகள், வட அமெரிக்கக் கதைகள் என முப்பிரிவினதாகத் தொகுப்பாசிரியர்கள் வகுத்துள்ளனர். மேலும், ஐரோப்பியக் கதை ஒவ்வொன்றும் எந்தெந்த நாட்டிற்குரியது என்ற செய்தியையும் அவர்கள் தந்துள்ளனர். இப் பகுப்பு முறையின் அடிப்படை என்ன என்பது குறித்து இந்திரா பார்த்தாசாரதி பின்வருமாறு கூறுகின்றார்.