மு.புஷ்பராஜன்: குருநகரின் முகவரி! - மு.நித்தியானந்தன் -
யாழ்ப்பாணத்தில் நான் பழகக் கிடைத்த நண்பர்களில் புஷ்பராஜன் அபூர்வமானவர். அழகான இளைஞனாக - அமைதியும் தேட லும் வாசிப்பும் மிக்க இலக்கிய ரசிகனாக புஷ்பராஜனும் நானும் ஏ.ஜே.யுமாக யாழ் ரீகர் தியேட்டருக்கு முன்னால் உள்ள தேநீர்க்கடையில் உரையாடிக் கொண்ட நாட்கள் என் மன அடுக்கில் என்றும் தேங்கிக்கிடப்பவை.
லண்டன் வந்த பிறகும் அந்த நல்ல நண்பரின் இனிய நட்பு நீடித்தது. விமர்சனக்கூட் டங்களில், கலந்துரையாடல்களில், கருத் தரங்குகளில், திரைப்பட நிகழ்வுகளில், ஒன்றுகூடல்களில், கடற்கரைச் சுற்றுலாக்களில், குடும்ப நிகழ்வு களில் எல்லாம் நண்பராய் - நல்ல சகோதரனாய் பழகிய புஷ்பராஜன், லண்டனைவிட்டு, தன் குடும்பத்துடன் இணைந்து வாழ கனடா சென்றபோது, அந்தப் பிரிவினைத் தாங்க முடியாதவன் நான் மட்டுமல்ல, மிகப்பல லண்டன் இலக்கிய நண்பர்களும்தான். இருந்தாலும், கனடாவில் இன்றும் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொள்ள முடிவது திருப்தி தருவது.
புஷ்பராஜன் மென்மையான சுபாவம் கொண்டவர். மாமரத்து நிழலின் கீழ், மருந்துக்கு நிற்கையிலே, அருகில் இருந்த பெர்ணபேத் என்னும் தன் சின்னப்பெரியம்மாவை| நினைவுகூரும் மென்மை அது. மு.தளையசிங்கம், ஏ.ஜே.கனகரட்ன போன்ற ஆளுமைகளின் சிந்தனைகளால், பழக்கத்தால் வார்க்கப்பட்ட மென்மை அது. தன் முடிவுகளில் உறுதியாக இருந்தாலும், கூட்டங்களில் தன் குரலை உயர்த்தாத மென்மை. 'அலை' ஆசிரியர் குழுவில் இருந்தாலும், அலை பற்றி நீட்டி முழக்கி, டமாரம் அடிக்காமல் மௌனமாய் விலகும் மென்மை. அயலவரை, ஊரவரை அணைத்துக்கொள்ளும் மென்மை.
கலகக்காரன் போன்ற tagகளை அவர் குத்திக் கொள்வதில்லை. நாலு பரப்புக்காணியைத் திரும்பத் திரும்ப உழுத கதையாய் - மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கும் அவஸ்தை அவரிடம் இல்லை. ஆரவார இலக்கியச் சந்தையில், ஙொய் ஙொய் என்று ரீங்காரமிடும் ஈக்களின் தொல்லைகளிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பவர்.