உலகத் தமிழர் பேரவை ஊடக அறிக்கை: தோழர், அமைச்சர் றோய் படையாட்சிக்கு எமது கண்ணீர் வணக்கம்
- மே 8, 2012 - தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம். அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர். சிறப்புமிக்க ஆபிரிக்காவையும் உலகத்தையும் உருவாக்கும் தன் குறிக்கோளுக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் புறப்பட்ட பயணத்தில் அவர் தன் தலைவிதியையும் சாவினையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் கவலை அளிக்கின்றது.”