தென்னிலங்கை அரசியல்வாதிகளில் மார்க்சியச் சிந்தனையாளர்களில் ஒருவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தொடர்ச்சியாக இலங்கையின்  அனைத்து  மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தவர். தனது கொள்கைகளில் தெளிவுடனிருந்தவர். திடத்துடனிருந்தார். நாடு இனவாதச் சேற்றில் மூழ்கியிருக்கையில் அதற்கெதிராகச் செயற்பட்டவர். நடைபெற்ற யுத்தத்திற்கு ஒருபோதுமே நிதிப்பங்களிப்பு செய்ய மாட்டேனென்று அவர் மேல் மாகாண சபையில் ஆற்றிய உரை முக்கியத்துவம் மிக்கது.

இலங்கையின் சிறுபான்மை மக்களின், குறிப்பாகத்  தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பற்றி, அவர்கள் அடைந்த இன்னல்கள் விடயத்தில் தெளிவுடனிருந்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின. எப்பொழுதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். தனது உறுதியான , தெளிவான அவரது அரசியல் செயற்பாட்டால், நோக்கால் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் பல. பதவி இழந்தார். தலை மறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இவற்றாலெல்லாம் அவர் கலங்கி  அடிபணியாமல் தான் கொண்ட கொள்கையில், சிந்தனைகளில் உறுதியுடன் இருந்தார். இதுவே அவரது மிக முக்கியமான ஆளுமை அம்சம்.

நாட்டுக்கு இவரைப்போன்ற தலைவர்களே முக்கியம். இவரது மறைவு இலங்கை அரசியலில் பெரியதொரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே இவரது முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும். இலங்கையின் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை, போராட்டங்களை நன்குணர்ந்த தென்னிலங்கை  அரசியல் தலைவர் என்ற வகையிலும், எத்தகைய சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்காகக் குரல் கொடுப்பதிலிருந்தும் தளும்பாதவர் என்ற வகையிலும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தவிர்க்கப்பட முடியாதவர். அவரது பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின அவர்களைப் பற்றிய சுருக்கமான விக்கிபீடியாக் குறிப்பு அவரது வாழ்க்கை பற்றிய எளிமையான குறுக்கு வெட்டு. அதனை இங்கு இத்தருணத்தில் பகிர்ந்து கொள்கின்றேன்.

************************************************************************************************
விக்கிபீடியாக் குறிப்பு; கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின (Wikramabahu Karunaratne, 8 மார்ச் 1943 – 25 சூலை 2024) இலங்கை அரசியல்வாதியும், கல்விமானும் ஆவார்.

கருணாரத்தின இலங்கையின் தென்-கிழக்கே லுணுகலை என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ஆவர். மத்துகமையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று மின்பொறியியலில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் பொதுநலவாயப் புலமைப் பரிசில் பெற்று கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் சென்று அங்கு 1970 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
பல்கலைக்கழகப் பணி

1978 ஆம் ஆண்டில் கண்டியில் அன்றைய இலங்கை அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். சில மாதங்களில் அவர் விடுவிக்கப்பட்டார். பேராதனைப் பல்கலைக்கழகம் ஆசிரியப் பணியில் இருந்து அவரை இடைநிறுத்தியது. அமைச்சரவைத் தீர்மானத்தை அடுத்து சில மாதங்களில் அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். 1982 ஆம் ஆண்டில் அரசுத்தலைவர் தேர்தலை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக மீண்டும் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் மீண்டும் பதவியில் அமர்த்த அன்றைய உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பல்கலைக்கழக அதிகாரிகளுக்குக் கட்டளை அனுப்பியிருந்தாலும், அது நிறைவேற்றப்படவில்லை. இறுதியில் 2015 ஆம் ஆண்டில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன அவரை மீண்டும் பல்கலைக்கழக ஆசிரியர் பதவியில் அமர்த்தி 1982 ஆம் ஆண்டு முதலான சம்பள நிலுவைப் பணத்தையும் செலுத்த உத்தரவிட்டார்.
அரசியலில்

இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட கருணாரத்தின பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது 1962 ஆம் ஆண்டில் இடதுசாரி லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்தார். 1972 இல் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், 1972 ஆம் ஆண்டில் சமசமாசக் கட்சி அன்றைய ஆளும் கட்சியாக இருந்த இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் குடியரசு அரசியலமைப்புக்கும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமையுடன் முரண் பட்டார். இதனை அடுத்து அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.

1977 ஆம் ஆண்டில் வாசுதேவ நாணயக்கார போன்ற முன்னாள் கட்சி அதிருப்தியாளர்களுடன் இணைந்து நவ சமசமாஜக் கட்சி (புதிய சமூக சமத்துவக் கட்சி) என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

1983 தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு யூலை கலவரத்தை அடுத்து இலங்கை அரசு நவ சமசமாசக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைத் தடை செய்தது. இதனை அடுத்து கருணாரத்தின, வாசுதேவ நாணயக்கார, ரோகண விஜயவீர உட்பட முக்கிய இடதுசாரித் தலைவர்கள் தலைமறைவாயினர். 1985 ஆம் ஆண்டில் இக்கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்டது.

1987 லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி, இலங்கை மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற புதிய இடதுசாரி அரசியல் கூட்டணியை ஆரம்பித்தார். 1988 ரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஒசி அபேகுணசேகராவுக்கு ஆதரவாக டிசம்பர் 2 இல் கொழும்புக்கு அருகில் கடவத்தையில் நடத்தப்பட்ட தேர்தல் கூட்டம் ஒன்றை மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கியதில் கருணாரத்தின காயமடைந்தார். 1987-89 மவிமு கிளர்ச்சியின் போது பல இடதுசாரித் தலைவர்கள் மவிமு கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டனர்.

1998 ஆம் ஆம் ஆண்டில் நவசமாசக் கட்சி வேறு சில இடதுசாரி சிறு கட்சிகளுடன் இணைந்து இடது விடுதலை முன்னணி (NLF) என்ற புதிய கூட்டணியை ஆரம்பித்தது. 2004 ஆம் ஆண்டு முதல் இக்கூட்டமைப்பு இடது முன்னணி என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

2010 சனவரி 26 இல் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் கருணாரத்தின போட்டியிட்டு 7,055 வாக்குகள் பெற்றார்.
இறப்பு

விக்கிரமபாகு கருணாரத்தின நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் 2024 சூலை 25 கொழும்பு பொது மருத்துவமனையில் தனது 81-ஆவது அகவையில் காலமானார்.

நன்றி; https://ta.wikipedia.org/s/4jsu


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R