சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருபவர் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி). பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் தீவிரமாகத் தனதுபடைப்புகளைப்பிரசுரித்துள்ளார். இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணையில் வெளிவந்தவை. தொடராக 'ஜென் ஒரு புரிதல்', முள்வெளி- சமூகநாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரேகேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகியவை திண்ணையில் பிரசுரங்கண்டன. இவை அச்சு வடிவில் வராதவை. புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் சத்யானந்தன். வாசகர்களும் படைப்பாளிகளும் அவரைக் குறித்து மேலும் அறிய வேண்டும் என்ற நோக்கில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவரிடம் மின்னஞ்சல்வழி உரையாடி பதில்களைத் தொகுத்துள்ளார்.
ஜெயந்தி சங்கர்; உங்கள் புனைபெயர் குறித்த பின்னணியைச் சொல்லுங்கள்.
சத்யானந்தன்; அம்மா பெயர் சத்தியபாமா. எனது ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயர் போல என் பெயர் முடிய வேண்டும் என்ற ஆசை பதின்ம வயதிலேயே இருந்தது.
ஜெயந்தி சங்கர்; அண்மையில்எழுதிய, உங்களுக்கு திருப்தியளித்த உங்களுடைய விமர்சனம் எது?
சத்யானந்தன்; நவம்பர் 2015 உயிர்மையில் வந்த இமையத்தின் 'ஈசனருள்' என்ற நீள்கதைக்கு எழுதிய விமர்சனம்.
ஜெயந்தி சங்கர்; ஒரு தேர்ந்த வாசகனின் அடிப்படை அடையாளமாக எதைச்சொல்வீர்கள்?
சத்யானந்தன்; புத்தகத்தின் மீது (மின்னூலையும் சேர்த்து) உள்ள மாறாத காதல். தீராத வாசிப்பும் பகிர்வும். வேறென்ன?
ஜெயந்தி சங்கர்; நல்ல வாசகனின் குறைந்தபட்ச கடமையாக நீங்கள் கருதுவது எதை?
சத்யானந்தன்; ‘நன்றாயிருக்கிறது’ என்ற ஒற்றை வார்த்தையில் சொல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏன் பிடித்தது அல்லது பிடிக்கவில்லை என்பதை சுருக்கமாகவேனும் சமூகத் தளங்களில் பகிர வேண்டும். தனக்குப் பிடித்த படைப்பு பற்றிய விமர்சனம் வந்தால் அதை இயன்ற அளவு பகிர வேண்டும். வாசிப்புத் தளத்தில் இது உதவும்.ஜெயந்தி சங்கர்; விமர்சனக்கலை வளர என்னென்ன செய்யலாம்?
சத்யானந்தன்; இலக்கிய அமர்வுகளில் விமர்சனக் கட்டுரைகள் வாசிக்கப்பட வேண்டும். எழுத்தாளர்களும் விமர்சனத்தை அப்படியே ஏற்காமல் தன் கருத்துக்களைக் கூறினால் படைப்பைப்பற்றி விமர்சகன் தவற விட்டவையும் வாசகனுடைய கவனத்துக்கு வரும். அது போன்ற விவாதங்கள் அவசியம் என்று நினைக்கிறேன்.
ஜெயந்தி சங்கர்; ஒரு படைப்பாளி விமர்சனம் செய்வதற்கும் ஒரு கல்வியாளர் விமர்சனம் செய்வதற்கும் உள்ள முக்கிய வேறுபாடாக நீங்கள் கருதுவது எதை?
சத்யானந்தன்; பெரிய கட்டுரைக்கு உரிய பொறி இந்தக் கேள்வியில் உள்ளது. கல்வியாளர்களின் ஆய்வு பெரும்பாலும் படைப்புத் தளத்தில் நடப்பதில்லை. அத்துடன், கல்வியாளர்கள் சுளுவாகத் தமக்கு விளக்கி உரித்த வாழைப்பழமாகத் தரப்பட்டவற்றை மட்டுமே பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதை நியாயப் படுத்தும் விதமான விமர்சனங்கள் அவர்கள் வாயிலாக வருவதில் வியப்பில்லை. ஒரு படைப்பாளிதான் தன் சக படைப்பாளியை படைப்பின் அடிப்படையில் விமர்சித்து வாசகன் கவனத்தை ஈர்க்கிறான்.
ஜெயந்தி சங்கர்; காண்பியக் கலைகள், திரைப்படங்களில் உங்கள் ரசனை வளரக் காரணமென்று எவற்றைச் சொல்வீர்கள்?
சத்யானந்தன்; கிராமப் பின்னணி உண்டு என்பதால் தெருக்கூத்து, நாடகங்களை ரசிப்பது குழந்தைப் பருவத்திலேயே நிகழ்ந்தது. பரத நாட்டியம், கதக் என்னைக் கவர்ந்தது பெரிதும் தொலைக்காட்சி வழி பார்த்ததில். இசையும் அவ்வாறே. திரைப்படம் என்னும் ஊடகம் மீது எனக்கு மனத்தடை இருந்தது. அவதார் படம் அதை முழுமையாகவே உடைத்தெரிந்தது.
சத்யஜித் ரேயின் 'சத்கதி' அதிகம் பேசப்படாத படம். ஆனால் முன்ஷி பிரேம் சந்தின் சிறுகதையின் அற்புதத் திரை வடிவம் அது. தன் மகனின் திதிக்காகக் கோரப்படும் தட்சிணைக்காக மரம் வெட்டி அப்பாவான கூலியின் உயிரே போய் விடும். ஒளிப்பதிவு மற்றும் நுட்பமான காட்சிப்படுத்துதலுக்கான சிறந்ததோர் உதாரணம் இந்தப் படம்.
ஜெயந்தி சங்கர்; உங்கள் அவதானிப்பில் தமிழில் கலை, இலக்கிய விமர்சனத் துறை எப்படியிருக்கிறது? முன்னோடியாக நீங்கள் கருதுபவர்கள் யார்?
சத்யானந்தன்;முன்னோடி காநாசு தான். உலக இலக்கியங்கள் என்ற அவரது ஓர் அரிய நூல். உலகின் முக்கிய இலக்கியங்களின் சுருக்கத்தை அவரது நூலில் வாசித்ததே எனது துவக்கம். பின்னாளில் சாமிநாதன், அ. மார்க்ஸ், தமிழவன், அசோகமித்திரன் விமர்சனத்தில் தீவிரமாக இயங்கியவர்கள். பிரேம் ரமேஷ் எனக்கு பின்நவீனத்துவம் பற்றிய பரிச்சயம் தந்தவர்கள்.
விமர்சனம் ஆளுமைகள் அடிப்படையில் சமகாலத்தில் இருக்கிறது. நட்பு அடிப்படையில், எழுத்தாளர் தானே முயன்று வருபவை இருக்கின்றன. சிந்தனைத் தட அடிப்படையிலும் வருகின்றன.
வேறு ஒரு சரடான விமர்சனம் தமிழ் இலக்கியத்தின் வெவ்வேறு காலகட்டங்கள், உலக இலக்கியம் பற்றிய தன் பார்வையை வெளிப்படுத்துபவை.
ஆனால் சமகால இலக்கியம் பற்றிய விமர்சனம் அவ்வளவாக வருவதில்லை. அதிக பட்சம் அடுத்த இதழில், அனேகமாக எழுத்தாளரான வாசகர் இந்தக் கதை அருமை அல்லது சுமார் என்று எழுதுவார். சமகால இலக்கியங்கள் இவ்வாறாக கண்டுகொள்ளப்படுவதே இல்லை. நான் அதிகமாக சமகால கவிதை, கதைகளை வாசிக்கிறேன். என்னை பாதிப்பவை குறித்து விமர்சனம் எழுதுகிறேன்.
ஜெயந்தி சங்கர்; ஆங்கில, பிற மொழிகளை ஒப்புநோக்க தமிழில் படைப்பிலக்கியம், விமர்சனத் துறை எப்படியிருக்கிறது?
சத்யானந்தன்; ஆளுமைகள் சார்ந்தே தமிழில் ஒரு படைப்பு கவனம் பெறும். இதன் மறுபக்கம் தன்னை பிரம்மாண்டமான ஒரு ஆளுமையாக ஒருவர் தன்னைத் தானே நிலை நாட்டிக் கொள்ள வேண்டும். செலவு செய்து வெளியீட்டு விழா வைக்க வேண்டும். ஒரு விமர்சகன் தான் எடுத்துக் கொண்ட படைப்பாளரின் ஆளுமையை ஒட்டி பத்திரிக்கையைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். சிறுபத்திரிக்கைகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். சிறுபத்திரிக்கை ஆசிரியர்கள் எந்தக் குழு என்று தெரிந்தே அனுப்ப வேண்டும். இல்லையேல் அது என்றுமே வெளிச்சத்துக்கு வராது. ஆனால் ஆங்கிலத்தில் ஒரு தினசரி, வாரப் பத்திரிக்கையில் விமர்சனம் வெளி வர முடியும். ஹிந்தியில் நிறையவே பத்திரிக்கைகள் இருக்கின்றன. விமர்சனங்களும் வெளியாகின்றன. பிற மொழிகள் பற்றித் தெரியாது. மலையாளச் சூழல் ஆரோக்கியமாக இருக்கிறதென்று நிறையவே கேள்விப் படுகிறோம்.
ஜெயந்தி சங்கர்; தமிழ்ச்சூழலில் படைப்பிலக்கிய விமர்சகர்களின் பங்கு எந்த அளவிற்கு இருந்து வருகிறது?
சத்யானந்தன்; அனேகமாக இல்லை என்பதே உண்மை. இது மிகவும் சோர்வளிப்பது. இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் படைப்பாளிகளுக்கு எதிரானது. மூத்த எழுத்தாளர்களுக்கு வளரும் எழுத்தை பத்து நிமிடம் வாசித்து விமர்சிக்க நேரமில்லை என்பது மனதுக்கு வருத்தமளிப்பது.
ஜெயந்தி சங்கர்; இலக்கிய விமர்சனத்துறையின் முக்கியக் குறைபாடு என்று நீங்கள் கருதுவது எதை?
சத்யானந்தன்; விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்வது, விடுப்பது படைப்பின் தரத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். ஆளுமையின் பிரம்மாண்டம், இஸத்தின் அடிப்படையில் அல்ல. புது எழுத்துக்களில் நம்பிக்கை அளிப்பவற்றை கூர்விமர்சனம் செய்து கவனப்படுத்த வேண்டும். இது இல்லை என்பதே குறைபாடு.
ஜெயந்தி சங்கர்; விமர்சனத்தைப் படைப்பாளிகள் பெரும்பாலும் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள்?
சத்யானந்தன்; மிகவும் நேர்மறையாக. எஸ்.ராமகிருஷ்ணன், போகன், பத்மப்ரியா இவர்கள் என் விமர்சனத்தைப் பகிர்ந்தார்கள். ஜெயந்தி சங்கர் பகிரவில்லை. இதில் இருவர் மூத்தவர் இருவர் இளையவர். எனவே விமர்சனமும் கவனமும் பெரிய, சிறிய எழுத்தாளர் இருவருக்குமே ஊக்கமளிப்பதே.
ஜெயந்தி சங்கர்; அது சார்ந்து உங்களுக்கு ஏற்பட்ட நேர்மறையான, எதிர்மறையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சத்யானந்தன்; கோசின்ரா என்ற கவிஞரை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். அவர் தொலைபேசியில் கூப்பிட்டு, ‘அது எப்பிடி தலைப்பு எழுதிட்டு கவிதை எழுதினேன்னு கண்டிபிடிச்சீங்க?' என்று கேட்டது எனக்கு உற்சாகமளித்தது. ஜெயமோகனின் வாசகர் ஒருவர் ஒரு சமயம், உனக்குப் பொறாமை என்றார். புன்னகைத்தேன்.
ஜெயந்தி சங்கர்; முகம் தெரியாத, ஆனால் படைப்பு உங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து விமர்சனம் எழுதும் நீங்கள் சந்தித்த சவால்கள் எவ்வாறானவை?
சத்யானந்தன்;.மிகவும் உற்சாகம் தருகிறது. முகம் தெரியாத ஒரு படைப்பாளி என்னுடன் உரையாடுகிறார். எனது வாழ்க்கையின் முக்கிய தருணமாக அது அமைகிறது. இது தாக்கம். சவால் ஒன்று மட்டுமே. விமர்சனம் இருட்டுக்குள் இருக்கிறது. இருட்டடிக்கப் படுகிறது.
ஜெயந்தி சங்கர்; முழுநேரப் பணிக்கு நடுவில் வாசிக்க எழுத நேரம் ஒதுக்குவதில் நீங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் எவ்வாறானவை?
சத்யானந்தன்; அலுவலகம் எழுத்து என்பதை முழுநேரம் என்று குறிப்பிடுகிறீர்கள். எழுத நேரம் ஒதுக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் எழுதி ஆக வேண்டும். இமையத்தின் சிறுகதை ஈசனருள் நவம்பர் 2015 இதழில் வாசித்து ஒருவாரமானது விமர்சனம் எழுத. அதற்குள் நிறைய எரிச்சல் ஏன் இப்படித் தொடர் வேலைகள் என. வாசிப்பு நமக்கு மிகவும் முக்கியமானது. எப்படியும் நேரம் கொடுப்போம் இல்லையா? ஆனால் உன்னதமான ஒரு நாவல் என்னை மிகவும் பாதிக்கும் என் எழுத்தின் மீது தாக்கம் உண்டாக்கலாம் என்றே நாவல் எழுதும் போது மற்றொரு நாவல் வாசிக்க மாட்டேன். ஆனால் கவிதை, சிறுகதை இவை என்னை எழுத ஊக்கப் படுத்துபவை.
ஜெயந்தி சங்கர்; திண்ணை இணைய இதழைத்தளமாகக்கொண்டு எழுதி வளர்ந்தவர்கள் பலருண்டு. உங்களுக்குத்திண்ணை எவ்வாறு உதவியுள்ளது?
சத்யானந்தன்; 2007 2009 நான் மனச் சோர்வில் எழுதுவதை நிறுத்தி மேற்படிப்பு- இதழியல் மற்றும் மேலாண்மைக் கல்வியில் முடித்த நேரம். சிறு பத்திரிகைகள் என்னை மறந்திருந்த காலம். திண்ணை இணையத்தில் ஓர் இலக்கிய இதழாக பலருக்கும் இடமளித்தது உற்சாகமளித்தது. நான் மிகுந்த தயக்கத்துடன் 2010ல் துவங்கினேன். அவர்கள் ஆதரவில் முள்வெளி, போதிமரம் நாவல்கள், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி ஆய்வுக் கட்டுரை, ஜென் ஒரு புரிதல் என்னும் மொழிபெயர்ப்பும் ஆன்மீக விவாதமுமான தொடர் இவை வெளிவந்ததும் எனது பல கவிதைகள் வந்ததும் திண்ணை இணைய இதழில். தான். இன்று வரை அதன் குழுவில் யாரிடமும் பரிச்சயமில்லை. மாற்றுக் கருத்துக்கு இடம், இலக்கியவாதிகளுக்கு ஆதரவு என்னும் ஆரோக்கியமான இதழ் தர்மம் உள்ள மற்றோர் இதழ் அரிதாகவே இருக்க முடியும். சொல்வனம் இதழிலும் சமீபத்தில் என் கவிதைகளை வெளியிட்டு உற்சாகமளித்தார்கள்.
ஜெயந்தி சங்கர்; உங்களுடைய போதிமரம் நாவல் இயங்கும் தளம் குறித்துச்சொல்லுங்கள்.
சத்யானந்தன்; யசோதரா என்னும் காவியத்தை மைதிலி ஷரன் குப்த எழுத்தில் நான் ஹிந்திப் பாடமாகப் படித்தேன். புத்தரை விடுத்து அவர் சித்தார்த்தனின் மனைவியை அவர் காவிய நாயகி ஆக்கினார். நான் அதைத் தாண்டிச் செல்ல எண்ணினேன். சித்தார்த்தன் புத்தன் இருவரையும் என் கற்பனையில் ஒரு நாவலின் பாத்திரங்களாக்கினேன். அது என்ன கற்பனை? புத்தர் இறந்தது ஒரு ஏழை கொடுத்த கெட்டுப்போன உணவால் அல்ல என்பதில் தொடங்கி அவரது வாழ்வின் பல நிகழ்வுகளை நான் கற்பனையில் வார்த்தேன். புத்தர் ஞானம் பெறும் முன் நிஷ்டையில் ஆழும் முன் அவர் மனநிலை என்னவாக இருந்தது என்பதைக் கற்பனை செய்யும் சவாலை நான் ஏற்றேன். முதல் குகை ஓவியத்தை அவரே வரைந்தார் என்றேன். அது கற்பனை மிகுந்த புத்தரின் வாழ்க்கைக் கதை. என் ஆகச் சிறந்த படைப்பாக நான் அதையே கருதுகிறேன். குருமார்களின் அரைவேக்காட்டுத்தனத்தை உணர்ந்து, தானே ஞானம் தேடிய அவர் காலத்துக்குப் பின்னும் குருசிஷ்ய பாரம்பரியம் பேசும் இந்த நாட்டைக் கண்டு பரிதாபப்படுகிறேன்.
ஜெயந்தி சங்கர்; புனைவெழுத்தில் ஆன்மிகச்சிந்தனையை மையச்சரடாகக்கொண்டு எழுதும்போது ஏற்படும் சவால்கள் என்னவாக இருக்கின்றன?
சத்யானந்தன்; நான் அதை என் முதல் நாவலான புருஷார்த்தம் என்னும் நாவலில் மட்டுமே முயன்றேன். ஆன்மிக வாழ்க்கையின் பரவசம் பற்றியது புனைவு. வாழ்க்கையின் நிலையாமையில் தொடங்குவது ஆன்மிகம். இரண்டும் படைப்பாளியின் மனதை ஆள இயலாது என்பது பலகாலமாக நிலவும் ஒரு கருத்து. விதிவிலக்குகள் இருக்கலாம். ஆன்மிகம் நேர்கோடுகளாலானது. இலக்கியம் முரண்களை உள்வாங்கி மனித வாழ்க்கையை வியப்பது. பதின்ம வயதில் நான் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாயிருந்தேன். என் சமவயது தலித் பெண் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருபவள். அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். அவளிடம் நான் ஒரு முறை கூடப் பேசியதில்லை. இன்று வரை அந்தக் கண்ணீர் எனக்குப் புதிராகவே இருக்கிறது. மனித உறவுகள் பற்று, பாசம் இவை எனக்கு மிகவும் உவப்பானவை. இயந்திர வாழ்க்கை, வணிகரீதியான தற்காலிகத் தொடர்புகள் ஒருபக்கம், பற்றே இல்லாத ஆன்மிகம் மறுபக்கம். இடைப்பட்ட இலக்கியம் பேசுவதெல்லாம் மனித உறவுகள் மலரும் அபூர்வ தருணங்கள். அந்தப் பதிவுகள் எனக்கு மிகவும் பிரியமானவை. ஆன்மிகமா இலக்கியமா என்று கேட்டால் நான் கண்டிப்பாக இலக்கியவாதியாக நூறு ஜென்மம் எடுப்பேன். எனக்கு முக்தியே வேண்டாம்.
ஜெயந்தி சங்கர்; அச்சூடகத்தில் முழுவதும் நம்பிக்கை போகக்காரணமான அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுங்கள்.
சத்யானந்தன்; எழுத்தாளன் மற்றும் எழுத்து கோயம்பேட்டில் விற்கப் பட்டால் கூட இன்னும் சகிக்கக் கூடியதாக இருக்கும். மும்மூர்த்திகளே விழா செலவு ஆராவாரம் என்று கிளம்பி விட்டார்கள். சினிமாக்காரர்கள் வேடிக்கையின் நகைமுரணாக. விரிவாகச் சொல்ல விருப்பமில்லை. அது பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
ஜெயந்தி சங்கர்; சிற்றிதழ்களிலும் வணிகமனப்பான்மை உள்நோக்கங்களை ஆராயும் போக்குகள் மலிந்துள்ள நிலைபடைப்பாளிகள், விமர்சகர்களின் படைப்பூக்கத்தைப்பொதுவாக எவ்வாறு பாதிக்கிறது?
சத்யானந்தன்; என்னை வளர்த்தவர்கள் சதங்கை வானமாமலை முதல் உயிர்மை மனுஷ்யபுத்திரன் வரை. இன்று மனுஷ்ய புத்திரன் இலக்கிய இதழை அரசியல் இதழாக ஏன் நடத்துகிறார்? இஸம், ஜாதி அடிப்படையில் சிறுபத்திரிகைகள் ஏன் திசை இழந்தன? சினிமாவுக்கு முக்கியத்துவம் தரும் வணிக மனப்பான்மை ஏன் தொற்றியது? நீளும் கேள்விகள். இலக்கில்லாத ஊடகம் பலவேளைகளில் ஆபத்தானது. ஒற்றை இஸத்தைக் கொண்டாடும் ஊடகம் நீர்த்துப் போவது.
ஜெயந்தி சங்கர்; ஒருபிரதியை வாசித்ததும் ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில் உடனே எழுத விரும்புவீர்களா?
சத்யானந்தன்; கண்டிப்பாக. சில மணி நேரம் கூட என்னைப்பொறுத்தவரையில் தாமதமே. பலசமயங்களில் அது முடிவதில்லைதான். மீண்டும் வாசிப்பேன். வருத்தமில்லை. எனக்குப்பிடித்ததுதான் அதுவும்.
ஜெயந்தி சங்கர்; எழுதிய விமர்சனத்தைப்படைப்பாளிக்கு அனுப்புவதோ அவர் அறியவேண்டும் என்று நினைப்பதோ உண்டா?
சத்யானந்தன்; இல்லை.
ஜெயந்தி சங்கர்; ஏன் இல்லை?
சத்யானந்தன்; உள்நோக்கம் கற்பிப்பார்கள். எனக்கு அது பற்றிக் கூடக் கவலையில்லை. அதற்கு பதில் சொல்லும்போது மோசமாகக் காயப்படுத்தும் வல்லமை எனக்கு உண்டு. அதனால் தயங்குவேன்.
ஜெயந்தி சங்கர்; உங்கள் விமர்சனங்களால் நண்பர்களானவர்கள் உண்டா?
சத்யானந்தன்; இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது நானே சொல்வதை விட பார்க்க இன்னும் அழகாக இருக்கும் இல்லையா?
ஜெயந்தி சங்கர்; விமர்சங்களால் விலகிய நட்புகள்?
சத்யானந்தன்; இல்லை.
ஜெயந்தி சங்கர்; விமர்சனத்துறையில் உங்களுடைய எதிர்காலத்திட்டங்கள் என்ன?
சத்யானந்தன்; என் நலனில் அக்கறை உள்ள ஒரு சக படைப்பாளி நீங்கள் வாசிப்பு, விமர்சனம் சார்ந்து இளைஞர்களை வழிநடத்தி உற்சாகப்படுத்தி அவர்கள் வளர்ச்சியுடன் நீங்களும் நிறையவே வளர முடியும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் மீது எனக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. அதற்காகவே அதைச் செயற்படுத்த எண்ணம் இருக்கிறது.
ஜெயந்தி சங்கர்; படைப்புக்கும் படைப்பாளிக்கும் இடையே நிலவிய இடைவெளி மிரட்டிய அனுபவமுண்டா?
சத்யானந்தன்; பெண் கதாபாத்திரங்களைப்பற்றி எழுதும்போது அது ஓர் ஆணின் கண்ணோட்டதில் மட்டுமே எழுதப்படுவது எனும் வருத்தம் எனக்கு உண்டு. என் பெண் கதாபாத்திரங்கள் பற்றிப் பிறர்தான் சொல்ல வேண்டும்.. ஆனால் நான் யசோதராவை மைதிலி ஷரன் குப்த காட்டிய பரிதாபக் கண்ணோட்டதில் காட்டவில்லை. சித்தார்த்தன் இல்லாமல் குழந்தையை வளர்ப்பதில் அவர் வெற்றி காண்கிறார்.
ஜெயந்தி சங்கர்; ஒரு படைப்புக்கும் தனிமனிதரான அந்தப்படைப்பாளிக்கும்இடையில் நிலவும் இடைவெளி, முரண்சார்ந்த அனுபவம் ஏதுமுண்டா?
சத்யானந்தன்; விக்கிரகம் என்னும் நாவல் தலித் மற்றும் பிராமணர் இரு பூசாரிகள் ஒரே கோயிலில் பூஜை செய்யும் சூழல் பற்றியது. அந்த நாவலுக்குள் உருவ வழிபாடு குறித்த எனது விமர்சனங்கள் எதுவுமே வரவில்லை. உருவ வழிபாடு சார்ந்த சமூகத்தை மட்டுமே நான் காட்டியிருக்கிறேன். இது ஒரு முரண். ஆனால் ஒரு படைப்பு முன் வைப்பவை ஒரு படைப்பாளியின் மொத்த ஆளுமையின் சாரம்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு புனைகதை படைப்பாளிக்கு உள்ளே அவனுக்கு வெளியே உள்ள உலகத்தின் தாக்கத்தால் உருவாகிறது என்பதே காரணம்.
ஜெயந்தி சங்கர்; நீங்கள் விமர்சித்த வேறொரு படைப்பாளியின் இயல்புக்கும் அவரது படைப்பிற்கும் இடையில் நிலவும் இடைவெளி, முரண் சார்ந்த அனுபவம் ஏதுமுண்டா?
சத்யானந்தன்; கண்டிப்பாக உண்டு. உதாரணமாக கவிஞர் மனுஷ்ய புத்திரன் நான் மிகவும் மதிக்கும் சமகாலத்தில் தீவிரமாக இயங்கும் ஒரு கவிஞர். மனித வாழ்க்கையின் நெருக்கடிகள், முரண்கள், எந்த ஒன்றின் மறுபக்கமும் இவை யாவுமான கவிதைகள் அவருடையவை. அதே படைப்பாளி அரசியல் சார்புடையவராக இயங்குவது எனக்கு மிகப் பெரிய முரணாகப் படும்.
ஜெயந்தி சங்கர்; பிரதிக்கு உள்ளேயும் பிரதிக்கு வெளியேயும் படைப்பாளியின் குரல் எந்தளவிற்கு ஒலிக்கவேண்டும் என்று ஒரு விமர்சகராக நீங்கள் நம்புகிறீர்கள்?
சத்யானந்தன்; பிரதிக்கு வெளியே சமூகத்தளத்தில் ஒலிக்கத்தான் வேண்டும். பிரதிக்குள் அவர் காணாமற்போக வேண்டும்.
ஜெயந்தி சங்கர்; பத்தாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட தோல்பை என்ற உங்களுடைய சிறுகதை இன்றைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறதா? உங்கள் வரையில் அந்தக்கதையின் சிறப்பு என்று எதைச்சொல்வீர்கள்?
சத்யானந்தன்; அது நவீனத்துத்தின் நுட்பம், மௌனம், கூர்மை யாவும் உள்ளடங்கிய ஓர் உதாரணமானக் கதை. இன்றும் அது பொருந்தக் கூடியது. கலையை தொழில் நுட்பம் விழுங்குவது என்றும் கவனம் பெறும். பெற வேண்டும்.
ஜெயந்தி சங்கர்; இந்தக்கதையை எழுதிய போதும், பிறகு இந்தப்பத்தாண்டுகளிலும் அதனைச்சரியாக வாசித்து யாரேனும் உங்களிடம் தங்கள்க ருத்துகளைப்பகிர்ந்து கொண்டிருக்கிறார்களா?
சத்யானந்தன்; சக எழுத்தாளர்கள் மிகவும் பாராட்டிய கதை அது. என் சிறுகதைத் தொகுதி அச்சிலேயே வரவில்லை. மின்னூலாக விரைவில் வரும். அப்போது கவனம் பெறலாம். கனவு இதழில் வெளிவந்தது அது.
ஜெயந்தி சங்கர்; இது போன்ற அரியபடைப்புகள், உங்களுடையது என்றில்லை, யாருடையதாக இருந்தாலும் உரிய கவனம் பெறாமல் போகும்போது எவ்வாறு உணர்வீர்கள்?
சத்யானந்தன்; விமர்சகர்கள் இல்லை என்பதால் வரும் வெற்றிடம் அது. ஆனால் அசலான படைப்பு ஒரு நாள் இல்லாவிட்டாலும் மற்றொரு நாள் கண்டிப்பாக கவனம் பெறும்.
ஜெயந்தி சங்கர்; அதுபோன்று நீங்கள் கண்டு வியந்து எழுதிய, அல்லது எழுதாமல் விட்ட அரியபடைப்புகள் சிலவற்றைக்குறிப்பிடுங்கள்.
சத்யானந்தன்; கோபி கிருஷ்ணன் கதைகள், கிருஷாங்கிணியின் கவிதைகள், ஞாநியின்தெரு நாடகங்கள் இவை உரிய கவனம் பெறவில்லை. அவர் பரிக்ஷாவில் தற்போது செய்து வரும் முயற்சிகளை நான் பார்த்து எழுதுவேன். அவர் தெரு நாடகங்கள் போடும்போது எனக்கு 20 வயது. இந்த 30 வருடத்திலும் அவர் முயற்சிகள் கவனம் பெறாதது வியப்பே.திலகபாமா விமர்சகராக கவனம் பெறவில்லை. நல்ல விமர்சனக் கட்டுரைகள் எழுதுபவர்.
ஜெயந்தி சங்கர்; சமகாலத்தில் கவிதை எழுதும் பெண் படைப்பாளிகளில் உங்களைக்கவர்ந்தவர் யார்? புதிதாக எழுதும் பெண்கவிஞர்களில் அதிக உங்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர் யார்?
சத்யானந்தன்; குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி. அனார்.
ஜெயந்தி சங்கர்; கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் இவற்றில் உங்களுக்கு எழுதுவதில் ஆர்வமும் அதிகதிருப்தியும் எதில் வருகிறது?
சத்யானந்தன்; நாவலில் வரும் பேரனுபவம் ஆகச் சிறந்தது. கவிதை என் கனவு காணும், கற்பனை செய்யும் உயிர்ப்பின் அடையாளமாகிறது. சிறுகதை என் கர்வத்தையும் என் புனைவுத் திறமையையும் பறைசாற்றுகிறது. விமர்சனம் இலக்கியத்தின் மீதுள்ள என் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. எல்லாமே நிறைவு தருபவையே.
ஜெயந்தி சங்கர்; டெல்லியில் வாழ்ந்ததாகச் சொன்னீர்கள். அந்தக் காலகட்டத்தில் உங்களுடைய மொழி, கலை, இலக்கிய அனுபவங்கள் எவ்வாறிருந்தன?
சத்யானந்தன்; பல மொழிபெயர்ப்புக்கள் மற்றும் தமிழ் நூல்களை வாசிக்க சாகித்ய அகாதமி நூலகம் பேருதவியாயிருந்தது. லலித் கலா அகாதமி மூலம் நவீன ஓவியம் பற்றிய புரிதல் நிகழ்ந்தது. நாடகத்தின் சாத்தியங்களை சங்கீத் நாடக அகாதமியில் பார்த்து வியந்தேன். மண்டி ஹவுஸ் என்னும் இடம் எனக்குப் புனித ஸ்தலம்.
ஜெயந்தி சங்கர்; விமர்சனத்துக்கு விமர்சனம் எழுதுவது விமர்சனக்கலை வளர உதவுமா? யாரே அதைச்செய்கிறார்களா? நீங்கள் செய்ததுண்டா?
சத்யானந்தன்; கநாசு, வெங்கட் சாமிநாதன் விமர்சனங்களே விமர்சனத்துக்கு ஆளானவை. அது கண்டிப்பாக விமர்சனம் மட்டுமல்ல இலக்கியம் பற்றிய மேம்பட்ட புரிதலுக்கும் வழி வகுக்கும். விமர்சனத்துக்கு விமர்சனம் எழுதுவதுநான் செய்ததில்லை என்றபோதிலும் அதனை விரும்புகிறேன்.
ஜெயந்தி சங்கர்; அவ்வாறு உங்களுடைய விமர்சனத்துக்கு எழுதப்பட்டஇன்னொருவிமர்சனத்தைவாசித்தஅனுபவம்உண்டா?
சத்யானந்தன்; இல்லை.
ஜெயந்தி சங்கர்; ஒரு படைப்பாளியும் விமர்சகருமான நீங்கள் அண்மைக்காலங்களில் புதிதாக எழுதுவோரில் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக யாரையெல்லாம் சொல்வீர்கள்?
சத்யானந்தன்; புதிதாக எழுதுவோரில் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இரா.பூபாலன் இன்னும் கூர்மையான கவிதைகள் தர வேண்டும். பெண் கவிஞர்களிடம் வாழ்க்கை மனித உறவுகள் மற்றும் சமூகம் பற்றிய பிரக்ஞை தென்படுகிறது.
பெண் கவிஞர்கள்: கு.உமாதேவி, க.அம்சப்ரியா, பூர்ணா, ஷாரா சித்தாரா, சசிகலா பாபு, ஊர்வசி (இலங்கை), சம்யுக்தா,ஈஸ்வரி (சீனா), பெருந்தேவி, ரெங்கநாயகி, அனார், சக்தி ஜோதி, தேன் மொழி தாஸ், சர்மிளா ஸய்யித்.
ஆண் புனைகதை எழுத்தாளர்களில் மாத்தளை சோமு, ஆர். அபிலாஷ், பொ.கருணாகரமூர்த்தி, போகன் சங்கர்.
கடந்த ஈராண்டுகளின் நான் விமர்சித்த படைப்பாளிகளின் பட்டியலில் இவர்கள் உண்டு. இதற்கு மேலும் படைப்பாளிகள் இருப்பார்கள். இது முழுப் பட்டியலே அல்ல. ஆண் படைப்பாளிகளில் புனைகதை எழுதுவோர் பெயர் மட்டுமே இருக்கிறது. கவிஞர்களில் புதியவர்கள் அனேகமாக என்னை பாதிக்கவில்லை.
ஜெயந்தி சங்கர்; பெண் படைப்பாளி மட்டுமே எழுதக்கூடியவை என்று சில உண்டு என்று நம்புகிறீர்களா?
சத்யானந்தன்; இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பது சற்றே வியப்பாக இருக்கிறது. லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் அக்னி சாட்சி, எமிலி டிக்கின்ஸனின் கவிதைகள் உடனடியாக நினைவுக்கு வரும் உதாரணங்கள். இவற்றை ஓர் ஆண் என்றைக்குமே எழுத முடியாது. நகல் எடுத்து எழுவதும் மிகக் கஷ்டம். பெண் புனைவு முறை என்பது தனிப்புனைவு முறை (genre) என நான் நம்புகிறேன். பெண்கள் வாழ்க்கையைப் பார்ப்பதும் மனித உறவைப் பார்ப்பதும் முற்றிலும் வேறான கண்ணோட்டத்தில், புரிதலில்.
முத்தமழை
உமாமகேஸ்வரி
மழை விசிறும்
கண்ணாடி முத்தங்கள்
உன்னுடையவை போன்றே,
பிரியங்கள் திரண்டு,
வெறிச்செம்மை ஜொலிக்க,
ஆவேசமாய்நெருங்கி
அணுகித்தெறித்ததும்
திசையற்றுச்சிதறி உடைகின்றன,
திக்கற்றகனவாக.
பாறைஇயல்
- அனார் -
சூழ்ச்சிகளால்மறைக்கப்பட்டபாதைகளில்
உறுதியானஉரோமங்கள்மூடிய
பாறைகள்நகர்கின்றன
என்னுள்பாறைகள்வளர்ந்துகொண்டிருப்பது
உனக்குத்தெரியாது
(உனக்குத்தெரியாதஇன்னொன்று, என்னை
எப்படிக்காதலிப்பதென்பது)
மரணத்தின்உச்சஇலக்குகளில்
அசைகின்றபாறையின்
சமிக்ஞைஅதன்நோட்டம்
... காத்திருப்பு
மிகவும்பொறுமைகளிலிருந்து
பின்வெடிக்கின்றஎரிமலைமூச்சு,
தணல்குழம்புகள் ...
மௌனத்தின்உள்ளேஇருக்கிறது !
எதனால்கற்கள்விளைகின்றன
பின்முற்றிப்பாறைகளாகி
மலைகளாகஊதுகின்றன
மலைகளுக்கிடையேபயத்துடன்
பதுங்கிக்கொள்கிறேன்
கலைந்துகிடக்கின்றமேகங்களுடன்
மலைகளையும்மேய்த்துச்செல்கிறேன்
அவற்றின்பசிதணிவதற்காக
அந்திமாலைகளைஇழுத்துவருகிறேன்
கனவுபனித்திரள்களாக
கவிந்தவெண்மலைகள்கவர்ச்சியானவை
இறுகியதிரைக்குள்
திறந்துவிரியும்கதவுகள்தாண்டி
எதிரொலிக்கும்சிரிப்பின்
விசும்பலின்கருகல்நெடி
கசப்பின்தீராஇருளில்படர்கிறது
கடல்களைவிலக்கிக்கொண்டு
முள்முனையாய்உயர்ந்தபாறையில்
குத்திகிழிபட்டபழுத்தநிலாப்பாறை
நீலவிசம்கொட்டுகிறது
என்குரல்உன்உலகிலிருந்துவிடைபெற்றுவிட்டது
அதன்நிரந்தரமானகேள்விகளோடு
இந்தக் கவிதைகளை ஓர் ஆண் எழுத்தில் வாசிக்க நமக்கு என்றுமே கிடைக்காது. பெண் எழுத்து என்பது தனி எழுத்து வகை. உங்கள் 'ஈரம்' சிறுகதை மற்றோர் உதாரணம். ஒவ்வொரு பெண் படைப்பாளி எழுதுவதை நிறுத்தும் போதும் இழப்பு என்னவோ இலக்கியத்துக்குதான். அவர்களுக்கல்ல. பெண் எழுத்தாளர்களை நான் விமர்சிக்கும் போதெல்லாம் Emily Dickinsonனின் கீழ்க் கவிதையைக் கவனத்தில் கொள்கிறேன்.
I HAVE not told my garden yet,
Lest that should conquer me;
I have not quite the strength now
To break it to the bee.
I will not name it in the street,
For shops would stare, that I,
So shy, so very ignorant,
Should have the face to die.
The hillsides must not know it,
Where I have rambled so,
Nor tell the loving forests
The day that I shall go,
Nor lisp it at the table,
Nor heedless by the way
Hint that within the riddle
One will walk to-day!
ஜெயந்தி சங்கர்; கவிஞராக அறிய விரும்புவீர்களா? அல்லது ஒரு விமர்சகராக அறிய விரும்புவீர்களா?
சத்யானந்தன்; நான் அடிப்படையில் கவிஞன்தான். அவ்வாறே காணப்பட்டால் மகிழ்ச்சியே.
ஜெயந்தி சங்கர்; உங்களுடைய சிறந்த கவிதை என்று நீங்க நினைப்பவற்றிலிருந்து சிலவற்றைப்பகிர்ந்துகொள்ளுங்கள்.
சத்யானந்தன்;
கல்லடி
அதிக நேரமொன்றும்
வித்தியாசமில்லை
வாய்க்காலிலிருந்து தவளை
வரப்பில் குதித்தது
மீண்டும் வாய்க்காலில்
பச்சோந்தி
மரமத்தியிலிருந்து
புல்லுக்குத் தாவி
பச்சையானது
அதிரும் காலடிச் சத்தம்
கேட்டதும்
ஆமை
ஓட்டுக்கு உள்ளே
ஒளிந்தது
வேட்டுச் சத்தம்
கேட்டதும்
யானைகள்
ஓடி
இடம் பெயர்ந்தன
கிரகணத்தில்
சூரியன்
மறைந்ததும் பறவைகள்
மரங்களுள்
தஞ்சமடைந்தன
இதில்
எதையுமே
பார்த்ததில்லை போலும்
அவன்
மூர்க்கத்துடன்
எறிந்தான்
என் மீது
முதல் கல்லை
பிறகென்ன?
நான் ரணமாகி
வீழ்ந்த பின்னும்
நிற்கவில்லை
கல்வீச்சு
(1.11.2015 திண்ணை இதழில் வெளியானது)
நிர்வகிக்கப்பட்ட கர்வம்
பழுது பார்ப்பவரது
வருமானம் நிறம்
வேறுபடலாம்
ஆனால் பழுதுகளுக்காக
யாரையேனும் கட்டாயக்
கூட்டாளியாக்க வேண்டியிருக்கிறது
அடிக்கடி
சாதனங்கள் தானியங்குவதும்
என் கர்வமும்
சார்புடையவை
கர்வ பங்கம் நேரும் போது
பழுது பார்ப்பவர்
மையமாகிறார்
என் தேவைகளை முடிவு
செய்யும் நிறுவனங்கள்
என்னையும் அவரையும்
சேர்த்தே
நிர்வகிக்கிறார்கள்
அவ்வழியாய்
என் கர்வங்களையும்
சுதந்திரமான கர்வம்
சாதனங்களுக்கு
அப்பாலிருக்கிறது
தனித்திருக்கிறது
அசலாயிருக்கிறது
கையால் கடற்கரை
மணலைத் தோண்டி
ஊறும் சுவை நீரை
சிறு விலைக்கு
மெரினாவில் விற்றவளிடம்
வெகுநாள் முன்பு
அதைக்
கண்டிருக்கிறேன்
(திண்ணை இணைய தளத்தில் 18.10.2015 இதழில் வெளியானது)
ஜெயந்தி சங்கர்; விமர்சனம் செய்யும் ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு எழுந்தது?
சத்யானந்தன்; இலக்கியக் கட்டுரைகள் வாசிப்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. வெங்கட் சாமிநாதன், அ. மார்க்ஸ், தமிழவன், அசோகமித்திரன் இவர்களின் இலக்கிய, விமர்சனக் கட்டுரைகள் என்னை ஈர்த்தன. அசோகமித்திரன் கட்டுரைகள் மூலமாகவே ‘தலைமுறைகள்’ நாவலை வந்தடைந்தேன்.
ஜெயந்தி சங்கர்; தமிழில் கலை, இலக்கிய விமர்சனம் செய்வோரில் உங்களுக்கு நம்பிக்கையளிப்பவர் யார் யார்?
சத்யானந்தன்; பஞ்சாங்கம், அ.மார்க்ஸ், தமிழவன், வாஸந்தி. இவர்கள் அனைவருமே என்னை வீட மூத்த படைப்பாளிகள். சமகாலத்தில் ஆசிரியர் குழு பரிந்துரைப்பவற்றை விமர்சிப்பவர் உண்டு. தன் முனைப்பில் இயங்குபவர் யாரும் தென்படவில்லை. நான் கவனிக்கவில்லை என்றால் கவனப்படுத்துங்கள்.
ஜெயந்தி சங்கர்; உங்கள் வாசிப்புப் பின்னணி குறித்துச்சொல்லுங்கள்.
சத்யானந்தன்; என் வாசிப்பின் பெரும் பகுதி சென்னையில் இருந்து டெல்லி பயணிக்கும் போது ரயிலிலும், அங்கே சாகித்ய அகாதமி நூலகத்திலும் நிகழ்ந்தன. ரயில்பயணத்தில் வாசித்து என் கண் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டது.
நான் படித்தவற்றுள் சட்டென்று நினைவுக்கு வரும்பட்டியலாக டால்ஸ்டாயின் போரும் அமைதியும், காஃப்காவின் The transformation, ஹாரியட் பீச்சர்ஸ் டோவ்வின் Uncle Tom's Cabin, பிரான்ஸின் சேலோர்மியின் குறுகியவழி, ராபர்ட்எம்.பிர்சிக்கின் Zen and the Art of Motor cycle Maintenance, முன்ஷிபிரேம்சந்த்தின் கபன், மஹாஸ்வேதாதேவியின் திரௌபதி, கசப்புமண், தஸ்லிமா நஸரீனின்- லஜ்ஜா, யூ.ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா, லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் அக்னிசாட்சி, எம்டிவாசுதேவன்நாயரின் நல்லுகெட்டு, பூமணியின் வெக்கை, இமையத்தின் கோவேறு கழுதைகள், கண்மணி குணசேகரனின் அஞ்சலை, ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, தஞ்சைபிரகாஷின் கரமுண்டார்வூடு, எம்.வி.வெங்கட்ராமின் காதுகள், சு.வேணுகோபாலின் நுண்வெளிக்கிரணங்கள், சா.கந்தசாமியின் சாயாவனம், சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை, அகிலனின் எங்கேபோகிறோம்?, ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான்?, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், அசோகமித்திரனின் கரைந்தநிழல்கள், மானசரோவர். நீலபத்மநாபனின் தலைமுறைகள், ராஜாஜியின் திக்கற்றபார்வதி, ஜெயமோகனின் ரப்பர், காடு,அறம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் சாபவிமோசனம், கயிற்றரவு, ஆதவனின் காகிதமலர்கள், இரவுக்கு முன் வருவது மாலை, மௌனி சிறுகதைகளில் 'சாவில் பிறந்த சிருஷ்டி', சுந்தரராமசாமியின் ஜேஜே- சில குறிப்புகள், சுஜாதாவின் இயந்திர மனிதன் மற்றும் மீண்டும் ஜினோ, ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா, மதுரவிஜயம், கி. ராஜநாராயணனின் கரிசல் காட்டுக்கடுதாசி, கோபல்லபுரகிராமம், கோபல்லபுரமக்கள், ஹிந்தியில்கபீர், மஹாதேவிவர்மா, தமிழில்பாரதியார், ந.பிச்சமூர்த்தி, பிரமிள், ஆத்மாநாம், யுவன், மனுஷ்யபுத்திரன், குட்டிரேவதி, உமாமகேஸ்வரி, சல்மா, தேவதேவன், சங்கரராமசுப்ரமணியன். ஆங்கிலத்தில்கீட்ஸ், எலியட், எமிலிடிக்கின்ஸன், டென்னிஸன்.
கட்டுரைகளில் வெங்கட்சுவாமிநாதன், தமிழவன், அ.மார்க்ஸ், ஜெயகாந்தன், அசோகமித்திரன், இரா.வெங்கடாசலபதி, ஞாநி, பிரேம்-ரமேஷ், கௌதம சித்தார்த்தன், சின்னக்கருப்பன், யமுனா ராஜேந்திரன், பஞ்சாங்கம்.
உடனடியாக நினைவுக்கு வந்தவை இவை. விடுபட்டவை நூல்கள் நிறையவே இருக்கும்.குறிப்பாக லத்தீன் அமெரிக்க எழுத்துக்களில் நான் வாசித்தவற்றை உடனடியாக என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.