என்ன எழுதியிருக்கிறாய் என்று பெண்ணை, ஆண் கேட்பது என்பது ஒரு சீண்டல், அதற்குச் சவாலாகப் பெண் எழுதிக்காட்ட வேண்டும் எனச் சொல்லும், அருண்மொழிநங்கை ஜெயமோகன், ஒழுக்கம் என்பது பெண்ணுக்குக்கான ஒரு அளவுகோல் இல்லை, அதைச் சொல்லிவிட்டார்களே என்று பெண் எழுத்தாளர்கள் அனுதாபம் தேடியிருக்கக் கூடாது. பெண் என்றால் கொஞ்சம் திமிர் தேவை என்கிறார்.
கேள்வி: ஜெயமோகன் அவர்களின் வாசகி என்ற நிலையிலிருந்து மனைவியாக மாறிய அந்தக் காலகட்டத்தை மீட்க முடியுமா? மனைவியான பின் உங்களின் வாசிப்பு மனநிலையில் ஏதாவது மாற்றத்தை அவதானித்தீர்களா?
பதில்: வியப்புடன் பார்க்கும் ஓர் ஆளுமையின் எழுத்தை மட்டுமே வாசகியாக இருக்கும்போது நாம் பார்க்கிறோம். அவர்களின் அன்றாட வாழ்க்கை நமக்குத் தெரிவதில்லை. அப்போது நான் அறிந்த ஜெ, ஓர் அறிவுஜீவி. அவரது எழுத்துப் பற்றிய பிரமிப்பு மட்டும்தான் என்னிடம் இருந்தது. திருமணம் ஆனதும் அவரின் அன்றாட வாழ்க்கை தெரியவந்தது. சாதாரண மனிதர்களின் அன்றாடவாழ்க்கையை விடவும் அது குழறுபடியானது என்று புரிந்தது. அப்போது எழுத்தையும் ஆளையும் நான் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மனிதரை நன்றாக அறிந்து அந்த அறிதலின் வழியாக, மேலும் நெருங்கியபோதுதான் அவருக்குள் படைப்புத்தன்மை மிகுந்த ஆளுமையைக் கண்டேன். இன்று படைப்புமனம் கொண்ட ஒருவர்தான் எனக்கு முதன்மையாவராகத் தெரிகின்றார். இது படிப்படியாக மாறிவரும் ஒரு சித்திரம்.
அத்துடன் நான் என்றைக்குமே ஒரு நல்ல வாசகி. அவர் எழுதும்போதே வாசிப்பவள். திருமணம் ஆனபோது அவர் எழுதும் வேகம் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் இப்போது ஆச்சரியமெல்லாம் இல்லை. அது இயல்பாகத் தெரிகிறது. நான் வாசகியாக இருந்த அவரின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஜெ வேறு ஒருவராகத்தான் தெரிகிறார். அது அவரது ஓர் உச்சநிலை மட்டும்தான்.
கேள்வி: ஜெயமோகன் அவர்களின் முதல் வாசகியாக இருக்கும் நீங்கள் அவருக்குக் கொடுக்கும் பின்னூட்டம், அவருடைய படைப்புக்களில் குறிப்பிடத்தக்க ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா? அது பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?
பதில்: அவரின் ஆரம்பகால படைப்புகள் எல்லாவற்றையுமே நான் வாசித்து எடிட் செய்திருக்கிறேன். விஷ்ணுபுரம் முழுக்கமுழுக்க என் தொகுப்பில் உருவான ஒரு நாவல். நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதியது என்றுகூட அவர் சொல்லியிருக்கிறார். காடு, ஏழாம் உலகம் யாவுமே நான் எடிட் செய்தவைதான். கதையோட்டம், அமைப்பின் சமநிலை இரண்டையும் நான் புறவயமாக அளந்து சொல்வேன். அது அவருக்கு உதவியாக இருக்கின்றது என்று அவர் சொல்வார்.
கேள்வி: எழுத்தாளர், பேச்சாளர், விமர்சகர், கட்டுரையாளர் என வேறுபட்ட தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜெயமோகன் அவர்களின் முகங்களில் உங்களை மிகவும் கவர்ந்த முகம் எது? ஏன்?
பதில்: எழுத்தாளர் என்பதுதான் அவருடைய அடையாளம். பிற எல்லாமே அதன் வேறு முகங்கள்தான். கட்டுரைகள், பேச்சு, விமர்சனம் எல்லாமே அவர் ஒரு நல்ல நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் என்பதனால்தான் முக்கியமாக உள்ளன. அந்தப் புனைவெழுத்தைப் புரிந்துகொள்ளாமல் இந்த விஷயங்களை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ளவே முடியாது
கேள்வி: ஜெயமோகன் அவர்களுடைய நாவல்களில் வரும் கதாபாத்திரங்களில் அங்கங்கே உங்களை நீங்கள் தரிசித்திருப்பீர்கள், அந்த அனுபவங்கள் எப்படியிருந்தன?
பதில்: நல்ல எழுத்தாளனின் கதாபாத்திரங்கள் அவருடைய உள்ளத்தில், கற்பனையில் இருப்பவர்கள். அவர்கள் நேரில் இருக்கமாட்டார்கள். நேரில் பார்த்ததை அப்படியே எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் இல்லை, அவர்கள் அறிக்கையிடுபவர்கள். குரோனிக்கிளர்ஸ் என்று சொல்லலாம். ஜெ எழுதிய ஒரு கதாபாத்திரம்கூட உண்மையாக இருந்தது இல்லை. அவை அவருடைய மனதுக்குள் இருந்து வந்தவை. எங்கெங்கோ அவை கண்ட பலவேறு மனிதர்களின் கலவை அவை. இருந்தாலும், பயந்த பேதைப் பெண்ணாக தன்னை காட்டிகொள்ளும் லலிதாங்கியிலும், குழந்தைத்தன்மையும் உரிமைப்படுத்திகொள்ளும் அன்புமாக வரும் சாருகேசியிலும், தர்க்க ஞானமும், கற்கும் வேட்கையும் கொண்ட பத்மாக்ஷியிலும் ஏன் நாகம்மையிலும் கூட என் சாயலைக் கொஞ்சம் பார்க்கலாம்
கேள்வி: உங்களைப் பாதித்த ஒரு விடயம் பற்றி ஜெயமோகன் அவர்கள் எழுத வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டதுண்டா? அவ்வகையான ஒரு கருவில் ஏதாவது கதை சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றதா?
பதில்: இல்லை. அவரிடம் அப்படி எதையும் நான் சொல்வதில்லை. அவரிடம் எல்லாவற்றையும் பேசுவேன். எது அவரைக் கவர்கிறது என்று தெரியாது. ஆயிரம்கால்மண்டபம் நான் சொன்ன ஒரு அனுபவத்திலிருந்து எழுதப்பட்டது. அதில் என் பெயரைச் செண்பகக்குழல்வாய்மொழி என்று எழுதியிருப்பார். அப்படி மற்ற கதைகளில் எங்கே நான் சொன்னவை ஒளிந்திருக்கின்றன என்று வேண்டுமென்றால் கண்டுபிடிக்கலாம். ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை. வானவில்லை ஏழுவண்ணங்களுடன் தான் பார்க்கவேண்டும் பிரித்துப்பார்க்கக்கூடாது என்று நினைப்பவள் நான்.
கேள்வி: பிரபல்யமான ஒரு எழுத்தாளரின் மனைவி என்ற அடையாளத்தை மேவி உங்களின் அடையாளம் எதுவென நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: எனக்கு அப்படி ஒரு பிரபல அடையாளமும் இல்லை. பிரபலம் என்பது மட்டும் அடையாளம் அல்ல. அடையாளம் என்பது ஆளுமை, பர்சனாலிட்டிதான். நான் ஓர் அரச ஊழியை, வாசகி, மனைவி, அன்னை. அந்த அடையாளம்தான் என்னுடையது. அதற்கும் ஜெக்கும் சம்பந்தம் கிடையாது. நான் அருண்மொழிநங்கை. ஜெ. என் கணவர் அவ்வளவுதான். என் அடையாளம் அவரைச் சார்ந்தது இல்லை
கேள்வி: உங்களுடைய கணவர், தனது நேரத்தின் 80 வீதத்தை எழுத்துடனேயே கழிகின்றார் என்பதை, அதாவது அவர் உங்களுடன் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற உங்களுடைய எதிர்ப்பார்ப்பை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என அறியலாமா?
பதில்: எல்லா ஆண்களும் தங்களுடைய நேரத்தின் 80 சதவீதத்தை குடும்பத்துக்கு வெளியேதான் செலவழிக்கிறார்கள். சினிமா, அரசியல், சீட்டு, குடி என்றெல்லாம். இலக்கியத்தில் செலவழித்தால் மட்டும்தான் நாம் அதை ஒரு பிரச்சினையாக நினைக்கிறோமா என்ன? பின் தொடரும் நிழலின் குரலில் நாகம்மை சொல்வாள், ஆண்களின் தலைக்குள் ஓர் அடுப்பு இருக்கிறது என்று. அது உண்மைதான். ஆண்கள் எல்லோருக்கும் அப்படித்தான். அத்துடன் ஜெ, நேரத்தைப் பெரும்பாலும் சரியாக நிர்வாகம் செய்பவர். நேரத்தை வீணடிப்பதில்லை. குறிப்பாக ரிவி பார்ப்பதில்லை. ஆகவே என்னுடனும் பிள்ளைகளுடனும் நாய்களுடனும் செலவழிக்க அவருக்கு நேரம் இல்லாமலிருந்ததே இல்லை. ஜெ ஒரு சீரியஸான ஆள் இல்லை. விளையாட்டுத்தனமான மனிதர். அது குடும்பத்திலுள்ளவர்களுக்கு தெரியும்.
கேள்வி: ஜெயமோகன் அவர்களின் பேச்சுக்களை கண்களில் ஒளி வீச, மிக ஆவலாக நீங்கள் கேட்டுக்கொண்டிருந்ததையும் இடைஇடையே அதற்கான தகவல்கள் கூட வழங்கியதையும் நாங்கள் அவதானித்தோம். அது நீங்கள் ஒரு நல்ல வாசகி என்பதையும் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர் என்பதையும் சொல்லாமல் சொல்லியது, எழுத வேண்டும் அல்லது பேச வேண்டும் என்ற உத்வேகம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றதா?
பதில்: முன்பெல்லாம் அப்படி ஆசை இருந்தது. சுந்தர ராமசாமியின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறேன். மொழி பெயர்ப்புக்களும் செய்திருக்கிறேன். ஆனால் தீவிரமாகச் செயல்படுவதற்கான நெருப்பு என்னிடம் இல்லை. நான் சோம்பேறி. கொஞ்சம் சொகுசாக இருக்க விரும்புபவள்
கேள்வி: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்? அவர்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?
பதில்: டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, துர்கனேவ், மார்க்யூஸ், முப்பெரும் பானர்ஜிகள் [வங்காளம்], காரந்த், அசோகமித்ரன், புதுமைபித்தன், கி,ரா, சுந்தர ராமசாமி. இவர்கள், ஒட்டுமொத்த வாழ்க்கை அல்லது ஒரு தரிசனத்தை பரந்ததொரு பின்னணியில் வைத்து, உலகப் பொதுமை என்ற அம்சத்தையும் மனித மனத்தின் நுட்பங்களையும் பிராந்தியப் பண்பாட்டு அடையாளங்களையும் ஒருங்கே காட்டும் படைப்பாளுமைகள். அசோகமித்திரனுக்குத்தான் நான் முதல்ரசிகை. அசோகமித்திரனையும் சுராவையும் சந்தித்தது என் வாழ்க்கையின் பெரும் பேறு. அடுத்த தலைமுறை எழுத்தாளர்களில்
சு. வேனுகோபால் எனக்குப் பிடித்தவர்.
கேள்வி: தமது பிரச்சினைகளைச் சொல்லத் துணியும், அவற்றை எழுத்தில் வடிக்கும் பெண்கள் பல வகையான சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கின்றது என்பது எவரும் அறியாததொரு விடயமல்ல, அப்படியிருக்கையில், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடகப் பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என ஜெயமோகன் பொதுமைப்படாகச் சொன்ன கருத்துப் பற்றி, பெண் என்ற வகையில் உங்களுடைய அபிப்பிராயம் என்ன?
பதில்: அப்படி போகிறபோக்கில் சொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது ஆணாதிக்கப்போக்குதான், சந்தேகமே இல்லை. ஆனால் அப்படிச் சொல்லப்படுவதை எழுதித்தானே முறியடிக்கவேண்டும். அதற்காக ஏன் நம் பெண் எழுத்தாளர்கள் பொங்குகிறார்கள்? ஏன் சத்தம்போடுகிறார்கள்? இங்கே உள்ள பெண் எழுத்தாளர்கள் பெரிதாக வாசிப்பதில்லை. பெண் எழுத்தாளர்கள் எழுதுவதையே படிப்பதில்லை. பெரும்பாலும் சாதாரணமான பொதுக்கருத்துக்களையே எழுதுகிறார்கள். என்ன எழுதியிருக்கிறாய் என்று ஆண் கேட்பது என்பது ஒரு சீண்டல். எழுதிக்காட்டுவதுதான் பெண்ணுக்குச் சவால். குர் அதுலைன் ஹைதர் மாதிரி, ஆஷாபூர்ணாதேவி மாதிரி, மாதவிக்குட்டி மாதிரி எழுதினால் யார் கேட்பார்கள்? அப்படி எழுதவேண்டியதுதான்
கேள்வி: மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமான எதிர்வினைகளுக்கு உங்களின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது என அறியலாமா?
பதில்: பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் எனக்குத் தெரிந்தவர்கள். அவர்களின் உணர்ச்சி எனக்குப்புரிந்தது. 1988ல் குற்றாலத்தில், இந்தப் பட்டியலிலுள்ள பெண் கவிஞர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் அன்றே கவிஞராகப் புகழ்பெற்றிருந்தார். ஆனால் புதுமைப்பித்தனையே வாசித்ததில்லை. ஆகவே பரிதாபமாகத்தான் இருந்தது. பெண்கள் தங்களை முன்வைக்கிறார்கள், எழுத்தை அல்ல என்று ஜெ சொல்லியிருந்தார். அனுதாபம் தேடுவதற்காக பெண்களின் ஒழுக்கத்தை குறை சொல்லியிருந்தார் என்று மாற்றிச்சொல்லி சத்தம்போட்டது தவறு. ஜெ அப்படிச் சொல்லக்கூடியவர் இல்லை. மேலும் பெண்ணுக்கு ஒழுக்கம் ஒரு பெரிய கிரைடீரியனும் இல்லை. அதைத்தான் பெண் எழுத்தாளர்கள் சொல்லவேண்டும். ஒழுக்கத்தை சொல்லிவிட்டார்களே என்று அனுதாபம் தேடியிருக்கக் கூடாது. பெண் எழுத்தாளர்கள் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் திமிராக இருந்திருக்கலாம். எல்லாரும் என்னைவிட இளைய பெண்கள். அதனால் சொல்கிறேன், பெண் என்றால் கொஞ்சம் திமிர் தேவை.
கேள்வி: உங்களுடைய பிள்ளைகளுக்கு, தாங்களும் தங்களுடைய அப்பாவைப் போல ஒரு எழுத்தாளராக வரவேண்டும் என்ற கனவுள்ளதா? அல்லது உங்களுக்கு அப்படி ஒரு ஆசை இருக்கின்றதா?
ஆமாம். இரண்டுபேருமே அற்புதமான இலக்கிய வாசகர்கள். பையன் மணிரத்தினத்தின் உதவியாளராக பணியாற்றினான். வெர்னர் ஹெர்சாக் போல கலை படங்கள் எடுப்பதில் ஆர்வமுண்டு. மகன், என்னுடைய கணவரைவிடப் பெரிய இலக்கியவாசகன் என்பதில் எனக்குப் பெருமை. மகள் ஆங்கில இலக்கியம் விரும்பி படிக்கிறாள். பாடத்திற்கு வெளியிலும் நிறைய வாசிப்பாள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.