
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன்.
சிறுவயதில் எங்கள் குடும்பத்தில் பாண் (ரொட்டி) சாப்பிடுவது இழிவாகக் கருதப்பட்டது. அரிசி வாங்கப் பணமில்லாதவர்கள்தான் பாண் சாப்பிடுவார்கள் என்ற கருத்து எங்கள் தீவுப் பகுதி மக்களிடையே பரவியிருந்தது. அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு தவறு என்று இன்று விவாதிக்க முடியாது.
இதை இக்காலத் தமிழ் அரசியலுடன் ஒப்பிடலாம். சிலர் எமது அரசியலை “யாழ்ப்பாண மையவாதம்” என்று சொல்வதைப் போல, இதனை “தீவுப் பகுதி மையவாதம்” எனக் கொள்ளலாம்.
இந்த அரிசியியலில் பழகிப்போன எனக்கு அரிசிச் சோற்றை விட முடியாமல் போனது வியப்பில்லை. இரவில் ஒரு கோப்பை நிரம்பச் சோறு உண்ணுவதைப் பார்த்து, பலமுறை எனது மகள்,
“Dad, this is too much!” என்று எச்சரிப்பாள்.
எனக்கு அரிசிச் சோற்றை இன்னும் இலகுவாகச் சாப்பிடுவதற்கு ஒரு Single Malt Whisky கூட துணைபுரியும்.
நண்பகலில் வெளியே சென்றால், பெரும்பாலான இலங்கை மற்றும் இந்திய உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் எனக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். “அங்கிள்”, “அண்ணை” என்று அழைத்து தாராளமாக என் தட்டில் சோற்றை நிரப்பிவிடுவார்கள்.
இப்படி நெல் தண்ணீரில் வளர்வது போல அரிசியில் வளர்ந்த எனக்கு, சில வருடங்கள் முன் இரத்தச் சர்க்கரை அதிகரித்தது.
அந்தக் கணமே அரிசிச் சோற்றுக்கு வயிற்றில் அடி விழுந்தது.
தமிழர்கள்தான் அரிசியைக் கண்டுபிடித்தவர்கள்; காவிரி கரையில் தமிழும் அரிசியும் ஒன்றாகப் பிறந்தன என்று சமீபத்தில் சிலர் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருந்தார்கள். அது வரலாற்று உண்மையா அல்லது தமிழ் உணர்வின் பெருக்கா என எனக்குத் தெரியாது , ஆனால் எனக்குத் தெரிந்தவரை, அண்மைக் காலங்களில் விஞ்ஞானிகள் உணவுகள் உடலில் குளுக்கோசாக மாற எடுக்கும் நேரத்தை அளந்து, அவற்றை Glycemic Index அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளனர். விரைவாக குளுக்கோசாக மாறும் உணவுகள் High Glycemic Index என்றும், மெதுவாக மாறுபவை Low Glycemic Index என்றும் அழைக்கப்படுகின்றன.
அரிசிச் சோறு பொதுவாக விரைவாக குளுக்கோசாக மாறுகிறது. அதே நேரத்தில் பல கோதுமை உணவுகள் மிதமான (Moderate Glycemic Index) வகையில் உள்ளன.
அரிசியிலும் பல வகைகள் உள்ளன. எங்கள் மொட்டைக் கறுப்பன் போன்ற பாரம்பரிய அரிசி வகைகளில் மாவுச்சத்து சற்றுக் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். அதனால் அவை இரத்தத்தில் குளுக்கோசாக மாறுவதற்கு அதிக நேரம் எடுக்கின்றன, ஆனால் அதிக விளைச்சல் தரும் நெல் வகைகளை உருவாக்கிய சீன விஞ்ஞானி Yuan Longping அவர்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னர், உலகம் அதிக அரிசி உற்பத்தி செய்யத் தொடங்கியது. இது மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கிய ஒரு மாபெரும் சாதனை. அதேவேளை, பல நவீன அரிசி வகைகளில் நார்ச்சத்து குறைந்து, மாவுச்சத்து அதிகரித்தது.
இப்போது அரிசியின் தவிடு (bran) தனியாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதிலுள்ள எண்ணெய் எடுக்கப்பட்டு Rice Bran Oil என விற்பனை செய்யப்படுகிறது. முன்பு அரிசியுடன் இயற்கையாகக் கிடைத்த நார்ச்சத்தையும் எண்ணெய்ச் சத்தையும் தனியே வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
இந்த நிலையில், எனது கையில் இருந்த உணவுப் பட்டியல் என் மனைவியின் கைக்கு மாறிவிட்டது. ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட பாண், கோதுமை, ரொட்டி ஆகியவை இப்போது என் தட்டில் முக்கிய இடம் பிடித்துள்ளன. அக்கால தமிழகத்தில் மதுவுக்கு இருந்த “Permit System” போல, இப்போது எனக்கு அரிசிக்கும் அனுமதிப்பத்திர முறை அமலில் உள்ளது.
கொண்டைக்கடலை, பட்டாணிக்கடலை போன்றவை காலை, மாலை என என் தட்டில் வந்து சேர்கின்றன. வெள்ளரிக்காய், கரட், லெட்டூஸ் போன்றவற்றை முயல்களுக்கு உணவாகக் கொடுக்கலாம் என்று என்னிடம் ஆலோசனை கேட்டவர்களுக்குப் பலமுறை சொல்லியிருக்கிறேன். இப்போது அதே ஆலோசனை என் மனைவியின் வாயிலாக என்னிடமே திரும்பி வருகிறது.
நாம் சாப்பிடும் உணவு குளுக்கோசாக மாறியதும், இரைப்பைக்குக் கீழே உள்ள கணையம் (Pancreas) இன்சுலின் சுரந்து அந்த குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. தென்கிழக்கு ஆசிய மக்களைப் பொறுத்தவரை இந்தக் கணையம் ஓவர்டைம் வேலை செய்கிறது.
காலையில் புட்டு, இடியப்பம்; நண்பகலில் அரிசிச் சோறு; இரவிலும் மீண்டும் அதே உணவு. பாவம், இந்தச் சுரப்பிக்கு Sabbath Day-யிலும் ஓய்வு கிடைப்பதில்லை!
நாம் அதிகமாகச் சாப்பிடும் போதெல்லாம் அதிக இன்சுலின் தேவைப்படுகிறது. காலப்போக்கில் உடல் இன்சுலினுக்கு எதிர்ப்பு காட்டத் தொடங்குகிறது; சிலரிடம் இன்சுலின் உற்பத்தியும் குறையலாம். இதுவே நீரிழிவு நோய் உருவாகுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
அதுமட்டுமல்ல, ஓடி வேலை செய்தாலோ, உடற்பயிற்சி செய்தாலோ குளுக்கோஸ் தசைகளால் பயன்படுத்தப்பட்டு இரத்தத்தில் அதன் அளவு குறைகிறது. இதனால் கணையத்திற்கும் ஓரளவு ஓய்வு கிடைக்கிறது, ஆனால் எம்மவர்களைப் பொறுத்தவரை, வயதும் வசதியும் அதிகரிக்க அதிகரிக்க உடற்பயிற்சி குறைந்து கொண்டே செல்கிறது.
ஒரு நாள் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு 8.5 mmol/L என்று அளவிடப்பட்டது. அதன் பிறகு இரண்டு கிலோமீட்டர் வேகமாக நடந்துவிட்டு மீண்டும் பரிசோதித்தபோது அது 5.5 mmol/L ஆகக் குறைந்திருந்தது.
இந்தியாவில் வெளியான ஒரு ஆய்வில், டெல்லி நகர மக்களைவிட டெல்லியைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களிடையே நீரிழிவு குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. அவர்களின் உடல் உழைப்பும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
முன்னொரு காலத்தில் கிராமங்களில் சிலர் தாங்கள் சிறுநீர் கழித்த இடத்தில் எறும்புகள் மொய்ப்பதன் மூலம் தமக்கு நீரிழிவு இருப்பதை அறிந்துகொள்வார்கள். இன்னும் சிலர் கண் பார்வை மங்கியபின் மருத்துவரை அணுகும்போது, அவர்களுக்கு கண்புரை (Cataract) இருப்பதோடு, இரத்தப் பரிசோதனையில் நீரிழிவும் கண்டறியப்படும்.
ஆஸ்திரேலியாவில் ஏராளமானோர் நீரிழிவுடன் வாழ்கின்றனர். அதைவிட கவலைக்குரியது, தமக்கு நீரிழிவு இருப்பதே தெரியாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்பதுதான்.
இரத்தத்தில் குளுக்கோசின் அளவு நீண்டகாலமாக அதிகமாக இருக்கும் போது, அது சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை சேதப்படுத்துகிறது. ஒரு ஆய்வாளர் இதை “சீனியில் தோய்த்துக் கருகிய ரொட்டியின் மேற்புறம்” போல ஒப்பிடுகிறார். இந்த பாதிப்பு உடலின் பல உறுப்புகளில் ஏற்படும்போது, கண்கள், சிறுநீரகங்கள், கால்களின் நரம்புகள், இதயம் போன்றவை படிப்படியாக பாதிக்கப்படுகின்றன.
நீரிழிவின் தாக்கத்தைக் குறைக்க அரிசிச் சோற்றை அளவாக உண்ணுவது உதவும்.
எங்கள் அரிசி உண்ணும் கலாச்சாரத்தை முழுமையாக மாற்ற முடியாது. மதிய உணவில் ஒரு கவளம் சோறு இல்லாமல் என்னால் இருக்க முடியாது. ஆனால் காலை, இரவு ஆகிய வேளைகளில் அதன் அளவைக் குறைத்தால், நமது கண்கள், கால்கள், சிறுநீரகங்கள் ஆகியவற்றை கட்டையில் போகும் நாள் வரை நன்றாக வைத்திருக்க முடியும் என்பது அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடமாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - AI



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









