அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ! - சக்தி சக்திதாசன், லண்டன் -
“ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார். எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் மேடையேறும் காட்சிகளுக்கும் இவ்வாசகத்துக்கும் பொருத்தமிருக்கும் எனும் எனது பிரதிபலிப்பே அதற்குக் காரணமாகும். ப்ரெக்ஸிட் எனும் படகில் ஏறி தனது அரசியல் பயணத்தின் இலட்சியமான பிரதமர் எனும் பதவியைத் தனதாக்கிக் கொண்டார் எமது பிரதமர் பொரிஸ் ஜோன்சன். மிகவும் உற்சாகத்துடன் ப்ரெக்ஸிட் எனும் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விட்டேன் என்ற கோஷத்துடன் ஓரளவு மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த அவர் 80 பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டார்.
ப்ரெக்ஸிட் எனும் தீர்வு ஏதோ இலகுவாக செயற்படுத்தப்படக்கூடியதொன்றல்ல என்பது அரசியல் அறிவில் தெளிவுடைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவுகள் பற்றி அனுபவமிக்க அரசியல், மற்றும் பொருளாதார நிபுணர்கள் பல அறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியிருந்தனர். ப்ரெக்ஸிட் பிரச்சனையைத் தீர்த்து வைத்தவர் என்னும் பெயரெடுப்பதற்காக அவசரம் அவசரமாக பல சிக்கலான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு விட்ட பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அதன் விளைவுகளைச் சமாளிக்கத் திணறிக் கொண்டிருக்கும் போதுதான் முன்னறிவிப்பின்றி உலகினுள் பிரவேசித்தது கொரோனா. கொரோனா எனும் நுண்கிருமியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பதுதான் தலையாய கடமை எனும் கோஷத்துடன் ப்ரெக்ஸிட் பிரச்சனைகளை ஓரம் கட்டி வைத்தார் எமது பிரதமர்.
2020 மார்ச்/ஏப்பிரல் தொடங்கி 2022 ஜனவரி முடிவுவரை பல்வேறு காலப்பகுதிகளில் லாக்டவுண் பல்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு பரிமாணங்களிலும் நிறுவப்பட்டது. அதிகபட்ச லாக்டவுண் விதிகளாக ஹாஸ்பிட்டல்களில் இறுதிக் கட்டத்தில் இருக்கும் உறவினர்களைக் கூட கடைசிமுறையாகப் பார்க்க முடியாத வகையில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டன. வயோதிப இல்லங்களில் வசிக்கும் தமது வயதான உறவினர்களைச் சந்திக்க முடியாதவாறு லாக்டவுண் விதிகள் அமைந்திருந்தன. மிகவும் கடினமான விதிகளை மிகவும் சிரத்தையுடன் ஐக்கிய இராச்சிய மக்கள் பின்பற்றினர் , இவ்விதிகளை இயற்றி நடைமுறைப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர் பிரதமரே. இவ்விதிகளை மீறியோர் மீது போலிஸார் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர்.