'பல்கலைக்கழகங்களும் பகிடிவதைகளும்'
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் 'பகிடிவதை' என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் 'பகிடிவதைக்'கெதிராகப் பதிவிடப்பட்ட பல ஆத்திரமான கண்டனங்களின் பிரதிபலிபு என்று நினைக்கிறேன்.
பல்கலைக்கழகப் படிப்பு என்பது மேற்கல்வி படிக்க வரும் ஒவ்வொரு மாணவ மாணவிகளினதும் பிரமாண்டமான எதிர்காலக் கனவுகளைத் தாங்கிக்கொண்டுவரும் ஒரு மகத்தான பிரயாணம். அந்தப் பிரயாணத்தின் ஆரம்பமே அசிங்கமான அனுபவங்களுடன் ஆரம்பித்தால், அந்த மாணவ மாணவிகளின் இளம் கனவுகள், எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களில் வைக்கும் நம்பிக்கை, மரியாதை என்பவற்றைக் கேள்விக்குறியாக்கும் விடயமாக அமைகிறது.இப்படித்தான் வாழவேண்டும் என்ற அவர்களின் தூய உணர்வுகள் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே 'காமவெறிபிடித்த சில காவாலிகளின்' சேட்டைகளால் சிதறியழிவதை ஒரு சமுதாயம் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது, அல்லது அதைப் பெரிதுபடுத்தாமல். ஏதோ சாட்டுக்கள் சொல்லி மறைப்பது,என்பவை அந்தச் சமுதாயத்தில் கவுரமாக வாழ வலிமையற்றவர்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவமான இடமில்லை என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.