எங்களது படகின் அடுத்த தரிப்பு, பவேரியா மாநிலத்தில் நூரம்பேக் நகரமாக இருந்தது. ஆனால், படகின் வழிகாட்டும் பொறுப்பாளர்கள் . “இலவசமாக நகரத்தின் மத்திய பகுதிகளை நாங்கள் சுற்றிக் காட்டுவோம். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பணம் கொடுத்தால், ஹிட்லரது நாஜி கட்சியினது முக்கிய தலைவர்கள் , அதிகாரிகளுக்கு எதிராக, நேசநாடுகளால் நடத்தப்பட்ட வழக்கு நடந்த இராணுவ நீதிமன்றத்திற்கும் , ஹிட்லரது கட்சி பிரசாரத்திற்கும், கூட்டங்கள், அணிவகுப்புகளுக்கு எனக் கட்டப்பட்ட ஸ்ரேடியம், அணிவகுப்பு மைதானம் போன்ற பகுதிகளுக்கு உங்களை பஸ்சில் கொண்டு சென்று, உங்களுக்குக் காட்டுவதுடன், ஆங்கிலத்தில் விடயங்களைத் தெளிவாக விளக்குவதற்கு ஒருவரை ஒழுங்கு பண்ணமுடியும்“ என முதல் நாள் இரவே சொன்னபோது அங்கு செல்வது எனது நோக்கமாகியது.
இப்படியான வரலாற்றில் விருப்பம் இல்லாத போதும், சியாமளா வருவதற்கு சம்மதித்ததால் காலையில் பஸ்சில் ஏறினோம்.
அது ஓர் அழகான கோடைக்காலத்து நாள்: பிரகாசமாக வெயில் அடித்தது. எங்கள் பஸ் நகரத்தூடாக சென்றது. அப்பொழுது எமது வழிகாட்டி இது இங்கிலாந்தில் லிவர்பூல், மான்செஸ்டர் போன்று தொழிற்சாலைகள் , தொழிலாளர்களைப் பெரிதளவு கொண்ட நகரம் எனப் பிரித்தானியத் தொனியில் சொன்னது எனது காதில் விழுந்தது. ஆனால், கண்கள் வெளியே பார்த்தன. மனத்தில் ஹிட்லரது பன்னிரண்டு வருட கால ஆட்சிபற்றி இதுவரை கேட்ட , படித்த , திரைப்படங்களில் பார்த்த காட்சிகளோடு கலந்து அரைத்த ஆந்திரா மிளகாய்த் தூளாக மனத்தில் காரமாகத் பற்றி எரிந்தது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்றப்பின்பு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் வெளிநாட்டுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கையிலுள்ள இராஜபக்ஸ அரசை ஹெக் என்ற ஒல்லாந்து நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஏற்றுவோம் எனச் சூளுரைத்த பேச்சுகளைக் கேட்டு நான் காது புளித்தவன். மேலும் ஜெனிவா மனித உரிமை ஆணையத்திற்கு இரு முறை சென்றுள்ளதால் ஓரளவு அதன் நடைமுறைகளைப் பார்த்தவன். எப்பொழுதும் வென்றவர்களே நியாயம், அநியாயம், நீதி என்பவற்றைத் தீர்மானிப்பார்கள். அக்காலத்தில் ரோமர்கள் எந்த அநியாயமான போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என வரலாற்றில் படித்தவன். அதுபோல் தற்காலத்தில் அமெரிக்கர்கள் நியாயமற்ற போரில் ஈடுபடுவதில்லை என்பதும் தெரிந்தவன் என்பதால் நூரம்பேக்கில் நடந்த இராணுவ நீதிமன்றத்தின் அமைப்பையே பார்க்க விரும்பினேன்.
நூரம்பேக்கில் 1945இல் நடந்த இராணுவ நீதிமன்றத்தில் போட்ட முட்டையில் அடைகாத்துப் பின்பு பொரித்த கோழிக்குஞ்சே ஹெக் ( ICC) நீதிமன்றம். மேற்கு நாடுகள் சில, ஆபிரிக்காவில் சில சர்வாதிகாரிகளோடு சேபியாவின் தலைவர்களைத் தண்டித்ததோடு களைத்துவிட்டது.
அக்காலத்தில் நூரம்பேக் இராணுவ நீதிமன்றத்தை முன்னின்று நடத்திய அமெரிக்கா, தற்போது இஸ்ரேல் பிரதமர் நெத்தனியாகுவை பாதுகாப்பதுடன், ரஸ்ய அதிபர் புட்டினை நீதிமன்றத்தின் முன் நிறுத்த விரும்புகிறது. தற்கால அரசியல் இத்துடன் முடிகிறது.
எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர், இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து, இங்கு ஜெர்மன் பெண்ணை மணம் முடித்து நாற்பது வருடங்களாக நூரம்பேர்க்கில் குழந்தைகளோடு குடும்பமாக வாழ்பவர். இரண்டாம் உலகப்போரை இங்கிலாந்தும் வின்சன்ட் சேர்ச்சிலும் வென்றது என புழுகியபடி சொன்னது எனக்கு எரிச்சலையூட்டியது. அதைவிட எனக்கு எரிச்சலை ஊட்டியது , போரில் ஈடுபட்ட நாடுகளில் ஒன்று ரஸ்யா என வழக்கமான பிரித்தானியர்களுக்குரிய ரஸ்ய வெறுப்பைப் பல தடவைகள் வாந்தியெடுத்தபோது , நான் சொன்னேன் ‘அக்காலத்தில் சோவியத் ஒன்றியம் மட்டும்தான் இருந்தது. ரஸ்யா என்ற நாடே இருக்கவில்லை. பலருக்கு முன்பு நான் சொன்னதால் மட்டுமல்ல, அவர் ஒரு MA எடின்பரோ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பட்டதாரி ; முகம் சிவந்ததாலும் தன்னை சமாளித்தபடி “அதில் ரஸ்யாதானே முக்கிய நாடு “ என்றார் .
நான் சிரித்தேன். அதற்குமேல் அவரை அந்தரப்படுத்த விரும்பவில்லை, மேலும் அவரிடமிருந்து அறிவதற்கு எனக்குப் பல விடயங்கள் உள்ளன.
ஒவ்வொருவர் மனத்தில் வெறுப்புகள் அவர்களது கல்வியையும் அறிவையும் கடந்து, கிணற்றில் இறந்த மீனாக நீர்மட்டத்தின் மேலே வரும். சமீபத்தில் தமிழ் இருதய வைத்தியர் ஒருவர் என்னிடம் “நீங்கள் சிங்களப் பகுதியில் ஏன் வைத்திய உதவி செய்கிறீர்கள் “ என்றார் ‘ எனது பதில் கொஞ்சம் இடக்காக இருந்தது ‘ நான் சிங்கள பிரதேசத்தில் படித்தேன் . எனது மகன் பிறந்தது சிங்கள வைத்தியரின் உதவியால். ‘ என்று .தொலைபேசியில் பேசியதால் அவரது முகம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
நாங்கள் சென்றபோது பல விடயங்கள் அந்த வழிகாட்டி மூலம் அறிய முடிந்தது. நூரம்பேக் (Nuremberg) நகரம் நேச நாடுகளால் 90% குண்டுவீசி அழிக்கப்பட்டது. அதற்கான காரணம்; பெரும்பாலான நாஜிகளின் போருக்கான இராணுவ தளபாடங்கள் இங்கே செய்யப்பட்டது. இந்த நகரத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தார்கள். ஜேர்மனியின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான சீமன் (Siemens) போருக்குத் தேவையான விமான யந்திரம், கப்பல் ரேபைன்கள், வாகனங்கள் எல்லாம் இங்கு உற்பத்தி செய்தார்கள் . இதனாலே இந்த நகரம் பிரதானமான தாக்குதலுக்கு உள்ளாகியது .
இந்த நகரத்தில் ஜெர்மனியின் தொழிலாளர்களுடன் 10,000 ரஸ்யாவினதும் , உக்ரேன் போன்ற நாடுகளிலிருந்து கைது செய்யப்பட்டவர்கள் அடிமைகளாக வேலை செய்தார்கள் அவர்கள் மற்றைய ஜெர்மன் தொழிலாளர்கள்போல், குண்டு வீசும்போது பாதுகாப்பு இடங்களில் சென்று பதுங்க முடியாது: தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் இதனால் 1945, மார்ச் மாதம் அதாவது, போரின் இறுதிக்காலம் வரையும் இராணுவ தளபாட உற்பத்தி தொடர்ந்தது.
அல்பேட் ஸ்பியர் ( Albert Speer) என்பவரே போர்த் தளபாட உற்பத்திக்குப் பொறுப்பாக இருந்தவர். இவர் ஒரு கட்டிடக்கலைஞராக பயிற்றப்பட்டு ஆரம்பத்திலே பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்று பிராங்பேட்டில் கட்டிட வேலைக்கான ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தியவர். ஆனால், நாஜிக் கட்சியில் சேர்ந்தபின் இவரே போருக்கான கட்டுமானம் (Production and Logistic) , பொறுப்பான மந்திரியாக நியமிக்கப்பட்டார். இறுதியில் நூரம்பேர்க் விசாரிக்கப்பட்ட 24 பேரில் இவரும் ஒருவர். தொழிலாளர்களை அடிமைகளாகத் துன்பப்பட்டது தெரியாது எனச் சொல்லி போரின் மற்றைய குற்றங்களுக்குப் பொறுப்பேற்றதால் தொழிலாளர்களை அடிமையாக வைத்திருந்தது என்ற ஒரு குற்றச்சாட்டில் இவர் மரண தண்டனையில் தப்பி 20 வருடங்கள் சிறையிலிருந்து விட்டு1966 இல் வெளியே வந்தார். தனது அனுபவங்களைப் புத்தகமாகப் போட்டுப் பல மில்லியன் பணமாகப் பயனடைந்தவர் என்ற குற்றச்சாட்டும் இவர்மீது உள்ளது. இங்கு ஒரு கொசுறுச் செய்தி : சமீபத்தில் கட்டாரில் நடந்த உலக கால்ப்பந்தாட்ட போட்டிக்கான அழகிய கட்டிட அரங்கம் அல்பேட் ஸ்பியர் மகனால் வரையப்பட்டது என்பது நான் பின்பாக அறிந்த தகவலாகும்.
நாங்கள் பார்த்த இரு இடங்கள் காங்கிரஸ் மண்டபம் (Congress Hall) எனப்படும் இராட்சதக் கட்டிடம். பல பகுதிகள் உடைக்கப்பட்டபோதும் தற்பொழுது ஜெர்மனிய அரசு உடைக்காத பகுதி நாஜிகளை விசாரித்த இராணுவ நீதிமன்றமாகும் .
நாங்கள் பார்த்த ஸ்ரேடியம் மிகவும் பெரியது. பெரிய வாசல்கள், வளைவுகள் , துண்களைக் கொண்டது. ரோமர்களின் கட்டிடக்கலையைப் பின்பற்றி உருவாக்கியது. (Colosseum in Rome) குதிரை லாடத்தின் அமைப்பு திறந்த வெளி மைதானமாக இல்லாது கட்டிடத்தின் மேற்பகுதி கண்ணாடியிலானது .
“ஹிட்லர் பேசும்போது மட்டுப்படுத்தப்பட்ட சூரிய ஒளி ஹிட்லரது தலையில் விழுந்து, அவரை பார்ப்பவர்களிடம் விசேட புருசராக காட்டுவதற்காக “ என்றார் அந்த வழிகாட்டி. ஹிட்லர் நீளமான பேச்சுகளைப் பேசுபவர் என்று அதை ஏற்கனவே நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்,. நாஜிகளின் செயல்கள் போல் இந்த கட்டிடங்களும் பிரமாண்டமானவை. சாதாரண மக்களை திகிலடைய வைக்கும் நோக்கம் கொண்டவை. இங்கு நடக்கும் ஊர்வலங்களைப் பார்க்க பல நாட்டின் தூதுவர்கள் வரவழைக்கப்படுவார்கள். அக்கால நூரம்பேக் சிறிய நகரம், நகரத்தின் மொத்த சனத்தொகையே 20000-30000 மட்டுமே. சுற்று வட்டாரத்தில் 250,000 பேர் ஊர்வலம் நடத்துவார்கள். இங்கே ஹிட்லர் மேடையில் நின்று பேசுவதாகப் பல சினிமாக்கள் எடுக்கப்பட்டன.
ஸ்ரேடியத்தின் கட்டிட வேலை ஹிட்லர் காலத்தில் முற்றாக வேலை முடியாத போதிலும் எஞ்சிய பகுதிகளைப் பார்க்க முடிந்தது . முக்கிய பார்வையாளர் மைதானம் 50,000 பேர் இருப்பதற்கு வசதிகள் கொண்ட கட்டிடம். அதைச் சுற்றி நாஜிகள் ஊர்வலம் நடக்கும் இடம் உள்ளது. முக்கியமான ஊர்வலங்கள் ஹிட்லர் பதவிக்கு வரமுன்பும் நடந்தது: பின்பாகவும் நடந்தது. அத்துடன் இராணுவ படை வீடுகளும் இருந்தது. 1938 மிகவும் பெரிய ஊர்வலம் இங்கு நடந்தது அப்பொழுது அவுஸ்திரிய , செக்கோசிலோவாக்கியா போன்ற நாடுகள் ஹிட்லரால் ஏற்கனவே விழுங்கப்பட்டிருந்தது.
நூரம்பேர்க் ஏன் முக்கிய நகரமாக ஹிட்லரால் தெரிவு செய்யப்பட்டது ?
புராதன ரோமர் காலத்து ஐரோப்பிய நகரம் என்பது முக்கிய காரணம். அத்துடன் ஜேர்மனியின் கிழக்கே உள்ள ஒரே மொழி பேசும் அவுஸ்திரியாவை உள்ளடக்கிய தேசமாக இருந்ததால், நாட்டின் மத்தியில் நூரம்பேர்க் அமைந்ததுடன், வசதியான போக்குவரத்து தொடர்பு இங்கிருந்து ஜெர்மனியின் எல்லாப் பகுதிகளுக்கும் இருந்தது. 1835 ரயில் ஓடும்போதே நூரம்பேக்கிலிருந்து ஃபேத் என்ற நகரத்திற்குச் சென்றதாம். அங்குதான் அமெரிக்காவின் வெளி விவகார அமைச்சராக (Secretary of state) இருந்த யூதரான ஹென்றி கிஸ்சிங்கர் பிறந்த இடம். இவர் சிறுவனாக அமெரிக்கா சென்று, பின்பு யுத்தத்தின்போது அமெரிக்க படையில் ஒருவராக இங்கு வந்தார். 100 வயது வரை வாழ்ந்து சமீபத்தில் இறந்தவர். ஹென்றி கிஸ்சிங்கரின் உறவினர்கள் எல்லோரும் கொலை முகாமில் ஹிட்லரால் (Auschwitz ) கொல்லப்பட்டார்கள்.
போலந்து, சோவியத் மக்களையோ, யூதர்களையோ ஜெர்மன் படைகள் சகமனிதர்களாகப் பார்க்கவில்லை. இது போன்ற நிலை நமது நாடுகளிலும் நடந்ததுதானே ? தற்போது பாலஸ்தீனர்களை இஸ்ரேல் நடத்துவதும் இப்படியான ஒரு சிந்தனையோட்டமா? என எனது மனதில் எண்ணத் தோன்றியது.
நூரம்பேக் வழக்கு நடந்த கட்டிடத்துள் நாங்கள் போனோம். அது சினிமாவில் வரும் நீதிமன்றங்கள் போலிருந்தது. அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இராணுவ வழக்கை எங்கு நடத்துவது எனப் போட்டி போட்டன. இறுதியில் அமெரிக்காவே நூரம்பேக் நகரை வழக்கு நடத்தும் இடமாக தீர்மானித்தது. வழக்கு நடத்துவது, பாதுகாப்பு, எல்லாம் அமெரிக்காவினது பொறுப்பில் நடந்தது. 1946 வரையும் இங்கு விசாரணை நடந்தது. நான்கு நீதிபதிகளும் வெற்றியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். அங்கு எந்த ஜுரர்களும் இல்லாத இராணுவ நீதிமன்றமாக இருந்தது.
நீதிமன்றம் எனும்போது சாட்சியங்கள், பத்திரங்கள் , சான்றுகள் தேவைப்பட்டன. ஆனால், இறுதி நேரத்தில் ஜெர்மனியப் படைகள் பலவற்றை அழித்துவிட்டார்கள் என்றபோதிலும் 12 வருடங்களாக நடந்த நாஜி ஆட்சியால், உள்ளது எல்லாவற்றையும் அழிக்க முடியவில்லை. சோவியத் நீதிபதி இராணுவ உடையுடனும் மற்றைய நாடுகளின் நீதிபதிகள் சிவில் உடையுடனும் நீதிமன்றத்திலிருந்தார்கள்.
இங்கு பல மொழி பேசும் நாட்டவர்கள் நீதிபதிகளாகவும் ஜேர்மனியினர் குற்றவாளிக் கூண்டிலிருந்ததால் மொழிப் பிரச்சினை எழுந்தது. அமெரிகர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் ஆங்கிலம் பொதுமொழி. ஆனால், மற்றையவர்களுக்கு பிரான்ஸிய , ரஸ்சிய மொழி பெயர்ப்பு வேண்டும். IBM நிறுவனம் நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் மொழி பெயர்க்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தது. அக்காலத்தில் இந்த சேவையை இந்த நீதிமன்றத்திற்கு இலவசமாக வழங்கியது, பிற்காலத்தில் இதுவே ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
24 மரண தண்டனை, 20 ஆயுட்காலத் தண்டனை , 25 பேர் நிரபராதிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட போதும் பலர் சில வருடங்களில் வெளியே வந்துவிட்டார்கள்.
நூரம்பேரக் நீதிமன்றத்தின் வெளியே வந்தபோது ஒரு வரலாற்றின் முக்கிய காலத்தைப் புரிந்துகொண்ட நிம்மதி என் மனத்தில் உருவாகியது. சியாமளாவின் மனத்தில் விடுமுறையில் வந்து இப்படியான மன வேதனையான விடயத்தைப் பார்த்தோ கேட்கவோ வேண்டியதில்லை என்ற நினைவு இருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.