
[ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன]
அண்மையில் ஸ்கார்பரோ,கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' என்னும் சிங்கள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு (சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான செல்லையா மனோரஞ்சனால் செய்யப்பட்டது) பற்றிய கலந்துரையாடல் 'கனேடிய இலங்கை மன்ற'த்திm ஏற்பாட்டில் நடைபெற்றது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் லோ.மதியழகன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பேச்சாளர்களாக சமூக,ம் அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை, ஊடகவியலாளர் வடிவேல் தேவராஜ், அரசியல் ஆய்வாளர் மனோரஞ்சன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்குச் செல்ல விரும்பியிருந்தேன். இறுதியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை.ஆனால் அந்தக் குறையினைத் 'தடயத்தார்' கிருபா கந்தையா தீர்த்து வைத்தார். அந்நிகழ்வைக் காணொளியாகப் பதிவு செய்து, தனது 'தடயத்தார்' யு டியூப் சானலில் பகிருந்திருந்தார். அவருக்கு என் நன்றி. இவ்விதம் இங்கு நடைபெறும் சமூக,கலை, இலக்கிய & அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வரும் அவர்தம் பணி போற்றுதற்குரியது.
அந்நிகழ்வின் ஆரம்பத்தில் நூலாசிரியர் நந்தன வீரரத்ன மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையினைத் தமிழில் வழங்கினார் மனோரஞ்சன் செல்லையா. நந்தன வீரரத்தினவின் உரை பற்றிய எனது கருத்துகளே இப்பதிவு.

முதலில் நந்தன வீரரத்னவின் மானுட நேயத்திற்காகவும், காலத்தின் தேவை கருதி எழுதிய நூல்களுக்காகவும் அவரைப் பாராட்டுவோம். தென்னிலங்கையின் பெரும்பான்மையினமான சிங்கள மக்கள் மத்தியில் இதுவரை காலமும் இனவாத அரசியல் மூலம் உண்மையினை மறைத்து வந்த நிலையினை மாற்றுவதற்கு, இலங்கைச் சிறுபான்மையினர் குறிப்பாகத் தமிழர் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வுக்கு அவரது சிங்கள மூல நூல்கள் வழிவகுக்கும். அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகள் தமிழ் மக்கள் மத்தியில் சரியான இலங்கை அரசுகளின் இனவாத, மானுட விரோத நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேற்படி நிகழ்வில் அவர் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவையென்று நான் கருதுபவை:
1. 83 கறுப்பு ஜூலையில் நடைபெற்ற வெலிக்கடைச் சிறைச்சாலைப்படுகொலைகளில் இத்தாலிய விமானக் கடத்தல் புகழ் சேபால எக்கநாயக்காவின் பங்கு. காவல் அதிகாரிகள். படை அதிகாரிகளின் பங்கு.
2. ஜே.ஆர், ரணசிங்க பிரேமதாசா, சந்திரிகா குமாரதுங்க & மகிந்த ராஜபக்சவின் அதிகாரக்காலகட்டங்களில் அவர்களின் கீழ் இயங்கிய பாதாளக்குழுக்களின் பங்குகள். சிலர் பிரேமதாசாவின் காலகட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலும் இருந்திருக்கின்றனர்.
3. ஜே.ஆர் ஐக்கிய தேசியக் கட்சியினரைக் கொண்டு உருவாக்கிய 'றிசேர்வ் பொலிஸ்' பிரிவு. இவற்றில் இருந்தவர்கள் பலர் பின்னர் உயர் அதிகாரிகளாகி மனித உரிமை மீறல்களைப் புரிந்திருக்கின்றார்கள் என்னும் தகவல்கள்.
4. பிரேமதாசாவின் கீழ் பிரதிப் பொலிஸ் மா அதிபராகவிருந்த பிரேமதாசா உடுகம்பொலவின் மனித உரிமை மீறல்கள். இவர் இறுதியில் பிரேமதாசவின் குற்றங்கள் பற்றிய சத்தியக் கடதாசி வழங்கி விட்டு, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றவர். பின்னர் பிரேமதாசா மறைந்ததும், மீண்டும் நாடு திரும்பி உயர் பதவி வகித்தவர். (இவரே ஜேவிபியின் இரண்டாவது புரட்சியினைக் கொடூரமாக அடக்கிய பொலிஸ் உயர் அதிகாரி)
5. வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் அவர்கள்தம் குடும்பத்தினருடன் டொலர், கென்ற் பண்ணைகளில் குடியேற்றப்பட்டனர்.
6. இலங்கை அரசியலில் பாதாளக் குழுக்களின் பங்களிப்பு.
7. யாழ் பொதுசன நூலகத்தை எரிப்பதற்காகக் குருநாகல மாவட்டத்துலிருந்து கொண்டு வரப்பட்ட பாதாள உலகக் குண்டர்கள்.
இவ்விதம் தம் உரையில் நந்தன வீரரத்தின குறிப்பிட்டிருக்கின்றார். இவை முக்கியமான விடயங்கள். முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாசா, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச போன்றோர் பற்றியும் நூல்கள் எழுதுவது தன் எண்ணமெனக் குறிப்பிடும் நந்தன வீரரத்தின முன்னாள் ஜேவிபி உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனையும் அவர் தன் உரையில் சுட்டிக்காட்டுகின்றார்.
ஜேவிபியினர் தம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இலங்கை அரசியலில் பாதாளக் குழுக்களின் பங்களிப்புகளை நன்கறிந்தவர்கள். அதனால்தான் இன்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசு பாதாளக் குழுக்களை ஒழிப்பதில் தீவிர நாட்டம் காட்டி வருகின்றது என்பதை உணர முடிகின்றது.
நிகழ்வுக் காணொளி - https://www.youtube.com/watch?v=XXGHxN0LYpI



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









