அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம். இப்பொழுது அதிகமாகப் பல்கலைக்கழகங்களில் இவ்விதமான அழுத்தங்கள் மாணவிகள் மீது பிரயோகிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.

இது ஒரு பாரதூரமான விடயம். பல்கலைக்கழகங்கள் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு அடித்தளமிடும் ஆலயங்கள். இவ்விதமான நிலை ஏற்படுவது சகிக்கப்பட முடியாதது. ஊழல் எவ்வளவு தூரம் சமூகத்தை அரிக்கின்றதோ அவ்விதமே இப்பாலியல் ரீதியிலான வன்முறைகளும், அழுத்தங்களும். இவ்விதமான குற்றச்சாட்டுகள் விடயத்தில் பல்கலைக்கழகங்களின் உயர்மட்டங்கள் கடுமையான நடவடிக்கைகளைத் தயவு தாட்சணியமின்றி எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் முறையீடு செய்யும் பொறிமுறையினை இலகுவாக்குவதுடன், இவ்விடயங்களில் விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட்டு நீதி கிடைக்கும் நிலையினை ஏற்படுத்த வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஒருபோதும் இவ்விதமான விடயங்களை மூடி மறைத்துக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் பல்கலைக்கழக உயர் மட்டம் ஈடுபடவே கூடாது.

நாளைய தலைவர்களான இளைய சமுதாயம் நல்லமுறையில் தம் கல்வியினை முடித்து வெளியேறும் நிலையினை உருவாக்க வேண்டியதும் அனைவரினதும் கடமை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்  ஒன்றியத்தின் அறிக்கை

இவ்விதமானதொரு சூழலில் , யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் அண்மைய அறிக்கை முக்கிய கவனத்தைப்பெறுகின்றது.  அந்த அறிக்கையையே இங்கு காண்கின்றீர்கள். இது மிகவும் கண்டிப்புக்குரிய அறிக்கை. மாணவி ஒருத்தி பேராசிரியர் மீது பாலியல் வன்முறை பாவித்ததாகக்குற்றஞ் சாட்டியிருப்பது பற்றிய அறிக்கை. இதில் குறிப்பிடப்படும் முக்கியமான விடயம் வருமாறு:

'தேசியத்தின்பால் பற்றுறிதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும் , அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஆழமாக அவதானித்து வருகிறது.'

'சட்டரீதியாகக் குற்றச்சாட்டுகளை முன்னெடுக்காது, சமூக ஊடகப்பரப்பினூடு அவமதிப்பை உருவாக்கும் பிம்பங்களைக் கட்டமைத்து, சமூக ஊடகப் பதிவர்களே நீதிபதிகளாக உருவாகும் துரதிருஷ்ட்டவசமான நிலை தமிழ்ச் சமூகத்தின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு மாறானதும் எதிரானதுமாகும்.'

இங்கு இந்த மாணவர் ஒன்றியம் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும். செயற்படவில்லை என்பதையே மேற்படி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தேசியத்தை இணைத்து எல்லாவற்றையும் மூடி மறைக்கும் நிலை வரவேற்கத்தக்கதல்ல. அந்த மாணவியின் குற்றச்சாட்டுகள் உண்மையா  , அல்லது பொய்யா என்பதை அறியாமல், இவ்விதம் கூறுவதன் மூலம் குற்றஞ்சாட்டிய அம்மாணவியைக் குற்றவாளியாக்கும் போக்கு உருவாகின்றது. இது வரவேற்கத்தக்கதல்ல. 

இம்மாணவர் ஒன்றியம் செய்திருக்க வேண்டியவை:

1. அம்மாணவியின் குற்றச்சாட்டுகள் உண்மையா, அல்லது பொய்யா என்பதைச் சட்டரீதியாக அணுகுவது முக்கியம். ஒருவேளை அம்மாணவிக்குத்  தன் குற்றச்சாட்டைச் சட்டரீதியாகக்  கொண்டு செல்வதற்குரிய நிதி வசதி இல்லாமலிருக்கக்கூடும். இந்நிலையில் இம்மாணவர் ஒன்றியம் அம்மாணவியுடன் இது பற்றிக் கலந்துரையாடி, அவரது ஆதாரங்களின் அடிப்படையில் சட்டத்தின் உதவியை அம்மாணவிக்குப் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும். கொடுக்க வேண்டும். அதுவே முதலாவதாக இம்மாணவர் ஒன்றியம் செய்திருக்க வேண்டியது. இது ஒரு மாணவர் நலன்களுக்கான மாணவர் ஒன்றியம். பேராசிரியர் ஒன்றியம் அல்ல.

2. அம்மாணவியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது  சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டால் ,  அதன் பின் யார் அம்மாணவியின் பின்னாலிருந்து செயற்படுகின்றார்கள் என்பதைக் கண்டறிந்து , அவ்விதம் செயற்படுபவர்கள் தேசியத்துக்கு எதிராகச் செயற்படுபவர்கள் நிரூபிக்கப்பட்டால், அதன் பின்பு வேண்டுமானால் இவ்விதம் 'தேசியத்தின்பால் பற்றுறிதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும் , அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை' என்று கண்டன அறிக்கையினை வெளியிடலாம்.அதற்கு முன் இவ்விதம் வெளியிட்டதன் மூலம் இம்மாணவர் ஒன்றியம் தன் கடமையிலிருந்து தவறியுள்ளதென்றே கருத வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளா ,சுற்றவாளிகளா என்பது அறியப்படாத நிலையில், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இம்மாணவர் ஒன்றியம் செயற்படுகின்றதோ என்னும் சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்திருக்கின்றது மேற்படி அறிக்கை.

3. இப்பிரச்சனையை அம்மாணவி சட்டரீதியாக முன்னெடுக்காத சூழல் இருக்குமானால், இம்மாணவர் ஒன்றியம் அவ்விதம் முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் உண்மை வெளிப்படும். அந்த உண்மை அம்மாணவியின் குற்றச்சாட்டுகளுக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தால் , குற்றவாளிகள் நிச்சயம் குற்றங்களுக்குரிய தண்டனையைப் பெற வேண்டும். குற்றங்கள் பொய்யானவையாக இருந்தால் குற்றஞ்ச்சாட்டப்பட்ட பேராசிரியர்களும் அம்மாணவிக்கு எதிராகச் சட்டத்தினை நாடலாம். 

இவ்விதமானதொரு சூழலில் யாழ்பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை, குற்றஞ்சாட்டிய மாணவியை உளவியல்ரீதியில் பாதிப்புக்குள்ளாக்குவதாக அமைந்திருக்கிறது என்பது வெள்ளிடைமலை. 

இவ்விதமானதொரு சூழல் உருவாகியுள்ள நிலையில் , சட்டரீதியாக இப்பிரச்சனை முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அல்லாவிடில் அது யாழ் பல்கலைக்கழகத்தின் மீது மாசினை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும். அந்நிலை தவிர்க்கப்பட வேண்டும். அம்மாணவியுடன் தொடர்பு கொண்டு , மேற்படி  கலைப்பீட மாணவர் ஒன்றியம் இப்பிரச்சனையைச் சட்டரீதியாக முன்னெடுக்க உதவிகள் செய்ய வேண்டும். செய்வார்கள் என்று நம்புவோம்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்