ழகரம் 5 இலக்கிய மலரின் வடிவமைப்பைப் பொறுத்த அளவில் ஓரிரு புறக்கணிக்கத்தக்க குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் நிறைவான வடிவமைப்பு. இதுவரை கனடாவில் வெளியான இலக்கிய இதழ்களில் தரத்தில் இதனை முதல் நிலையில் வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. சிறிய குறைபாடுகள் என்றால்.. அதற்கு உதாரணமாக இதழில் வெளியான எனது கட்டுரையான அ.ந.க.வின் 'மனக்கண்' கட்டுரையைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அது: இதுவரையில் அ.ந.க.வின் ஒரே நாவலான 'மனக்கண்' நாவலுக்கு யாருமே விமர்சனம் எழுதவில்லை என்னைத்தவிர. அதற்கு நாவல் தொடராக வெளிவந்தபோதும் இதுவரையில் நூலாக வெளிவராததும் காரணங்களிலொன்றாக இருக்கலாம்.
இதழில் கட்டுரையில் எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதில் முதல் மூன்று காரணங்களையும் உரிய சிறிது பெரிய , தடித்த எழுத்துருக்களைப்பாவித்து வடிவமைத்திருக்கின்றார்கள். நான்காவது காரணமான 'நாவல் கூறும் பொருள்' என்பதற்கும் அவ்விதம் பாவிக்க மறந்து விட்டார்கள். மேலும் கட்டுரையில் 'மனக்கண்' நாவலிலிருந்து சில பகுதிகளை உதாரணத்துக்காகப் பாவித்திருக்கிறேன். அப்பகுதிகளை ஏனைய பகுதிகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக்காட்டியிருக்க வேண்டும். அதனைச்செய்யத்தவறி விட்டார்கள். ஆனால் இந்தக் குறைகள் முன்பே கூறியுள்ளதுபோல் புறக்கணிக்கத்தக்கவை.
மலரின் முதலாவது கட்டுரையான 'தமிழ்நதி'யின் 'எழுத்தின் பாலினம்' இதழின் முக்கியமான கட்டுரைகளிலொன்று. மேனாட்டு இலக்கியத்தில் அன்றிலிருந்து இன்றுவரை, எவ்விதம் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தினால் ஆண் பெயர்களில் மறைந்திருந்து எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு கட்டுரை. கட்டுரை புகழ் பெற்ற ஆண் எழுத்தாளர்கள் பலரால் காலத்துக்குக் காலம் பெண் எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அவர்களது பால் (Gender) காரணமாகக் கீழத்தரமாக எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கட்டுரை உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறது.
உதாரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வி.எஸ்.நைபாலின் பின்வரும் கூற்றுடன் கட்டுரை ஆரம்பமாகின்றது:
"ஒன்றை வாசிக்கத்தொடங்கும்போது ஓரிரு பந்திகளிலேயே அது ஒரு பெண்ணால் எழுதப்பட்டதா ? இல்லையா? என்பது எனக்குத்தெரிந்து விடும். அத்தகைய எழுத்து என்னுடைய எழுத்துக்கு நிகராக முடியாதென்று எண்ணுகின்றேன். பெண்களுக்கு உலகத்தைப்பற்றி குறுகிய பார்வையே இருக்கிறது.:
அதே நேரம் பெண்களின் எழுத்தைப்பற்றிய கீழ்த்தரமான , பாகுபாடு மிக்கதொரு கருத்தையுடைய நைபாலின் முதலாவது நாவலை பிரசுரத்துகுரியதாக ஆக்கியவர் Diana Athill என்னும் பெண்மணியே என்னும் உண்மையினையும் கட்டுரையின் அடுத்துவரும் வரிகளில் எடுத்துக்காட்டுகின்றார் கட்டுரையாளர்.
எழுத்தாளர் அ.யேசுராசாவும், 'ஈழத்தின் முற்போக்குத்தமிழ் இலக்கியமும்', பிரச்சார எழுத்தும் பற்றி...
மேற்படி 'ழகரம் 5' இலக்கிய மலரில் அட்டைப்பட ஆளுமையான எழுத்தாளர் அ.யேசுராசா அவர்களுடனான நேர்காணலொன்றும் வெளியாகியுள்ளது. அதிலவர் முற்போக்கு இலக்கியம் பற்றித்தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியமானவை.
அவர் முற்போக்கு இலக்கிய முகாமைச்சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை குறை, நிறைகளுடன் ஏற்றுக்கொள்கின்றார்.
பிரச்சாரமற்ற , கலைத்துவம் மிக்க படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்கள் என்று தான் கருதுபவர்களை அவர்தம் பங்களிப்புகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார்.
குறிப்பாக எழுத்தாளர் செ.கதிர்காமநாதன் பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"...எழுத்தாளர் செ.கதிர்காமநாதனின் எழுத்துகள் என்னைக் கவர்ந்துள்ளன. முற்போக்கு அணியினரின் படைப்புகளில் கலைத்துவத்தை மீறிப் பிரச்சாரம் தூக்கலாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உண்டு. செ.கதிர்காமநாதனின் பெரும்பாலான படைப்புகள் இக்குற்றச்சாட்டுக்குள் அகப்படாவென நினைக்கின்றேன். அவரது மொழிபெயர்ப்புப்பணியும் சிறப்பானது. அவர் இள வயதில் காலமாகாமல் இருந்திருந்தால், முற்போக்கு அணிக்கு மேலும் வளத்தைச் சேர்த்திருப்பார்."
எழுத்தாளர் செ.யோகநாதனின் மொழிபெயர்ப்புகளை மேற்படி நேர்காணலில் அவர் சிலாகித்துள்ளார். அது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
"யோகநாதனின் கவிதை மொழிபெயர்ப்புகள் சிறப்பானதென்பேன். ஏனோ இதனைப் பலரும் கவனிப்பதில்லை. யோகன் என்ற பெயரில் , எண்ணிக்கையில் குறைந்த , உயிர்த்துடிப்பு மிக்க கவிதை மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். வசந்தம், அலைப் போன்ற இதழ்களில் அவை வெளிவந்துள்ளன.."
செம்பியன் செல்வன் பற்றிக்குறிப்பிடும்போது அவரது சிறுகதைகள் பலவற்றில் மிகை உணர்ச்சி வெளிப்பாடு பிசிறலாக இருக்கும், சொற்களைத் தேவைக்கு அதிகமாகவும் கையாள்வார் என்று விமர்சிக்கும் யேசுராசா அவர்கள் மேலும் பின்வருமாறு கூறுவார்:
"விமர்சன நோக்குடன் துணிந்து தனது கருத்துகளை வெளிப்படுத்திய கலகக்காரன் என்ற வகையில் முக்கியமானவர். அவரது இலக்கியப்பத்திகளும், கட்டுரைகளும் கவனிப்புக்குரியவை".
பெனடிக்ற்பாலன் பற்றிக்குறிப்பிடுகையில் அவர் அதிக அளவில் எழுதினாலும், பெரும்பாலானவை பிரச்சாரப்படைப்புகளே. சில சிறுகதைகள் கவனிப்புக்குரியவை என்று கூறுகின்றார்.
பேராசிரியர் க.கைலாசபதி பற்றிக்குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறுகின்றார்:
"உயரதர வகுப்பில் படிக்கும் காலத்தில், பழந்தமிழ் இலக்கியம் பற்றிய க.கைலாசபதியின் கட்டுரைகளில் ஈடுபாடு கொண்டிருந்தேன். பழைய இலக்கியங்களைப் பற்றி எழுதும்போது பொருளாதார, அரசியல், சமூகச்சூழற் பின்னணியில் வைத்து அவற்றை அவர் விளக்கியது புதுமையாயிருந்தது. நவீன இலக்கியங்களில் சமூக, அரசியல் பார்வைக்கு அழுத்தம் கொடுத்ததிலும் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது."
அதே சமயம் கைலாசபதி அவர்களுடன் உடன்படாத விடயங்கள் பற்றியும் மேற்படி பதிலில் குறிப்பிட்டிருக்கின்றார். குறிப்பாகக் கலைத்துவம் முக்கியம் பெறாமை, தனி மனித அனுபவங்களை நிராகரித்தமை போன்ற கைலாசபதியின் கருத்துகளைத் தான் ஏற்கவில்லையென்று குறிப்பிடுகின்றார்.
மேற்படி நேர்காணலில் யேசுராசா அவர்கள் ஈழத்தமிழ் முற்போக்கு இலக்கியம்பற்றி, குறும்படங்கள் பற்றி, போரின் பின்னரான தமிழ் இலக்கியம் பற்றி, விடுதலைப்புலிகளின் காலத்துக் கலை, இலக்கிய முயற்சிகள் பற்றி, மாற்று சினிமா பற்றி, அலை சஞ்சிகை பற்றி, அவரது ஆரம்பகாலத்து இலக்கிய அனுபவங்கள் பற்றி, போர்க்கால மற்றும் தற்கால நாடக வளர்ச்சி பற்றி என்று பல்வேறு விடயங்களைப்பற்றித் தனது கருத்துகளைப்பகிர்ந்துகொண்டிருக்கின்றார்.
இந்த நேர்காணலிலிருந்து ஒன்றைப்புரிந்து கொள்ள முடிகின்றது. அவர் ஈழத்தின் முற்போக்குத் தமிழ் இலக்கியத்தை நிராகரிக்கவில்லை என்பதுதான். முற்போக்குத்தமிழ் இலக்கியத்தினை அதன் குறை, நிறைகளுடன் ஏற்றுக்கொள்கின்றார் என்பதைத்தான். ஈழத்தின் முற்போக்குத்தமிழ் இலக்கியத்தினை ஒருபோதுமே நிராகரிக்க முடியாது. கலை, இலக்கியப் படைப்புகள் சமுதாயப்பிரக்ஞை மிக்கவையாக விளங்கவேண்டுமென்பதைப் புலப்படுத்தும் படைப்புகள் அவை. பிரச்சாரத்துக்காக அவர்களை படைப்புகளைப் பலர் நிராகரித்தாலும் , பிரச்சாரம் என்பது முற்போக்கிலக்கியத்தின் தவர்க்க முடியாத அம்சங்களிலொன்று. ஏனென்றால் அமைப்பையே மாற்றி அமைப்பதற்காக , மக்கள் இலக்கியம் படைக்கப் புறப்பட்டவர்களுக்கு, மக்களை எழுச்சி பெற வைப்பதற்குப் பிரச்சாரமும் முக்கியமாகவிருந்தது. ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினையைக்கூட ஆரம்பத்தில் வர்க்கக்கண்ணோட்டத்தில் அவர்கள் அணுகினார்கள். அதனால்தான் ஈழத்து மக்கள் அனைவரினதும் ஒன்றுபட்ட வர்க்க ரீதியிலான புரட்சியே சரியான தீர்வு என்று வற்புறுத்தினார்கள். உண்மையில் அதுதான் சரியான தீர்வென்பதைத்தான் வரலாறு இன்று புலப்படுத்தியிருக்கின்றது. ஆனால் அவ்விதமானதொரு புரட்சி ஏற்படுவதைத்தடுப்பதற்காகவே சகல பிரிவினரும் தேசிய முரண்பாடுகளை ஊதிப்பற்ற வைப்பார்கள் என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும்.
இதே சமயம் ஒரு கேள்வி பிரச்சாரம் என்பதற்காக ஒரு படைப்பினை நிராகரிக்க முடியுமா என்பதுதான் அது. பிரச்சாரம் கூட கலைத்துவம் மிக்கதொரு படைப்பாக விளங்க முடியும். உலக இலக்கியத்தில் இடம் பெற முடியும். இதற்கு முக்கிய உதாரணமாக புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளரான மிக்கயீல் ஷோலக்கவைக் குறிப்பிட முடியும். இவர் புரட்சிக்குப் பின்னரான உள்நாட்டுப் போரில் , போல்ஷிவிக்குகளுடன் இணைந்துப் எதிர்ப்புரட்சிக்கு எதிராகப் போரிட்டவர். ருஷ்யப்படையில் பணி புரிந்தவர். இவரது நாவல்கள், சிறுகதைகள் பல இவரை உலகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் வைக்கின்றன. இவரது மிஷா என்ற சிறுவனைப்பற்றிய சிறுகதை உண்மையில் கலைத்துவம் மிக்க அற்புதமானதொரு பிரச்சாரப்படைப்பே. ருஷ்யாவின் அக்டோபர் புரட்சியினை, அதன் நாயகர்களை முன்னிலைப்படுத்தும் ஒரு பிரச்சாரப்படைப்பாக இருந்த போதும், கதை கலைத்துவம் மிக்கதாகப் படைக்கப்பட்டுள்ளது. இவரது 'அமைதியாகப் பாய்கிறது டொன் ஆறு' மிகவும் புகழ்பெற்ற நாவல்களிலொன்று. மிக்கயீல் ஷோலக்காவ் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களிலொருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிக்கயீல் ஷோலக்காவ் பற்றிய சோ.பத்மநாதனின் கட்டுரை எழுத்தாளர் யேசுராசா வெளியிடும் செய்திக்கடித வடிவமைப்பிலான 'தெரிதல்' இதழின் வைகாசி - ஆணி 2016 இதழில் வெளியாகியுள்ளது. அதில் மேற்படி மிக்கயீல் ஷோலக்காவின் சிறுகதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: றஷ்மியின் அ.யேசுராசா ஓவியம் (கோமகன் வலைப்பதிவு)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.