பி.பி.சி: "இலங்கையில் ராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம்"
[மார்ச் 16, 2012] இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் ராணுவமயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்த பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதோடு, எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று இண்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் என்கிற சர்வதேச நெருக்கடிகளை ஆராயும் குழு தெரிவித்திருக்கிறது. ஐசிஜி என்று பரவலாக அறியப்படும் சர்வதேச நெருக்கடிகளை ஆராய்வதற்கான குழுமம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த குழுமன் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்ட விரிவான அறிக்கையின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. இன்றைய அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மை உரிமைகள் என்பது முதல் பகுதி. இரண்டாவது பகுதி வடக்கில் ராணுவத்தின் கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் பற்றி பேசுகிறது.