Antonio GramsciAntonio Gramsci தென் இத்தாலியின் ஸார்டினியாவை சேர்ந்தவர். நெப்போலியனின் பிரெஞ்சு பேரரசு தகர்ந்த பின் சுதந்திரமடைந்த ஸார்டினியா 1861 ல் ஐக்கிய இத்தாலியின் பகுதியாக சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய பிற்போக்கின் குறியீடாக, மூர்க்கத்தனமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பெயர்போன நிலப்பிரபுத்துவ முறையையும் ஒடுக்குமுறை யந்திரங்களையும் கொண்டிருந்த அரசின் கீழ் இருந்தது. பிரான்ஸ்கோ கிராம்ஷி, ஜியுஸெப்பினா மார்ஸியாஸ் இணையருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவரே அந்தோனிய கிராம்ஷி ஆவர்.1897 ல் நடந்த இத்தாலிய நாடாளுமன்ற தேர்தலின் போது பிரான்ஸ்கோ கிராம்ஷி ஊழல் செய்த ஒருவரை எதிர்த்து போட்டியிட்ட இளம் வேட்பாளரை ஆதரித்த காரணத்தால், கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்தார் என்ற பொய்யான வழக்கு தொடரப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு குழந்தைகளுடன் அந்தோனிய கிராம்ஷியின் தாயார் மிகவும் மோசமான வறுமையில் இரவுபகல் ஓய்வொழிச்சலின்றி உறக்கமின்றி ஆடைகள் தைத்து விற்று பணம் ஈட்டுகிறார். கிராம்ஷி சிறையில் இருக்கும்போது தாயார் பற்றி கீழ்க்கண்டவாறு நினைவு கூறுகிறார்.

“ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்மா செய்ததை எல்லாம் நம்மால் செய்ய முடியுமா? அத்தகைய ஒரு பேரழிவை எதிர்த்து தன்னந்தனியாக நின்றிருக்க முடியுமா? அல்லது குழந்தைகளை அதிலிருந்து காப்பாற்றியிருக்க முடியுமா? அம்மாவின் வாழ்க்கை நமக்கு பெரிய பாடம். கடந்துவர முடியாதவையாக என்று மாபெரும் நெஞ்சுரம் கொண்ட மனிதர்களுக்கு கூட தோன்றிய இன்னல்களை கடந்து வருவதில் மனோ உறுதி எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பாடம் எமக்கு காட்டியது. ….நமக்காக தன் வாழ்நாள் முழுதும் உழைத்தார். நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள் செய்தார்.”

கிராம்ஷியின் முதுகு இயற்கையிலேயே கூனலாக இருந்தமையால் அவரது வளர்ச்சி குறுகிக் காணப்பட்டது. பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். வீட்டின் வறுமை காரணமாக பதினொரு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். அந்த அனுபவத்தை கிராம்சி பின்னர் இவ்வாறு எழுதுகிறார். “ என்னைவிட கனமான புத்தகங்களை சுமந்து செல்வதுதான் எனக்குள்ள வேலை. யாருக்கும் தெரியாமல் பல இரவுகள் நான் அழுததுண்டு. என் உடம்பு அப்படி வலிக்கும்.”1904 இல் தந்தை தண்டனைக்காலம் முடிந்து வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவுகிறது. கிராம்சி தமது படிப்பை மீண்டும் தொடர்கிறார்.

கிராம்சியின் பள்ளிக்காலத்தில் ஸார்டினியா மோசமான சூழலை கொண்டிருந்தது. சுரங்க தொழிலாளர்கள், விவசாயிகள் பலவித ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனை அரசபடைகள் துப்பாக்கி சூடு கொண்டு அடக்கியது. வேலையில்லா திண்டாட்டம், பட்டினி, வறுமை, காசநோய், மலேரியா போன்றவை ஒன்றுசேர்ந்து ஸார்டினிய மக்களை இத்தாலியின் மிகவறிய நிலைக்கு தள்ளியது. இந்த ஒடுக்குமுறையினால் ஸார்டினியா தேசியவாதம் வலுப்பெற்றது. வடபகுதி, தென்பகுதி இருந்த பிளவு அதிகரித்தது.

Gramsci டூரின் பல்கலைகழகத்தில் சேர்ந்து கல்வியை தொடரும் போது வறுமையின் காரணமாக உபகார சம்பளம் பெறுகிறார். அவருடைய ஆர்வமும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பு காரணமாகவும் ஹெகல், குரோச் போன்ற தத்துவஞானிகளின் படைப்புகளையும் மாக்கியவல்லியின் அரசியல் தத்துவத்தையும் படிக்கிறார். தென் இத்தாலியான ஸார்டினியாவை ஒட்டச் சுரண்டி பாலைவனமாக்குபவர் வட இத்தாலியர் என்ற கருத்து கிராம்சியிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. 1910 இல் பத்திரிகையில் எழுத தொடங்கினார். 1913ல் இத்தாலிய சோசலிச கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார்.

1914 ல் ஐரோப்பா உலகப்போர் நோக்கி சென்றது. சோசலிச கட்சியின் தேசிய தலைமை உலகப்போரில் இத்தாலி நடுநிலை வகிக்க வேண்டும் என கூட்டறிக்கை விடுத்தது. “உலகப்போர் என்பது ஒன்றுக்கொன்று பகைமை கொண்ட ஏகாதிபத்திய குழுக்களிடையே நடக்கும் மோதலே” எனக் கூறப்பட்டது. எனினும் 1915 ல் இத்தாலி நேசநாடுகள் சார்பாக முதலாம் உலகப்போரில் குதித்தது. இத்தாலி உலகப்போரில் நுழைவதை எதிர்த்து டூரின் நகர்த் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். எல்லாப் பிரச்சனைகளுக்கும் சோசலிசத்தால் மட்டுமே தீர்வு உண்டு என்பதில் கிராம்ஷி அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அதன்பின் பத்திரிகையில் முனைப்பாக எழுத தொடங்கினார். “முன்னேறு” என்கின்ற பத்திரிகைக்குழுவில் இருந்த மூவரில் கிராம்ஷியும் ஒருவராக இருந்தார். “ கோட்பாட்டாலும் தத்துவத்தினாலும் வழிகாட்டப்படாத அரசியல் நடைமுறை வெறும் உத்வேகத்தினால் செய்யப்படும் பயனற்ற காரியமே. பரந்துபட்ட மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டியது அவசியமானது போன்ற கருத்துக்களை கிராம்ஷி கொண்டிருந்தார்”. ஆனால் பரந்துபட்ட மக்களுக்கு தத்துவ கோட்பாடு, கல்வி தேவையில்லை அவர்களை இயக்குவது வர்க்க அனுபவங்களும், சோசலிச உணர்வுமே என பொதுவான கருத்து சோசலிஸ்ட் மத்தியில் காணப்பட்டது. அதே கருத்தையே அமாடியோ போர்டிகோ வும் கொண்டிருந்தார். அவர் கருத்தானது “ சோசலிஸ்டுகளை உருவாக்குவது கல்வியல்ல மாறாக எந்த வர்க்கத்தை அவர்கள் சார்ந்துள்ளனர் அந்த வர்க்கத்தின் உண்மையான தேவையே” என்பதாகும். கிராம்ஷி போர்டிகாவின் கருத்துக்களை ஏற்று கொள்ளவில்லை.

கிராம்ஷி புரட்சிகர செயற்பாட்டிற்கும், பாண்பாட்டு செயல்பாட்டிற்கும் உள்ள தொடர்பை பின்வருமாறு எழுதினார். மனித மனம் ஒரு பிரக்ஞை வரலாற்றின் விளைபொருளே. சுரண்டுவோர், சுரண்டப்படுவோர், செல்வம் படைத்தவர் எப்போதும் இருந்துள்ளார்கள். எனினும் சோசலிசம் ஏன் ஏற்கனவே உருவாகவில்லை. அத்தகைய உணர்வு அறிவார்ந்த சிந்தனையில் இருந்து பிறக்கிறது. முதலில் சிலரும் பின்னர் சமூகம் முழுவதும் பெறுகின்றனர். இதன் பொருள் ஒவ்வொரு புரட்சிக்கு முன்னால் சமூகம், பண்பாட்டு மாற்றங்கள் குறித்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. பண்பாடு என்பதை கலைகளஞ்சிய அறிவாக பார்த்தல், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல்வேறு விபரங்களை கொண்டு நிரப்பக்கூடிய கொள்கலன்களாக மனிதர்களை பார்த்தல் போன்ற போக்குகளில் இருந்து விடுபட வேண்டும். எனவே பண்பாடு என்பது முற்றிலும் வேறானது. அது ஒருவன் தனது ஆன்மாவை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்துவதும் தனது ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்வதும் ஆகும். மேலும் உயரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ளல். வரலாற்றில் தான் வகிக்கும் இடம், வாழ்க்கையில் ஆற்றவேண்டிய பணி, தனக்குள்ள கடமைகள், உரிமைகள் ஆகியவற்றை அவன் புரிந்துகொள்ள உதவுவதாகும்.

பட்டாளிவர்க்க பண்பாட்டை உருவாக்கத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கிராம்ஷி டூரின் நகரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் படிப்பு வட்டங்களை உருவாக்கினார். இலக்கியம், நாடகம், வரலாறு பற்றி அவர்களுடன் விவாதிப்பார். 1916ல் சோசலிச நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘எதிர்காலத்தில் நகரம்’ (The city of the future) என்ற சிறு பிரசுரத்தில் கட்டுரை எழுதினார். சோசலிசம் என்பது ஒரு அமைப்பை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக மற்றொரு அமைப்பை கொண்டு வருவதல்ல. மாறாக மானிட ஆளுமையின் ஒட்டுமொத்தமான முழு வளர்ச்சிக்கான சாத்தியப்பாடு என்பதை எல்லா குடிமக்களும் பெறக்கூடிய அடிப்படை உரிமை ஆக்குவதுதான் சோசலிஸம் என்றார்.

கிராம்சி டூரிங் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளை கற்றார். மார்க்ஸிய புத்தகங்களான புனிதகுடும்பம், தத்துவ வறுமை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அரசியல் பொருளாதாரம், மூலதனம் என பல நூல்களையும் கற்றார். இத்தாலி முழுவதும் போல்ஷ்விக்குகளுக்கு ஆதரவு பெருகியது. போல்ஷ்விக் ஆதரவு குழுக்களுடன் பொது வேலைத்திட்டத்தில் ஒன்றுபடுவதற்கு நடந்த மகாநாட்டில் டூரின் சோசலிட்டுகளின் பிரதிநிதியாக கிராம்சி செல்கிறார். இத்தாலியில் புரட்சிக்கான புறநிலைகள் உருவாகவில்லை என்ற சோசலிஸ்ட் தலைவர்களுக்கு பதில் அளிக்கும் முகமாக கிராம்சி 1917 டிசம்பர் 24 ல் முன்னேறுக பத்திரிகையில் “மூலதனத்திற்கு எதிரான புரட்சி” (The Revolution against ‘Das Capital’) என்ற கட்டுரையை எழுதினார். அதில் சோசலிஸ்ட் தலைவர்கள் போல்ஷ்விக் புரட்சியை வரவேற்பதாக கூறியபோதும் இத்தாலியில் புரட்சிக்கான புறநிலைகள் உருவாகவில்லை. முதலாளித்துவ சமுதாயத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது புரட்சிக்கான நிலைமை தானாக முதிர்ச்சியடையும் என்று மார்க்சியத்தையும், வரலாற்றுப் பொருள்முதல்வாத த்தையும் வரட்டுத்தனமான பொருளாதார வாதமாக கூறுகிறார்கள்,  வரலாறு தானாக எதையும் செய்வதில்லை. உயிருள்ள மனிதர்கள்தான் வரலாற்றை உருவாக்குகின்றார்கள் என்ற மார்க்ஸின் கருத்தையும் கிராம்ஷி வலியுறுத்தினார்.

19 ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் மார்க்ஸிய சோசலிஸத்தை ஏற்றுக் கொண்ட கட்சிகள் பொதுவாக சமூக ஜனநாயக கட்சிகள் (Social Democratic Parties) என அழைக்கப்பட்டன. அவை இரண்டாம் அகிலம் (Second International) என அழைக்கப்பட்ட இரண்டாவது சர்வதேச தொழிலாளர் சங்கத்தில் உறுப்பியம் கொண்டிருந்தன. (முதல் அகிலம் மார்க்ஸ், எங்கெல்ஸ் தலைமையில் இருந்தது) 1914 ல் உலகப்போர் தொடங்கியதும் இரண்டாம் அகிலத்தில் இருந்த சமூக ஜனநாயக கட்சிகள் போருக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தன. அச்சமயம் ரஷிய சமூக ஜனநாயக கட்சியின் போல்ஷிவிக் பிரிவினருக்கு தலைமை தாங்கிய லெனின் ஏகாதிபத்திய அரசுகள் ஒன்றுக்கொன்று போரிட்டு தத்தம் நாட்டு உழைக்கும் மக்களின் இரத்தத்தையும், செல்வத்தையும் போர்முனையில் வீணாக்கிக் கொண்டிருக்கையில் பாட்டாளி வர்க்கமும் அதன் கட்சியும் அந்த போரை  உள்நாட்டுப்போராக மாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற அறைகூவல் பாட்டாளிவர்க்கத்திற்கு விடுத்தார்.

1917 ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியப்புரட்சி நிகழ்கிறது. புரட்சி ரஷியாவில் புதிய வாழ்க்கை முறையினை உருவாக்கியிருக்கிறது. அது ஒரு ஆட்சியை அகற்றிவிட்டு மற்றொரு ஆட்சியினை கொண்டு வந்தது மட்டுமன்றி ஒரு வாழ்க்கை முறைக்கு பதிலாக இன்னொரு வாழ்க்கை முறையை கொண்டு வந்துள்ளது. புதிய ஒழுங்குமுறையை உருவாக்கியுள்ளது. மனிதகுல வரலாறு இதுவரை உருவாக்கியுள்ள மிகப் பெரும் சாதனை இதுவேயாகும். மனிதர்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கின்றனர் என்பதற்கான நடைமுறை சான்றே ரஷியபுரட்சி என கிராம்ஷி தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

கிராம்ஷி ரஷிய புரட்சிக்கு காட்டிய உற்சாகமும், டூரின் தொழிலாளர்கள் காட்டிய உற்சாகமும் கிராம்ஷியை அமைப்பு ரீதியான அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவதற்கு தொடக்க முனையை உருவாக்கியது. 1918ல் அவரது கட்டுரையில் மார்க்ஸால் உருவாக்கப்பட்ட ஆய்வுமுறைப்படி முதலாளித்துவமானது பூர்சுவா வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே ஆழமான இணைக்க முடியாத பள்ளத்தை தோண்டியிருக்கிறது. இந்த பகைமையை கண்டறிந்த லெனின் சமூக அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை விளக்குவதிலும், கட்சி எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பதிலும் அரசியல் பொருளாதார அனைத்துக்குமான வலுவான மாற்றாக வர்க்கப் போராட்டத்தை காண்கிறார் என கூறினார்.

1917ல் புரட்சியின் போது  ரஷியாவிலும் இத்தாலியிலும் ஏற்பட்ட நிகழ்வுகளை கிராம்ஷி உன்னிப்பாக அவதானித்தார். இத்தாலிய பொருளாதாரத்தின் மீது போர் ஏற்படுத்திய தாக்கம், சமூக வர்க்கங்களின் நிலமைகள் பற்றிய ஆய்வுகள் சிவப்பு ஆண்டுகள் என சொல்லப்படும். 1919 - 1920 ல் பல மாற்றங்கள் உருவாகியது. இத்தாலி உலகப்போரில் பங்கேற்கத் தொடங்கியதால் டூரின் நகரில் இராணுவச்சட்டம் நடைமுறைப்படுத்த பட்டது. கிராம்ஷி போராட்ட குணம் மிக்க இளம் சோசலிஸ்டுகளுடன் தொடர்ந்து விவாதங்களை நடத்தினார். இத்தாலியில் 1919 - 1920 ஆண்டுகளில் புரட்சிகரமான நிலமைகள் உருவாகி இருப்பதாக கிராம்ஷி கருதினார். அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தருணம் வருவதற்கு முன்பே பாட்டாளி வர்க்கம் தனக்கான அமைப்பை உருவாக்கிகள் கொள்ள வேண்டும். புரட்சி நடக்கையில் அவர்கள் தமது வர்க்க உணர்வை வளர்த்துக் கொள்வதில் முக்கிய அம்சமாக இருக்கும் என கூறினார். எனவே இத்தாலியில் புரட்சிகர நிலமை உருவாக்குவதற்கு முன்பே தொழிலாளர்களின் புரட்சிகர அமைப்பும் இருந்தாக வேண்டும். அந்த அமைப்பு புரட்சியின் அங்கமாக விளங்க வேண்டும் என்றார்.

இத்தாலியில் தொழிற்சாலைகளில் இருந்த உள்கமிட்டிகள் ( work Committee ) பாட்டாளி வர்க்கத்தில் புரட்சிகர அமைப்புக்கான கரு என்றார். தொழிற்சங்க உறுப்பினரால் தேர்ந்து எடுக்கப்படும் உள்கமிட்டிகள் தொழிலாளர் மத்தியில் எழும் சிறு வழக்குகளை தீர்த்து வைப்பதும், கட்டுப்பாட்டையும் உருவாக்கும். இந்த அமைப்பையே கிராம்ஷி தொழிற்சாலை கவுன்சிலாக ( Factory Council) மாற்ற விரும்பினார். அந்த அமைப்புகளில் சுயாதீனமும், செயற்பாடும் சிறிதும் குன்றா வண்ணம் அவற்றை மத்தியப்படுத்த பல்வேறு நிலையிலான திறமையும் அதிகாரமும் கொண்ட படிநிலை அமைப்புகளுடன் இணைக்க வேண்டும் என்றார். அத்துடன்  பரந்துபட்ட உழைக்கும் மக்கள் மீது சோசலிஸ்ட் கட்சி தொழிற்சங்க பேரவை ஆகியவற்றின் செல்வாக்கு நேரடியாக செலுத்தப்படுவதில்லை. உள்கமிட்டிகளை கொண்ட வேலைக்கூடம், சோசலிஸ்ட் சங்கங்கள், உழவர் அமைப்புகள் ஆகியவைதான் நேரடியாக பணியாற்ற வேண்டிய பாட்டாளி வர்க்க வாழ்வு மையங்கள் எனவும் கூறினார்.

இத்தாலியில் தன்னெழுச்சியாக தோன்றிய பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்கு அரசியல் வடிவமும், வழிகாட்டலும் என்ற அடிப்படையில் தொழிற்சாலை கவுன்சில்கள் உருவாக்கப்பட வேண்டும். அவை பாட்டாளிவர்க்க சர்வதிகாரம் என்பதனை நிறுவுவதற்கு முதல் முயற்சியாக பாட்டாளி அரசின் அடிப்படை அதிகார அமைப்புகளாக இருக்கும். இத்தாலியில் அரசியல் துறைக்கும், பொருளாதார துறைக்கும் இடையேயுள்ள புதிய உறவை கவனித்த கிராம்ஷி இச்சூழலில் தொழிற்சாலையில் ஏற்கனவே இயங்கி வந்த உள்கமிட்டிகளை தொழிற்சாலை கவுன்சில்களாக மாற்றுவதன் பாட்டாளிவர்க்கம் தனது வரலாற்று கடமைகளை உணர்ந்து கொள்ளச் செய்யலாம் என்றார். தற்போதுள்ள தொழிற் சங்கங்களுக்கும் தொழிற்சாலை கவுன்சில்களுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக எடுத்துக் கூறினார்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளி முதலாளிக்கான முரண்பாட்டில் தலையிட்டு தொழிலாளிக்கு சாதகமான ஊதிய உயர்வு, வேலைநேரக்குறைப்பு, வேலைப்பழு சீரமைப்பு போன்றவற்றையே பெற்றுக்கொடுக்கும். அதாவது உழைப்புசக்தியை அமைப்பிற்குட்படுத்தி உழைப்பு சந்தையை ஆற்றுப்படுத்தும் செயலையே செய்கிறது. தொழிலாளர்களுக்கும் தொழிற் சங்கத்திற்கும் உள்ள உறவானது நாடாளுமன்றத்திற்கும் அரசாங்க அதிகார வர்க்கத்திற்கும் ( Bureaucracy ) இடையேயுள்ள உறவு போன்றதே. தொழிற்சங்கங்கள் சட்ட வரம்புகளுக்குள் செயற்படுவன. தொழிலாளியின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் சட்டத்திருத்தங்களை கோரி அவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவது. ஆனால் வர்க்கப் போராட்டம் பற்றியோ தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வுகளை வளர்த்தெடுப்பதில் அக்கறைப்படுவதில்லை.

தொழிற்சாலை கவுன்சில்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழிலாளர்களையும் ( தொழிற்சங்க உறுப்பினர்,அல்லாதவர், சோசலிஸ்ட் ) உள்ளடக்கிய அமைப்பாகும். தொழிற்சாலையின் வெவ்வேறு வேலைக்கூடங்கள், திறன்கள் ஒவ்வொன்றிலிருந்தும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர்.  தொழிலாளர் கவுன்சில் இருந்து செயற்குழு தெரிவு செய்யப்படும். செயற்குழுவில் இருந்து அரசியல் செயலாளர்கள் (Commissar) தெரிவு செய்யப்படுவர். இவ்வாறு நகரம் முழுவதும் தெரிவுசெய்த  செயலாளர்கள் கொண்டு மத்தியகுழு  உருவாக்கப்படும். மத்தியகுழுவில் இருந்து குறித்த நகரத்தில்  * அரசியல் பிரச்சாரம் நடத்தல் * வேலைத்திட்டங்கள் உருவாக்குதல் * கல்விக்குழுக்களை தேர்வுசெய்தல் என தெரிவுகள் நடைபெறும். கல்விக்குழு நகரத்தில் செயற்படும் உற்பத்தி இயக்கத்தை மேற்பார்வையிட்டு வழிநடத்தும். தொழிற்சாலை கவுன்சில் செயலாளர்கள் சோவியத்திலும் அங்கம் வகிப்பார். தொழிற்சாலை கவுன்சில், தொழிற்சாலை உற்பத்தி இயக்கம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் உற்பத்தி இயக்கத்தில் தொழிலாளி தான் வகிக்கும் பாத்திரம் கூலி உழைப்பாளி அல்ல படைப்பாளி என்பதை புரிந்து கொள்ளச்செய்யும்.

இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி உழைக்கும் மக்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்லும். சோசலிஸ்ட் கட்சி, தொழிற்சங்கம், தொழிற்சாலை கவுன்சிலர்கள் ஒன்றிணைந்த செயற்பாடே பாட்டாளிவர்க்க சர்வதிகாரத்தை சாத்தியப்படுத்தும். இவை ஒவ்வொன்றும் சுயாதீனமானவை. செயற்பாட்டில் ஊடுருவி தாக்கம் செய்யும். கட்சியின் அதிகாரத்தின் கீழ் கட்டுப்படாது. இவ்வாறு தொழிற்சாலை கவுன்சிலின் அவசியம் பற்றி கிராம்ஷி தமது கருத்தை வெளியிட்டபோது சோசலிஸ்ட் கட்சியிலிருந்த டுர்ராட்டி, ஸெர்ராட்டி, போர்டிகா மூவரும் ஏற்கமறுத்து அதனை விமர்சித்தார்கள். ஆனால் டூரின் நகரில் கிராம்ஷின் கருத்திற்கு ஆதரவு பெருகியது.

1920 பிப்ரவரியில் டூரின் நகரில் முதலாளிக்கும் தொழிலாளிக்குமான போராட்டத்தில் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தும், முதலாளி தொழிற்சாலை கதவடைப்பு என தொடர்ந்தபோதும் டூரின் அருகிலுள்ள தொழிற்சாலையை தொழிலாளர்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இப்போராட்டத்தில் பல இலட்சம் மக்கள் பங்குகொண்டார்கள். ஆனால் இத்தாலிய அரசு முதலாளியையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு செய்வதற்காக இராணுவத்தை குவித்தது. இறுதியில் போராட்டம் தோல்வியடைந்தது. முதலாளியின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினார்கள். கிராம்ஷி இத்தோல்வி பற்றி கூறும்போது சோசலிச கட்சித்தலைமையும், தொழிற்சங்க பேரவையும் ஆதரவு கொடுக்காமையும், போராட்டத்தை விரிவுபடுத்தாமையுமே முக்கிய காரணம் என கூறினார். இதே நிகழ்வு மீண்டும் 1920 ஆகஸ்ட் மிலான் நகரில் முதலாளிக்கும் தொழிலாளருக்குமான ஒப்பந்த பேச்சுவார்த்தை முறிவடைந்து போனதினால் ஏற்பட்டது. இங்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து மிலான் நகரை சுற்றியிருந்த 280 தொழிற்சாலைகளை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். தொழிற்சாலை கவுன்சில் மேற்பார்வையுடன் உற்பத்தியையும் மேற்கொண்டனர். ஆனால் மீண்டும் சோசலிச கட்சியும் தொழிற்சங்க பேரவையும். அரசுடன் சேர்ந்து அவர்களது போராட்டத்தை தோல்வி அடைய செய்தன. தொழிலாளர் போராட்டங்கள் சோசலிஸ்ட் கட்சி தலைமையினாலேயே தோற்கடிக்கப்பட்டன. எனினும் டூரின் தொழிலாளர் போராட்ட அனுபவங்கள் கிராம்ஷிற்கு புரட்சிகர கோட்பாட்டை வகுப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தன. இவை கிராம்ஷின் புரட்சிகரமான செயற்பாட்டுக்கும் கோட்பாட்டுக்கும் உள்ள இயக்கவியல் உறவை பிரதிபலிப்பவை ஆகும்.

இத்தாலியில் புரட்சிகரமான நெருக்கடி தோன்றி மறைந்த பின்னரே கிராம்ஷி புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையை உணர்ந்தார். சோசலிஸ்ட் கட்சியினுள் கம்யூனிஸ்ட் தன்மையை உருவாக்காமல் போனது தவறு என்றும் அந்த தவறுக்காக தன்னை ஒருபோதும் மன்னித்ததில்லை என்றும் குறிப்பிட்டார். இத்தாலிய சோசலிஸகட்சி ரஷியாவில் நடந்த மூன்றாம் அகிலத்தின் இரண்டாவது பேராயத்தில் பங்கு கொண்டது. கம்யூனிஸ்ட் கட்சியினை உருவாக்கத்தின்போது புறக்கணிப்புவாதம், சீர்திருத்தவாதம்  என பல முரண்பாடுகளையும் முகம் கொடுத்து இறுதியில் கம்யூனிஸ்ட்கட்சி அமைத்தாகியது.1922ல் அகிலத்தின் செயற்குழுவிற்கு இத்தாலியின் பிரதிநிதியாக கிராம்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பப்படுகிறார். அவரது கடுமையான உழைப்பு, மனஉளைச்சல், ஊட்டச்சத்து குறைவு எல்லாம் சேர்ந்து அவர் நோய்வாய்படுகிறார். நரம்புதளர்ச்சியும் வலிப்புத்தாக்கங்கள் ஏற்பட மூன்றாம் அகிலத்தின் தலைவராக  இருந்த ஜீனோவீவின் அறிவுரைப்படி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிவுடன் பலர் அவரை கவனித்துக்கொண்டார்கள். கிராம்ஷி தோழர் ஒருவரின் தங்கையாகிய ஜூலியாவிடம் காதல் கொள்கிறார். ஜூலியாவிற்கும் கிரம்ஷியை பிடித்துவிட்டது. அவர்கள் இருவரும் குறுகிய காலமே சேர்ந்து வாழ்ந்தார்கள். இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியினுள் தொடர்ந்தும் பல முரண்பாடுகள் ஏற்படலாயிற்று. இதனால் கட்சித்தலைமையை மாற்றுவதற்கு தீவிர முயற்சி எடுத்தது அகிலம். இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியில் 1921 - 1923 களில் இருந்த போர்டிகாவின் தலைமை 1924 - 1926 ம் ஆண்டுகளில் கிராம்ஷியின் தலைமைக்கு மாற்றம் பெறுகிறது. அதேவேளை இத்தாலியிலோ மிக பாரதூரமான அரசியல் பொருளாதார மாற்றங்கள் பாசிச அரசை உருவாக்கியது. 1922 ல் பாசிஸ்டுகள் அரசு அதிகாரத்தை கைப்பற்றியதுடன் வன்முறையையும் கட்டவிழ்த்து விடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி பிராந்திய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை கைது செய்ததுடன் பத்திரிகையும் முடக்கப்படுகிறது. 1923 ல் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு அமைப்பாகிறது.

இத்தாலியில் பாட்டாளிவர்க்க கட்சிகள் ஏன் பலவீனமாய் இருந்துள்ளது ? மற்றும் சொல்லிலிருந்து செயலுக்கு வரும்போது அவை ஏன் தோல்வியடைந்தன? என்பதற்கான காரணங்களை கிராம்ஷி பின்வருமாறு கூறுகிறார். வரலாற்று பொருள்முதல்வாதமே தொழிலாளர் வர்க்கத்திற்கு செயலூக்கமான வழிகாட்டியாக உள்ளது. அந்த கருத்துநிலையானது கட்சியிடம் இல்லாமல் போனதும், வெகுமக்களிடம் பரம்பாமல் போனதும், உறுதியான நம்பிக்கை ஊட்டி உணர்வை வலுப்படுத்தாமல் போனதுவுமேயாகும். தொழிற்சாலை கவுன்சில்கள் எனும் வலுவான வெகுமக்கள் அமைப்பை கட்டுவதன் மூலம் கட்சிக்கான உண்மையான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்பதை மெய்ப்பித்தார்கள். அதேபோல் கட்சிக்குள் மாற்றம் ஏற்படுவது என்பது அதிலுள்ள நபர்களை மாற்றுவதல்ல. தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்கும் வேலைமுறைகளை உருவாக்குவதே என்றார்.

போர்டிகாவின் வறட்டுவாத, குறுங்குழுவாதக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துப் போராட்டத்தில் கிராம்ஷி கட்சி பற்றிய தனது கருத்துக்களை விளக்கினார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் தவிர்க்க முடியாத பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும். அதன் காரணமாக புரட்சி தவிர்க்க முடியாதபடி வெடிக்கும் என்றும் அப்போது அந்த புரட்சிகரமான நெருக்கடியை எதிர்கொண்டு வழிநடத்த கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருக்க வேண்டும் என்று போர்டிகா கருதினார். அதற்கு கிராம்ஷி புரட்சி என்பது வரலாற்று இயக்கப்போக்கினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்றார்.

போர்காலத்தில் இத்தாலிய சோசலிஸ கட்சிக்கு நேர்ந்ததைப்போல் பாசிசத்தின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்படுவதை தடுக்க தற்போதைய கட்சி ஊழியர்களையும் அணிகளையும் கருத்துநிலை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பயிற்றுவித்து பெருமளவான வெகுமக்களை கட்சிக்குள் கொண்டு வரக்கூடிய ஆற்றல் உள்ளவராக்க வேண்டும். கிராம்ஷி கம்யூனிஸ்ட் கட்சியானது கட்சி அணிக்கு கல்வி புகட்டுதல் மூலம் அரசியல் திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டும். அந்த வளர்ச்சியின் அடிப்படையில் உயர்மட்டங்களுக்கு கொண்டு செல்வதாகவும் அமையவேண்டும் என கல்வியூட்டலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். கட்சிக்கும் பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு உயிரோட்டமானதாக இருக்க வேண்டுமாயின் கட்சியில் அன்றாட நடவடிக்கைகளில் அவர்களுடன் உண்மையான பிணைப்பை கொண்டுள்ள கட்சி ஊழியர் ஒவ்வொருவரும் அரசியல் கருத்துநிலை கோட்பாட்டு வளர்ச்சியை பெற்றிருத்தல் வேண்டும். எந்தவொரு அரசியல் நிலைமைகளிலும் கட்சி உறுப்பினர்களை ஒரேமாதிரி சிந்தித்து ஒரேமாதிரி ஒன்றுபட்ட முறையில் செயல்பட வைப்பது அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியறிவே அன்றி அருவமான கட்டுப்பாடு அல்ல. மிகுந்த கட்டுப்பாட்டைய மையப்படுத்தப்பட்ட தலைமையை கொண்டதாக கட்சி விளங்கவேண்டும் எனவும் கிராம்ஷி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் உழைக்கும் வர்க்கத்தின் உணர்வு, திடசித்தம் ஆகியவற்றை கட்சியின் மூலமாக மட்டுமே ஆக்கப்பூர்வமான அரசியல் தலையீடாக மாற்ற முடியும். ஆனால் புரட்சிகரக் கட்சியிலோ ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் செயலூக்கம் உள்ளவராகவும், தயார்நிலையில் இருப்பதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி அமைப்பு செயல் திறனுள்ளதாக இருக்கும். கட்சியின் ஒற்றுமையை பேணிக்காப்பதில் மத்தியகுழுவிற்கு சிறப்பான பாத்திரம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். கட்சிப் பேராயத்திலிருந்தே மத்தியகுழு தனது அதிகாரத்தை பெறுகிறது. கட்சியின் மார்க்கம் பற்றிய முடிவு கட்சி முழுவதிலும் ஒன்றுபட்ட அரசியல் தலையீடு என்னும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இடைவிடாது மாறிவரும் யதார்த்த நிலைமைகளுக்கு ஏற்ப தந்திர உத்திகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. ஆனால் கட்சியின் மார்க்கம் பற்றிய விவாதம் கட்சிப்பேராயத்தில் மட்டுமே நடக்க வேண்டும். அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு மத்தியகுழுவிற்கு உரிமையும் கடமையும் உள்ளது. அந்த அபிப்பிராயத்தின் மீது முடிவு எடுப்பதற்கு கட்சிப் பேராயத்தைகூட்டி விவாதிக்கலாம். யதார்த்த சூழ்நிலைமைகளை பற்றிய பகுப்பாய்வின் மூலமாக அரசியல் மார்க்கத்தை வளர்க்கலாம். கட்சி நடவடிக்கைகளை மையப்படுத்தல் என்பதன் பொருள் கட்சிஅணிகள் வெகுமக்கள் இயக்கத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிகளைத் கட்சித் தலைமைக்குத் தொடர்ந்து தெரிவித்து பின்னர் மையத்தின் முடிவுகளை அன்றாட நடவடிக்கைகளில் கடைப்பிடிப்பதாகும்.

உட்கட்சி ஜனநாயகம், என்பது கீழ்மட்ட அமைப்புகள் பெற்றிருக்கும் அரசியல் ஆற்றலைச் சார்ந்தது. கட்சியின் மையம் இந்த ஆற்றலை எந்த அளவிற்கு வளர்க்கிறதோ அந்த அளவிற்கு “ஜனநாயக” வழிமுறைகள் விரிவடைகின்றன. இவ்வாறு ஜனநாயக வழிமுறைகள் விரிவடைவதன் காரணமாக கீழ்மட்ட அமைப்புகள் கட்சி மையத்தால் உள்ளிழுத்துக் கொள்ளப்படுவதும், கீழ்மட்ட அமைப்புகளின் அமைப்பு பிரச்சனைகளில் கட்சி மையம் தலையிடுவதும் குறைகிறது. இவ்வாறு கிராம்ஷி மத்திய செயற்குழுதான் கட்சி என்று கருதும் போர்டிகாவின் போக்கை மறுதலித்தார். பாட்டாளி வர்க்கத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட முன்னணிப் படையே கட்சி என்றும் கூறினார். பொருளாதாரம், அரசியல், கருத்துதிலை ஆகிய மூன்று முனைகளிலும் உழைக்கும் வர்க்கம் போராட வேண்டும். தொழிற்சங்க போராட்டம் தன்னெழுச்சியானது. ஆனால் தன்னளவிலே புரட்சிகரமாய் இராது. புரட்சியை வழிநடத்தி செல்ல வேண்டுமாயின் தொழிற்சங்க போராட்டத்துடன் அரசியல் போராட்டமும் இணைய வேண்டும். அரசியல் போராட்டத்தில் கருத்துநிலை போராட்டம் முக்கியமானது என்றார். கட்சியின் கடமை பற்றி கூறும்போது மக்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்தி செல்வதாகும் என்றார்.

மார்க்ஸியவாதிகளினால் புரட்சியானது மேற்கு ஐரோப்பாவில் நடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. முதலாளித்துவம் வளர்ச்சியடையும்போது புரட்சி வெடிக்கும். பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் நடைமுறைக்கு வரும் என்ற மார்க்சிய சூத்திரமானது பொய்யாகிப்போனது. புரட்சி ரஷியாவிலேயே வெடித்தது. ஏன் மார்க்சிய சூத்திரம் பொய்யானது என்பதற்கு முதலாளித்துவ வளர்ச்சி பாட்டாளி வர்க்க அடுக்குகளை labour aristocracy  (தொழிற்துறைப் பாட்டாளிகளில் பிற அணைத்துபிரிவினரையும் பார்க்க கூடுதலான ஊதியத்தையும், சலுகைகளையும் பெறுபவர்கள் ) எனும் தொழிலாள வர்க்க சீமான்களை உருவாக்கியுள்ளது. அதனால் ரசியாவில் நேரடியாக தோன்றிய புரட்சிகர எழுச்சியில் ஈடுபடும் வெகுமக்களை தெருவுக்கு கொண்டுவந்த நிர்ணயமானது, மத்திய மேற்கு ஐரோப்பாவில் சிக்கலாக செயற்படுகிறது. இந்த சிக்கலான நிலைமையை மெதுவாகவும் மிகுந்த விவேகத்துடனும் செய்ய வேண்டியுள்ளது. நீண்டகால தன்மையுடைய மூலபாயம், தந்திரபாயமும் கொண்ட புரட்சிகரகட்சி உருவாக்க வேண்டியுள்ளது. கிராம்ஷி புரட்சி என்பது சர்வதேசியத்தை நோக்கி வளர்ச்சியடைய வேண்டும் என்றபோதிலும் அதன் தொடக்கமுனை தேசியத்தன்மை கொண்டதாகவே இருக்கும் என்றார்.

இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தீவிர இடதுசாரிபோக்கு, வலதுசாரிபோக்கு காணப்பட்டபோது கிராம்ஷி புதியசெயற்குழுவை அமைத்ததுடன் பாட்டாளிவர்க்க கட்சி பற்றிய புதிய வரையறைகளையும், விளக்கத்தையும் வழங்கியதோடு நிலைமைகளுக்கேற்ப தந்திரபாயத்தை உருவாக்கினார். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் மீது கொள்ளத் தொடங்கிய அணுகுமுறையும், அகிலம் வகித்த பாத்திரமும் கட்சித்தலைமையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. புரட்சியின் தேசிய பரிமாணத்திற்கும், சர்வதேச பரிமாணத்திற்கும் உள்ள உறவை புரிந்து கொள்ளும் விதம்தான் கட்சித்தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தீர்க்கமான பாத்திரம் வகித்தது.

 அதேவேளை 1922 தொடக்கத்தில் லெனின் பக்கவாதத்தால் முடக்கப்படுகிறார். 1923ல் மார்ச்சில் பேசும் ஆற்றலையும் இழக்கிறார். ரசியாவில் கட்சிக்குள் பல கருத்து முரண்பாடுகள் தோன்றலாயின. அவை லெனின் மரணத்தின் பின் மேலும் கூர்மையடைந்து கசப்பான குழுச்சண்டைகளாக மாறின. ஸ்டாலின், ஜீனோவீவ், காமனேவ் ஆகியோர் ஒன்றினைந்து ஸ்ரொட்கியை இருமுறை தோற்கடித்தனர். ஸ்ரொட்கி கூறிய உலகப்புரட்சி (நிரந்தரப்புரட்சி) ஸ்டாலின் கூறிய ‘ஒரு நாட்டின் சோசலிஸம்’, கட்சியில் அதிகார வர்க்க சீரழிவு ஏற்பட்டு விட்டதாக ஸ்ரொட்கி முன்வைத்த விமர்சனம் போன்ற விஷயங்கள் மீது கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.

இத்தாலியில்1922 அக்டோபரில் பாசிச அரசு அதிகாரத்தை கைப்பற்றுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிமீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. பத்திரிகைகள் முடக்கப்பட்டன. அங்கத்தவர்களை கைதுசெய்தார்கள். அச்சுக்கூடம் கைப்பற்றப்பட்டது. கட்சி நிதி முழுவதும் பறிமுதல்செய்யப்பட்டது. போர்டிகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.1923 ம் ஆண்டு இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட தலைமறைவு கட்சியாகவே செயற்பட்டது. பாசிச அரசாங்கம் கட்சியை தடை செய்யவில்லையே தவிர மற்றைய எல்லா ஒடுக்குமுறைகளையும் ஏவிவிட்டது. எனினும் கிராம்ஷி கட்சியினை விரிவுபடுத்தவும் முசோலினியின் பாசிசத்தை எதிர்க்கவும் கடினமாக உழைத்தார்.

1926 ல் நவம்பரில் முசோலினியின் பாசிஸ்ட் அரசாங்கம் கிராம்ஷியை கைது செய்கிறது. அவர் முதலில் உஸ்ட்டிகா Usitica எனும் தீவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அமாடியோ போர்டிகாவை சந்திக்கிறார். இருவரும் சேர்ந்து தீவின் திறந்தவெளி சிறைச்சாலையில் அரசியல் வகுப்புகளை நடத்தினர். 42 நாட்களுக்கு பின்னர் மிலான் சிறைக்கு மாற்றப்படுகிறார். டாட்டியானாவும் மிலான் நகருக்கு குடியேறினார். கிராம்ஷிக்கு தேவையான புத்தகங்கள், மற்றும் உதவிகளை செய்து வந்தார். அவருடைய தியாகங்கள் அளப்பரியது. கிராம்ஷியின் விசாரணை ரோமில் நடக்கிறது. விசாரணையின் போது வழக்கறிஞரின் கேள்விகள் கிராம்ஷியை எரிச்சலூட்டின. கிராம்ஷி பின்வருமாறு கூறினார். “ நீங்கள் இத்தாலியை அழிவுக்கு இட்டுச் செல்வீர்கள். பின்னர் அதைக் காப்பற்றப்போவது கம்யூனிஸ்ட்களான நாங்களாகத்தான் இருக்க முடியும்” என்றார். அதற்கு வழக்கறிஞர் “இந்த மூளையில் செயற்பாட்டை இருபது ஆண்டுகளுக்கு தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார். கிராம்ஷிக்கு 20 ஆண்டுகள் 9 மாதங்கள் 5 நாள்கள் தண்டனை வழங்கப்பட்டது.

கிராம்ஷி டூரி சிறையிற்கு வந்து இரண்டரை வருடங்களுக்கு பின்னரே எழுதுவதற்கு தேவையான பொருட்களை பெற அனுமதி வழங்கப்பட்டது. கிராம்ஷி சிறையில் இருக்கும் போது தனிமையினால் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாகிறார். துணைவி ஜூலியாவிற்கு பல கடிதங்களை எழுதுகிறார். ஜூலியாவிடம் இருந்து அரிதாக பதில் கிடைக்கும். அப்போது “சமூக வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டு இருப்பது. ஒரு வகை சிறைத்தண்டனை என டாட்டினாவிற்கு எழுதுகிறார். தோழர்களின் தொடர்புகள் இல்லை. கட்சி, அகிலம் குறித்த நிலவரம் எதுவும் தெரியவில்லை. கிராம்ஷி உடல்நலம் மிகவும் பாதிப்படைகிறது. கிராம்ஷியின் தங்கை டெரெலிஸா தனிப்பட்ட முறையில் முஸ்சோலினிக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார். “கிராம்ஷிக்கு முறையான மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது. அவரை சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்த்து தகுந்த பராமரிப்பு வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை. டூரி என்னும் சிறு நகரிலுள்ள சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். கிராம்ஷிற்கு சிறுநீரக கோளாறின் காரணமாக சருமத்தில் தடிப்புகள் ஏற்படலாயிற்று. மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறையிலுள்ள கொடுமையான நிலைமைகள், சிறையதிகாரிகளின் மனிதத்தன்மையற்ற நடத்தைகள் போன்றவை அவரை மேலும் வருத்தின. ஜூலியா மிகவும் கடுமையான நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தியினை கிராம்ஷி 1930 ஆண்டு இறுதியில் அறிகிறார். மனவலியுடன் ஜூலியாவிற்கு எழுதிய கடிதத்தில் “உனக்கு உதவிக்கரமாக இருக்கும் வகையில் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என்ற இயலாமை என்னை பொறுமை இழக்கச் செய்கிறது. உன்னிடம் நான் கொண்டுள்ள அளவுகடந்த பாசம்  உன்னை அரவணைத்து ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கிறது. நீ மீண்டு வருவாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நாம் சேர்ந்து இருக்கும் காலம் வரும் என நம்புவோம்” என குறிப்பிடுகிறார். பெற்றோர்களுடனும் உடன் பிறந்தவர்களுடனும் தொடர்பு முற்றாக அறுந்துவிடவில்லை. தனது குழந்தைகளின் புகைப்படங்களை தங்கை டெரஸினாவின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், அண்ணன் மகள் ஆகியோரின்  புகைப்படங்களுடன் நீண்ட நேரம் ஒப்பிட்டும் பார்ப்பார். அவரது உடல்நிலை வேகமாக சீர்கெட்டுப்போனது. தூக்கம் இல்லாது போயிற்று. அவருக்கு அடிக்கடி ஞாபகமறதி ஏற்பட்டுவிடும். மயக்கமும் சோர்வும் வாட்டும். அவரால் கவனம் குவிக்க முடியாமல் போனது. 1931ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் இரத்தவாந்தி எடுத்தார். இத்தனை வருத்தங்களுடனும் அவருடைய எழுத்துப்பணி தொடர்ந்த வண்ணமே இருந்தது.

1932 டிசம்பர் 30ம் நாள் கிராம்ஷின் தாயார் ஜியுஸெப்பினா காலமானார். கிராம்ஷி அந்த அதிர்ச்சியைத் தாங்க மாட்டார் என்று கருதிய அவர் குடும்பத்தினர் அவருக்கு அந்தப் செய்தியை தெரிவிக்கவேயில்லை. கிராம்ஷியின் விடுதலை குறித்து பேராசிரியர் ஸ்ராபா பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் கிராம்ஷி “கருணை மனு தந்தால் மட்டுமே விடுதலை பற்றி யோசிக்கலாம்” என முஸ்ஸோலினி மறுத்துவிட்டார். கிராம்ஷியோ மன்னிப்பு கேட்பது தற்கொலைக்கு ஒப்பானது என மறுப்பு தெரிவித்தார். 1933ல் போதுமான கவனிப்பு, மருத்துவ சிகிச்சை இல்லாததால்  அவரை நோக்கி மரணம் அடியெடுத்து வைத்தது. மிக மோசமான வயிற்றுவலி, பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டன. காசநோய் ஏற்பட்டிருந்தது, அவரை பரிசோதனை  செய்த டாக்டர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும்படி அறிக்கை எழுதுகிறார். இத்தாலிய சட்டப்படி அவரை பரோலில் விடுதலை செய்திருக்க முடியும். ஜூலியாவினதும்  குழந்தைகளினதும் எண்ணம் அவரை ஆட்கொண்டது. குழந்தைகளை பார்க்க விரும்புவதாகவும் கடிதம் எழுதினார். ஜூலியாவினால் வரமுடியாமலே போய்விட்டது. கிராம்ஷி விடுதலை குறித்து உலகளவில் நெருக்கடிகள் ஏற்பட போர்மியா என்னும் இடத்திலுள்ள மருத்துவமனைக்குச் சேர்க்கப்படுகிறார். அங்கு அவர் குறிப்பேடுகளை எழுதி முடித்தார். முன்பு எழுதியவற்றை திருத்தி எழுதுவது, விரிவுபடுத்தி எழுதுவது, செழுமைப் படுத்தி எழுதுவது என்பதாக அமைந்தது. 1935 ல் ஆகஸ்ட்டில் ரோம் நகரிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். 1937 ஏப்பிரல் 21 இல் அவரது தண்டனைக் காலம் முடிவடைய இருந்தது. விடுதலை பற்றிய நம்பிக்கைதான் அவரை வாழ வைத்துக்கொண்டு இருந்தது. ஏப்ரல் 25 ம் திகதி கிராம்ஷிக்கி இரத்தநாளம் வெடிப்பு ஏற்படுகிறது. 27ம்திகதி காலை 4:10 ற்கு நினைவு திரும்பாமலே காலமானார். அப்போது அவருடைய வயது 46 ஆகும். அவருடைய அடக்கத்தின்போது அவரது குறிப்புக்கள் டாட்டியானாவினால் பாதுகாக்கப்படுகினறன. பின்பு மாஸ்கோவில் சேர்க்கப்பட்டன. இது டாட்டியானாவும், பேராசிரியர் ஸ்ராபாவும் உலகப் புரட்சி இயக்கத்திற்கு ஆற்றிய மிகப்பெரிய தொண்டாகும்.

கிராம்ஷியின் சிறைக்குறிப்பானது மொத்தம் 32 குறிப்பேடுகள் 2848 பக்கங்களை கொண்டதாகும். அதிகாரிகளின் தணிக்கைகளுக்கு பிடிபடாமல் பல விடயங்களை மறைமுகமாகவும் எழுத வேண்டி இருந்தது. கிராம்ஷியின் சிறைக்குறிப்புகளை நான்காக வகைப்படுத்தினர். அவை 1. 1869 - 1870 ஆண்டில் தேச- அரசு உருவானது வரை இத்தாலிய வரலாற்றில் அறிவாளிகள் வகித்த பாத்திரம் பற்றிய விளக்கம். 2. சுரண்டும் வர்க்கங்களின் ஆதிக்கத்திற்கான அடிப்படை தத்துவ போக்குகள் பற்றிய விமர்சனம். 3. புதிய பாட்டாளி வர்க்க உலகக் கண்ணோட்டத்தை உருவாக்குவது பற்றிய கருத்துகள். 4. வாழ்க்கை பற்றிய மக்கள் மனங்களில் பதிந்துள்ள பழைய பூர்ஷ்வா கருத்தோட்டங்களை அகற்றி அவற்றிற்கு பதிலாக புதிய கருத்தோட்டங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான வழிமுறைகள் என்பனவாகும்.

கிராம்ஷியின் மார்க்ஸியத்தில் காணப்படும் முக்கிய அம்சம் மேலாண்மை ( Hegemony ) பற்றிய அவரது விளக்கமாகும்.*  பொருளாதார அடித்தளத்திற்கும் ( Base ) சமூக, அரசியல், பண்பாட்டு அமைப்புகள் எனும் மேற்தட்டிற்கும் ( SuperStructure ) இடையேயுள்ள இயக்கவியல் ரீதியான உறவுகளை விளக்குவதற்கும், ( அடித்தளம், மேற்கட்டுமானம் - superstructure -  என்பதில் சார்பளவான சுயாதீனத்தை புறக்கணித்து எல்லாமே பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படும் என்ற பொருளாதாரவாதப்போக்கை களைவதற்கு )  * ஒடுக்குமுறை கட்டமைப்பினை நிலைநிறுத்துவதற்காக ஆளும்வர்க்கம் கையாளும் கருத்துநிலை வடிவத்தை விளக்குவதற்கும் மேலாண்மை என்ற பதத்தை கிராம்ஷி பயன்படுத்தினார். மேலும் மார்க்ஸிய தத்துவத்தையும், புரட்சிகர நடைமுறையையும்  இணைத்துப் பெற்ற அனுபவங்களில் வளர்ந்த கருத்தாக்கமே மேலாண்மை எனவும் வலியுறுத்துகிறார்.

ஆளும் வர்க்கம் தனது ஆட்சியினை நிலைநிறுத்த வன்முறை, பலவந்தம் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தவில்லை. மாறாக அந்த வர்க்கத்தின் சித்தாந்தத்திற்கு ( Hegemony ) விருப்புடன் இசைவு ( சம்மதம் ) தருவதுமாலேயே அதனுடைய ஆட்சி நிலை நிறுத்தப்படுகிறது. எனவே குறித்த வர்க்கம் அரசு அதிகாரத்தை பெற வேண்டுமாயின் அது சமுதாயத்தின் மீது தனது மேலாண்மையை அரசியல், அறிவு, அறவியல் என எங்கும் கொண்டிருத்தல் வேண்டும். புதிய ஆளும் வர்க்கம் நேசவர்க்கத்தின் மீது மேலாண்மையை செலுத்தியும், பகைவர்க்கத்தின் மீது வன்முறையை பயன்படுத்தியும் அரச அதிகாரத்தை கைப்பற்றி தக்கவைத்துக் கொள்கிறது என்றார். அரசு அதிகாரத்தின் இரட்டை பண்புகளை ( பலவந்தம் - சம்மதம் ) விளக்குவதற்கு நிக்கோலா மார்க்கியவல்லியின் ( Nicole Machiavelli ) யின் இளவரசன் ( The Prince ) எனும் நூலில் கிரேக்க தொன்மத்தில் இடம்பெற்ற சென்ட்டர் (Centaur ) என்பதை உருவகமாக கொள்கிறார். Centaur என்பது மனிதத் தலையும் குதிரை உடலும் கொண்ட உருவம் ஆகும். அதன் பொருள் State என்பது மனிதத் தன்மையும்(சம்மதம்),  மிருகத்தன்மையும் (வன்முறை) சேர்ந்ததே என்பதாகும்.

மேலாண்மை என்பது வர்க்கங்களுக்கும் பிற சமூகசக்திகளுக்கும் இடையிலான உறவாகும். அதாவது ஒரு வர்க்கமோ, அந்த வர்க்கத்தின் பகுதியோ கருத்துநிலைப் போராட்டங்கள் வழியாக நேச அணிகளின் அமைப்பொன்றை உருவாக்கி அதைப் பேணிக் காப்பதன் மூலம் பிறவர்க்கங்கள், சமூகக்குழுக்கள் ஆகியவற்றின் சம்மதத்தைப் பெறுவதாகும்.

கிராம்ஷி தனது சிறைக்குறிப்பில் குடிமைச் சமுதாயம் ( Civil Society ) பற்றியும் விவரிக்கிறார். குடிமைச் சமுதாயம் என்ற சொற்தொடர் ஜோன் லொக் (John Locke ), ரூசோ (Rousseau ) போன்ற ஆங்கில, பிரெஞ்சு தத்துவவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை நிலையிலுள்ள மானிட சமுதாயம், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் சமுதாயம் ஆகியவற்றை பிரித்துப் பார்க்க இந்த தத்துவவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. அவர்களால் நிர்வகிக்கப்படும் சமுதாயத்தை குடிமைச் சமுதாயம் என அழைத்தனர். ஹெகல், மார்க்ஸ் ஆகியோரைப் போலவே கிராம்ஷியும் குடிமைச் சமுதாயம் (Civil Society ), அரசியல் சமுதாயம் ( Political Society ) என பாகுபாடு செய்கிறார். உண்மையில் இவையிரண்டும் (Civil Society, Political Society ) இயக்கவியல் ரீதியில் ஒன்றுணைந்துள்ள முழுமையே என்றும் கூறுகிறார். ஆளும்வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கான ஒப்புதலை குடிமைச் சமுதாயத்தில் இருந்தே பெறுகிறது. இந்த ஒப்புதல் என்பது ஆளும்வர்க்கம் பெற்றிருக்கும் செல்வாக்கும், அதன்பொருட்டு மக்களிடையே பெற்றிருக்கும் நம்பிக்கையுமே ஆகும். இது அந்த வர்க்கம் உற்பத்தி இயக்கத்தில் வகிக்கும் பாத்திரத்தினாலே ஆகும்.

ஆரம்ப காலங்களில் மார்க்ஸ் குடிமைச் சமுதாயம் பற்றி கொண்டிருந்த கருத்துநிலையானது வரலாற்று பொருள்முதல்வாதம், உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் போன்ற கருத்தாக்கங்களின் வளர்ச்சியின் போது கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலாளித்துவ சமுதாயம் மூன்று சமூக உறவிகளால் உருவாக்கப்படுகிறது எனவும் அவை

1. உற்பத்தி உறவுகள் அதாவது முதலாளி வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்குமான அடிப்படை உறவு.
2. அரசின் பிரத்தியேக பண்பான பலவந்த உறவு.
3. குடிமைச் சமுதாயத்தை உருவாக்கும் பிற அனைத்து உறவுகள்.( அரசியற் கட்சிகள்,தொழிற்சங்கம், மத நிறுவனங்கள், கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் )

மேலாண்மை பெறுவதற்காக இரண்டு அடிப்படை வர்க்கங்களிடையே நடக்கும் போராட்டக்களம் குடிமைச் சமுதாயம் ஆகும். குடிமைச் சமுதாயத்தில்தான் அதிகார வர்க்கம் அரசியல், கருத்துநிலை போராட்டங்கள் மூலம் தமது மேலாண்மையை கட்டியுழுப்புகிறது. இந்தக் களத்தில்தான் பாட்டாளிவர்க்கமும் தமது மேலாண்மையை நிலை நிறுத்த வேண்டும். அதுவே சோசலிச வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். பாட்டாளி வர்க்கம் தமது மேலாண்மையை நிறுவ நீண்டகால அறவியல், கருத்துநிலை, சீர்திருத்த போராட்டங்களை நடத்த வேண்டும். கிராம்ஷி மூலபாயமாக இதனை நிலைபதித்த போர் ( War of Position ) என்றும், ஒரு வரலாற்றுத் தருணத்தில் அரசு அதிகாரத்தை கைப்பற்றும் நிலையினை முன்னேறித் தாக்கும் போர் ( War of Movement ) எனவும் உருவகமாக குறிப்பிடுகிறார்.

நிலைபதித்த போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளில் பலம் சரிசமமாக இருக்கையில் பதுங்கு குழியில் இருந்து கொண்டு பரஸ்பர முற்றுகையின் கீழ் போரை நடத்தல் எனவும், முன்னேறித் தாக்கும் போரில் முன்னனி படைப்பிரிவு, எதிரிகளின் தற்காப்பு நிலைகளில் திடீரென உடைவுகளை ஏற்படுத்தி ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு இடம் பெயர்ந்து அரண்களை கைப்பற்ற பாய்ந்து செல்லும். நிலைபதித்த போர் என்பது குடிமைச்சமுதாயம், அரசியல்சமுதாயம்,உற்பத்திக்களம் ஆகியவற்றில் பாட்டாளிவர்க்கம் தனது மேலாண்மையை நிறுவுவதை உள்ளடக்கியதாகும். நிலைபதித்தபோர் ஐரோப்பிய நாடுகளில் மிக நீண்டகாலம் நடக்கக் கூடியதாக இருக்கும். அங்கு முதலாளித்துவ வளர்ச்சியும், தொழிற்சாலை உற்பத்தியும் புதுவிதமாய் ஒழுங்கமைக்கப் பட்டுள்ளமையே காரணமாகும்.

கிராம்ஷி புத்திஜீவிகள் (intellectuals) பற்றிய வேறுபட்ட கருத்தாக்கத்தினையே கொண்டிருந்தார். புத்திஜீவிகள், உற்பத்தி உறவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவற்றிற்கு மேலானவர்கள் என்ற குரோசேயின் கருத்தை மறுத்தார். அவர் உற்பத்தி உறவுகளில் புத்திஜீவிகள் வகிக்கும் பாத்திரத்தை வரலாற்று ரீதியாகவும், யதார்த்த பூர்வமாகவும் கண்டறிந்தார். பொதுவாக ‘புத்திஜீவி’ என்ற பதம் மூளை உழைப்பை சார்ந்ததா ? உடலுழைப்பை சார்ந்ததா? என்றே பார்க்கப்படுகிறது. உண்மையில் மூளையும் புத்தியும் சாரதா மானிட செயற்பாடு ஏதும் இல்லை. ஆதலால் உழைப்பவனும் சிந்திக்கவே செய்கிறான். கிராம்ஷி புத்திஜீவிகளை இரண்டு வகையாக பிரிக்கிறார். மரபார்ந்த புத்திஜீவிகள் ( Traditional Intellectual ), அவயவ புத்திஜீவிகள் ( Organic Intellectual ) என்பவையாகும்.

வரலாற்றுக் களத்தில் தோன்றும் ஒவ்வொரு புதிய வர்க்கமும் தனக்கே உரிய, தனது வர்க்கத்தின் நலன்களை கட்டிக்காக்கிற, தனது மேலாண்மையை உருவாக்கிற, தனது வர்க்கத்தையும் சமுதாயத்தையும் ஒழுங்கமைக்கிற புதிய புத்திஜீவிகளை அதாவது  தன்னுடன் ஒரு அவயம் போல் பிணைக்கப்பட்ட புத்திஜீவிகளை உருவாக்குகிறது. அதனையே Organic Intellectual  என்கிறார்.   மரபான புத்திஜீவிகள் என  பாதிரிகள், மருத்துவர்கள், களைஞர்கள், வழக்கறிஞர்கள் போன்றோரை குறிப்பிடுகிறார். இவர்கள் பூர்ஷ்வா வர்க்கமும் முதலாளித்தவமும் தோன்றுவதற்கு முன்பு இவ்வாறு கருதப்பட்டவர்கள் என்றார். கிராம்ஷி வரலாற்று ரீதியாக மரபான புத்திஜீவிகளையும், சமூகவியல் ரீதியாக அவயவ புத்திஜீவிகளையும் வரையரை செய்கிறார். வெற்றியடைய விரும்பும் எந்தவொரு புரட்சிகர இயக்கமும் முன் நிபந்தனையாக தனக்கேயுரிய Organic Intellectual ஐ உருவாக்குவது அவசியமானது எனவும் கூறுகிறார். இவர்கள் தங்கள் வர்க்கத்தின் ஒட்டுமொத்தமான உணர்வை அரசியல், சமூக, பொருளாதார களத்தில் வெளிப்படுத்துவர். பாட்டாளிவர்க்கம் தமது குறிக்கோலையும், உலகக் கண்ணோட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மரபார்ந்த புத்திஜீவிகளை கருத்துநிலை ரீதியாக வென்றெடுக்க வேண்டும். பாட்டாளி வர்க்கத்திற்கும் Organic புத்திஜீவிகளுக்கும் உள்ள உறவு இயங்கியல் ரீதியானது என்கிறார்.

புரட்சியை நடத்தும் பொருட்டு கட்சி யதார்த்த நிலமைகளை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என கிராம்ஷி விளக்குகிறார். யதார்த்தத்தில் இரண்டு விதமான இயக்கப் போக்குகள் உள்ளது. அவை * அடிப்படையான இயக்கப்போக்கு ( Organic Movement ) சமுதாயத்தில் நிரந்தரமாக உள்ள இயக்கப்போக்கு ஆகும். உதாரணம் ஒரு நெருக்கடி ஏற்படுதல், அது நீண்டகாலம் சரிப்படுத்த முடியாது அரசியல் பொருளாதார முரண்பாடுகள் வெளிப்படுத்துகின்றன என்பதை குறிக்கும். * இரண்டாவது சூழ்நிலை இணைவால் ஏற்படும் இயக்கப்போக்கு ( Conjunctural movement ) சமுதாயத்தில் அடிப்படையான நெருக்கடி தீர்க்கப்பட முடியாததாக இருந்தபோதும் இப்போது இருக்கும் அரசியல் பொருளாதார கட்டமைப்பை பேணிப் பாதுகாக்க தொடர்ந்து போராடியும் முரண்பாட்டை குறித்த எல்லைக்குள் தீர்க்கவும் செய்வதாகும். சூழ்நிலை இணைவு என்பது பொருளாதார நிலைமையின் உடனடியான மேம்போக்கான அம்சங்களின் சேர்க்கை, இது உடனடி அரசியலுடன் மேலும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. முதலாவது தந்திர உபாயம் உடனும் இரண்டாவது மூல உபாயத்துடனும் தொடர்புடையது என்கிறார்.

வரலாறு, அரசியல் பகுப்பாய்வில் சாதாரணமாக ஏற்படும் தவறு, அடிப்படை இயக்கப்போக்குக்கும் சூழ்நிலை இணைவால் ஏற்படும் இயக்கப்போக்குக்கும் இடையில் உள்ள உறவை சரியாக வரையறுத்துள்ள புரிந்து கொள்ளாததுதான். இதன் காரணமாக மறைமுகமாக செயற்படும் காரணங்களை உடனடி காரணங்களாக பார்த்து அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து குழப்புவதோ, உடன்படிக்கை காரணங்கள் மட்டும் தீர்மானகரமான காரணங்கள் என்று வலியுறுத்துவதோ நேர்கிறது. முதலாவது தவறு ‘பொருளாதாரவாதத்’ தில் போய் முடியும். இரண்டாவது தவறு ‘தன்னிச்சைவாதத்’தில் ( Voluntarism ) போய் முடியும். இதற்கு 1905 ல் ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியை விளக்கும் ரோசா லுக்ஸம்பர்க் தனது நூலில் ‘ பொது வேலை நிறுத்தம் கட்சியும் சங்கங்களும்’ இல் கட்சி அமைப்பு வகித்த பங்கை குறைவாகவும், பொருளாதார காரணங்களையும் மக்களின் தன்னெழுச்சியையும் மிகையாகவும் மதிப்புடுகிறார். இது பொருளாதார நெருக்கடி தவிர்க்க முடியாதபடி புரட்சியை தோற்றுவிக்கும் என்ற பொருளாதாரவாத நிலைப்பாட்டையும், இந்த நெருக்கடியில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் எழும் எனும் தன்னெழுச்சிவாத நிலைப்பாட்டையும் கொண்டதாகும். பொருளாதார நெருக்கடிகள் நேரடியாகவோ தாமாகவோ வரலாற்று ரீதியான மாற்றங்கள் நிர்ணயிப்பதில்லை. பொருளாதார அடித்தளத்திற்கும் அரசியல் மேலடுக்குமிடையே உள்ள உறவு குடிமைச் சமுதாயத்தின் மூலமாகவே வடிவமைக்கப்படுகிறது. அரசியல் வாழ்வில் பொருளாதாரம் தீர்மானகரமான பாத்திரம் வகிப்பதை கிராம்ஷி ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால் உடனடியான பொருளாதார நெருக்கடிகள் தாமாகவே அடிப்படையான வரலாற்று நிகழ்வுகளை உருவாக்கும் என்னும் பொருளாதாரவாதத்தையே நிராகரித்தார்.

கிராம்ஷி அமெரிக்கனிசமும் போர்டிசம் ( Americanism Fordism ) பற்றியும் தமது சிறைக்குறிப்பில் எழுதியுள்ளார். இங்கு ப்ரெடெரிக் டெய்லரும் ( Americanism ), ஹென்றி போர்டும் ( Fordism ) உருவாக்கிய நிர்வாக முறைகள் இத்தாலியபொருளாதாரத்தின் மீது குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தில் ஏற்படுத்திய விளைவுகளை ஆராய்கிறார். சென்ற நூற்றாண்டு இறுதியில் தொழிற்சாலைகளில் புகுத்தப்பட்ட அறிவியல் ரீதியான நிர்வாக முறைஆகும். அமெரிக்காவில் உற்பத்தி நிறுவனமொன்றில் தொழிலாளியாக பணியாற்றி மேலாளராக பதவி உயர்வு பெற்ற டெய்லர் தன்னுடைய அனுபவத்தையும், அறிவையும் முதலாளிகள்,அதிகாரிகள் நலன்களுக்கு பயன்படுத்தினார். குறைந்த நேரத்தில் அதிகூடிய உழைப்பை எவ்வாறு தொழிலாளியிடம் இருந்து பெறுவது என்பதாக இருந்தது. அதாவது தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்து செலவை சிக்கனப்படுத்தி அதிகபட்ச இலாபம் பெறுவதாகும். Fordism பற்றி அமெரிக்க ஹென்றி போர்ட் என்பவருடைய கருத்தானது, தொழிலாளியின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு உயர் ஊதியத்தை அளித்தது. அதன்மூலம் அவர்களுக்கு அறநெறிகளை போதித்தனர். உதாரணமாக குடிப்பழக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும். இதன் உண்மையான நோக்கம் தொழிலாளியின் சக்தியையும் கவனத்தையும் உற்பத்தியில் குவிப்பதற்கே ஆகும்.

‘கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்’ என்ற நூலானது, கிராம்ஷி பற்றிய கனதியான பார்வையினைக் கொண்டுள்ளது எனலாம். கிராம்சியின் இளமைக்காலத்தில் இத்தாலியில் அவர் அனுபவித்த வர்க்க தேசிய இன ஒடுக்குமுறைகள் என தொடங்கி பல்கலைக்கழக காலத்தில் மார்க்சிய அரசியல் கோட்பாடுகளில் அவருக்கிருந்த தேடல்கள், தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பதற்கான அறிவார்ந்த முயற்சிகள், ரசியப் புரட்சியில் இருந்த உற்சாகம் அதன் வழிகாட்டலில் இத்தாலியிலும் புரட்சிக்கான பாதைகளை முன்னெடுத்து  தொழிலாளர்களை வழிநடத்தி சென்றமை, ‘தொழிலாளர் கவுன்சில்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தொழிலாளர்களின் பலத்தை நிரூபித்து காட்டியமை, சோசலிஸ்ட் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான தத்துவ முரண்பாடுகளைக் களைந்து கட்சியினை முன்னகர்த்திச் சென்றமை, இதன்போது போல்ஷ்விக் கட்சித் தலைவர்களான லெனின்,ஸ்ரொஸ்கி, புகாரின், ஜினோவிவ், ஸ்டாலின் போன்றவர்களுடன் இருந்த உறவு என கிராம்ஷி சிறைப்பிடிப்பதற்கு முன்னரான நிலைமையை விபரிக்கின்றது. கிராம்ஷிற்கு சிறைவாசம் இருபது ஆண்டுகள் அளிக்கப்பட்ட போதும் தளராத மனத்துணிவுடன் தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்தார். முன்னாளில் அவரது அரசியல் செயற்பாடும் அதன்போது இருந்த தடைகளையும் அதற்கான காரணங்கள் என அவர் தொடர்ச்சியாக பின்னாளில் சிறையில் ஆராய்ந்து குறிப்புக்களை எழுதினார். அவருடைய குறிப்புகளில் கோட்பாட்டு விரிவுபடுத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது.

கிராம்ஷியின் சிறைகுறிப்புகளில் மேலாண்மை (Hegemony), சிவில்சமூகம் (Civil Society), புத்திஜீவிகள் ( Organic Intellectual, Traditional Intellectual)போன்ற சொல்லாடல்களுடன் புரட்சிகரமான கருத்துக்களையும், கம்யூனிஸ்ட் கட்சியினை வளர்த்தெடுப்பது, வெகுமக்களை புரட்சியை மையமாக எவ்வாறு ஒழுங்கமைப்பது, அதன்போது நிலைபதித்தபோரின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். பாட்டாளிவர்க்கம், குடிமைச் சமுதாயத்தில் தனது மேலாண்மையை நிறுவுவதன் மூலமே அரசு அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அதன்போது முதலாளிய சமுதாயத்திலுள்ள பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் உட்பட்டிருந்த சமூக சக்திகளுடன் நேச அணியை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார். அடித்தளம், மேல்கட்டுமானம் பற்றி கூறும்போது அவற்றிடையே உள்ள சார்பளவான சுயாதீனத்தையும் இயங்கியல் ஒன்றிணைவையும் விவரிக்கிறார். அரசு, அரசாங்கம் எனும்போது அரசு ( state ) நிரந்தரமானது சட்ட, நிர்வாக அமைப்பினை கொண்டது. அரசாங்கம் ( Goverment ) என்பது மாறக்கூடியது. ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி அரசு பற்றிய கட்டமைப்பை மாற்றாது அரசாங்கத்தில் மாற்றத்தை உருவாக்குகிறது எனவும் புரட்சிகரக்கட்சி நாடாளுமன்றத்திற்கு செல்வதினால் பெரியளவில் எதையும்  சாதிக்க முடியாது என்றபோதும் அதனை சில தேவைகளுக்காக பயன்படுத்தலாம் முற்றும் முழுதாக புறக்கணிக்கத்தக்க தேவையில்லை என்ற வேறுபட்ட கருத்துக்களையும் முன் வைக்கிறார். மார்க்ஸியம் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தத்துவமுறை என்ற நோக்கில் கிராம்ஷின் கருத்துக்கள் மிகவும் ஆழம் மிகுந்தவை என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை எனலாம். “ஒவ்வொரு நாடும் அதற்கே உரிய மூலச்சிறப்பான வரலாறு, மரபுகள் ஆகியவற்றிற்கு உகந்த வகையில் சோசலிஸத்தை அடைவதற்கான சொந்தப் பாதையை கண்டறிய வேண்டும்” என  மாவோ கூறுகிறார். இதனை ஒத்த கருத்தையே  கிராம்ஷியும் கொண்டிருந்தார். இத்தாலிய நிலைமைகளுக்கு ஏற்ப தொழிலாளர் கவுன்சில்களை உருவாக்கி அதன் மூலம் புரட்சியினை நோக்கி முன்னேறலாம் என்ற கருத்தினை கொண்டிருந்தார். கிராம்ஷியின் சமூகமாற்றம் குறித்த கருத்துக்கள் இன்றைய, நாளைய தலைமுறைகளுக்கு அவசியமானதும் வழிகாட்டலுக்கு இன்றியமையாதவையுமாகும்.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
 வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here