மே 1: உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும்!
மே நாள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்
மே தின வரலாறு[தொகு]தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.