சங்க காலத்தில் மன்னர் ஆட்சி நடந்தேறிக் கொண்டிருந்தது. அவர்கள் மக்களைச் சீரும் சிறப்புமாகப் பேணிக்காத்து நாட்டை அரசாண்டு வந்தனர். நாடு செழித்தது, வளம் பெருகியது, அறம் நாட்டில் நிலைத்தது, மக்கள் இன்புற்றிருந்தனர். நாட்டு மக்கள் மன்னன் புகழ் பாடினர். இன்னும் படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பதையும் செங்கோலையுடைய அரசர்களுக்கு உரியவைகளாக்கினார் தொல்காப்பியர்.
'படையுங் கொடியுங் குடியும் முரசும்
நடைநவில் புரவியும் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய' – (தொல். பொருள். 616)
மேலும; 'நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்!' – (மோசி கீரனார்- புறம் 186) என்ற பாடலும் ஆதாரம் காட்ட எழுந்தது. மன்னன் நாட்டுக்கும், மக்களுக்கும், தனக்கும் ஏற்ற வகையில் சட்ட திட்டங்களை உருவாக்கிச் செங்கோலை நிலைநாட்டினான். இனி, மூதானந்தம், பாலை, தாபத, முதுபாலை நிலைகள் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம்
கணவனோடு சேர்ந்து இறந்தாள் மனைவி. இவ்விறப்பைக் கண்டவர்கள் மற்றையோருக்கு எடுத்துக் கூறினர். இவ்வாறு கணவனும், மனைவியும் சேர்ந்து இறந்ததை 'மூதானந்தம்' என்று கூறுவர். கொடிய பாலை நிலத்தில் தன் கணவனை இழந்து தனித்து நின்று வருந்திய தலைவியின் நிலையை 'முதுபாலை' என்றழைப்பர். தன் ஆருயிர் மனைவியை இழந்து தனித்து நின்று துயர்படும் கணவன் நிலையைத் 'தபுதார' எனக் கூறுவர். காதலன் இறந்த பொழுது அவன் மனைவி உடன்கட்டையேறாது கைம்மை பூண்டு தவம் மேற்கொள்வதைத் 'தாபத' நிலை என்றுரைப்பர். இன்னும் காதலைனை இழந்த மனைவி அவன் சிதையில் விழுந்து இறந்துபட முன்வந்த பொழுது அவளைத் தடுத்து நின்றவர்களோடு மாறுபட்டுக் கூறியதைப் 'பாலை நிலை' என்பர்.
'.... கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதானந் தமும்
நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையும் - (பொருள். 77-22-25)
.. .. காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நளியழல் புகீஇச்
சொல்லிடை இட்ட பாலை நிலையும். ..' – (பொருள். 77- 28-31)
1. மூதானந்தம் - கணவன் இறந்த பொழுதே மனைவியும் உயிர் நீத்தல்.
ஒன்றுபட்ட அன்பினால் ஏற்பட்ட சாக்காடு.
2. பாலை நிலை - கணவன் சிதையில் ஏறி மனைவியும் எரியுண்டு இறத்தல்.
உடன்கட்டையேறும் வழக்கம்.
3. தாபத நிலை - உடன்கட்டையேறாது, பூவிழந்து, பொட்டிழந்து, மங்கல அணியிழந்து,
அறுசுவை உணவு நீக்கி, வெறுந்தரையில் படுத்துறங்கிக் கைம்மை
நோன்புற்று உடலை வருத்தி வாழ்வர்.
4. முதுபாலை - கணவனை இழந்து தனி நின்று புலம்பும் மனைவி.
5. தபுதார நிலை - மனைவியை இழந்து தனித்து நின்று துயருறும் கணவன்.
இதில் முதல் இரு நிலைகளிலும் பெண்கள் தம் உயிரை மாய்த்தலையும், மூன்றாம் நிலையில் அவர்கள் கைம்மை பூண்டு தம்மை வருத்தி வாழ்வதையும், நாலாம் நிலையில் அவர்கள் தனித்திருந்து புலம்புவதையும், ஐந்தாம் நிலையில் மனைவியை இழந்து தனித்திருந்து துயருறும் கணவனையும் காண்கின்றோம்.
மகாபாரதம்
பாண்டு மன்னன் பெண்ணுடன் உறவு கொண்டால் அவன் இறந்துவிடுவான் என்ற சாபத்தை அறிந்திருந்தும் மாத்ரி என்ற அவன் இரண்டாவது மனைவி அவனுடன் உறவு கொண்ட பொழுது பாண்டு மன்னன் இறந்துவிட்டான். மாத்திரியும் பாலை நிலையில் நின்று உடன்கட்டையேறி மடிந்தாள். ஆனால் பாண்டு மன்னனின் குந்திதேவியான முதல் மனைவி தாபத நிலையில் நின்று கைம்மை பூண்டு தன் ஐந்து பிள்ளைகளான தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரை வளர்த்து வந்தாள்.
இராமாயணம்
இராமனுடன் நடந்த போரில் இலங்கை வேந்தன் இராவணன் மாண்டான். அவன் மனைவி மண்டோதரி மூதானந்தம் என்ற நிலையில் நின்று உடன் உயிர் நீத்தாள்.
அயோத்தி மன்னன் தசரதன் இறந்த பொழுது அவன் முத்தேவியர்களாகிய கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியவர்கள் மூதானந்தம், பாலை ஆகிய நிலைகளில் நின்று தம் உயிரைப் போக்காது அரசுடன் ஒட்டிக் கொண்டனர்.
இராமன் மறைந்திருந்து ஏவிய அம்பால் வாலி இறந்துபட்டான். இதை அறிந்த அவன் மனைவி தாரா அழுது புலம்பிப் பாலை நிலையில் நின்று உடன்கட்டையேற வந்தபொழுது அநுமன், இராமன் ஆகியோர் தாராவை உடன்கட்டையேற வேண்டாமென்று கேட்டுக்கொண்ட பொழுது அவள் அதை ஏற்றுத் தன் உயிரைப் போக்காதிருந்தாள்.
புறநானூறு
பெருங்கோப்பெண்டு என்பவர் பூதப்பாண்டியன் தேவியர் ஆவார். பூதப்பாண்டியன் போரில் மாண்டான். 'எமக்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து' எனக் கூறிக் கணவன் இறப்புக்குப் பின் தீப்பாய்தற்கு முற்பட்டாள். 'நின் கணவனுடன் நீயும் சென்று வருக! என்று கூறாது, என்னைத் தடுத்து நிறுத்தும் சான்றோர்களே! வெள்ளரி விதைபோன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளி கூட்டிச் சமைத்த வேளைஇலை ஆகியவற்றை உண்டு, பாயின்றிப் பருக்கைக் கற்கள்மேல் படுத்து, கைம்மை நோற்கும் பெண்டிர் அல்லேம் யாம்! ஈமப் படுக்கை உங்களுக்கு அரிதாகத் தோன்றலாம் என் கணவன் இறந்து பட்டனன். ஆதலால், எமக்கு அத்தீயே தாமரைக் குளத்து நீர்போல இன்பம் தருவதாகும்' என்று கூறிப் பாலை நிலையில் நின்று, சிதையிற் பாய்ந்து எரிந்து கருகி இறந்து விட்டாள் பெருங்கோப்பெண்டு.
'பல்சான் றீரே! புல்சான் றீரே!
செல்லெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்
புரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதேர்
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல் எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும், தீயும் ஓரற்றே!' (பாடல். 246)
தலைவன் தலைவியர் இளமையோடிருந்த முன் காலத்திலே அவர்களை அழகு செய்யும் தழையாக உதவியது சிறுவெள் ஆம்பல். இன்று அந்தத் தலைவன் இறந்து விட்டான். தலைவி தாபத நிலையில் நின்று கைம்மை நோன்பு புரிந்து வாடுகின்றாள். அவள் உண்ணும் காலமும் மாறித் துயரால் வாடுகின்றவளுக்கு, அந்த அல்லியிடத்து உண்டாகும் புல்லரிசியாக உதவுகின்றன.
'அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
இளையம் ஆகத் தழையா யினவே; இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல் ஆயினவே.' – (பாடல். 248)
தலைவனை இழந்து தனித்திருந்து தவிக்கின்றாள் ஒரு தலைவி. அவள் 'ஐயோ! என்று கத்தினால், புலி வந்து உன் உடலையும் இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்று பயப்படுகின்றேன். உன்னை அணைத்துத் தூக்கிக் செல்வோமென்றால், உன் விரிந்த மார்பினைத் தூக்கும் ஆற்றல் எனக்கில்லையே! உன்னை இப்படி ஆக்கியதே அந்தக் கூற்றம்! என்னைப் போலவே அதுவும் பெருந் துன்பம் அடைக! தலைவ! என் முன்கைபற்றி எழுந்து மெல்ல மெல்ல நடப்பாயாக! அந்த மலைநிழலை நோக்கி நாம் செல்வோம்.' என்று முதுபாலை நிலையில் நின்று துயருற்றுப் புலம்பினாள்.
'ஐயோ! எனின்யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே, அகன்மார்பு எடுக்கல்லேன்;
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் - நடத்திசின் சிறிதே!' - (பாடல். 255)
மன்னன் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பானின் மனைவி பெருங்கோப்பெண்டு மாண்டுவிட்டாள். கள்ளி வளர்ந்த காட்டிலே, விறகு அடுக்கிய ஈமத்தின், அழற்பாயலிலே அவளைக் கிடத்தினான் சேரமான் மன்னன். அவளோடு தானும் உயிர் துறக்கவில்லையே என்று மனம் துடித்து உருகி ஊசலாடினான். அவனால் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. பெண்கள் தம் கணவர் இறந்தவிடத்து அவன் சிதையிற் பாய்ந்து உயிர்விடும் தீர்மானத்தை உடன் எடுத்துவிடுவர். ஆனால் ஆண்கள் தம் மனைவியர் இறந்த நிலையிலும;, தம் உயிரைக் காத்து நிற்பர் என்பதும் தெளிவாகின்றது. இதைத் தபுதார நிலை என்பர்.
'யாங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே!' – (245)
சிலப்பதிகாரம்
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தன் அரசி கோப்பெருந்தேவியின் ஊடலால் கோவலன் மேல் சுமத்தப்பட்ட சிலும்பு திருடல் வழக்கைத் தீர ஆராயாது கோவலன் கள்வன் என்று தீர்ப்புக் கூறிக் கொல்லப்பட்டான். ஆனால் கோவலன் மனைவியான கண்ணகி உடன்கட்டையேற முன்வரவில்லை. கோவலன் காதல் மனைவி மாதவி தானும் உடன்கட்டையேறவில்லை.
ஆனால் கண்ணகி தன் ஒரு காற்சிலம்புடன் பாண்டிய மன்னன் அரண்மனை ஏகி, நீதி கேட்டு, தன் சிலம்பை உடைத்துக் காட்டி, கோவலன் கள்வனல்லன் என்று நிரூபித்துக் காட்ட, மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று கூறி விழுந்து உயிர் துறந்தான். மன்னன் உயிர் நீத்தான் என்பதை அறிந்த அரசி கோப்பெருந்தேவி மூதானந்தம் என்ற நிலையில் நின்று தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
'கோப்பெருந் தேவி, குலைந்தனள், நடுங்கிக்,
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்று,
இணைஅடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி!' –(வழக்குரை காதை, 79-81)
கண்ணகி தன் கற்புத் தீயினால் மதுரை மாநகரை அழித்துச் சேரநாடு சென்று தெய்வமாகினாள். தமிழ் நாடெங்கும் அவள் பெயரால் பல கோயில்கள் எழுந்தன. மாதவி தாபத நிலையில் நின்று கைம்மை நோற்றுத் தவம் மேற்கொண்டாள்.
மணிமேகலை
மேற்கூறப்பட்ட மூதானந்தம், பாலை நிலை, தாபத நிலை ஆகிய மூன்று நிலைகளையும் மணிமேகலையிலும் பேசப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். கணவன் இறந்தபொழுது கற்புடை மனைவியின் துயரத்தீயானது மூண்டு, அனல் பெருகி, உள்ளத் துன்பம் அடக்கப்பெறாது உடன் உயிர் துறப்பதை மூதானந்தம் என்பர். அவ்வாறு இறவாராயின் குளிர்ப் பொய்கையில் நீராடுபவர்போலக் கணவன் ஈமத்தீயிற் புகுந்து உயிர் துறப்பர். இதைப் பாலை நிலை என்பர். அவ்வாறும் உயிர் துறவாராயின் தம் இறந்த காதலருடன் மறுமையில் சேர்ந்து வாழும்பொருட்டுக் கைம்மை நோன்புற்று உடலை வருத்துவர். இதைத் தாபத நிலை என்பர். உலகின் கற்புடைத் தமிழ்ப் பெண்டிர் இம்மூவகையில் அடங்குவர்.
'காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகா அர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று, உடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து ...' – (ஊரலர் உரைத்த காதை 42-48)
நிறைவுரை
இதுகாறும், தலைவன் இறந்தபொழுதே தலைவியும் உயிர் துறக்கும் 'மூதானந்தம்' நிலை, மனைவியானவள் தன் கணவன் ஈமச்சிதையில் ஏறித் தானும் உடன்கட்டையேறும் 'பாலை' நிலை, கணவன் இறந்தபொழுது மனைவி உடன்கட்டையேறாது தவம் மேற்கொண்டு கைம்மை நோன்பு நோற்கும் 'தாபத' நிலை, கணவனை இழந்து தனித்து நின்று புலம்பும் மனைவியின் 'முதுபாலை' நிலை, மனைவியை இழந்து தனி நின்று துயருறும் கணவனின் 'தபுதார' நிலை ஆகியவை பற்றி, தொல்காப்பியம், மகாபாரதம், இராமாயணம், புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சங்க இலக்கியங்களிற் பேசப்பட்டுள்ளதை விரிவுபடுத்திப் படித்தோம்.
நம் மகளிர்தான் மூதானந்தம், பாலை, தாபத, முதுபாலை ஆகிய நிலைகளில் நின்று தம் கணவர்களை நினைந்து அவருக்காக இறந்து படுவதும், உடன்கட்டையேறுவதும், கைம்மை நோன்பு நோற்றுத் தம்மை வருத்தி வாழ்வதும், தனித்து நின்று புலம்பிக் கொள்வதும் ஆகிய நால்நிலைகளில் அவர்கள் படும் துன்பத்தை ஆண்கள் உணரவில்லையென்றே தோன்றுகிறது. இவர்கள் இவ்வண்ணம் வாடி மடியும் பொழுது, ஆண்கள் தம் மனைவியர் மாண்டவிடத்து தபுதார நிலையில் நின்று துயருறுவதோடு நின்றுவிடுகின்றனர்.
இவ்வண்ணம் மகளிர் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மாண்டு மடிந்து கொண்டு வருவதை யாரும் கணக்கிலெடுக்காது, அதற்குரிய பரிகாரம் தேடாது, வாளாவிருந்தனரே என்பது விந்தைக்குரியதாகும். ஆனால் நாளடைவில் இம்முறைகளில் சற்றுச் சரிவு ஏற்பட்டு, அருகிய நிலைக்கு வந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இன்றும் இந்தியாவில் கிராமப் பகுதிகளில் கணவன் ஈமத்தீயில் புகுந்து உடன்கட்டையேறுவதையும் காண்கின்றோம்.
இனி, மகளிர் துயர் துடைக்க ஆண்கள்தான் முன்வந்து உதவ வேண்டும். வீணே மடிந்து போகும் மகளிர் வாழ வேண்டியவர்கள். அவர்களுக்கு இயற்கை வழி காட்டுங்கள். செயற்கை வழி ஒரு பலனும் தராது. ஆண் துணையை நம்பி வந்த பெண் வாழுமட்டும் வாழட்டும் நம்மைப்போல். ஆண்கள் ஆகிய நாம் மகளிர்க்கு உதவுகரம் கொடுப்போம். இருவர் வாழ்வியலையும் சிறப்புற்றோங்கச் செய்வோம் இவ்வுலகில்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.