
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வரும் இலக்கியச் சிற்றிதழ் 'கனவு'. விளம்பரங்கள் அற்று வெளியாகும் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'கனவு' இதழின் ஆகஸ்ட் 1991 இதழ் 'இலங்கைச் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது.
இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு எழுத்தாளர் மேமன்கவியின் பங்களிப்பு முக்கியமாக உதவியிருக்கின்றது என்பதை நூலின் உள்ளடக்கம் மூலம் அறிய முடிகின்றது. ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தின் 'கணிதவியலாளன்' சிறுகதை நூலின் முதலாவது ஆக்கமாக அமைந்திருக்கின்றது. எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தனின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. அவ்வப்போது தமிழ் இலக்கியச் சூழலுக்கு எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தை நினைவூட்டி வருபவர் மேமன்கவி. நிச்சயம் இச்சிறுகதையையின் பிரசுரத்துக்கு அவர் காரணமாக இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடிகின்றது. நல்லதொரு தேர்வு.
மேலும் இதழில் வெளியாகியுள்ள முக்கியமான படைப்புகளாகச் சிறுகதை 'தண்டனை' (எஸ்.ஜி.புஞ்சிஹேவாவின் சிங்களச் சிறுகதை , எம்.எச்.எம். ஷம்ஸ்ஸின் மொழிபெயர்ப்பு) , 'இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு' - அந்தனி ஜீவா, 'புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இலக்கிய முயற்சிகள் - க.நவம்', மலையக் கவிதை 'ஐயம் கொள்ளுக' - அல் அஸுமத, 'களனி - 89' - சேகர் (ஜேவிபியினரின் இரண்டாவது புரட்சியின்போது கொன்று களனி கங்கையில் வீசப்பட்ட இளைஞர்களைப் பற்றியது), 'எனது பின்னால் - இ.வசந்தி, 'இலையுதிர் கால நினைவுகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் ("நானொ வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகங்கள் போல்' என்னும் , அடிக்கடி புகலிடத்தமிழர்களின் வாழ்வை விபரிக்க எடுத்துக்காட்டும் கவிஞர் ஜெயபாலனின் புகழ்பெற்ற கவிதை வரியினைக் கொண்ட கவிதை), 'பிணங்களின் மறுபிறப்புத் தத்துவம்' - ராகுலன், 'சாமம்' - பண்ணாமத்துக் கவிராயர், 'அதிகம் அறியப்படாத ஈழத்து நாவல்கள்' - கே.எஸ்.சிவகுமாரன் , 'பெரஜா உரிம' - இப்னு - அசோகம் , 'புகைப்படத்துச் சட்டங்களில்' - இ.வசந்தி & 'ராட்சச பூதம் - மேமன்கவி' ஆகியோரின் கவிதைகள் உள்ளடக்கிய சிறப்பிதழாகக் 'கனவு' வெளியாகியுள்ளது.
இதழ் 'நூலகம்' தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வாசிக்க - https://noolaham.net/project/08/788/788.pdf



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









