ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழி பெயர்ப்பாளராகத் திகழும் எழுத்தாளர் கெக்கிறாவ சுலைஹாவின் அட்டைப் படத்தைத் தாங்கி வெளிவந்திருக்கிறது பூங்காவனத்தின் 17 ஆவது இதழ். ஜுன் மாதம் 26 ஆம் திகதியான சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை நினைவூட்டி, மதுவும் போதைப் பொருள்களும் இன்று மக்கள் மத்தியில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது என்பதையும், மாணவர்கள் மத்தியில் அது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது, அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆசிரியர் தனது ஆசிரியர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார். இதழின் உள்ளே பதுளை பாஹிரா, ஷெல்லிதாசன், எல்.தேனுஷா, எம்.எம். அலி அக்பர், த. ஜெயசீலன், செ. ஞானராசா, வெலிப்பண்ணை அத்தாஸ், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், ஹட்டன் தே. நிரோசனி ஆகியோர்களது மூன்று சிறுகதைகளும் பிரசுரமாகியுள்ளன.
இன்று ஆங்கில மொழிபெயர்ப்புத் துறையில் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பாளராக இருப்பவர்கள் ஒரு சில படைப்பாளிகளே. இதில் கெக்கிறாவ சுலைஹா அத்தகையதொரு சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருகின்றார். நேர்காணலில் அட்டைப் படத்தை அலங்கரிக்கும் படைப்பாளி கெக்கிறாவ ஸுலைஹாவை, ரிம்ஸா முஹம்மத் நேர்கண்டு அவர் மூலமாக அவரைப் பற்றிய பல தகவல்களைத் தந்துள்ளார். உண்மையில் கெக்கிறாவ ஸுலைஹாவைப் பற்றி அறிந்துகொள்ள இந்தத் தகவல்கள் பெரிதும் உதவுகின்றன.
அநுராதபுர மாவட்டத்தில் கெக்கிறாவையில் பிறந்த சுலைஹா, கெக்கிறாவ முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் கண்டி பெண்கள் உயர் கல்லூரியிலும், பேராதனை விஷேட ஆங்கில ஆசிரியர் கல்லூரியிலும் கற்று ஓர் ஆங்கில ஆசிரியையாக தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தார். நிறைய வாசிப்பும், பண்ணாமத்துக் கவிராயரான ஜனாப் எஸ்.எம். பாரூக், மேமன் கவி ஆகியோரின் ஊக்குவிப்புமே இவரது இலக்கியத் தடத்துக்கு வழிவகுத்ததோடு 1989 ஆம் ஆண்டு மல்லிகையில் மொழிபெயர்ப்புக் கவிதையான ஓ...!ஆபிரிக்கா என்ற கவிதையும் வெளிவரக் காரணமாகியது. அன்று முதல் இன்று வரை மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் என்ற இவரது முதலாவது மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுதி பண்ணாமத்துக் கவிராயர் எஸ்.எம். பாரூக் அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 2010 இல் அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு என்ற பெயரில் மொழி பெயர்ப்புக் கட்டுரைத் தொகுதியும், 2011 இல் இந்த நிலம் எனது என்ற பெயரில் மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. இவரது படைப்புக்கள் மல்லிகை உட்பட ஜீவநதி, ஞானம், விடிவெள்ளி, அலைகள் போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
பாடசாலை அதிபராகத் தற்போது கடமையாற்றிக்கொண்டிருக்கும் கெக்கிறாவ ஸுலைஹா மொழிபெயர்ப்புத் துறையில் தனது இலக்கியச் செயற்பாடுகளைச் செய்து வருபவர் என்பதனால் மொழி பெயர்ப்பைப் பற்றிச் சொல்லும் போது இலகு மொழி நடையில் பொருள் சிதையாது ஆங்கிலத்தில் அவர் தருவதை நாம் கொடுத்துவிட்டாலே போதும், நாம் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் தாம். அவர்களது பண்பாட்டுக் கலாச்சார வேறுபாடுகள், அந்தப் பின்னணியில் அவர்களது உணர்வுக் கோலங்கள் போன்றவற்றை அதி தீவிரமான சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தித் தீண்டாமல் வைத்திருப்பதைவிட அவற்றை நமக்குப் புரிந்த வண்ணம் மாற்றங்களுக்கும் புரிய வைக்கின்ற மாதிரி மொழி மாற்றினால் அந்தப் புதுச் சிந்தனைகளுக்கு கௌரவம் கொடுத்ததாக ஆகும். இலக்கணச் சுத்தத்தோடு எழுதும் பண்டிதர்கள் தேவையில்லை நமக்கு. அந்தப் புதுச் சிந்தனையின் வரவு அதைவிட முக்கியமானது என்ற அருமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.
மேலும், பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் என்ற இவரது முதலாவது மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுதியும், இந்த நிலம் எனது என்ற மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுதியும் இலங்கை கலை இலக்கியப் பேரவையின் சான்றிதழ் பெற்றுள்ளது. அத்தோடு வானம்பாடியும் ரோஜாவும் என்ற கவிதைத் தொகுதியும், பூக்களின் கனவுகள் என்ற கவிதைத் தொகுதியும் வெளிவரக் காத்திருக்கிறது என்ற தகவலையும் அறிய முடிகின்றது. இவ்விரு நூல்களுமே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இந்த இதழில் அல்ஹக் காலாண்டு சஞ்சிகை பற்றிய நூல் மதிப்பீட்டை பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரியும், வருமுன் காத்திடு என்ற உருவகக் கதையை மருதூர் ஜமால்தீனும் தந்திருக்கிறார்கள். தொடர்ந்து கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசலில் இஸ்லாமிய இலக்கியச் சிற்றிதழ்களின் தோற்றப்பாட்டின் வளர்ச்சிப் போக்கினை கால வகுப்புக்களோடு பட்டியலிட்டிருக்கிறார். ஆறாம் நூற்றாண்டில் சீனத் தலைநகரான பீஜிங்கில் பிரசுரமான ட்ஸிங் பவோ எனும் அரசாங்கச் செய்தித் தாளே உலகத்தில் முதன் முதலாக வெளிவந்த தினசரியாகும். இது 1835 ஆம் ஆண்டு வரையிலான கால நீட்சியைக் கொண்டு வெளிவந்தது என்ற தகவல்களோடு, 1869 முதல் 1980 வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் வெளியான இஸ்லாமியச் சிற்றிதழ்கள் பற்றிய அரும் தகவல்களைத் தந்திருக்கிறார்.
மேலும், கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து வினா விடைகளைத் தந்து, பழந் தமிழ் இலக்கியங்களைப் பற்றிய பதிவுகளைத் தந்திருக்கிறார். எழுத்தாளர் அறிமுகம் பக்கத்தில் ஹட்டனைச் சேர்ந்த தே. நிரோசனி என்பவரை அறிமுகப்படுத்தி அவரது அன்புத் தாயே என்ற கவிதையையும், ஒரு பெண் தெய்வமாகிறாள் என்ற சிறுகதையையும் பிரசுரித்து இருக்கிறார்கள்.
வழமைபோன்று பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், நூலகப் பூங்காவில் பதினான்கு நூல்களைப் பற்றிய குறிப்புக்களும் தரப்பட்டள்ளன. மொத்தத்தில் வாசிக்கவும், நேசிக்கவும் ஏற்ற இதழாக இவ் இதழ் வெளிவந்திருக்கிறது. ஆசிரியர் குழுவுக்கு எனது பாராட்டுக்கள்!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - pழழபெயஎயயெஅ100ளூபஅயடை.உழஅ
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.