ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960ம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் ரீதியில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும், அழகிய சிறுகதைகள் பலவும், கையெழுத்துப் பிரதியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.[ நன்றி: http://inioru.com/?p=27454 ]
ஆக்காண்டி ஆக்காண்டி
சண்முகம் சிவலிங்கம்
”ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்.
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.
கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.
கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.
கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
வண்டிகள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.
கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.
கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.
நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.
சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.
வீதி சமைத்தேன்.
விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.
ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.
கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.
கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மி யழவில்லை.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு வளர்ந்ததும்
குடல் சுருங்கி நின்றார்கள்.
பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.
கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.
வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.
சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்.
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.
"கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்.
செத்து மடிந்தாரோ?
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆன வரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்.
போனவரைக் காண்கிலனே.
ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.