
1925இல் மாக்சிம் கார்க்கியின் The Artamonov Business (மூன்று தலைமுறைகள்) நாவலானது ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை யோட்டத்தை சித்தரிக்கும் படைப்பாக இருந்தாலும், The Artamonov Business என்பது ஒரு சராசரி குடும்ப வரலாற்றுத் தாங்கிநிற்கும் நாவல் என்பதைத் தாண்டி ரஷ்யாவில் 1860களில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்து 1917 புரட்சி வரையிலான பின்னனியில் ரஷ்ய சமூகத்தவரின் சமூக, பொருளாதார மற்றும் பழக்க வழக்க மாற்றங்களின் வரலாற்றைப் பிரதிபளிப்பதாக அமைந்துள்ளது. இம்மாற்றங்களின் ஆழமான வரலாற்று, சமூகவியல் ஆய்வு என்றே கூறலாம். குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் நடத்தைகளைப் பயன்படுத்தி, முதலாளித்துவத்தின் உருவாக்கம், அதன் உள்ளார்ந்த முரண்பாடுகள், மற்றும் இறுதிச் சிதைவு என்பவற்றை இலக்கிய வடிவில் பிரதிபலிக்கிறார்.
நாவலின் முதல் தலைமுறைத் தலைவர் ஆர்டமோனோவ் குடும்பத்தின் ஆரம்பம், வளர்ச்சி, உச்சம் மற்றும் வீழ்ச்சியின் படிமுறைகள் சமூக அமைப்புகளின் சுழற்சியையும், அவை மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் கடப்பாடுகளையும் கார்க்கி நுண்ணியமாக வெளிப்படுத்துகிறார். முதல்தலைமுறை ஆர்டமோனோவ் தன் முயற்சியையும் உழைப்பையும் நம்பி தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்கின்றார். புதிய உலகின் உருசக்தியாக பொருளாதார உருவாக்கத்தில் அவர் உச்சமுன்னோடியாக விளங்குகிறார். இதனால் Ilya Artamonov விடுதலை வென்ற விவசாயியிலிருந்து தொழிலதிபராக மாறிய “ஆரம்ப முதலாளித்துவ மனிதன்” என்பதன் குறியீடாக நிற்கிறார். அவரது முயற்சி ஆற்றல், உழைப்பு மற்றும் தொழில் முனைவுத் தந்திரோபாயத் திறன் ஒரு புதிய பொருளாதார வர்க்கசக்தியை உருவாக்கினாலும், தொழிற்சாலையின் வளர்ச்சிநிலைகள் வெறும் பொருளாதார உச்சத்தில் மட்டும் தாக்கஞ் செலுத்தவில்லை. அவர் உருவாக்கிய தொழிற்சாலை வர்க்க முரண்பாடுகளையும் சமூகப் பிரிவினைகளையும்; விதைக்கிறது. மனித உணர்வுகளின் உறவுகளையும் வாழ்க்கைச் செல்வாக்கு மதிப்புகளையும் மெதுமெதுவாக மாற்றத் தொடங்கியது. தொழிற்சாலையின் அதி விரிவாக்கம், சொந்த குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து, பின் உறவு;களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளே அவ்வுறவுகளைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக உருபெற்றது.
இரண்டாம் தலைமுறையில் Peter Artamonov தன் தந்தையின் படைப்பாற்றல் தந்திர சக்தியைத் தொடர முடியாமல், தொழிலையும் கடமைகளையும் ஒரு உயிரற்ற கருவியாக மட்டுமே காண்கிறார். தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பொறுப்புகள் அவரது வாழ்க்கையின் மையமாக மாறுகின்றன. இதனால், பியோதரின் வாழ்க்கை உளவியல் மாற்றத்தின் விளைவுகளை வெளிப்படுத்துகிறது. அதன் விளைவாக தனிப்பட்ட உணர்வுகள், குடும்ப உறவுகள்; மற்றும் மனிதநேயம் என்பன தீக்கிரையாகின. மனைவி, பிள்ளைகள் மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரங்களிடமிருந்து படிப்படியாக தொலைந்துச் செல்கிறார்.
இதன் மூலம் முதலாளித்துவத்தின் ஆரம்ப உற்பத்திசார் வெற்றி உற்சாகம் பின்னர் எவ்வாறு வெறுமை ,ஆன்மீக மற்றும் அந்நியப்படுத்தலாக (alienation) மாறுகிறது என்பதை வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி சுமை மனித வாழ்வில் எவ்வாறு தனிமையை உருவாக்குகிறது என்பதை கார்க்கி உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கிறார். உழைப்பின் பயனை அனுபவிப்பதற்குப் பதிலாக, அதனால் உருவாக்கப்பட்ட அமைப்பின் ஒரு எறும்பாக மாறிவிடும் நிலை இங்கு தெளிவாக வெளிப்படுகிறது.
தொழிலாளர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் இடையிலான உறவும் முக்கியமானதாகும். அதிகப்படியான வெளிப்படை மோதல்கள்; காணப்படாவிட்டாலும், அதிகாரம் மற்றும் கீழ்ப்படிதல் அந்த உறவின் அடிப்படை நிகழ்வாகும். தொழிலாளர்கள் உரிமையாளர்களை மதித்து மண்டியிடுவது போல் தோன்றினாலும், அது சமூக அடுக்குநிலை அமைப்புகள் உருவாக்கிய ஒப்புதலின் விளைவுகளேயாகும். சமூகத்தில் அதிகாரம் எவ்வாறு இயல்பாக்கப்படுகிறது என்பதையும் கார்க்கி எடுத்துக்காட்டுகிறார். பொருளாதார சக்தி மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமான பண்பாட்டு கட்டுப்பாடுகளும் சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதையும் நாவல் உணர்த்துகிறது.
மூன்றாம் தலைமுறை, Ilya மற்றும் Yakov போன்ற தலைமுறை கதாபாத்திரங்கள் தோன்றும் போது, இந்த ஆதிக்க அமைப்புகளின் மீதும் முதல் இரண்டு தலைமுறைகள் மீதும் கேள்விகள் எழத் தொடங்குகின்றன. காரணம், இவர்கள் புதிய அரசியல் சிந்தனைகள், கருத்துக்கள், சமூக மாற்றங்கள் மற்றும் புரட்சிகர உணர்வுகளால் ஈர்க்கப்படுகின்றனர். இளம் நவீன தலைமுறையினர் தொழிற்சாலையை வெறுமனே குடும்பச் சொத்தாக மட்டும் மதிக்காமல், அதனை சமூக விளைவுகளின் காரணக்காரிய அடிப்படையிலும் அணுகுக முற்படுகின்றனர். அவர்களின் கருத்துருவாக்கங்கள், சிந்தனைகள், சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்புகள், கேள்விகள் என்பன புதிய சமூக மாற்றங்கள் தோன்ற அறிகுறிகளாகின. இதனால் ஒவ்வொரு சமூக அமைப்பும் தன்னுள் புதிய புரட்சி மாற்றத்திற்கான வித்துக்களைத் தாங்கி ஏற்கிறது என்ற கருத்து வெளிப்படுகிறது. இதனால் குடும்பத்தின் பொருளாதார அடித்தளம் மட்டுமல்ல, அதன் கலாச்சார மற்றும் நெறிமுறை அடையாளங்களும் சிதைகின்றன. ஆர்டமோனோவ் குடும்பத்தின் சிக்கலான முடிச்சிகள் குடும்பத்தின் தனிப்பட்ட வீழ்ச்சியல்ல. மாறாக ஒரு சமூக அமைப்பின் வரலாற்று வரம்புகளின் வெளிப்பாடாகக் காணப்படுகிறது.
நாவலின் இறுதியில் தொழிற்சாலை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது ஒரு குடும்பத்தின் உச்சக்கட்ட வீழ்ச்சி மட்டுமன்றி, அது முழு முதலாளித்துவ சமூக அமைப்பின் வரலாற்றுத் கட்டவிழ்ப்புத் தீர்ப்பாகச் சித்தரிக்கப்படுகிறது. எனவே, இதை ஒரு குடும்பக் கதை வாசிப்பு என்பதைத் தாண்டி ஆண்டான் அடிமை உருவாக்கம், சமூக மாற்றம், வரலாற்று இயக்கவியல் மற்றும் மனித உளவியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மகத்தான சமூக வரலாறாக ; புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இந்நாவலின் மற்றொரு சிறப்பம்சம் அதன் குறியீட்டு அமைப்பாகும். தொழிற்சாலை, கொதிகலன், ஆறு, மண் மற்றும் கரடி போன்ற கூறுகள் வெறும் காட்சிப் பொருட்களாக அல்லாமல் ஆழமான அர்த்தங்களைத் தாங்குகின்றன.
குறிப்பாக கரடியின் உருவகம் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் மனிதர்களுடன் இணக்கமாக வாழும் கரடி, பின்னர் கட்டுப்பாடற்ற சக்தியாக மாறுகிறது. இது மனித முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட பொருளாதார அமைப்புகள் கட்டுப்பாடின்றி வளரும்போது சமூகத்தையே அச்சுறுத்தும் சக்திகளாக மாறக்கூடும் என்ற கருத்தை நினைவூட்டுகிறது. இவ்வாறு கார்க்கி குறியீடுகளின் வழியாக சமூக மாற்றத்தின் பல்வேறு பரிமாணங்களை வாசகருக்கு உணர்த்துகிறார்.
எனவே மூன்று தலைமுறைகள் நாவல் ஒரு குடும்ப வரலாற்றை மட்டுமே விவரிக்கும் படைப்பாகப் பார்க்க முடியாது. தொழில்மயமாக்கல், வர்க்க உறவுகள், அதிகார அமைப்புகள், மனித அந்நியமாதல் மற்றும் சமூக மாற்றம் போன்ற சிக்கலான விடயங்களை ஆராயும் சமூக-வரலாற்று நாவலாக அது விளங்குகிறது. மனித முன்னேற்றத்தின் பெயரில் உருவாகும் பொருளாதார அமைப்புகள் மனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகின்றன என்பதைக் கேள்விக்குள்ளாக்கும் படைப்பாகவும் இது அமைகிறது. இதன் காரணமாகவே The Artamonov Business நாவல் ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் கதை என்பதைத் தாண்டி, சமூக மாற்றத்தின் இயல்பைப் பற்றிய ஆழமான சிந்தனையைத் தூண்டும் முக்கிய இலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.
கார்க்கியின் படைப்பாக்க பின்னனியும் நோக்கமும்
கார்க்கி, ரஷ்ய சமூகத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து முதலாளித்துவ சமூக அமைப்பிற்கான மாற்றத்தை அனுபவ அலையுடன் சித்தரிக்கும் சமூக வரலாற்று நாவலாகவும் விளங்குகிறது. தொழில்மயமாக்கல் மற்றும் முதலாளித்துவ வளர்ச்சிவேகம் மனித வாழ்வில் ஏற்படுத்திய சிதைவுகளை ஆராய்வதே இந்நாவலின் மைய நோக்கமாகும். ஆர்டமோனோவ் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் அனுபவங்களின் வழியாக செல்வம், அதிகாரம், தொழில் வளர்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சி மற்றும் சமூக மாற்றத்தின் முரண்பாடுகள் ஆகியவற்றை கார்க்கி வெளிப்படுத்துகிறார். பொருளாதார முன்னேற்றம் மனித வாழ்விற்கு நன்மைகளை அளித்தாலும், அதே நேரத்தில் மனிதனை அவனது சமூக வேர்களிலிருந்தும் மனிதநேய உணர்வுகளிலிருந்தும் விலக்கிவிடும் அபாயத்தையும் இந்நாவல் சுட்டிக்காட்டுகிறது.
ரஷ்யப் புரட்சி உலகெங்குமுள்ள கலைஞர்களின் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கம், ரஷ்ய தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய துணிச்சலான செயல், இரத்தம் சிந்திய உள்நாட்டுப் போரின் மூலம் பிற்போக்குவாத சக்திகளை வென்ற மக்களின் வெற்றி, மேலும் மனிதகுலம் உயர்ந்த மற்றும் முற்போக்கான சமூக ஒழுங்கை நோக்கி முன்னேறுகிறது என்ற நம்பிக்கை இவையனைத்தும் கலை வாழ்க்கைக்கு புதிய உயிர் ஊட்டின. புதிய கண்ணோட்டங்களைத் திறந்து, பரந்த கலாச்சார எழுச்சியை உருவாக்கின. குறிப்பாக 1920களின் சோவியத் இலக்கிய உலகில் இது மிகத் தெளிவாகக் காணப்பட்டது.
இந்தப் புரட்சியின் தாக்கம் புதிய தொழிலாளர் அரசின் இளம் எழுத்தாளர்களிடம் மட்டுமல்ல, புரட்சிக்கு முந்தைய காலத்தின் சிறந்த இலக்கிய பிரதிநிதிகளிடமும் உணரப்பட்டது. அவர்களில் மிக முக்கியமானவர் மாக்சிம் கார்க்கி. அவரது The Artamonov Business (1925) என்ற நாவல், அவரது மிகச் சிறந்த படைப்பாக மட்டுமல்லாமல், 19ஆம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் கடைசி உயிர்வாழ்ந்த மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான கார்க்கி, 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் மற்றும் வெடிப்பான நிகழ்வான போல்விக் புரட்சியை கலைரீதியாகப் புரிந்துகொள்ள மேற்கொண்ட முதல் முக்கியமான முயற்சியாகவும் விளங்குகிறது.
இந்தக் கதை, 1861ஆம் ஆண்டு அடிமைத்தன ஒழிப்பு சட்டத்தால் விடுதலை பெற்ற ஆர்டமோனோவ் குடும்பத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவர்கள் எவ்வாறு விரைவில் செல்வந்த ஜவுளித் தொழிற்சாலை உரிமையாளர்களாக மாறினர் என்பதையும், இறுதியில் 1917ஆம் ஆண்டு புரட்சிகர தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையை கைப்பற்றுவதையும் விவரிக்கிறது. இவ்வாறு, அக்டோபர் புரட்சிக்கு முன்பான அரை நூற்றாண்டு காலத்தின் சமூக மாற்றங்களும் அரசியல் கலக்கங்களும் நாவலின் பின்னணியாக அமைகின்றன. ஆரம்பத்தில் இல்யா தனது தொழிலாளர்களுடன் நட்பாக பழகுகிறார். அவர்களும் அவரை தங்களுள் ஒருவராகவே பார்க்கிறார்கள். ஆனால் தொழிற்சாலை வளர வளர, முதலாளி மற்றும் தொழிலாளி என்ற வேறுபாடு தெளிவாக உருவாகிறது. தொடக்ககாலத்தின் படைப்பாற்றல் நிறைந்த நம்பிக்கை திடீரென முடிவுக்கு வருகிறது. தொழிற்சாலையின் முதல் நீராவி இயந்திரத்தை கொண்டு வரும் வேளையில் இல்யா திடீரென இறந்து விடுகிறார். அதன் பின்னர் குடும்பத்தின் மெதுவான வீழ்ச்சி தொடங்குகிறது.
இல்யாவிடம் இருந்த அன்பும் வலிமையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படவில்லை. இளமையில் நம்பிக்கையூட்டியிருந்த அந்த இளைஞர்கள், காலப்போக்கில் மரியாதைக்குரிய நடுத்தர வர்க்க முதலாளிகளாக மாறுவதைக் காண்கிறோம். நாவலின் இறுதிப் பகுதியில் புரட்சியின் நிழல் ஆர்டமோனோவ் குடும்பத்தைச் சூழத் தொடங்குகிறது. அலெக்ஸியும் அவரது மகன் மிரோனும் தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக தீவிரமடைந்து வருவதை கவலையுடன் கவனிக்கிறார்கள். மிரோன், ரஷ்ய தாராளவாத முதலாளித்துவத்தின் அரசியல் கட்சியான காடெட்ஸ் (ஊயனநவள) கட்சியுடன் தொடர்புடைய இளம் அரசியல்வாதி.
தொழிலாளர்கள் இரகசியக் கூட்டங்களை நடத்துகிறார்கள். உளவாளிகள் தொழிற்சாலைக்குள் அனுப்பப்படுகிறார்கள். 1905ஆம் ஆண்டு புரட்சியும் அதன் தோல்வியும் அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. செய்தித்தாள்கள் அறிவிக்கும் ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும் குடும்பம் பதற்றத்துடன் பின்தொடர்கிறது. பின்னர் முதல் உலகப் போர் தொடங்குகிறது. தொழிற்சாலையின் தொழிலாளர்கள் போர்முனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் காயங்களுடனும் கோபத்துடனும் திரும்பி வருகிறார்கள்.
இறுதியாக 1917ஆம் ஆண்டு வருகிறது. அது ஆர்டமோனோவ் குடும்பத்தின் முழுமையான சிதைவைக் கொண்டு வருகிறது. மனச்சிதைவு காரணமாக ஏற்கனவே நிஜத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்த பியோடர், தொழிலாளர்கள் தொழிற்சாலையைக் கைப்பற்றி, தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றியிருப்பதைக் கூட முழுமையாக உணர முடியாத நிலையில் இருக்கிறார்.
இது கார்க்கியின் இதுவரை மிகப் பெரிய இலக்கிய முயற்சியாக இருந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை உள்ளடக்கிய இந்தப் படைப்பு, ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரங்களையும் வரலாற்றின் பேரலைகளையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கிறது. உணர்ச்சிவயப்பட்ட மனித வாழ்க்கையும் சமூக மாற்றங்களும் எவ்வாறு ஒன்றை ஒன்று பாதிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
நாவலின் தொடக்கத்தில் காணப்படும் உற்சாகம், படிப்படியாக இருண்ட வீழ்ச்சியாக மாறுகிறது. கதையின் உள் தர்க்கம் அனைத்தையும் தவிர்க்க முடியாத முடிவை நோக்கி தள்ளிச் செல்கிறது. காலப்போக்கு, வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வர்க்க முரண்பாடுகள் மனிதர்களை எவ்வாறு மாற்றுகின்றன, சிதைக்கின்றன என்பதை ஒவ்வொரு பாத்திரமும் வெளிப்படுத்துகிறது. அதே சமயம், சமுதாயத்தின் பெரிய கட்டமைப்பிலும் ஆழமான மாற்றங்கள் நிகழ்கின்றன.
1861 முதல் 1917 வரை ரஷ்ய சமூகம் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொண்டது. பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரஷ்யா, உலக முதலாளித்துவத்தின் சுழலில் தள்ளப்பட்டது. இதன் விளைவாக சமூகப் பிளவுகளும் முரண்பாடுகளும் தீவிரமடைந்தன.
அடிமைத்தன ஒழிப்பு சட்டம் விவசாயிகளை சட்டரீதியாக விடுதலை செய்தாலும், பொருளாதார ரீதியாக அவர்கள் இன்னும் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவே இருந்தனர். இதன் மூலம் செல்வந்த விவசாயிகள் என்ற புதிய அடுக்கு உருவானது. அவர்களில் பலர் தொழில்துறைக்குள் நுழைந்து முதலாளிகளாக மாறினர்.
இதே காலத்தில் கனரகத் தொழில்கள், இரயில்வேக்கள், சுரங்கங்கள், ஜவுளித் தொழிற்சாலைகள் வேகமாக வளர்ந்தன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் இதற்கு ஆதாரமாக இருந்தன. ஒரு புறம் மேம்பட்ட தொழில்நுட்பம் வளர்ந்தது மறுபுறம் அரைநிலப்பிரபுத்துவ அமைப்பு தொடர்ந்தது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்த விவசாயிகள் புதிய தொழிலாளர் வர்க்கமாக உருவாகினர். அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வறுமை மோசமடைந்தது. பலவீனமான ரஷ்ய முதலாளித்துவம், சார் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்த முடியாமல், தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக நிலப்பிரபுக்களுடன் கூட்டணி அமைத்தது.
இந்த அனைத்து சமூக இயக்கங்களுக்கும் நாவலில் வலுவான கலை வடிவம் வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய சமூகத்தில் நடைபெற்ற பெரிய மாற்றங்களின் ஒரு சிறிய பிரதிபலிப்பாக (microcosm) சித்தரிக்கப்படுகிறது. இந்த வகையில், கார்க்கி ரஷ்ய யதார்த்தவாத (Realist) இலக்கியத்தின் செழுமையான பாரம்பரியத்தைத் தொடர்கிறார். புஷ்கின், கோகோல், தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்ற மகத்தான எழுத்தாளர்களின் மரபை எடுத்துக்கொண்டு, 20ஆம் நூற்றாண்டின் புதிய சமூகக் கலக்கங்களைப் புரிந்துகொள்ள அதைப் பயன்படுத்துகிறார். 19ஆம் நூற்றாண்டின் மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்கள், ஐரோப்பிய எழுத்தாளர்களைவிடக் கூட அதிகமாக, சமூக யதார்த்தத்தை அஞ்சாமல் ஆராய்ந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த சமூகத்தின் உண்மைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதிலிருந்து கலை உண்மைகளை வடித்தெடுத்தனர். இந்த விமர்சனப்பூர்வமான அணுகுமுறை, சாதாரண மக்களிடமும் குறிப்பாக முன்னேறிய தொழிலாளர்களிடமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசின் ஒடுக்குமுறையைப் புரிந்துகொள்ள அது உதவியது.
இதைப் பற்றி புரட்சிகர மார்க்சிய சிந்தனையாளரான ரோசா லக்சம்பர்க் கூறியதாவது:
“ரஷ்ய இலக்கியம் ரஷ்ய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பிலிருந்தும், போராட்ட உணர்விலிருந்தும் பிறந்தது. இதுவே அதன் ஆழத்தையும், தனித்துவத்தையும், கலை வடிவத்தின் செறிவையும் விளக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் சமூக சக்தியை விளக்குகிறது. வேறு எந்த நாட்டிலும், வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு, சார் ஆட்சியின் கீழ் ரஷ்ய இலக்கியம் பொதுவாழ்க்கையில் ஒரு சக்தியாக மாறியது. இறுதியில் மக்கள் தாமே வரலாற்றின் பொருள் சக்தியாக எழுந்தபோது, அந்த இலக்கியம் தனது பணியை அவர்களிடம் ஒப்படைத்தது. அப்போது வார்த்தை சதையாக மாறியது."
இந்த நாவல் கார்க்கியின் இலக்கிய பாணியிலும் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அவரது முந்தைய படைப்புகள் ஓரளவு ரொமான்டிக் தன்மை கொண்டவையாகவும், பாத்திரங்களை உயர்த்திப் புகழ்பவையாகவும் இருந்தன. ஆனால், அவர் மேலும் முதிர்ந்த யதார்த்தவாதத்தை நோக்கி நகர்கிறார். மனித மனத்தின் சிக்கல்களையும், அவை சமூகப் புரட்சிகளுடன் கொண்டுள்ள உறவையும் ஆராய்கிறார்.
நாவலின் பல்வேறு பாத்திரங்கள், மனித வாழ்க்கையின் பன்முகத்தன்மையின் மீது கார்க்கிக்கு இருந்த ஈர்ப்பை வெளிப்படுத்துகின்றன. டிக்கன்ஸ் அல்லது பால்ஸாக் போல, எண்ணற்ற மனித வகைகளை உயிரோட்டத்துடன் உருவாக்கும் திறன் அவரிடம் இருந்தது.
முக்கியமல்லாத பாத்திரங்கள்கூட மறக்க முடியாதவர்களாக உருவாக்கப்படுகின்றனர்:
பாடல்கள் பாடும் தச்சரான செரஃபிம்,
கடுமையான போல்n~விக் தொழிலாளரான ஜகார் மொரோசோவ்,
தொழிற்சாலை ஆண்களுடன் பல உறவுகளைக் கொண்ட ஜினாய்டா,
மேலும் குடும்பத்தின் துயரங்களுக்கு ஒரு அமைதியான சாட்சியாக நிற்கும் விவசாயக் காவலாளி திகோன் வியாலோவ்.
இந்த நாவலின் மிகப் பெரிய பலங்களில் ஒன்று, ரஷ்ய மாகாண வாழ்க்கையின் குறுகிய மனப்பான்மை, ஆன்மீக வறுமை மற்றும் சலிப்பூட்டும் தன்மையை வெளிப்படுத்தும் விதமாகும். கார்க்கி இதை தனது சொந்த அனுபவத்திலிருந்து நன்கு அறிந்திருந்தார். ட்ரோமோவ் நகரத்தின் மந்தமான சூழல், அதன் சுயநலவாத நடுத்தர வர்க்க மக்கள், அவர்களின் வெறுமையான வாழ்க்கை ஆகியவை மிகவும் உண்மையாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில், இந்த நாவல் ரஷ்ய இலக்கியத்தில் "போஷ்லோஸ்ட்" (poshlost) எனப்படும் தன்னிறைவு கொண்ட சாதாரண நடுத்தர வர்க்க அற்பத்தனத்தை விமர்சிக்கும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
ஆனால் ஆர்டமோனோவ் குடும்பம் வெறும் பேராசை கொண்ட முதலாளிகளாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை. அவர்கள் உயிரோட்டமுள்ள மனிதர்கள். முரண்பாடுகளும் உள்ளார்ந்த போராட்டங்களும் நிறைந்தவர்கள்.
குறிப்பாக பியோடரின் மனப்போராட்டங்களை விவரிக்கும் பகுதிகள் டால்ஸ்டாயின் உளவியல் யதார்த்தவாதத்தை நினைவூட்டுகின்றன நாவலின் மிகவும் சக்திவாய்ந்த காட்சிகளில் ஒன்று, பியோடர் தனது மகன் இல்யாவை ஆற்றங்கரையில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது சந்திப்பதாகும். தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தந்தை வேண்டுகிறார். ஆனால் மகன் மறுக்கிறான். வாக்குவாதம் தீவிரமடைகிறது. அப்போது இளம் மாணவன் அருகில் உள்ள தொழிலாளர்களின் கல்லறையைக் காட்டி:
"அங்கே பாருங்கள்! உங்கள் தொழிற்சாலை கொன்றுவிட்ட மக்களால் நிரம்பிய ஒரு முழு கல்லறை இருக்கிறது!" என்று கத்துகிறான்.
அதிர்ச்சியடைந்த பியோடர் அங்கிருந்து வெளியேறுகிறார். பின்னர் தான், தனது வாழ்க்கையின் அர்த்தமாகக் கருதிய மகனை இழந்துவிட்டதை உணரத் தொடங்குகிறார். ஆற்றின் அமைதியான ஓட்டம் அவரது கோபத்தை மெதுவாக கழுவிச் சென்றது. மங்கலான அமைதி அவரது உள்ளத்தில் ஒரு விசித்திரமான அதிர்ச்சியை உருவாக்கியது. இருபது ஆண்டுகளாக அவர் நேசித்த மகன், சில நிமிடங்களிலேயே அவரது இதயத்திலிருந்து மறைந்துவிட்டான். அன்பின் இடத்தில் காயமடைந்த கோபம் மட்டுமே மீதமிருந்தது. இத்தனை ஆண்டுகளாக அவர் வாழ்ந்ததே மகனைப் பற்றிய நம்பிக்கையில்தான் என்பதை அவர் உணர்ந்தார். ஒரு தீக்குச்சியைப் போல அது திடீரென எரிந்து அணைந்துவிட்டது. என்ன நடந்தது?" இந்த வகையான உளவியல் ஆழம் நாவலுக்கு மிகுந்த கலை வலிமையை அளிக்கிறது.
தொழிலாளர் வர்க்கப் பின்னணி, ரஷ்ய இலக்கியத்திற்கு புதிய குரலை வழங்கியது. அதே காலத்தில் டால்ஸ்டாய், செகாவ் போன்ற எழுத்தாளர்கள் பெரும்பாலும் உயர்குடியினரையும் விவசாயிகளையும் சித்தரித்த நிலையில், கார்க்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இலக்கியத்தின் மையத்திற்குக் கொண்டு வந்தார். கார்க்கி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற தீவிரமான விருப்பத்தால் இயக்கப்பட்டார். அவர் கூறியதாவது:
“அந்த உண்மையை அதன் வேர்கள்வரை அறிய வேண்டும். அப்போதுதான் அதை வேரோடு பிடுங்கி மனிதனின் நினைவிலிருந்தும், ஆன்மாவிலிருந்தும், நமது அவமானகரமான வாழ்க்கையிலிருந்தும் முழுமையாக அழிக்க முடியும்." எனவே, சமூக மாற்றத்தின் வரலாற்று இயக்கத்தையும் அதன் மனித விளைவுகளையும் இலக்கிய வடிவில் பதிவு செய்வதே கார்க்கியின் படைப்பாக்க நோக்கமாகக் கருதலாம்.
அந்நியமாதல்
மாக்சிம் கார்க்கியின் அந்நியமாதல் என்ற கோணத்தில் வாசிக்கும்போது, அது வெறும் தொழிலாளர்களின் சுரண்டல் வரலாறாக மட்டுமே தோன்றுவதில்லை. மாறாக, ஒரு குடும்பத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் வழியாக மனிதன் எவ்வாறு தன்னிடமிருந்தும், தனது உழைப்பிலிருந்தும், குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் விலகிச் செல்கிறான் என்பதை ஆழமாகப் பதிவு செய்யும் சமூக ஆவணமாக வெளிப்படுகிறது. இந்த அந்நியமாதல் தொழிலாளர்களிடம் மட்டுமல்ல, முதலாளி வர்க்கத்தினரிடமும் நிகழ்கிறது என்பதுதான் நாவலின் தனித்துவமாகும்.
நாவலின் தொடக்கத்தில் இல்யா ஆர்டமோனோவ் உயிர்த்துடிப்பும் நம்பிக்கையும் நிறைந்த மனிதராகக் காணப்படுகிறார். தொழிற்சாலையை உருவாக்குவது அவரது வாழ்வின் கனவாகவும் உழைப்பின் வெளிப்பாடாகவும் உள்ளது. தொழிலாளர்களையும் அவர் தன்னுடன் இணைந்தவர்களாகவே கருதுகிறார். ஆனால் தொழிற்சாலை வளர்ச்சியடையத் தொடங்கியபோது மனித உறவுகளை விட உற்பத்தியும் இலாபமும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதன் விளைவாக முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே தெரியாத ஒரு சுவர் உருவாகிறது. ஆரம்பத்தில் ஒரே சமூக அனுபவத்தைப் பகிர்ந்தவர்கள் பின்னர் இரு வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாக மாறுகின்றனர். இதுவே அந்நியமாதலின் முதல் நிலையாக நாவலில் வெளிப்படுகிறது.
இல்யாவின் மரணத்திற்குப் பிறகு இந்த அந்நியமாதல் மேலும் தீவிரமடைகிறது. அவரது மகன் பியோடர் தொழிற்சாலையின் உரிமையாளராக இருந்தாலும், அந்த வாழ்க்கையுடன் உள்ளார்ந்த தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. தொழிற்சாலையை நிர்வகித்தாலும், அவரது மனம் விவசாய வாழ்க்கையையே தேடுகிறது. அவர் வாழும் வாழ்க்கைக்கும் அவர் விரும்பும் வாழ்க்கைக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிறது. இந்த முரண்பாடே அவரை மனரீதியாக சிதைக்கிறது. இறுதியில் அவர் தனது குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அந்நியமாகிப் போகிறார். இங்கு அந்நியமாதல் என்பது பொருளாதார உறவின் விளைவு மட்டுமல்ல் அது மனிதனின் இருப்பையே சிதைக்கும் உளவியல் அனுபவமாக மாறுகிறது.
குடும்ப உறவுகளிலும் இந்த அந்நியமாதல் தெளிவாகக் காணப்படுகிறது. ஆர்டமோனோவ் குடும்பத்தில் அன்பும் புரிதலும் படிப்படியாக மறைந்து, அதன் இடத்தை சொத்து மற்றும் அதிகாரம் பிடித்துக்கொள்கின்றன. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருடன் ஒருவர் வாழ்ந்தாலும், உணர்வுபூர்வமாக இணைந்திருக்க முடியவில்லை. குறிப்பாக பியோடருக்கும் அவரது மகன் இல்யாவுக்கும் இடையிலான உறவு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. தந்தை தனது மகனை தொழிற்சாலையின் வாரிசாகப் பார்க்கிறார். ஆனால் மகன் சமூக மாற்றத்தின் பிரதிநிதியாக தன்னை உணர்கிறான். ஒரே குடும்பத்தில் வாழ்ந்தாலும், அவர்கள் இருவரும் இரண்டு வேறு வரலாற்று உலகங்களைச் சேர்ந்தவர்களாக மாறிவிடுகின்றனர். இதனால் குடும்பமே அந்நியமாதலின் இடமாக மாறுகிறது.
மனித அந்நியமாதல் (Alienation) என்பது மார்க்சிய சிந்தனையில் முக்கியமான ஒரு கருத்தாகும். மனிதன் தன்னுடைய உழைப்பு, சமூக உறவுகள் மற்றும் தனது உண்மையான மனித இயல்பிலிருந்து படிப்படியாக விலகிச் செல்லும் நிலையே அந்நியமாதல் எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஜோதிகுமார் தனது கட்டுரையில் இந்தக் கருத்தை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், அவர் நாவலை வாசிக்கும் விதத்தில் மனித அந்நியமாதலின் பல அடுக்குகளை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக தொழிற்சாலை வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் மனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகின்றன என்பதை ஆராயும் போது, மனிதன் தானே உருவாக்கிய அமைப்புகளின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கிக்கொள்வதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆரம்பத்தில் மனிதனின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தொழிற்சாலை, பின்னர் மனித வாழ்க்கையின் மையமாக மாறுகிறது. இதனால் மனித உறவுகள், குடும்ப பிணைப்புகள் மற்றும் தனிப்பட்ட உணர்வுகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
பியோதர் ஆர்டமோனோவின் வாழ்க்கை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. தொழிற்சாலையின் வளர்ச்சியும் நிர்வாகப் பொறுப்புகளும் அவரது வாழ்வின் பிரதான நோக்கமாக மாறுகின்றன. அதன் விளைவாக அவர் குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும், இறுதியில் தன்னிடமிருந்தும் விலகிச் செல்கிறார். அவர் வாழ்வதை விட நிர்வகிக்கத் தொடங்குகிறார்; உணர்வதை விட கணக்கிடத் தொடங்குகிறார். இவ்வாறு மனிதன் தனது மனிதத் தன்மையை இழந்து ஒரு பொருளாதார அமைப்பின் கருவியாக மாறும் நிலையே அந்நியமாதலின் ஆழமான வடிவமாகும். ஜோதிகுமார் இந்த நிலையை தனிநபரின் உளவியல் பிரச்சினையாக அல்லாமல், சமூக அமைப்பின் விளைவாகப் புரிந்துகொள்கிறார். எனவே, அவரது கட்டுரையில் மனித அந்நியமாதல் என்பது தனிமனிதனின் தோல்வியல்ல மாறாக, பொருளாதார முன்னேற்றம் மனித வாழ்வின் அர்த்தத்தையே மாற்றியமைக்கும் சமூகச் செயல்முறையின் வெளிப்பாடாகக் காணப்படுகிறது.
ஆர்டமோனோவ் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையை விவரிக்கும் போது, அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை மையப்படுத்தாமல், அவர்களை இயக்கும் பொருளாதார மற்றும் சமூக சக்திகளை முன்னிறுத்துகிறார். தொழிற்சாலை வளர்ச்சி, முதலாளித்துவ வாழ்க்கை முறை, அதிகாரத்தின் குவிப்பு, மனித உறவுகளின் சிதைவு மற்றும் மனிதனின் அந்நியமாதல் போன்ற அம்சங்களை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இவை அனைத்தும் மார்க்சிய இலக்கிய விமர்சனத்தின் முக்கியக் கவலைகளாகக் கருதப்படுகின்றன. மேலும், நாவலில் வரலாற்றிலிருந்து அந்நியமாதல் என்ற பரிமாணமும் முக்கியமானதாக உள்ளது. ஆர்டமோனோவ் குடும்பம் சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் கடந்தகாலத்தில் சிக்கிக்கொள்கிறது. அதே சமயம் தொழிலாளர் வர்க்கம் புதிய அரசியல் விழிப்புணர்வுடன் முன்னேறுகிறது. வரலாறு ஒரு புதிய திசையில் நகர்ந்துகொண்டிருக்கும்போது, குடும்ப உறுப்பினர்கள் அதை உணர முடியாதவர்களாக இருக்கின்றனர். இறுதியில் 1917 புரட்சி வெடிக்கும்போது, அவர்கள் வரலாற்றின் மையத்தில் இருப்பவர்களாக அல்லாமல், அதன் விளிம்பில் தள்ளப்பட்டவர்களாகத் தோன்றுகின்றனர்.
எனவே, நாவலில் அந்நியமாதல் என்பது தொழிலாளியின் அனுபவமாக மட்டும் இல்லாமல், முழு முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடியாக வெளிப்படுகிறது. மனிதன் உருவாக்கிய பொருளாதார அமைப்பே பின்னர் மனிதனை ஆட்கொண்டு, அவனை தனது உண்மையான மனிதத் தன்மையிலிருந்து விலக்குகிறது என்பதை கார்க்கி நுட்பமாகச் சித்தரிக்கிறார். இந்த அடிப்படையில், ஆர்டமோனோவ் குடும்பத்தின் வீழ்ச்சி என்பது ஒரு குடும்பத்தின் தோல்வி மட்டுமல்ல மனித உறவுகளை இலாபத்தின் அடிப்படையில் அமைத்த ஒரு சமூக அமைப்பின் வரலாற்றுத் தோல்வியாகவும் வாசிக்கப்படலாம்.
வரலாறு மனிதனை உருவாக்கும் தருணங்கள் : கட்டுரை மீதான மீள்வாசிப்பு
ஆசிரியர் எழுதியுள்ள The Artamonov Business நாவல் பற்றிய இக்கட்டுரை, நாவலை அறிமுகப்படுத்தும் நோக்கத்தைத் தாண்டிய மிக ஆழமான நிலை. நாவலின் சமூக, பண்பாட்டு மற்றும் வரலாற்றுப் பரிமாணங்களை வாசகருக்குப் புரிய வைக்கும் நீண்ட விமர்சனப் பார்வையாக அமைகிறது. குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கும் போதும், தனிப்பட்ட கதாபாத்திரங்களின் மீது மட்டுமன்றி, அவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் சமூக மாற்றங்கள், பொருளாதார சக்திகள் மற்றும் வரலாற்றுச் சூழல்களின் மீதும் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தொழிற்சாலை வளர்ச்சியை வெறும் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதாமல், மனித வாழ்வையும் உறவுகளையும் மாற்றியமைக்கும் ஒரு சமூக சக்தியாக அணுகப்பட்டுள்ளது. நிகழ்வுகளின் தேர்வும் அவற்றுக்குக் கொடுக்கப்படும் விளக்கங்களும் இந்த அணுகுமுறையைத் தெளிவுபடுத்துகின்றன.
ஆர்டமோனோவின் மரணம், பியோதரின் உளவியல் சிதைவு, இளைய தலைமுறையினரின் கேள்வி மனப்பான்மை மற்றும் கரடி உருவகத்தின் பயன்பாடு ஆகியவை நாவலின் கதையைக் கூறுவதற்காக மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் இயங்கும் சமூக அர்த்தங்களை வெளிப்படுத்துவதற்காகப் கோடிடப்;பட்டுள்ளன. இதன் மூலம் தொழில்மயமாக்கல் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை விமர்சன ரீதியாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் மனித வாழ்வில் எப்போதும் நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற பொதுவான நம்பிக்கையை இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தொழில்மயமாக்கல் செல்வம் அதிகாரம் உருவாக்கும், அதே சமயம் மனித உறவுகளைத் தளர்த்தி, தனிமையையும் அந்நியமாதலையும் உருவாக்கக்கூடும் என்பதை அவர் நாவலின் நிகழ்வுகளின் வழியாக சுட்டிக்காட்டுகிறார். குடும்பம், மனிதநேயம், ஆன்மிகம் மற்றும் தனிமனித சுதந்திரம் போன்ற மதிப்புகள் பொருளாதார வளர்ச்சியின் அழுத்தத்திற்குள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும் கட்டுரை தொடர்ந்து எடுத்துரைக்கிறது.
குறிப்பாக, தனிநபர் வாழ்க்கையை விட சமூக அமைப்புகளின் செயல்பாட்டிற்கு அவர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். அவர்கள் வாழும் சமூக சூழல், பொருளாதார மாற்றம், தொழிற்சாலை வளர்ச்சி, அதிகார உறவுகள் போன்றவை அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகின்றன என்பதில்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக:
பியோதர் குடும்பத்திலிருந்து நீங்குவதும் அவரது தனிப்பட்ட சிக்கலாக மட்டுமன்றி தொழிற்சாலை மற்றும் முதலாளித்துவ வாழ்க்கைமுறை மனிதனை எவ்வாறு மாற்றுகிறது என்பதன் விளைவே காட்டப்படுகிறது.
ஆர்டமோனோவ் வெற்றி பெறுவது அவரது தனிப்பட்ட திறமையைத் தாண்டி ரஷ்யாவில் உருவான புதிய தொழில்மயமாக்கல் சூழலும் அதற்குக் காரணம்.
மூன்றாம் தலைமுறை பழைய மதிப்புகளை கேள்விக்குள்ளாக்குவது. அவர்களின் தனிப்பட்ட குணாதிசயமல்ல, சமூகத்தில் உருவாகும் புதிய சிந்தனைகளின் தாக்கமாக விளக்கப்படுகிறது.
எனவே இக்கட்டுரையில், இந்தக் கதாபாத்திரங்கள் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன? என்ற கேள்வியை மறுதளித்து அவர்களை இப்படி நடக்க வைத்த சமூக மற்றும் பொருளாதார சக்திகள் என்ன? என்ற கேள்வியை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவே கார்க்கி சமூக அமைப்புகளின் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதன் பொருள். நாவலின் பாத்திரங்களை தனிமனித உளவியல் அடிப்படையில் மட்டும் வாசிக்காமல், அவர்கள் வாழும் சமூக-பொருளாதாரச் சூழலின் விளைவாகப் புரிந்துகொள்ள முயல்கிறார். இதனால், தனிநபரை விட சமூக அமைப்புகளின் செயல்பாடுகளே அவரது விமர்சனத்தின் மையமாக அமைகின்றன.
இக்கட்டுரையில் ஆராயும் சமூக மாற்றம், வர்க்க உறவுகள் மற்றும் மனிதம் அந்நியமாதல் போன்ற கருத்துக்கள், ரஷ்ய சமூகத்தின் வரலாற்று அனுபவங்களை மட்டும் விளக்குவதற்கானவையல்ல. அவை மலையக சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கும் பயனுள்ள கோட்பாட்டு அடித்தளத்தை வழங்குகின்றன. குறிப்பாக தொழிற்சாலையின் வளர்ச்சி மனிதர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதை விளக்கும் விதம், மலையகத் தோட்டச் சமூகத்தின் வரலாற்று அனுபவங்களையும் நினைவுபடுத்துகிறது. மலையக சமூகம் இயற்கையாக உருவான சமூகமாக அல்லாமல், காலனித்துவ பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகமாகும். தேயிலை உற்பத்தியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தோட்ட அமைப்பு, அங்கு வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை முதல் அவர்களின் சமூக உறவுகள் வரை அனைத்தையும் தீர்மானித்தது. இந்த நிலையில், தொழிற்சாலை மையமான சமூக அமைப்பும் மலையகத் தோட்ட அமைப்பும் வேறுபட்ட புவியியல் சூழல்களில் இயங்கினாலும், அவற்றின் அடிப்படை பொருளாதார தர்க்கம் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக, பொருளாதார அமைப்புகள் மனித வாழ்வை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதிலேயே கவனம் அமைந்துள்ளது. ஆர்டமோனோவ் குடும்பத்தின் வாழ்க்கையை அவர் தனிநபர்களின்; விளைவாக மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றியுள்ள பொருளாதார மற்றும் சமூக சக்திகளின் விளைவாகப் பார்க்கப்படுகிறது. இதேபோன்று, மலையக மக்களின் வாழ்க்கையையும் தனிநபர் முயற்சி அல்லது தோல்வி என்ற அடிப்படையில் மட்டும் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் வாழ்ந்த சமூக சூழல், தோட்ட நிர்வாக அமைப்பு, உழைப்பு உறவுகள் மற்றும் பொருளாதாரச் சார்புநிலை ஆகியவை அவர்களின் வாழ்வனுபவங்களை வடிவமைத்த முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. எனவே, சமூக அமைப்புகளின் தாக்கம் குறித்த மறுவாசிப்பு, மலையக சமூக வரலாற்றை அணுகுவதற்கான ஒரு பயனுள்ள கண்ணோட்டத்தை வழங்குகிறது.
மேலும், மனித அந்நியமாதல் பற்றிய விளக்கங்களும் மலையக அனுபவங்களுடன் தொடர்புபடுத்தப்படலாம். உழைப்பின் மூலம் வாழ்வை உருவாக்கும் மனிதன், அதே உழைப்பின் அமைப்பிற்குள் சிக்கிக் கொள்வது என்பது சுட்டிக்காட்டும் முக்கியமான கருத்தாகும். மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் இதே நிலையை காண முடிகிறது. அவர்கள் உற்பத்தி செயல்முறையின் மையத்தில் இருந்தபோதிலும், உற்பத்தியின் பலன்களிலிருந்தும், நில உரிமையிலிருந்தும், சமூக அதிகாரத்திலிருந்தும் நீண்டகாலமாக விலக்கப்பட்டிருந்தனர். இதனால், உழைப்புக்கும் வாழ்வுக்கும் இடையே ஒரு இடைவெளி உருவாகிறது. அந்நியமாதல் என்ற கருத்து, இந்த வரலாற்று அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு ஆழமான கோட்பாட்டு வழிகாட்டுதலாக அமைகிறது.
அதேவேளை, கட்டுரையில் வெளிப்படும் வர்க்க உறவுகள் மற்றும் அதிகார அமைப்புகள் குறித்த சிந்தனைகளும் மலையக சமூகத்தை வாசிப்பதற்குப் பொருத்தமானவையாக உள்ளன. அதிகாரம் என்பது அரசியல் அல்லது பொருளாதார தளங்களில் மட்டும் செயல்படுவதில்லை; அது அன்றாட வாழ்க்கை, சமூக ஒழுங்கு, பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் மனிதர்களின் சுயபுரிதல் ஆகியவற்றையும் பாதிக்கிறது என்பதை அவர் மறைமுகமாக எடுத்துரைக்கிறார். இந்த அணுகுமுறை, மலையக மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பண்பாட்டு வெளிப்பாடுகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. எனவே, ரஷ்ய சமூகத்தை மையமாகக் கொண்டிருந்தாலும், அதில் காணப்படும் சமூக மாற்றம், உழைப்பு, அதிகாரம் மற்றும் மனித வாழ்வின் முரண்பாடுகள் குறித்த சிந்தனைகள் மலையக சமூக ஆய்வுகளுடனும் பொருத்தமான அறிவியல் உரையாடலை உருவாக்குகின்றன என்று கூறலாம்.
மேலும் கோடிட்டு காட்டப்பட வேண்டிய மையம் இரு இமயங்களின் நிகழ்த்துகைக் களம். நாவலில் டால்ஸ்டாய் வெறும் ஒரு இலக்கிய முன்னோடியாக மட்டும் தோன்றுவதில்லை. மாறாக, டால்ஸ்டாயின் மனிதநேய வரலாற்றுப் பார்வையைத் தாண்டி, அதற்கான வரம்புகளையும் கார்க்கி சுட்டிக்காட்டுகிறார். கார்க்கி இந்த நாவலின் கருவை முதலில் டால்ஸ்டாயிடம் கூறியபோது, “இத்தகைய குடும்பங்களின் கதை எழுதப்பட வேண்டும்” என்று டால்ஸ்டாய் ஊக்குவித்ததாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் பின்னர் லெனின், “இந்தக் கதையின் முடிவை புரட்சி நிகழ்ந்த பிறகே முழுமையாக எழுத முடியும்” என்று கூறுகிறார்.
இதில்தான் கார்க்கியின் முக்கியமான கோட்பாட்டு நிலைப்பாடு இருக்கிறது. டால்ஸ்டாயின் பார்வையில் வரலாறு என்பது தனிமனிதர்களின் அறநெறி வீழ்ச்சியும் ஆன்மீக மீட்சியும் பற்றிய கதை. War and Peace முதல் Anna Karenina வரை, மனிதனின் உள்மன உலகமே வரலாற்றை விளக்கும் மையமாக இருக்கிறது. ஆனால் கார்க்கி, The Artamonov Business இல், வரலாற்றை தனிமனிதர்களால் அல்ல் சமூக உற்பத்தி உறவுகளால் விளக்குகிறார்.
அர்தமோனோவ் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளும் தனிப்பட்ட குணநலன்களின் காரணமாக அழிவதில்லை. அவர்கள் உருவாக்கிய தொழிற்சாலைதான் அவர்களை விழுங்குகிறது. முதல் தலைமுறையான இல்யா அர்தமோனோவ் தொழிற்சாலையை உருவாக்குகிறான்; ஆனால் இறுதியில் அதே உற்பத்தி இயந்திரத்தின் கீழ் நசிகிறான். இரண்டாம் தலைமுறையான பியோதர் குடும்பத்தையும் மனித உறவுகளையும் இழக்கிறான். மூன்றாம் தலைமுறை தங்கள் பாரம்பரியத்தையே நிராகரிக்கிறது.
இங்கு கார்க்கி சொல்ல வருவது, மனிதன் வரலாற்றை உருவாக்குகிறான் என்று தோன்றினாலும், ஒரு கட்டத்தில் வரலாற்று சக்திகளே மனிதனை உருவாக்கத் தொடங்குகின்றன என்பதே. இது டால்ஸ்டாயின் நெறியியல் மனிதநேயத்திலிருந்து மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்கான நகர்வாகும்.
மேலும், டால்ஸ்டாயின் படைப்புகளில் ஆன்மீக மீட்சி எப்போதும் சாத்தியமாக இருக்கும். பாவம் செய்த மனிதன் மனந்திரும்ப முடியும். ஆனால் கார்க்கியின் உலகில் மீட்சி என்பது தனிமனித ஆன்மீக அனுபவமல்ல. சமூக மாற்றத்துடன் இணைந்த ஒன்றாகும். அதனால்தான் லெனின் இந்த நாவலின் முடிவு புரட்சிக்குப் பிறகே சாத்தியம் என்றார்.
லூகாச் (Georg Lukács) கூறும் Historical Totality” என்ற கருத்தின் அடிப்படையில் பார்த்தால், டால்ஸ்டாய் ஒரு காலத்தின் நெறி முரண்பாடுகளை பதிவு செய்கிறார்; ஆனால் கார்க்கி அந்த முரண்பாடுகளை உருவாக்கும் பொருளாதார அடித்தளத்தையே வெளிப்படுத்துகிறார். தொழிற்சாலை, பணம், சொத்து, அதிகாரம் ஆகியவை வெறும் பின்னணி அல்ல அவை கதாபாத்திரங்களின் மனநிலையையே உருவாக்கும் வரலாற்றுச் சக்திகளாகச் செயல்படுகின்றன.
இதனால், நாவலில் டால்ஸ்டாய் ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமே. கார்க்கி டால்ஸ்டாயின் யதார்த்தவாதத்தை ஏற்றுக்கொள்கிறார்; ஆனால் அதை மார்க்சிய வரலாற்றுப் பார்வையால் மறுவடிவமைக்கிறார். டால்ஸ்டாய் “மனிதன் ஏன் துன்பப்படுகிறான்?” என்று கேட்கிறார். கார்க்கி அதைவிட ஆழமாக, “எந்த சமூக அமைப்பு மனிதனை இவ்வாறு துன்பப்படுத்துகிறது?” என்று கேட்கிறார். அதனால்தான் இந்த நாவல் ஒரு குடும்பத்தின் வீழ்ச்சிக் கதையாக இல்லாமல், ரஷ்ய முதலாளித்துவத்தின் எழுச்சி, வளர்ச்சி, அழிவு பற்றிய வரலாற்று காவியமாக மாறுகிறது. டால்ஸ்டாய் மனித ஆன்மாவின் வரலாற்றை எழுதினார்; கார்க்கி வரலாறு மனித ஆன்மாவை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதையே எழுதுகிறார். இதுவே இருவருக்கும் இடையிலான மிக ஆழமான கோட்பாட்டு வேறுபாடு. “டால்ஸ்டாய் மனித ஆன்மாவின் வரலாற்றை எழுதினார்; கார்க்கி வரலாறு மனித ஆன்மாவை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதையே எழுதுகிறார்” என்ற கூற்று, ரஷ்ய யதார்த்தவாதத்திலிருந்து சோசலிச யதார்த்தவாதத்திற்கான மாபெரும் மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
டால்ஸ்டாயின் உலகில் மனிதனின் உள்ளார்ந்த அறநெறி போராட்டம்தான் மையம் War and Peace இல் பியர் பெசுகோவ் அல்லது Anna Karenina லெவின் போன்ற பாத்திரங்கள், தங்கள் ஆன்மாவின் அர்த்தத்தைத் தேடுகிறார்கள். சமூகமும் வரலாறும் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றன் ஆனால் இறுதியில் முக்கியமானது அவர்களின் உள்மனப் பயணமே. அதனால் டால்ஸ்டாயின் வரலாறு என்பது மனித ஆன்மாவின் வளர்ச்சியின் வரலாறு.
ஆனால் கார்க்கியின் பார்வை முற்றிலும் வேறுபட்டது. மனித ஆன்மா என்பது தனித்து இயங்கும் ஒன்றல்ல அது சமூக உறவுகள், உற்பத்தி முறைகள், வர்க்க உறவுகள், பொருளாதார சக்திகள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது என்று அவர் கருதுகிறார். அதாவது, மனிதன் முதலில் சமூக உயிரினம்; பிறகுதான் தனிமனிதன்.
The Artamonov Business இல் பியோதரை எடுத்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் அவன் ஒரு சாதாரண மனிதன். அவனுக்குக் குடும்பமும் உறவுகளும் இருக்கின்றன. ஆனால் தொழிற்சாலையின் வளர்ச்சி, இலாபத்தின் தேவை, நிர்வாகத்தின் அழுத்தம் ஆகியவை படிப்படியாக அவனை மாற்றுகின்றன. இறுதியில் அவன் குடும்பத்திலிருந்தும் மனித உணர்வுகளிலிருந்தும் விலகிச் செல்கிறான்.
இங்கே கார்க்கி சொல்ல வருவது, “பியோதர் கெட்டவன் என்பதால் இப்படியானான்” என்பதல்ல. மாறாக, “அவனைச் சுற்றியிருந்த முதலாளித்துவ உற்பத்தி அமைப்பே அவனை இப்படியான மனிதனாக உருவாக்கியது” என்பதே. இதனை மார்க்சின் “Social Being determines Consciousness” என்ற கோட்பாட்டுடன் இணைத்துப் பார்க்கலாம். மனிதனின் சிந்தனை அவன் வாழும் சமூக நிலைமைகளிலிருந்து உருவாகிறது. நாம் யார் என்று நினைக்கிறோமோ, அது கூட நாம் வாழும் பொருளாதார உலகின் விளைவாக இருக்கலாம்.
இந்த அடிப்படையில் பார்த்தால், ஆர்தமோனோவ் குடும்பத்தின் வீழ்ச்சி ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட தோல்வி அல்ல. அது முதலாளித்துவ வரலாறு மனிதர்களின் ஆன்மாவை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கான உருவகம். முதல் தலைமுறை உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டது. இரண்டாம் தலைமுறை சொத்தைக் காப்பாற்றுவதில் மூழ்கியது. மூன்றாம் தலைமுறை அந்த மரபையே நிராகரித்தது. இது ஹெகலின் “வரலாறு மனிதனின் சுயஉணர்வை உருவாக்குகிறது” என்ற கருத்தை நினைவுபடுத்தினாலும், கார்க்கி அதனை மார்க்சிய தளத்தில் மறுவாசிக்கிறார். இங்கே ஆன்மா என்பது மெய்யியல் சார்ந்த ஒன்று அல்ல சமூக உறவுகளின் உற்பத்தி.
மேலும், கார்க்கியின் நாவலில் தொழிற்சாலை ஒரு கட்டிடம் மட்டுமல்ல. அது ஒரு வரலாற்றுச் சக்தி. அது மனிதர்களை வேலை செய்ய வைப்பதோடு நிற்கவில்லை; அவர்கள் எப்படி காதலிக்க வேண்டும், எப்படி குடும்பத்தைப் பார்க்க வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது. இதுவே லூயி அல்தூசர் கூறும் “Ideological State Apparatus” என்ற கருத்துடன் ஒத்துப் போகிறது. அதிகாரம் வெளியில் இருந்து மட்டும் கட்டாயப்படுத்துவதில்லை அது மனிதனின் உள்ளே நுழைந்து அவனது விருப்பங்களையே வடிவமைக்கிறது.
அதனால் டால்ஸ்டாயின் நாவல்களில் மனிதன் வரலாற்றை எதிர்கொள்கிறான். ஆனால் கார்க்கியின் நாவல்களில் வரலாறே மனிதனுக்குள் நுழைந்து அவனை உருவாக்குகிறது.
டால்ஸ்டாயின் கேள்வி : “மனித ஆன்மா எவ்வாறு வாழ வேண்டும்?”
கார்க்கியின் கேள்வி: “எந்த வரலாற்று மற்றும் பொருளாதார சக்திகள் அந்த ஆன்மாவை இப்படியாக உருவாக்குகின்றன?”
இதுவே நாவலின் மிக ஆழமான கோட்பாட்டு அடுக்கு. கார்க்கிக்கு மனிதன் ஒரு சுயாதீன ஆன்மா அல்ல. வரலாற்றின் உயிருள்ள விளைபொருள். மனிதன் வரலாற்றை உருவாக்குகிறான்; ஆனால் அதே நேரத்தில் வரலாறும் மனிதனை உருவாக்குகிறது. அந்த முரண்பாட்டின் காவியம்தான் The Artamonov Business. . மார்க்ஸ் கூறும் “Social being determines consciousness” என்ற கருத்து, மனிதன் முதலில் சிந்திக்கிறான்; பிறகு வாழ்கிறான் என்ற கருத்தை மறுக்கிறது. மாறாக, மனிதன் முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில் வாழ்கிறான்; அந்த வாழ்வியல் அனுபவங்களிலிருந்தே அவனுடைய சிந்தனை, நம்பிக்கை, மதிப்பு, ஒழுக்கம் போன்றவை உருவாகின்றன என்று வலியுறுத்துகிறது. அதாவது, மனிதனின் உணர்வு அல்லது சுயநினைவு வானத்திலிருந்து விழுவதில்லை அது அவன் வாழும் சமூக வாழ்க்கையின் விளைவாக உருவாகிறது.
இந்தக் கருத்தை நாவல் மிகவும் நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது. நாவலில் பியோதர் ஆரம்பத்தில் ஒரு சாதாரண குடும்ப மனிதனாகத் தோன்றுகிறான். ஆனால் தொழிற்சாலையின் நிர்வாகம், இலாபத்தின் அழுத்தம், சொத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஆகியவற்றுக்குள் அவன் வாழத் தொடங்கும்போது, அவனுடைய மனநிலையும் மாறத் தொடங்குகிறது. குடும்ப உறவுகள், அன்பு, பாசம் போன்றவை அவனுக்கு இரண்டாம் நிலையாக மாறுகின்றன. இங்கு கார்க்கி, பியோதர் இயல்பிலேயே கொடூரமானவன் அல்லது சுயநலவாதி என்று கூறவில்லை. மாறாக, அவன் வாழும் முதலாளித்துவ சமூக இருப்பே அவனை அந்த மனநிலைக்கு இட்டுச் செல்கிறது என்று காட்டுகிறார். இதன் பின்னால் ஒரு முக்கியமான தத்துவக் கேள்வி இருக்கிறது. மனிதர்கள் உலகத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது, அவர்கள் உலகில் எங்கே நிற்கிறார்கள் என்பதுடன் தொடர்புடையது. ஒரு தொழிலாளியும் ஒரு முதலாளியும் ஒரே தொழிற்சாலையைப் பார்க்கலாம்; ஆனால் அவர்களின் அனுபவம் ஒன்றாக இருக்காது. ஒருவருக்கு அது வாழ்க்கையைத் தாங்கும் உழைப்பின் இடமாகத் தெரியும்; மற்றொருவருக்கு அது இலாபம் உருவாக்கும் சொத்தாகத் தெரியும். இதனால் அவர்களின் சிந்தனைகளும் வேறுபடுகின்றன. சமூக இருப்பின் வேறுபாடு, உணர்வின் வேறுபாட்டை உருவாக்குகிறது.
இதனால்தான் கார்க்கி தனது பாத்திரங்களை தனிமனித உளவியல் அடிப்படையில் மட்டும் விளக்குவதில்லை. அவர்களைச் சுற்றியுள்ள தொழிற்சாலை, பொருளாதார அமைப்பு, வர்க்க உறவுகள் போன்றவற்றை அவர் தொடர்ந்து முன்வைக்கிறார். நாவலில் தொழிற்சாலை என்பது வெறும் பின்னணிக் காட்சி அல்ல அது மனிதர்களின் குணநலன்களையே வடிவமைக்கும் வரலாற்றுச் சக்தியாகச் செயல்படுகிறது. முதல் தலைமுறை அதை உருவாக்குகிறது. இரண்டாம் தலைமுறை அதற்குள் சிக்கிக்கொள்கிறது. மூன்றாம் தலைமுறை அதிலிருந்து விலக முயல்கிறது.
இந்தப் பார்வையில் பார்க்கும்போது, மனித ஆன்மா என்பது மாறாத ஒன்று அல்ல. அது வரலாற்றால் தொடர்ந்து வடிவமைக்கப்படும் ஒரு சமூக உருவாக்கம். இதுவே டால்ஸ்டாயின் பார்வையிலிருந்து கார்க்கியை வேறுபடுத்துகிறது. டால்ஸ்டாய் மனிதனின் உள்ளார்ந்த அறநெறி தேடலை மையப்படுத்துகிறார். ஆனால் கார்க்கி, அந்த அறநெறி உணர்வே எந்த சமூக மற்றும் பொருளாதார சூழலில் உருவாகிறது என்பதை ஆராய்கிறார். அதனால் அவரது நாவல்களில் மனிதர்கள் வரலாற்றுக்குள் வாழ்வதில்லை; வரலாறே அவர்களுக்குள் வாழ்கிறது.
எனவே, மனிதனின் எண்ணங்கள், விருப்பங்கள், நம்பிக்கைகள், கனவுகள் கூட சமூக வாழ்க்கையின் தாக்கத்திலிருந்து உருவாகின்றன என்ற ஆழமான மனிதவியல் பார்வையாகும். நாவலில் கார்க்கி இதையே கலை வடிவில் வெளிப்படுத்துகிறார். மனிதன் வரலாற்றை உருவாக்குகிறான்; ஆனால் அதே நேரத்தில் வரலாறும் மனிதனை உருவாக்குகிறது. அந்த இருவழி உறவின் சிக்கலான இயக்கம்தான் இந்த நாவலின் மைய அர்த்தமாகும்.
உசாத்துணை நூல்கள்
Eagleton. T. (2006). Marxism and literary criticism. Routledge.
Gorky. M. (1982). The Artamonov business (A. Fineberg.Trans.). Progress Publishers. (Original work
published 1925)
Marx. K. (1978). Economic and philosophic manuscripts of 1844. In R. C. Tucker (Ed.). The Marx-
Engels reader (2nd ed. pp. 66–125). W. W. Norton.
கைலாசபதி. (2000). இலக்கியமும் திறனாய்வும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
சிவத்தம்பி, கா. (2007). இலக்கியத்தில் முற்போக்குவாதம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
சிவத்தம்பி, கா. (2008). தமிழ் இலக்கியத்தில் கருத்துநிலை. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
ஞானி. (2011). மார்க்சியமும் தமிழ் இலக்கியமும். சென்னை: காவ்யா வெளியீடு.
ராஜதுரை, எஸ். வி. (2004). மார்க்சியம்: ஒரு அறிமுகம். சென்னை: விடியல் பதிப்பகம்.]



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









