கட்டுரையாளர் - முனைவர்.கு.செல்வ ஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி


சமுதாயம் என்பது முழுமையான மனிதத்தைக் குறிப்பதாக அமையவல்லது. இச்சமூகமானது தனிநபரால் உருவாக்கப்பட்டு தேசிய மற்றும் கலாச்சார அடையாளங்களைப் படைக்கும் பிரதிபலிப்பாகும். சமூகப்பிரச்சனை என்பது ஒருசமூகத்திற்குள் இருக்கும் பலரைப் பாதிக்கும் பிரச்சனையாகும். இது இன்றைய சமூகத்தில் பலர் தீர்க்க முயற்சிக்கும் பொதுவான பிரச்சனைகளின் தொகுப்பு ஆகச் செயல்படுகின்றது. நெல்லை ஜெயந்தாவின் கவிதைகளில் காணலாகும் சமுதாயச் சிக்கல்களைக் கீழ்க்காணும் தலைப்பில் ஆராயலாம்.

வறுமை

மனித வாழ்வில் மிகவும் கொடிய வியாதி வறுமை ஆகும். இவ்வறுமைநிலையினை அடைபவர்கள் வாழ்வின் ஆழத்தையும், அர்த்தத்தையும் நன்கு உணரமுடியும். இது பற்றி ஔவையார் கருதுகையில்,

"கொடியது கொடியது வறுமை கொடியது"1

எனப்பாடியுள்ளார். தொன்றுதொட்டு வறுமையைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம்.

நெல்லை ஜெயந்தா தமது கவிதைகளில் வறுமை பற்றி கூறும்போது

“எப்படி ரசிப்பது
மழையை
ஒழுகும் குடிசைகளில்
மார்கழியை
வெறுக்கலாம்
செய்தித்தாள் போடும்
சிறுவனின் மனசு!" ( தி.ம.,ப.50)

மேற்கண்ட கவிதையில், ஏழை சிறுவனின் வறுமைநிலையை அறியமுடிகின்றது. மனித வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் இருப்பிடவசதி மற்றும் பொருளியல் சார்ந்த முன்னேற்றம் காண இயலாத சிறுவர்களின் இளமைக்கால வாழ்வியல் பெறும் போராட்டம் மிகுந்தது என்பதை இக்கவிதை வாயிலாக உணரமுடிகின்றது. தங்கும் இடங்கள் மழைநீரால் சிதைவுற்று, உண்ண உணவின்றி செய்தித்தாளை விற்கும் காட்சி பிஞ்சு உள்ளம் மனதை உருக்கும்படி காட்சியளிக்கின்றது.

கைம்பெண்ணின் நிலை

விதவையின் வாழ்வு துன்பம் மிகுந்தது. கணவனை இழந்த பெண்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்படும் நிலை இன்றும் சிலஇடங்களில் தொடர்கின்றன. பெண்களுக்குப் பூவும், பொட்டும் பிறப்பிலிருந்து அவர்களுக்கே உரிமையானதாகும். ஆனால், கணவனை இழந்த பெண்கள் பூக்களைச் சூடிக்கொள்ள அனுமதி இச்சமூகம் அளிப்பதில்லை. இக்கூற்றினை,

"பூக்களும்
சருகுகள்தான்
விதவைகளின்
பார்வையில்!" (தி.ம., ப.50)

என்ற கவிதைவரிகளில் கைம்பெண்ணின் துயரை உணர்த்துகின்றன. இங்கு கணவனை இழந்த பெண்களுக்கு வெண்மைநிற மணம் வீசும் பூக்களும் கூட ஒன்றுக்கும் உதவாத சருகுகளாகத் தென்படுவது பெண்களின் ஆழ்மனஉணர்வினை எடுத்தியம்புகின்றது எனலாம்.

காதல்

ஆண் பெண் இருவருக்கிடையே நடக்கும் அன்பின் வெளிப்பாடுதான் காதல். இது ஓர் உன்னதமான உணர்வு. . இவ்வுணர்வு காயாகி வாழ்வின் வெற்றி இலக்கை நோக்கி உயர்வடைய செய்யலாம் அல்லது நசிந்தும் உதிர்ந்தும் விடக் கூடும் நிலை ஏற்படும். இத்தகு காதலின் ஆழத்தை உணராத உயிரினமே உலகில் இல்லை. காதல் பற்றி பாரதிதாசன் கூறுகையில்,

"கண்ணின் கடைபார்வை காதலிய காட்டி விட்டால்
மண்ணின் குமரனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்"2

என்று குறிப்பிடுவார். இதே கருத்தினை தற்காலத்தில் நெல்லைஜெயந்தா தனது படைப்பில் கூறுகையில்,

"தீ உன்னிடம்
திரி என்னிடம்
பற்ற வைத்தாய்
பற்றும் வை!" (தி.ம., ( ப. 77)

என்பர். இக்கவிதை மூலம் கவிஞரின் தன்னுணர்ச்சி வெளிப்படுகின்றது. ஆண் பெண் இருபாலரின் உள்ளங்கள் இணைந்து சங்கமிக்கும் இன்பஉணர்வு இக்கவிதையில் காணமுடிகின்றது. மேலும், மற்றொரு கவிதைகளில்,

"அவள்
கண்களைப் பார்த்தால்
மீன்!
கண்களால்
அவள் பார்த்தால்
தூண்டில்!" (தி.ம., ப.29)

இங்கு கவிஞர் தலைவியின் கண்களை மீனுடன் உவமித்து ஒப்பிடுகிறார். பெண்களும் பெண்களின் கண்களும் பார்க்கிற பார்வையில் பிறரை ஈர்க்கும் தன்மை இயல்பாக உள்ளது. எனவேதான், தலைவி மீன்போன்ற கண்களால் பார்த்து தலைவனைத் தூண்டில் பிடிக்கிறாள் என்று உருவகப்படுத்தும் சிறப்பினை அறியலாம்.

விபச்சாரி

விபச்சாரம் ஒழுக்கக்கேடானது என்று வேதாகமம் சொல்கிறது. விபச்சாரிகளின் தொழில் பாவத்திற்கு உரியதாகக் கருதப்படுகின்றது. விபசச்சாரிகள் வருகையால் திருமணம், குடும்பம் மற்றும் வாழ்க்கை அழிவை நோக்கி செல்கின்றது. சிலர் பெருஞ்செல்வம் ஈட்டும் நோக்கில் மட்டுமே இத்தொழில் செய்கின்றனர். பலரோ வறுமையின் காரணமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை .நெல்லை ஜெயந்தா பகர்கையில்,

"பசித்தது
உணவில்லை :
உணவானாளற்ற
பசி இல்லை! ”(தி.ம.,ப.55)

என்ற வரிகளில் பெண்களின் வறுமைநிலையை உணர்த்துகின்றது. இங்ஙனம் பொதுமக்களால் இழிவாகக் கருதப்படும் பெண்களே தேவதாசிகள் என்று ஒதுக்கப்படுவது மரணத்திற்கு வழிவகுக்கும் எனலாம்.

மற்றொரு கவிதையில் இன்றைய திரைப்பட நடிகைகள் வயிற்றுப்பிழைப்பிற்காக தங்களது வாழ்வை வேசிகள் போன்று அர்ப்பணிக்கும் காட்சி இதோ,

"தரைப்பம்பரங்கள்
கயிற்றில்சுற்றும்:
திரைபம்பரங்கள்
வயிற்றில்சுற்றும் :
வயிற்றுக்காக
பிழைக்கலாம்
வயிற்றிலேயே
பிழைக்கலாமா!"( தி.ம.,ப.43)

என்பதன்வழி அறியமுடிகின்றது.

தாய்மை

பெண்ணானவள் தாய்மை அடைவது வரப்பிரசாதம் என்கிறோம். உடல் மனம் சார்ந்த பிரச்சனைச் சமாளிக்கப் போராடும் பெண்மை தாய்மை அடைதை தனது வாழ்வின் லட்சியமாகக் கருதுகின்றனர்.. அப்போது தான் முழுப்பெண்ணாய் அவளது வாழ்வில் இன்பம் பெற முடியும் இல்லையேல் மலடி என்ற பட்டத்தினை ஏற்க நேரிடும். இத்தகுப் புனிதமான தாய்மையின் பெருமையைப் பாடாத கவிஞர்களே இல்லை. இதனை,

“இல்லற வாழ்வில் மகப்பேறு மிகவும் எஞ்சியமையாக ஒன்றாகும். இல்லற வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக அமைவது நன்மகப்பேறு என்பதை பண்டைய தமிழரின் கொள்கை ஆகும்" என்பார். கேகே. பிள்ளை

அன்னையின் சிறப்பு பற்றி கவிஞர் நெல்லை ஜெயந்தா,

“தெய்வம்
கருவறைக்குள்!
அந்த
கருவறையே
இந்த தெய்வத்திற்குள்......”( தி.ம.ப17)

என்ற கவிதைவரிகள் மூலம் தெய்வமே கருவறைக்குள் இருப்பதாகவும் அந்தக் கருவறையினை சுமக்கும் பெண்கள் தெய்வத்திற்கு நிகராகப் போற்றப்படுகிறமை இங்கு காணமுடிகின்றது. பொதுவாக, தாய்மை என்பது உயிரணு சார்ந்த உணர்வு மட்டுமல்ல. அன்பு, தியாகம், பொறுமையின் அடையாளம் என்று கருதவேண்டும்.

உணவு கலப்படம்

மனிதன் உண்ணும் உணவில் கலப்படம் அதிகரிப்பதால் தரம் குறைந்து உடல்நலம் பாதிக்கப்படுகின்றது. உண்ணும் உணவின் அளவு மாற்றம் ஏற்பட்டு தரத்தைக் குறைத்து விடும் சூழல் தற்போது நிறைய காணமுடிகின்றது. சுகாதாரமான உணவு பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கே முழங்கப்பட்டு வருகின்றது. காரணம், பணம் படைத்தோர் நுகர்வோரின் மனநிலை அறிந்து விலைக் குறைந்த உணவினை விநியோகம் செய்து அதிக லாபத்தை ஈட்டுகின்றனர். இதனால் கலப்படத்துடன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நோயின் தாக்கம் எளிதாக தொற்றுகின்றது. இயற்கை உழைப்பான விவசாயத்திற்கு எவரும் மதிப்பளிப்பது இல்லை. நவீனத் தொழில்நுட்பத்தின் வருகையால் நல்லவிளைச்சல் கூட வேதியில் கலவையால் தரம் குறைந்து விடுகின்றது. இதுபற்றி அறிஞர் கருதுகையில்,

"விதவிதமாய் வந்திரங்கிய
விவசாய கருவிகளிலிருந்து
வெளி வருகிறார்கள்
சர்க்கரை நோயாளிகள்!"( தி.ம.,ப.57)

என்பர். இக்கவிதையின் வாயிலாக அளவற்ற பூச்சிகொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் உணவுதானியங்களில் நச்சுப்பொருட்கள் கலந்துவிடுகின்றது. இதுவே உணவு சம்பந்தமான பல வியாதிகள் பரவுவதற்கு காரணமாக உள்ளமை உணரமுடிகின்றது.

தொகுப்புரை

இக்கட்டுரையின் வாயிலாக விதவையின் நெற்றிப் பொட்டும் தலைமாலைப் பூக்களும் ஏற மறுக்கும் காட்சி கைம்பெண்ணின் ஆழ்மனஉணர்வினை வெளிப்படுத்துகின்றது. வறுமையின் காரணமாக நடிக்கும் வேசிகள் பண்பும் திரையில் ஒப்பனை செய்யும் நடிகைகளின் வாழ்வும் ஒன்றே என்பது இங்கு புலனாகின்றது. தெய்வத்தையே சுமக்கும் தாய்மைப்பேறு பெண்களுக்கு பிறவிப்பயனை அடைய வழிகோலுகின்றது. தாவரங்களுக்கு மலிவான செலவில் உயிர்ச்சத்துக்கள் அளிப்பதால் இயற்கை விவசாயம் தடைபடக்கூடும் என்ற கருத்து மறைமுகமாக உணவுகலப்படத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

துணைநூற்பட்டியல்

1. ஔவையார் தனிப்பாடல்கள்- எஸ். கௌமாரீஸ்வரி, கௌரா புத்தக மையம்,4, வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு, தி. நகர், சென்னை. முதற்பதிப்பு டிசம்பர்-2010.

2. பாரதிதாசன் - பாரதிதாசன் கவிதைகள், உமா பதிப்பகம், சென்னை.

3. திணைமயக்கம்- நெல்லைஜெயந்தா-குமரன் பதிப்பகம்,3, முத்து கிருஷ்ணன் தெரு, தி . நகர், சென்னை.

 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்