இலக்கியம் என்பது ஒரு மொழியின் வெளிப்பாடாகும். மொழி என்பது ஒரு சமூகத்தின் முழுமையான வெளிப்பாடாகும். சமூகம் என்பது சகமனிதர்களின் வாழ்வியல் திரட்சி ஆகும். மனித வாழ்வியல் என்பது சமூகப் பொருளுற்பத்தியையும் சமூகப் பண்பாட்டு நிறுவனங்களையும் சார்ந்து இயங்குதல் ஆகும். சார்ந்து இயங்குதலை சமூகக் கருத்தியல்கள் நெறிப்படுத்துகின்றன. கருத்தியல்களின் ஆகச்சிறந்த களமாக இலக்கியம் திகழ்கிறது. எனவே இலக்கியம் என்பது சமூக வாழ்வியலின் அதி முக்கியக் களமாகச் செயலாற்றுகின்றது. இலக்கியங்களை அணுகுதல் என்பது சமூகப் பண்பாட்டு நிறுவனங்களை அணுகுதல் என்பதன் அங்கமாகும். இதனால் மனித குலத்தின் சமூக வாழ்வியலை மதிப்பிடுவதற்கு ஒரு பொருத்தமானக் களமாக இலக்கிய அறிவியலை உணரலாம்.
இலக்கிய அறிவியல் என்ற தலைப்பிற்குள் இரண்டு சிந்தனைகளை முதன்மைப்படுத்துகிறோம்.
1. இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்.
2. இலக்கியங்களை அணுகுகின்ற சுற்றிவளைக்கும் பார்வைகள்
இலக்கியத்திற்கு வரையறை கொடுப்பதென்பது மொழித் துறையில் சமூகவிஞ்ஞானம் ஆற்ற வேண்டிய அதிமுக்கியக் கடமையாகும். எனவே இங்கு இலக்கியத்தை விளங்கிக்கொள்ள வரையறை செய்துகொள்வோம்.
இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்
எது இலக்கியம்?
இலக்கியம் என்பது இலக்கினை இயம்புதல் ஆகும். இலக்கு என்பது கருத்தியல் வெளிப்பாடாகும். இயம்புதல் என்பது பேசுதல் ஆகும். எனவே கருத்துக்களைப் பேசக்கூடிய களமாக இலக்கியம் இயங்குகிறது. இலக்கியத்தைத் துல்லியமாக வரையறுக்க முயலலாம்.
இலக்கியம் என்பது
சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்கான
ஒரு மொழியின் படைப்புகளாகும்
(சிவக்குமார்,கே.2016:25)
இலக்கியம் மூன்று நிலைப்படும்.
1.வரலாற்று நிலை
2.செயல் நிலை
3.கொள்கை நிலை
மூன்று நிலைப்படுதலும் இரண்டு வகைப்படும்.
1.வாய்மொழி இலக்கியம்
2.எழுத்திலக்கியம்
இவை இரண்டும் வரலாற்று நிலைப்பாடாகும்.
1.கலை இலக்கியம்
2.அறிவியல் இலக்கியம்
இவை இரண்டும் செயல் நிலைப்பாடாகும்
1.தன்னிச்சை இலக்கியம்
2.சமூகளாவியஇலக்கியம்
இவை இரண்டும் கொள்கை நிலைப்பாடாகும்
(சிவக்குமார்,கே.2016:25-28)
வாய்மொழி இலக்கியம்
எழுத்து உருப்பெறாத காலத்திலிருந்து சகமனிதர்கள் தங்களது கற்பனைகளையும் கருத்துக்களையும் வாய்மொழி வாயிலாக பரிமாறிக்கொண்டிருக்கின்ற இலக்கிய வடிவமே வாய்மொழி இலக்கியமாகும். பழமொழி, கதைப்பாடல், உழைப்பாளர்களின் களப்பாடல், விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, கதை கூறல் போன்றன வாய்மொழி இலக்கியங்களில் அடங்கும்.
எழுத்திலக்கியம்
எழுத்து உருப்பெற்ற காலத்திலிருந்து சகமனிதர்கள் தங்களது கற்பனைகளையும் கருத்துக்களையும் எழுத்துமொழி வாயிலாக பரிமாறிக்கொண்டிருக்கின்ற இலக்கிய வடிவமே எழுத்திலக்கியம் ஆகும். ஓலைச்சுவடி பதிவுகள், மரபுக்கவிதைகள், நவீனக் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், இலக்கண இலக்கியச் செய்யுட்கள், மருத்துவச் செய்யுட்கள் போன்றன எழுத்திலக்கியங்களில் அடங்கும்.
கலை இலக்கியம்
கலை இலக்கியம் என்பது சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்காக அவர்களது உணர்வுநிலையில் உந்துதல் ஏற்படுத்துகின்ற ஒரு மொழியின் வாழ்வியல் படைப்பாகும். கலை என்பது மனிதர்களது புலனறிவு நிலையில் அழுத்தத்துடன் செயலாற்றுவது குறைவு. மாறாக மனித ஆழ்மனக்குழியோடு உறவாற்றுகின்ற உணர்வு நிலையில்தான் அழுத்தமாகச் செயலாற்றும் திறனைப் பெற்றுள்ளது. இவ்வாறு உணர்வு நிலையில் ஆழ்மனதிற்கு நெருக்கமாக செயலாற்றுகின்ற இலக்கியப் படைப்புகளே கலை இலக்கியமாகும்.
அறிவியல் இலக்கியம்
அறிவியல் இலக்கியம் என்பது சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்காக அவர்களது புலனறிவு நிலையில் உண்மைகளை உணர்த்துகின்ற ஒரு துறை சார்ந்த மொழியின் விளக்கங்களாகும். அறிவியல் என்பது மனிதர்களது ஆழ்மனக்குழியின் உணர்வுநிலையில் அழுத்தத்துடன் செயலாற்றுவது குறைவு. மாறாக மனிதர்களது புலனறிவு நிலையில்தான் துல்லியமாகச் செயலாற்றும் திறனைப் பெற்றுள்ளது. இவ்வாறு புலனறிவு நிலையில் அறிவிற்கு துல்லியமாக செயலாற்றுகின்ற இலக்கியப் படைப்புகளே அறிவியல் இலக்கியமாகும்.
தன்னிச்சை இலக்கியம்
சமூக மேன்மையில் இலக்கற்ற படைப்பாளர், தனது தன்னிச்சை கொள்கையை வெளிப்படுத்துவதற்காகப் படைக்கின்ற இலக்கியமே தன்னிச்சை இலக்கியம் ஆகும்.
சமூகளாவிய இலக்கியம்
சமூக மேன்மையில் இலக்குடைய படைப்பாளர், சமூகத்தேவையின் அவசியம் குறித்த தனது புரிதல்களை உணர்த்துவதற்காகப் படைக்கின்ற இலக்கியமே சமூகளாவிய இலக்கியம் ஆகும். (சிவக்குமார்,கே.2016:25-28)
இத்தகைய வரையறை மற்றும் விளக்கங்கள் நமக்கு இலக்கியத்தைப் பற்றிய துல்லியமான அறிமுகமாக அமையலாம். ஆனால் இலக்கியத்தை முழுமையாக உணர இத்தகைய முகவரி போதாது. இலக்கியத்துடன் ஒன்றி வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். இத்தகைய வாய்ப்பே சகமனிதரை அவரது சமூக அறிவிலும் உணர்விலும் உரமுடையவராக உருமாற்றும். கற்பனை வளத்திலும் கருத்துச் செறிவிலும் ஆற்றலுள்ளவராக நிலைப்படுத்தும். இத்தகைய நிலையினை அடைவதற்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்வது இன்றியமையாத சமூகக் கடமையாகும். அதாவது இலக்கியத்தைப் படைப்பவரும் படிப்பவரும் ஒருவருக்கொருவர் சமூகளாவிய நிலையில் புரிந்துகொள்ள முயல வேண்டும். இத்தகைய புரிதலுக்கு சுற்றி வளைக்கும் பார்வைகள் அவசியப்படுகின்றன. படைப்பாளரும் படிப்பாளரும் சுற்றி வளைக்கும் பார்வைகளுடன் இலக்கியத்தை அணுகுவது அவசியம். இலக்கிய அறிவியலின் இப்பார்வைகள் அறிவியல் கலை படைப்புகளுக்கும் முழுமையாகப் பொருந்தும். மேலும், இப்பார்வைகள் சொந்த வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளுக்கும் வழியமைக்கின்றன.
இலக்கியங்களை அணுகுகின்ற சுற்றிவளைக்கும் பார்வைகள்
1. மனிதவரலாற்றுப் படிநிலை
2.பண்பாட்டு உறவுகள்
3.இயற்கை வர்ணனைகள்
4.மொழி நேர்த்தி
5.சமூக ஏற்றத்தாழ்வுகள்
6.பாலின ஏற்றத்தாழ்வுகள்
7.சாதி மத பேதங்கள்
8.பேதமை கடந்த உடன்பாடுகள்
9.எதார்த்தம் மீதான இலட்சியம்
10.முற்போக்கின் எழுச்சி
11.அரசியல் நோக்கு
12.தன்னிச்சை வெளிப்பாடு
13.கொச்சை பாலுறவு குறியீடு
14.பொருளாதார ஒடுக்குமுறை
15.கருத்தாக்கக் கட்டமைப்பு
16.ஆழ்மனப் பிரதிபலிப்பு
17.சமூகளாவிய விமர்சனங்கள்
18.தாய்தலைமை சமூகம்
19.தந்தையதிகாரச் சமூகம்
20.குழந்தைகளின் சமூக ஆக்கம்
இத்தகைய சுற்றி வளைக்கும் பார்வைகள் எத்தகைய சமூக இலக்குகளை முதன்மைப் படுத்துகின்றன? சமத்துவ சமூகத்தைக் கட்டியமைப்பதற்காக மனித வாழ்வியலைப் பக்குவப்படுத்துகின்ற இலக்குகளை முதன்மைப்படுத்துகின்றன. ஏனெனில் மனித சமூகத்தில் மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த பகையுறவுகளை களைந்து, தனித்துவங்கள் நிறைந்த நட்புறவுகளை படைத்து, இயற்கை முரண்களோடு சமத்துவமாய் சங்கமிப்பதே சமூகத்தின் தேவைகளாக இருக்கின்றன. இந்தத் தேவையை அடைவதற்கு மாறாக ஆபத்தாக அமைவது எது? பகையுறவுகளைக் கூர்மைப்படுத்தி, செயற்கைகளின் ஆக்கிரமிப்பால் இயற்கைக்கு சமாதி கட்டி, இயற்கையோடு அடக்கமாகும் தான்தோன்றித்தன முயற்சிகளே சமூகத்திற்கு ஆபத்தாக இருக்கின்றன. சமூகத்தின் தேவைக்கும் சமூக ஆபத்திற்கும் இடைப்பட்ட உறவானது சமூகப் பொருளுற்பத்தியின் இயக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. சமூகத் தேவையை நிறைவேற்றுவது நோக்கி சமூகப் பொருளுற்பத்தியை முன்னேற்றுவதா? சமூக ஆபத்தில் மூழ்குவது நோக்கி விட்டுவிடுவதா? இவைகள்தான் நம் முன்னுள்ள கேள்விகள். இந்தக் கேள்விகளிலிருந்து மனித வாழ்வியல் இயங்குகின்றது. சமூகத்தின் தனித்துவங்களைச் சமத்துவம் நோக்கி முன்னேற்றி, இயற்கையின் அங்கமாகப் பாதுகாக்கின்ற முயற்சிகளும் நிகழ்கின்றன. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைப் பாதுகாத்து, ஆபத்துகளில் மூழ்கி, இயற்கையைவிட்டு அழிவதற்கான வாய்ப்புகளும் தொடர்கின்றன. பாதுகாப்பிற்கும் அழிவிற்கும் இடையிலான போர்கள் சமூகப் பண்பாட்டு வாழ்வியலில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
” பொருளாதார அடித்தளம் மாறுதல் அடைகிற பொழுது, அதன் மீது எழுப்பப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேற்கட்டுமானம் முழுவதும் வேகமாக மாற்றப்படுகிறது. இந்த மாறுதல்களைக் கவனிக்கும் காலத்தில் இரண்டைளும் அதாவது, ஒரு புறத்தில் இயற்கை அறிவியலை எவ்வளவு கணக்காக வரையறுக்க முடிகிறதோ, அவ்வளவு கணக்காக வரையறுக்கப்படக் கூடிய உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பௌதீக மாறுதலையம் – இன்னொரு புறத்தில் சட்டம், அரசியல், மதம், அழகியல், தத்துவம் முதலான – சுருக்கமாகச் சொன்னால் சித்தாந்த சீதியான வடிவங்களையும் – எப்பொழுதும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இந்தச் சித்தாந்த வடிவங்களுக்குள்ளேதான் இந்த மோதல் பற்றிய உணர்வு மனிதர்களுக்கு ஏற்பட்டு ஒரு முடிவைக் காணும்வரை போராடுகிறார்கள்.” (ஸ்டாலின்,ஜே.வி.2013(2001):55)
இந்தப் போர்களின் உயிரோட்டமான இயக்கம் இலக்கியம். இலக்கியப் போர்க்களத்தில் படிப்பாளர்களும் படைப்பாளர்களும் விருப்பு வெறுப்புகளைக் கடந்த பொறுப்பாளர்களாவர். ஏனெனில் இலக்கியம் வெறும் திரைச்சித்திரம் அல்ல, மனித வாழ்வியலின் இதயத்துடிப்பு. உயிரோட்டமான போர்க்களத்தில் நாம் பொறுப்பாளர்களாக இல்லாவிட்டால் பலியாகிப்போதல் எளிதாகிவிடும். எனவே இலக்கியத்தை வெறும் பார்வையாளர்களாகக் கடந்து செல்லுவது கூடாத காரியமாகும். சமூக அக்கறையுள்ள படைப்பாளர்களும் படிப்பாளர்களும் இலக்கியத்தை வாழ்வியல் சார்ந்த பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும். இலக்கிய அறிவியலின் பொறுப்பாவது சமூக அழிவிற்கு பாடம் புகட்டி மேன்மையடைவதும், சமத்துவம் நோக்கி வெற்றியடைந்து சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதும் ஆகும். (சிவக்குமார்,கே.2016:75)
நாட்டில் இலக்கியங்கள் இருந்தால் அது நாகரிகத்திற்கு, அறிவு வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, முற்போக்கு மாறுதலுக்கு உதவிட வேண்டும். (பெரியார்.2017:531)
இத்தகைய பொறுப்பை சாதிப்பதற்கு சுற்றி வளைக்கும் பார்வைகள் அவசியப்படுகின்றன. இத்தகையப் பார்வைகள் இலக்கியம் பற்றிய நமது சமூக அறிவையும் உணர்வையும் வளப்படுத்தும். வாழ்வை நெறிப்படுத்தும்.
1. மனிதவரலாற்று படிநிலை
மனித வரலாறானது சமூக உற்பத்தி முறையியலின் அடிப்படையில் எட்டு படிநிலைகளாக அமைகிறது. சமூக உற்பத்தி முறையியல் என்பது சமூக பண்பாட்டை முழுமையாகச் சுமந்திருக்கின்ற அடித்தளமாகும். சமூகப் பண்பாடு என்பது சமூகளாவிய நிறுவனங்களின் முழுமையாகும். (சிவக்குமார்,கே.2016:8) இம்முழுமை பற்றி பண்பாட்டு உறவுகள் என்ற தலைப்பில் அறியப்போகிறோம். சமூக உற்பத்தி முறையியலும் சமூகப் பண்பாட்டியலும் இணைந்ததே சமூக அறிவு ஆகும். இலக்கியம் படைப்பவருக்கும் படிப்பவருக்கும் சமூக அறிவு இன்றியமையாததாகும். சமூக அறிவின் முழுமை பற்றி அறிவெனும் பெரும் பசி என்ற கட்டுரையில் வரைபடத்துடன் விவரித்துள்ளோம். இலக்கிய அறிவியல் குறித்த நமது சிந்தனைக்காக அவ்வரைபடம் இணைக்கப்படுகிறது. மேலும் சமூக உற்பத்தி முறையியல், சமூகப் பண்பாட்டியல் குறித்து அறிவெனும் பெரும் பசி என்ற கட்டுரையின் விவரிப்புகளை இலக்கிய அறிவியலின் அவசியம் கருதி முழுமையாகக் கையாள்கிறோம். (புதியவன் 2015:45-49)
சமூக உற்பத்தி முறையியல் என்பது சமூகத்தில் நிகழும் சமூகப் பொருளுற்பத்தி பற்றிய அறிவாகும். அதாவது உழைப்பில் இருந்து மனிதன் தோன்றினான். உற்பத்தியில் இருந்து சமூகம் தோன்றியது. பொருளாதார உற்பத்தியே சமூகத்தின் இதயத்துடிப்பு. சமூகம் உயிர் வாழ உற்பத்தி தொடர்ந்து நிகழ வேண்டும். உற்பத்தி நின்றுவிட்டால் சமூகம் இறந்துவிடும். எனவே, சமூகப் பொருளாதார உற்பத்தி எப்படி நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது? ஒரு சமூகம் எத்தகைய மனிதக் கூட்டத்தால் உற்பத்தியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது? எத்தகைய அறிவும், ஆற்றலும், அனுபவமும் நிறைந்த மனிதர்களால் உற்பத்தி நிகழ்கிறது? எத்தகைய இயற்கை வளங்களைக் கொண்டு உற்பத்தி நிகழ்த்தப்படுகிறது? எத்தகையக் கருவிகளும் அறிவியல் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன? உழைப்பாளர்கள் உற்பத்திப் பொருட்களை எத்தகைய முறையில் பகிர்ந்துகொள்கிறார்கள்? உற்பத்திச் சாதனங்கள் மீதும், உற்பத்திப் பொருட்கள் மீதும் உழைப்பவர்களுக்கு எத்தகைய உரிமை நிலவுகிறது? சமூக உற்பத்தியில் நிகழ்கின்ற உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகைய விளைவுகளை உருவாக்கப் போகின்றன? இவற்றைப் பற்றிய அறிவே சமூக உற்பத்தி முறையியல் ஆகும். இதனை சமூகத்தின் அடிக்கட்டுமானம் என்பதாகசமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது. இந்தியச் சூழலில் சாதியக் குலத்தொழில் பற்றிய அறிவும் சமூக உற்பத்தி முறையில் இன்றியமையாததாகும். (சிவக்குமார்,கே.2016:8)
இவற்றின் அடிப்படையிலேயே மனித சமூகத்தின் முழுமையான வரலாறு கட்டமைந்துள்ளது. சமூக உற்பத்தி முறையியலின் வளர்ச்சி மனிதகுல வரலாற்றை எட்டு நிலைகளாகக் கட்டமைத்துள்ளது. சிவக்குமார் அவர்களது ஆய்வேட்டில் குறிப்பிடப்படுகின்ற சமூகப் பொருளாதார படிமலர்ச்சியின் ஆறு கட்டங்களும் மேலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இக்கட்டுரையில் மனிதகுல வரலாற்றின் எட்டு நிலைகளாக விளக்கம் பெறுகின்றது (சிவக்குமார்,கே.2016:223)
சமூக உற்பத்திமுறையியலின் வளர்ச்சி பற்றிய துல்லியமானக் குறிப்புகளை அறிவதற்கு
1.சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள், (புதியவன். 2017:30-33)
2.புராதனம் முதல் சோசலிசம்வரை (புதியவன். 2019 : https://puthiyavansiva.blogspot.com/2019/05/blog-post_27.html )
ஆகிய கட்டுரைகளை அணுகவும்.
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)
1.1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
காடுகளில் வாழ்ந்த மனித மூதாதையர்களிடமிருந்து மனிதர்கள் பரிணமித்தார்கள். மனிதர்களின் தாய் கூட்டத்தை வழநடத்தினாள். ஆண்கள் பெண்கள் அனைவரும் பாகுபாடின்றி உழைத்தார்கள். உழைப்பு என்பது பெரும்பாலும் பொருள்களைப் புதிதாக உற்பத்தி செய்கின்ற நடவடிக்கைகளாக அமையவில்லை. காடுகளில் கிடைக்கின்ற காய், கனி, கொட்டை, கிழங்கு, இலை, தேன், இறைச்சி போன்ற பொருட்களை சேகரிக்கின்ற நடவடிக்கைகளாகவே அமைந்தன. வேட்டைக் கருவிகளைக் கண்டடையாதக் காரணத்தால் பெரும்பாலும் வேட்டையாடுவதில் ஈடுபடவில்லை. சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மிக எளிய உயிரினங்களைக் கொன்று சேகரித்திருக்கலாம். ஆனால் இத்தகைய வேட்டை துணை தொழிலாக மட்டுமே இருந்திருக்கின்றது. ஏனெனில் கூட்டத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்கின்ற ஆற்றலாக வேட்டைத் தொழில் தொடங்கியிருக்கவில்லை. ஆற்றலுள்ள வேட்டைக் கருவிகளைக் கண்டடைய பல தலைமுறை காலங்கள் பரிணமிக்க வேண்டியிருந்தன. அதுவரை காடு சார்ந்த பொருட்களைச் சேகரிப்பதே தாய்தலைமை சமூகத்தின் சாத்தியமான நடவடிக்கையாக அமைந்தது. இலை தழைகள், நார்கள், மரப்பட்டைகள் போன்ற பொருட்களால் உருவாக்கப்பட்ட சேகரிப்புக் கருவிகளே மனிதர்கள் பயன்படுத்திய ஆரம்பகாலக் கருவிகளாக இருந்திருக்க முடியும். இதற்கான ஆதாரங்களை தொல்லியல் துறையில் பெற முடியாதது வரலாற்றின் பலவீனமாகவே உணர முடிகின்றது. ஏனெனில் கற்கருவிகளைப்போல காலத்தால் நீடித்திருக்கும் ஆற்றலை இத்தகைய சேகரிப்புக் கருவிகள் பெற்றிருக்கவில்லை.
மறுஉற்பத்தியைச் சுட்டும் கருத்தாக்கம் பெண்பால் தொழிற் பாகுபாட்டில் காணப்படுவதை புரோவர் இனங்காண்கிறார். பெண்கள் செய்யும் புழங்கு பொருட்கள் பாய், கூடை, முறம், ஓலைப்பெட்டி போன்றவை நீண்ட காலம் உழைக்காதவை. (பக்தவத்சலபாரதி.2005:347)
நவீன காலத்திலும்கூட பெரும்பாலும் பெண்கள் உற்பத்தி செய்கின்ற மூங்கில் கூடை, நார் பை, முறம் போன்ற பொருட்கள் காலத்தால் நீடிக்காமல் விரைந்து அழிந்துவிடுகின்றன. அவை மீண்டும் மீண்டும் மறுஉற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களாகவே இருந்திருக்கின்றன. எனவே வரலாற்று அறிஞர்களுக்கு தாய்தலைமை சமூகத்தின் காடுசார்ந்த பொருட்சேகரிப்புக் கருவிகள் கிடைக்காத காரணத்தினால், மனித வரலாறை கற்கருவிகளின் வேட்டை நாகரிகத்திலிருந்து தொடங்குகிறார்கள். இவர்களின் இவ்விளக்கங்களை வரலாற்று விடுபடுதலாகவே கருத வேண்டியுள்ளது. ஏனெனில் மனித இனம் தோன்றும்போது வேட்டை உயிரினமாக தோன்றியிருக்கவில்லை. ஆற்றலுள்ள வேட்டைக் கருவிகளைக் கண்டடையும்வரை மனிதர்கள் தாயின் அரவணைப்பில் காடுசார்ந்த பொருட்சேகரிப்பில் ஈடுபட்டு வாழ்ந்துள்ளார்கள். தாய் தலைமையின் இயற்கையால் மனித வாழ்க்கை வழிநடத்தப்பட்டுள்ளது. வேட்டை நாகரிகம் தோன்றி கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமாக வளர்ந்து தந்தையதிகாரச் சமூகமாக கட்டமையும்வரை தாய்தலைமை சமூகமே மனித வரலாற்றுக் காலத்தில் பெரும்பகுதியாக இருந்துள்ளது. தாய்தலைமை சமூகம் பற்றி இரண்டு வசன இலக்கியங்களில் விவரித்துள்ளோம்.
1.காதல் வரலாறு (புதியவன்.மே 2016:20-25)
2.காதலிலிருந்து கடவுள் வரை. (புதியவன்.டிசம்பர்2016:29-37)
தாய்தலைமை சமூகத்தின் வாழ்வியலையும் தந்தை அதிகாரச் சமூகம் தோன்றியக் காரணிகளையும் இக்கட்டுரைகளில் உணரலாம்.
1.2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
காடுசார்ந்த பொருள் சேகரிப்பில் வாழ்ந்த மனிதர்கள் படிப்படியாக இயற்கையில் கிடைத்த கற்களை தற்காப்பிற்கான கருவிகளாகவும் வேட்டையாடுவதற்கான ஆயுதங்களாகவும் பயன்படுத்தும் அறிவைக் கண்டடைந்தனர். கருவிகளைப் பற்றிய அறிவு மனிதர்களின் செயல்களைத் தொடர்ந்து செதுக்கியதால் கருவிகள் படிப்படியாக நவீனமடைந்தன. வேல், வில், அம்பு போன்ற நவீன வேட்டைக் கருவிகளால் வேட்டையாடுதல் முதன்மையானத் தொழிலாக உருமாறத் தொடங்கியது. மனிதர்கள் ஒன்றுபட்டு திட்டமிட்டு வேட்டையாடும் பக்குவத்தை அடைந்தார்கள். மனிதர்களின் தாய் இயல்பாக வழிநடத்தினாள். வேட்டையில் கிடைத்தப் பொருட்களைத் தாயின் அரவணைப்புடன் பரிமாறிக்கொண்டார்கள். வேட்டை முதன்மைத் தொழிலானதால் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு துணைத் தொழிலாக உருமாறியிருந்தது. (புதியவன் 2017:31-32)
1.3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
வேட்டை நாகரிகத்தின் விளைவாக கால்நடை வளர்ப்பு முறை தோன்றியது. காடுசார்ந்த பொருள் சேகரிப்பிலும் வேட்டையாடுதலிலும் மனிதர்கள் தங்களது சமூகத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் மேன்மையடைந்தனர். ஆனால், சமூகச் சொத்துக்கள் உருவாக்கம் பெறவில்லை. அதாவது, தேவைக்கு அதிகமானப் பொருட்களைச் சேகரித்துக் குவிக்கின்ற நிலைமை உருவாகவில்லை. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் இத்தகைய நிலைமை மாறத்தொடங்கியது.
வேட்டையாடப்பட்ட மிருகங்களின் குட்டிகள் மனிதர்களின் கால்களைச் சுற்றிவந்த அனுபவங்களில் மந்தை தொழில் உருவெடுக்கத் தொடங்கியது. குட்டிகளை வளர்த்து மந்தையாக பராமரிக்கும் அறிவை படிப்படியாக கண்டடைந்தார்கள். கால்நடை வளர்ப்பு முதன்மைத் தொழிலாக உருவெடுத்ததால் வேட்டையாடுதலும் காடுசார்ந்த பொருள் சேகரிப்பும் துணை தொழில்களாயின. உணவிற்காகவும் வேட்டைக்காகவும் மனிதர்கள் காடுகளில் ஓடித்திரிய வேண்டிய அவசியம் குறைந்து போயிற்று. தேவைக்கு அதிகமான இறைச்சிகள் கால்நடை மந்தைகளாகக் குவியத் தொடங்கின. கால்நடை மந்தைகள் சமூகச் சொத்துக்களாக உருவெடுத்தன.
சமூகச் சொத்துக்களைத் தாயின் தலைமைப் பண்பே இயல்பாக வழிநடத்தியது. கால்நடைகளைப் பராமரிப்பதற்கு மேய்ச்சல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்கள். மனிதர்கள் தங்கள் கால்நடைகளுடன் காடுகளை வலம் வரத் தொடங்கினார்கள். சமூகச் சொத்துக்கள் உழைப்பை எளிமைபடுத்தியதால் ஓய்வுக்கால உணர்வு உரமேறியிருந்தது. ஓய்வுக்காலம் மனிதர்களின் புதிய தேடல்களுக்கு வழியமைத்தது.
தேடல்களுடன் மேய்ச்சலில் ஈடுபட்ட மனிதர்களுக்கு துல்லியமான சிந்தனைகளும் அடர்த்தியானக் கற்பனைகளும் விரிவடைந்தன. பயணங்களால் மனித எண்ணங்களும் உணர்வுகளும் உரமேறிக்கொண்டிருந்தன. மேய்ச்சல் அனுபவங்களில் மண்ணில் தலைகாட்டி வளர்கின்ற இளம் பயிர்களைக் கண்டுணர்ந்தனர். தாவரங்களின் வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவைக் கண்டடைந்தனர். கால்நடைகளுக்குத் தேவையானப் பயிர்களை விதைத்து பயிரிடும் அறிவைக் கண்டடைந்தனர். தாய்தலைமை சமூகத்தின் மக்களால் மேய்ச்சலுக்கு பயன்படும் வகையிலான தொடக்கநிலை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது.
மேய்ச்சலுக்கு மையமான இடத்தில் குடியேறி நிலைத்து வாழப்பழகினர். குடியமர்ந்த இடத்தை மையமாகக் கொண்டு மேய்ச்சலுக்கான பயிர் தொழிலிலும், மேய்ச்சல் தொழிலிலும், மந்தை பராமரிப்பிலும் ஈடுபட்டனர். காடுசார்ந்த பொருள் சேகரிப்பும் வேட்டையும் முக்கியமற்றுப் போயின. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் நிலைபெறத் தொடங்கியது. இந்த நாகரிக காலத்தில் ஏற்பட்டுள்ள சமூகச் சொத்துக்களின் அதிகரிப்பும் பாலுறவு உரிமைகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களும் தந்தையதிகாரச் சமூகம் உருவெடுக்க வழியமைத்தன. (புதியவன்.மே2016:22)
வரைமுறையற்ற பாலுறவு உரிமையைக் கடந்து தாய் பிள்ளை மீதான பாலுறவு உரிமை தடை, உடன் பிறந்தவர் முதல் தூரத்து சகோதர சகோதரிகள் வரையிலான பாலுறவு உரிமை தடை போன்ற தடைகளைக் கடந்து, இருவேறு கூட்டத்து மனிதர்கள் பாலுறவு உரிமைகளில் ஈடுபடத் தொடங்கினர்.இதற்கான வரலாற்றுக் காரணங்களை காதல் வரலாறு என்ற வசன இலக்கியத்தில் விவரித்துள்ளோம். (புதியவன்.மே 2016:20-25)
இரு வேறு கூட்டத்து மனிதர்களுடனான பாலுறவு உரிமையால் ஒரு சமூகத்தின் சொத்துக்களை மறு சமூகத்தின் மனிதர்கள் உரிமை கொண்டாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார்கள். தாயின் தலைமைப்பண்பு இரு கூட்டத்தாரையும் ஒரே சமூகமாக அரவணைத்தது. ஆனால் சமூகச் சொத்துக்கள் மீதான புதிய மனிதர்களின் உரிமையை ஆண்கள் வெறுத்தார்கள். தாய்தலைமையின் பராமரிப்பிலிருந்து சமூகச் சொத்துக்களைப் பறிக்க முயன்றார்கள். அவர்களின் முயற்சிக்கு இரண்டு கண்டுபிடிப்புகளை ஆதரவாக்கினார்கள்.
1.சமூகச் சொத்துக்கள் ஆண்களின் அதிகபட்ச உழைப்பால் உருவாகின்றன. பெண்களின் சமூக உழைப்பு குறைந்தபட்சமாக உள்ளது. ஏனெனில் ரத்தப் போக்கு காலத்திலும் கற்பக் காலத்திலும் உழைப்பில் ஈடுபட முடிவதில்லை. ஆகவே ஆண்களே சமூகச் சொத்துக்களுக்குத் தலைமையேற்க வேண்டும். (சிவக்குமார்,கே.2016:84)
2.மனிதர்களைப் பெற்றெடுக்கும் பெண்கள் இனப்பெருக்க தெய்வத்தின் அருளால் குழந்தைகளைப் பெறுவது இல்லை. மாறாக ஆணுடனான பாலுறவு உரிமையால் மட்டுமே குழந்தைகளைப் பெறுகிறார்கள். விதை இல்லாமல் பயிர் இல்லை என்பதுபோல ஆண்கள் விதைக்காமல் பெண்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே சமூக வாரிசுகளாகக் குழ்ந்தைகளைப் பெற்றுத்தந்த பெண்கள் கொண்டாட்டத்திற்கு உரியவர்கள் அல்ல என்பதாக வாதிடுகிறார்கள். (புதியவன்.டிசம்பர்2016:35)
தாய் தலைமையின் மீது ஆண்கள் வெறுப்பை தொடர்ந்து உமிழ்ந்தார்கள். உமிழ்தலிலிருந்து ஆணதிகாரச் சமூகம் உருவெடுக்கத் தொடங்கியது. தாய்க்கு மறுப்பாக தந்தை அடையாளத்தை ஏற்றுக்கொண்டது. தாய்தலைமையின் சமூகச் சொத்துக்கள் தந்தையதிகாரத்தின் தனிச்சொத்துக்களாக அங்கிகாரம் பெற்றன. சொத்தாதிக்கமுள்ள ஆண்களுக்கு சொத்தாதிக்கமற்ற அனைவரும் அடிமைகளாகப் பணிந்தனர். பெண்களே முதன்மை அடிமைகளாகப் பணிந்தார்கள். தாய்தலைமைப் பண்பிலிருந்து படிப்படியாக பாலுறவு அடிமையாகவும் பொருளாதார அடிமையாகவும் முடங்கிப்போயினர். தாய்தலைமையின் வீழ்ச்சியும் தந்தையதிகாரத்தின் நீட்சியும் கால்நடை மந்தைவளர்ப்பு நாகரிகத்தில் தவிர்க்க முடியாத அநாகரிகங்களாக அடையாளம் பெற்றன. கால்நடை மேய்ப்பாளர்களின் அரசராகிய செங்கோல் அரசர்கள் சமூகத்தை ஆட்சி செய்தனர். வரலாற்றின் புதிய கட்டங்களுக்கும் தந்தை அதிகாரமே முகமாக நிலைக்கத் தொடங்கியது.
1.4.விவசாய நாகரிகம்
மந்தை வளர்ப்பில் தோன்றிய தந்தையதிகாரச் சமூகம், தனது ஆணாதிக்கப் பண்புகளால் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தையும் நிலைத்த அடிமைகளாக உருமாற்றியிருந்தது. பெண்மையின் சகமனிதத்துவம் மூவகை உரிமை இழப்புக்களால் கருவறுக்கப்பட்டிருந்தது. ஆணின் சொத்தாக முடங்கியதில் சுயப் பொருளாதார உரிமையை பறிகொடுத்தனர். ஆணின் பாலிச்சைப் பொருளாக ஒடுங்கியதில் பாலுறவிற்கான சுய தேர்வு உரிமையை இழந்தனர். ஆணாதிக்கக் கருத்தாக்கங்களால் சுயசிந்தனை உரிமைகள் அடக்கம் செய்யப்பட்டன.
பெண் சமூகத்தின் உடலுக்கும் மூளைக்கும் உடைக்க முடியாதப் பெரும் பூட்டை தந்தையதிகாரம் பூட்டிற்று. தந்தையதிகாரத்தின் வேர்களில் முறிக்கப்பட்ட தாய்தலைமை மட்கிப்போனது. ஆணதிகாரச் சமூகத்தின் அடிமைச் சொத்துக்களாக பெண்கள் நிலைத்துவிட்டார்கள். பெண்களின் சமூகச்சிந்தனை தந்தையதிகார எல்லைகளுக்குள் வட்டமிடப் பழகியது. ஆணின் இச்சைக்கு மசிகின்ற அலங்கார பொம்மையாகவும், வாரிசை பெற்றுத்தருபவளாகவும், ஆணின் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைப்பவளாகவும் பெண்கள் வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கை முறையே பெண்ணிற்கான சமூக மரியாதையாக அங்கீகாரம் பெற்றன.
சமூகத்தின் சரிபாதிப் பெண்களின் உணர்வும் அறிவும் செயலும் முடக்கப்பட்டன. மறுபாதி ஆண்களுக்கோ பிரபஞ்சம் தழுவிய அளவில் உந்தப்பட்டன.
இயற்கை, சமூகம், பண்பாடு, தத்துவம், சொத்தாதிக்கம், போர், புதிய கருவிகள், புதிய ஆயுதங்கள், கண்டுபிடித்தல், கண்டு படைத்தல், முக்காலச் சிந்தனை என ஆண்களின் வாழ்க்கை வட்டம் விரிவடையத் தொடங்கின. பெண்ணடிமைத்தனம் என்ற அநாகரிகத்தைப் பற்றிக்கொண்டு தந்தையதிகாரச் சமூகம் முன்னேறிக்கொண்டே சென்றது. கால்நடைகளின் மேய்ச்சலுக்கான விவசாயத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தன. புதிய உலோகங்கள், இரும்புக் கருவிகள், புதிய கைவினைத் தொழில்கள் போன்ற கண்டுபிடிப்புகள் மேய்ச்சலுக்கான விவசாய தொழில்நுட்பத்தை படிப்படியாக பரிணமிக்கச் செய்தன.
மேய்ச்சலுக்கான விவசாய தொழில்நுட்பங்களின் பரிணமிப்பு மனித உணவுத் தேவைகளுக்கான விவசாயத் தொழில்நுட்பங்களாக நிலைபெற தொடங்கின. விவசாய நிலங்களே முதன்மைச் சொத்துக்களாகக் கருதப்பட்டன. செங்கோல் அரசர்களிடமிருந்த அரசு படிப்படியாக வேளாண் விவசாயத்தை ஆட்சி செய்கின்ற நில வேந்தர்களின் அரசாக நிலைபெறத் தொடங்கியது.(புதியவன்.2017:31)
1.5.உற்பத்தியின் மீதாக வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
தந்தையதிகாரச் சமூகத்தில் சொத்தாதிக்க ஆண்களின் சொத்துக்கள் பெருகியிருந்தன. விவசாய கைவினைப் பொருட்கள் சொத்துக்களாகக் குவியத் தொடங்கின. பயண அனுபவங்களில் முதிர்ச்சி பெற்ற சொத்தாதிக்க ஆண்கள், வணிக நடவடிக்கையைக் கண்டடைந்தனர். பொருள்களின் துணை மதிப்பாக பணத்தைக் கண்டறிந்தனர். காடுசார்ந்த பொருட்களும், கால்நடை மந்தைகளும், விவசாயப் பொருட்களும், கைவினைப் பொருட்களும் பணத்தின் துணையுடன் பரிமாற்றம் பெற்றன. பொருள் பரிமாற்றத்தை தொழிலாக வளர்த்தவர்கள் வணிகர்களாயினர். உற்பத்தியானப் பொருட்களை வணிகர்கள், வணிகத்திற்காகப் பெற்று வணிகத்திற்காக விற்றார்கள். சமூகத் தேவையின் அடிப்படையில் உற்பத்தியான பொருட்களைப் பரிமாறுவதற்கு வணிக நடவடிக்கைகள் இன்றியமையாததாக அமைந்தன. சமூகளாவிய நிலையில் வணிக நாகரிகம் விரிவடைந்தது.(புதியவன்.2017:31)
1.6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல்
விவசாய நாகரிகத்தின் சொத்திக்கத்தைவிட வணிக நாகரிகத்தின் சொத்தாதிக்கம் வலிமை பெற்றிருந்தது. விவசாய நிலங்களை சொத்தாக வைத்திருப்பதைவிட அவற்றில் உற்பத்தியாகின்ற பொருட்களை வாங்கி விற்பதில் கிடைக்கும் இலாபங்கள் வலிமையான சொத்தாதிக்கமாக உருமாறியிருந்தன. சமூகத் தேவையிலான பொருட்கள் வணிக இலாபத்திற்காகவே திட்டமிட்டு உற்பத்தி செய்யப்பட்டன. சமூகத் தேவையிலான பொருட்கள் சரக்குகளாக உற்பத்தி செய்யப்பட்டு பொருட்களாக விற்கப்பட்டன. பொருட்களை இலாபத்திற்காகவே வாங்கவும் விற்கவும் செய்தார்கள். நேரடி பயன்பாட்டிற்காக அல்லாமல் இலாபத்திற்காக உற்பத்தியாவதும் வாங்கப்படுவதுவும் சரக்குகளே ஆகும். நேரடி பயன்பாட்டிற்கு உட்படும்போதே சரக்குகள் பொருள்களின் தன்மையை அடைகின்றன. பொருள்களின் துணை மதிப்பாக உருப்பெற்ற பணம் சரக்குகளின் முதல் மதிப்பாக நிலைப்பெற்றுவிட்டது. பொருளுக்காகப் பணம் என்ற நிலை மாறி பணத்திற்காகப் பொருள் என்ற நிலை உருவெடுத்திருந்தது. வணிக இலாபத்திற்காகவே சமூகத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் உற்பத்தியாகின. சமூகப் பொருளுற்பத்தியைக் குவிப்பதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளும், நவீன இயந்திரத் தொழில்நுட்பங்களும் முடுக்கிவிடப்பட்டன. ஏராளமான வணிகக் குழுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு இலாப வேட்டையில் ஈடுபட்டன. மனிதர்களின் சமூகத் தேவையை புறக்கணித்துவிட்டு, இலாபத்திற்காக சமூகப் பொருளுற்பத்தியைத் தொடங்கிய கொடும் நாகரிக காலம் இக்காலக்கட்டத்தில்தான் நிலைபெறத் தொடங்கியது. .(புதியவன்.2017:31-32)
இந்திய சமூகத்தில் இக்காலக்கட்டம் உருவெடுக்காமல் தடுக்கப்பட்டது. வணிக நாகரிகத்தின் எழுச்சியை முடக்கி, விவசாய நாகரிகத்தின் நில வேந்தர்களே சமூக அதிகாரத்தில் நீடித்திருந்தார்கள். நில வேந்தர்களுக்கு ஆதரவாக ஆரியர்கள் உருவாக்கிய அநாகரிகமான வர்ணாசிரமக் கோட்பாடே இதனை சாதித்தது. வர்ண சாதிப் படிநிலைகளே இந்திய சமூகத்தின் வணிக எழுச்சியைத் தடுத்து முடக்கியது. இந்த வரலாறை இரண்டு வசன இலக்கியங்களில் விவரித்துள்ளோம்.
1.சாதி ஸ்வாக (புதியவன்.2018.)
2.இந்தியாவில் சாதிகளின் சதி (புதியவன்.2019.)
1.7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்
நிதி மூலதனப் பிரிவு என்பது வணிக உற்பத்தியின் முதிர்ந்த பருவம் ஆகும். இந்தப் பருவத்தில் வணிகமானது ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிகாரம் செய்கின்ற இலாப வெறிபிடித்த நிறுவனங்களின் இயக்கமாகக் கட்டமைகின்றது. இத்தகைய இயக்கமானது சமூக அதிகாரத்தின் மூன்று மையங்களின் ஒன்றிணைவாகும். 1.தொழிலுக்கான மூலதனம் 2.வங்கி 3.அரசு. இந்த மூன்றும் ஒன்றிணைந்த வடிவமே இலாபவெறி பிடித்த நிறுவனங்களின் இயக்கமாகும். தனது இலாப வெறிக்காக எத்தகைய அழிவையும் முன்னின்று நிகழ்த்துகின்றன. சமூகத்தேவைகளைப் புறக்கணித்து இலாப வெறியின் அடிப்படையில் மட்டுமே சமூக பொருளுற்பத்தியை நிகழ்த்துகின்றன.
“மூலதனம் இலாபமின்மையை அல்லது கறைந்த இலாபம் என்ற நிலையை ஒதுக்குகிறது. போதுமான இலாபம் கிடைத்தால் மூலதனம் மிகவும் துணிவு பெறுகிறது. 10 சதவீதம் உறுதியான இலாபம் அது எங்கு வேண்டுமென்றாலும் முதலீடு செய்யப்படுவதை உறுதி செய்யும். 20 சதவீதம் உறுதியான இலாபம் ஆர்வத்தை தூண்டும். 50 சதவீதம் கிடைக்குமென்றால் அது திமிராய் நடந்துகொள்ளும். 100 சதவீதம் கிடைக்குமென்றால் எல்லா மனித நியதிகளையும் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிவிடும். 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யத் தயாராகிவிடும். மூலதனத்தின் உடைமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும்கூட எந்த நச்சுப் பரிட்சையிலும் துணிந்து இறங்கும்” (அப்துல்.நவ.2017:11)
தமது நிறுவனங்களின் சரக்குகளை நுகர்பவர்களாக மட்டுமே மனிதர்களை மதிக்கின்றன. மாறாக, மனிதர்களின் சமூக உற்பத்திக்கான உழைப்பை அவமதிக்கின்றன.
இலாப வெறியின் நலன்களுக்காக வேலையில்லா திண்டாட்டத்தைக் கூர்மைப்படுத்துகின்றன. மக்களை உழைப்பூதியப் போதாமைக்கு ஆட்படுத்தி, வாங்கும் சக்தியற்றவர்களாக உருமாற்றுகின்றன. வாங்கும் சக்தியற்ற மக்களின் முடக்கத்தால் உற்பத்தியான சரக்குகளைத் தேக்குகின்றன. சரக்குகளின் தேக்கத்தால் சமூக பொருளுற்பத்தியை நிறுத்தி சமூகு வேலையிழப்புகளைப் பெருக்குகின்றன.
தேக்கத்தை சமாளிப்பதற்காக சமூகத்தில் செயற்கைத் தேவைகளை உருவாக்குகின்றன. தேவையற்றப் பொருட்களாயினும் பொய்யானத் தகவல்களின் கவர்ச்சிகர விளம்பரங்களால், ஆழ்மன தூண்டுதலுக்கு ஆளாக்கி, வாங்கும் நிலமையை நிர்பந்திக்கின்றன. வாங்கும் சக்தியற்றவர்களுக்காக கடன் முறையில் கொடுத்து, சுயமரியாதையுள்ள மனிதர்களை கடனாளியாக உருமாற்றுகின்றன.
செயற்கைத் தேவைகளைக் கூர்மைப்படுத்துவதற்காக திட்டமிட்ட அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. உலகப் போர்களை நிகழ்த்துகின்றன. மறுவாழ்வுத் திட்டங்கள் என்ற பெயரில் இலாப வேட்டையில் ஈடுபடுகின்றன. ஒப்பந்தங்களின் வழியாக இலாப வெறியைப் புதுப்பித்துக்கொள்கின்றன. இலாப வெறியின் நனனுக்காகவே மனிதப் பண்பாட்டில் நுகர்வு வெறியைத் திணிக்கின்றன. தமது சரக்குகளை நுகர முடியாமல் இலாபவெறிக்குப் பயன்படாத மனிதர்களைப் பிணம் போன்று நடத்துகின்றன.
நுகர்வென்றால் தாய்போன்றும், சமூக நலனென்றால் பேய்போன்றும், ஒரே காலத்தில் இரு வேடமிட்டு கூத்திடுகின்றன. இலாப வெறியை எதிர்த்து சமூக நல மேன்மையை நோக்கியும், மக்களை முன்னேற்றுகின்ற சமூகவிஞ்ஞானச் சக்திகளை ஒழிக்க முடியாமல் திணறுகின்றன. சமூகநல சக்திகளைக் கண்டறிந்து ஒழிப்பதற்காக, பொய்யான சமூகநல அமைப்புகளுக்கு நிதி வழங்கி வளர்க்கின்றன. சமூகவிஞ்ஞானச் சக்திகளுக்கும் இலாப வெறிபிடித்த நிறுவனங்களுக்கும் இடையிலான சமூகப்போர் இறுதியை நோக்கி விரைகின்றன.
மக்கள் தலைமை முயற்சிகளும் உற்பத்தி சக்திகளும் தகுதியான வளர்ச்சியை எட்டாவிட்டால், இலாப வெறி விம்மி விம்மி எழும். இலாப வெறியின் விம்மல்கள் பேரழிவு நடவடிக்கைகளின் ஆற்ற முடியாதச் சமூகத் தழும்புகளாகக் காய்த்துவிடுகின்றன. தேசிய இனவெறி, மதவெறி, நிறவெறி போன்ற வழிமுறைகளில் பேரழிவை நிகழ்த்துகின்றன. முசோலினியின் பாசிசம், ஹிட்லரின் நாசிசம், சமகால மோடியின் இந்துத்துவம் ஆகியன இலாபவெறியின் உயிர் பிழைப்பு நடவடிக்கைகளாக உருப்பெற்ற பேரழிவு நடவடிக்கைகளே ஆகும்.
உற்பத்தி சக்திகளின் தகுந்த வளர்ச்சிகளும், மக்கள் தலைமைக்கான முயற்சிகளும், இலாபவெறியின் இதயத்துடிப்பை வெடித்துக் கொன்றாக வேண்டும். சமூகவிஞ்ஞானிகளால் உருப்பெற்றுவரும் மக்கள் தலைமை முயற்சிகளால் இதயம் வெடித்து சாவதா? அல்லது வெறும் மந்தைகளாகவே மக்களைப் பராமரித்து, இயற்கை அனுமதிக்கும் எல்லைவரை நீடித்து அழிவதா? இவற்றைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்ற சமூகப் பொருளுற்பத்தியில் தனது பாதுகாப்பிற்கான இலாப வெறியை நீடித்திருக்க முயன்று வருகிறது நிதி மூலதனப் பிரிவு.(புதியவன்.மே2019)
1.8.மக்கள் தலைமையின் கீழ் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்
இலாப வெறிபிடித்த நிறுவனங்களின் சமூக அதிகாரத்திற்கு எதிராக நிகழ்கின்ற சமூகவிஞ்ஞானப் போர்களால், மக்கள் தலைமை அரசுகள் உலகம் முழுதும் உருவாகத் தொடங்குகின்றன. மக்கள் தலைமை அரசு சமூக அதிகாரத்தை அடையத் தொடங்கியுள்ளதால், வணிக நடவடிக்கைகளில் இலாப வெறியை அடக்கத் தொடங்கியிருக்கின்றன. சமூகத்தேவையின் அடிப்படையில் மட்டுமே சமூகப் பொருளுற்பத்தியையும் பரிமாற்றத்தையும் திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கின்றன. மனிதர்களின் சமூக உழைப்பிற்கும் படைப்பாற்றலுக்கும் சமூகளாவிய மரியாதைகளை வழங்கியிருக்கின்றன. மனிதர்களின் அனைத்து சமூக உரிமைகளுக்கும் உத்திரவாதம் அளித்திருக்கின்றன.
அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், மனித வள மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தியிருக்கின்றன. மனிதர்களின் சமூக வேலை நேரத்தைக் சராசரியாகக் குறைத்து, சமத்துவ உலகம் நோக்கி முன்னேறுவதற்கான பண்பாட்டு முயற்சிகளை ஊக்கப்படுத்தியிருக்கின்றன. உலகளாவிய இலாபவெறி நிறுவனங்களுக்கு எதிராக, உலகளாவிய மக்கள் தலைமை அரசுகளின் ஒன்றியம் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. போர்களற்ற உலகை அடைவதற்காகத் தவிர்க்க முடியாதப் போர்களைத் தொடங்கியிருக்கின்றன. சமத்துவ உலகை அடைவதற்காக, மக்கள் தலைமை அரசுகளின் சமூகவிஞ்ஞானப் போர்கள் வீரியமடைந்திருக்கின்றன.
விடாமுயற்சியுடனும் படைப்பாற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் நிகழ்வுறும் இப்போர்களில், மக்கள் தலைமை அரசு வெற்றி காண வேண்டும். சமூகப் பொருளுற்பத்தியிலிருந்து இலாப வெறியை ஒழித்துக்கட்ட வேண்டும். ஏற்றத்தாழ்விற்கு மதிப்பே இல்லாத, சமத்துவச் சமூகம் நோக்கி முன்னேறுவதற்கு வசதியாக, சமூகத் தேவையின் அடிப்படையில் சமூகப் பொருளுற்பத்தியைக் கட்டியமைக்க வேண்டும். (புதியவன். 2017:32-33)
இது நிகழ்ந்தால் மட்டுமே மனித இனம் இயற்கையின் அங்கமாக நீடித்து தழைக்கும். இல்லாவிட்டால் நிதிமூலதனப் பிரிவின் இலாப வெறியால் இயற்கையின் நலன்கள் சூரையாடப்படும். உயிரினங்களின் சூழல் மண்டலம் பேரழிவிற்கு ஆட்படும். இயற்கையின் உயிரினப் பட்டியல்களிலிருந்து பெரும்பான்மை உயிரினங்கள் உதிர்ந்துவிடும். பேரழிவை ஊக்கப்படுத்திய மனித இனம் வரலாறு இல்லாமல் ஒட்டுமொத்தமாகப் புதைந்துவிடும். நிதிமூலதன அரசா? மக்கள் தலைமை அரசா? என்பது மனிதகுலத்திற்கு வாழ்வா? சாவா? பிரச்சனையாகும். இரண்டில் எந்தவொன்றும் சாத்தியப்படுவதற்கு வசதியாக இருக்கின்றது. சமத்துவ உலகை எட்டுதல் நோக்கி மக்கள் தலைமையை உந்துதலே, சமூகமேன்மையின் வரலாற்றுத் தேவையாக அமைந்துள்ளது. வரலாற்றுத் தேவையை நிறைவேற்றுதல் நோக்கி இலக்கிய அறிவியல் உந்தப்பட வேண்டும். (புதியவன். 2017:32-33)
2.பண்பாட்டு உறவுகள்
. பண்பாடு என்பது பண்படுத்துதல் ஆகும். மனித மூதாதையர்களிடமிருந்துத் தோன்றிய மனிதர்கள் இயற்கையைத் திட்டமிட்டு மாற்றத் தொடங்கினார்கள். இத்தகைய முயற்சியிலிருந்து மனித வரலாறு தொடங்குகிறது. மனித இனம் தன்னையும் தன் சமூகத்தையும் பண்படுத்துகின்ற முயற்சியே மனிதப் பண்பாடாகும். இத்தகையப் பண்படுத்துதல்கள் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. சமூக உற்பத்திமுறையியலை அடித்தளமாகக் கொண்டு பண்பாடு ஆறு தளங்களாகக் கட்டமைந்திருக்கின்றது. (சிவக்குமார்,கே.2016:8)
1.சமூக வாழ்வியல்
2.சமூக உள்ளத்தியல்
3.சமூகக் கருத்தியல்
4.தனிமனிதக் கருத்து நிலைப்பாடு
5.தனிமனித உலகப்பார்வை
6.தத்துவ அடிப்படை
இதனை சமூகத்தின் மேல்கட்டுமானம் என்பதாக சமூகவிஞ்ஞானம் விளக்குகின்றது.
2.1.சமூக வாழ்வியல்
சமூக வாழ்வியல் என்பது மனிதர்கள் இணைந்து வாழ்கின்ற செயலமைப்புகள் ஆகும். மனிதர்கள் இணைந்து வாழ்வதற்கு மூளையே முக்கியக் காரணம் என்கிறார்கள். இயற்கையுடன் இணைந்து எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாக வாழ முயன்றிருக்கின்றன. உயிரினங்களின் உடலமைப்பில் ஏதேனும் சிறப்புநிலை ஆற்றல் முக்கிய ஆயுதமாகச் செயல்பட்டுள்ளது. இத்தகைய ஆற்றல் இல்லாதவை உயிரின வரலாற்றில் மறைந்து போயுள்ளன. ஆற்றலுள்ளவை மட்டுமே தலைமுறை தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளன. கூரிய நகங்கள், பற்கள், கொம்புகள், ஓட்டத்தில் வேகம், பாய்ச்சலில் வீரம் என்பதாகச் சிறப்பு நிலை ஆற்றல்களைப் பட்டியலிட முடியும். ஆனால் மனித இனத்தின் சிறப்பாற்றலாக எதைக் குறிப்பிடுவது?
மனித மூளையே மனித இனத்திற்குச் சிறப்பாற்றலாக உருவெடுத்தது. வாழ்க்கைச் சூழல்களை ஆராய்ந்து, அவற்றைப் பற்றியக் கருத்துக்களை உருவாக்கிக்கொண்டு, கருத்துக்களின் அடிப்படையில் செயல்படும் ஆற்றல் மனித இனத்திற்கு மட்டுமே பொருந்தியது. ஆயினும் மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதச் சூழ்நிலைகளே நீடித்தன. இவற்றை எதிர்கொண்டு மனித இனம் சமாளிப்பதற்கு ஒற்றை மூளை போதவில்லை. மனிதக் கூட்டத்தின் மூளைகள் ஒன்றுபட்ட ஆயுதமாகச் செயல்பட வேண்டியத் தேவை இருந்தது. இந்தத் தேவையை வரலாறு நிறைவேற்றத் தொடங்கியது. மனிதர்கள் சகமனிதக் கூட்டங்களாக வாழத் தொடங்கினார்கள். இவற்றைச் சமூக விஞ்ஞானிகள் விவரித்து விளக்குகிறார்கள். இத்தகைய சமூக வாழ்க்கை பலவிதமான வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. வாழ்க்கை முறையில் பல்வேறு அமைப்புகளும் வடிவங்களும் உருவாகியுள்ளன.பாலுறவுஉரிமையின்வரையறை, குடும்பம், திருமணம், சடங்கு, சாதியக்கட்டுப்பாடுகள், சமயம், கல்வி, அரசு, இராணுவம், சட்டம், நீதி, காவல், சிறை, சுற்றுச்சூழல், இலக்கியம், கலை, அறிவியல், தொல்லியல், மொழியியல், வரலாற்றியல், விளையாட்டு, வர்க்கப்பிரிவு, இயற்கை விஞ்ஞானம், சமூகவிஞ்ஞானம் என்பதாகப் பட்டியல் நீண்டு செல்கிறது. இவற்றைப் பற்றிய அறிவே சமூக வாழ்வியல் ஆகும். இவற்றில் அரசு என்பதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒரு சமூகம் புரட்சி நிலை மாற்றம் அடைகின்ற தருணத்தில் மட்டும் அரசு தன் வரையறையை மீறுகிறது. அதாவது சமூக உற்பத்திமுறையில் அழுத்தம் செலுத்தும் பண்பிலிருந்து மாறி தீர்மானிக்கும் பண்புடன் இயங்குகிறது. (புதியவன்.ஜுன் 2015:34)
2.2 சமூக உள்ளத்தியல்
சமூக உள்ளத்தியல் பற்றிய புரிதலுக்கு அடிப்படையாக மனித மூளையைப் பற்றிய புரிதலை உருவாக்கிக் கொள்வோம். மனித மூளைக்கு இரண்டு பண்புண்டு. 1. எண்ணங்களின் உருவாக்கங்களைப் பாதுகாத்தல். இது ஆழ்மனதில் அளவிட முடியாதக் கருங்குழியாகச் செயல்படுகின்றது. இதனை உள்ளம், மனது போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறோம், 2. சிந்தித்துக் கருத்துக்களை உருவாக்குதல். இதனை அறிவு என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம். மனிதர்கள் சிந்தித்து உருவாக்கியக் கருத்துக்களைவிட, சிந்திக்கப்படாமல் ஆழ்மனக்குழியில் தொகுத்திருக்கின்ற எண்ணங்கள் அதிகம். மனித மூளையில் கவனித்துச் செய்கின்ற பதிவுகளைவிட கவனிக்காமல் செய்கின்ற பதிவுகள் ஏராளம்.
ஒரு எழுத்தை எழுதுகின்ற நேரத்தில் கடந்து செல்கின்ற வாகனச் சத்தம், மின்னல் வேகத்தில் பறக்கின்ற ஈ, மின்விசிறியின் சுழல் சத்தம், காற்றில் பறக்கும் நாள்காட்டிச் சத்தம், நாற்காலியின் அதிர்வு, கண்ணாடிக் கதவின் அசைவு ஆகிய அனைத்தும் மூளையின் ஆழ்மனக்குழியில் எண்ணங்களாகப் பதிவாகின்றன. ஆர்ப்பரிக்கின்ற பெருங்கடலாக எண்ணங்கள் இருக்கின்றன. சிந்தனைக் கப்பலில் நிதானமாகப் பயணிக்கின்றன கருத்துக்கள். ஆனால், மூளையில் பதிவாகும் எண்ணங்களுக்கும் சிந்தனையின் கருத்துக்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் எவை? வாழ்வியல் சூழலும் உலகளாவிய நிகழ்வுகளுமே காரணங்களாக அமைகின்றன.
எனவே, உலகம் முழுதும் வாழக்கூடிய மனிதர்கள் தங்களது வாழ்க்கைச் சூழலில் எத்தகைய எண்ணங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்? உலகளாவிய நிகழ்வுகளும் மனிதர்களது பங்கேற்பும் எத்தகைய எண்ணங்களை உருவாக்குகின்றன? இவற்றால் சமூக நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? சமூகத்தின் வாழ்க்கைத் தேவைக்கும், மனித எண்ணங்களுக்கும் இடையிலான உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகையவை? இவற்றைப் பற்றிய அறிவே சமூக உள்ளத்தியல் ஆகும்.
சமூக உள்ளத்தியலின் அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதரின் தனித்துவமான உள்ளத்தியலையும் விளங்கிக்கொள்ள முடியும். தனிமனிதரின் பிறப்பு, வளர்ச்சி, வாழிட சூழல், பல்வேறு வாழ்வியல் சந்தர்ப்பங்கள் எனப் பன்முகப் படிநிலையில் தனிமனித உள்ளத்தியல் கட்டமைகின்றன. இதனை விவரிக்கும் திட்டமின்றி சமூகத்தின் ஆழ்மனக்குழி பற்றிய அறிவியலோடு சுருங்கிக்கொள்வது பெருங்குறைதான். எனினும் சமூக அறிவு பற்றிய சமூகவிஞ்ஞான முயற்சியில் சமூக உள்ளத்தியல் பற்றிய விவரிப்பிலேயே தனிமனித உள்ளத்தியலை விளங்கிக்கொள்தல் போதுமானதாக உணர்கிறோம். எனவே இப்பெருங் குறையைக் கடந்துவர முயலவும். (புதியவன்.ஜுன் 2015:35)
2.3.சமூகக் கருத்தியல்
சமூகக் கருத்தியல் என்பது மனிதர்களின் அறிவாக்க இயக்கங்களின் தொகுப்புகளாகும். மனிதர்களின் ஒவ்வொரு செயலும் அறிவைத் தூண்டுகின்றன. எல்லா அறிவும் செயலைச் செதுக்குகின்றன. இத்தகைய அறிவும் செயலும் மனிதர்களின் கருத்துக்களால் கட்டமைகின்றன. உலகம் முழுவதும் வாழக்கூடிய மனிதர்கள் தங்களது செயல்களிலிருந்தும், பல்வேறு நிகழ்வுகளிலிருந்தும் எத்தகையக் கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்? எத்தகையக் கருத்துக்களுடன் தொடர்ந்து செயல்படுகிறார்கள்? சமூகத்தில் உருவாகிக்கொண்டே இருக்கின்ற பல்வேறு கருத்துக்களால் சமூக நிகழ்வுகளில் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? சமூகத்தின் வாழ்க்கைத் தேவைக்கும் உலகளாவியக் கருத்துக்களுக்கும் இடையிலுள்ள உடன்பாடுகளும் முரண்பாடுகளும் எத்தகையவை? இவற்றைப் பற்றிய அறிவே சமூகக் கருத்தியல் ஆகும். (புதியவன்.ஜுன் 2015:35)
2.4.தனிமனிதக் கருத்து நிலைப்பாடு
தனிமனிதக் கருத்துநிலைப்பாடு என்பது சமூகளாவிய நிலையில் ஒரு தனிமனிதரை மதிப்பீடு செய்கின்ற அறிவாகும். அதாவது தன்னையோ அல்லது ஒரு சகமனிதரையோ மதிப்பீடு செய்கின்ற அறிவாகும். ஒரு மனிதர் தனது செயலை எத்தகையக் கருத்துக்களைப் பற்றிக்கொண்டுச் செய்கிறார்? சமூகத்தின் பல்வேறு கருத்துக்களில் அவர் எத்தகையக் கருத்துக்களைச் சார்ந்தவராக இருக்கின்றார்? இவற்றைப் பற்றிய அறிவே தனிமனிதக் கருத்து நிலைப்பாடு ஆகும் (Individual Concept Stage). ஒரு நபர் நேர்மையாகப் பேசுபவரைப்போலத் தோன்றலாம். தான் இத்தகையக் கருத்து நிலைப்பாடு கொண்டிருப்பதாகச் சொல்லலாம். ஆனால், அவரது உணர்வுப் பூர்வமானச் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும். அவரது செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலுள்ள உடன்பாடுகளையும் முரண்பாடுகளையும் மதிப்பிடுவதன் மூலமாகவே அவரது கருத்து நிலைப்பாட்டை உறுதி செய்ய முடியும். (புதியவன்.ஜுன் 2015:35)
2.5.தனிமனித உலகப்பார்வை
தனிமனித உலகப்பார்வை என்பது கருத்துக்களை உருவாக்குகின்ற மனித நடவடிக்கைகளாகும். எல்லா உயிரினங்களும் உலகைப் பார்க்கின்றன. ஆனால் எல்லா உயிரினங்களுக்கும் கருத்துக்கள் உதிப்பதில்லை. மனிதர்களுக்கு மட்டுமே கருத்துக்கள் உருவாகின்றன. மனித உலகப்பார்வைக்கு தத்துவம் அடிப்படையாக இருப்பதால் மட்டுமே கருத்துக்கள் உருவெடுக்கின்றன. எனவே எல்லா உயிரினங்களின் உலகப்பார்வையிலிருந்தும் மனித உலகப்பார்வைக்கு தனிச்சிறப்பு இருக்கின்றது. தான் அல்லது ஒரு சகமனிதர் தன்னையும் இந்த உலகத்தையும் எத்தகையப் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? சிறிய நடவடிக்கை முதல் பிரபஞ்ச மாற்றங்கள் வரையிலான அவரது பார்வையின் புரிதல்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன? உள்ளூர் பிரச்சனை முதல் உலகளாவிய நிகழ்வுகள் வரை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்? இவற்றைப் பற்றிய அறிவே தனிமனித உலகப் பார்வையாகும். (புதியவன்.ஜுன் 2015:36)
2.6.தத்துவ அடிப்படை
தத்துவ அடிப்படை என்பதற்கு மனித உலகப்பார்வையின் அடிப்படை என்பது பொருள். ஏனெனில் மனிதர்களது உலகப்பார்வைக்கு தத்துவங்களே அடிப்படையாக இருக்கின்றன. அதாவது மனித உலகப்பார்வையின் புரிதல்கள் தத்துவத்திலிருந்தே தொடங்குகின்றன. இதனையேத் தத்துவ அடிப்படை என்கிறோம். உலகளாவியத் தத்துவங்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடிகின்றன. 1. அறிவெதிர் தத்துவம் (Nescience philosophy), 2. அறிவியல் தத்துவம். (சிவக்குமார்,கே.2016:11)
ஒரு மனிதரின் பல்வேறு கருத்துக்கள் ஏதேனும் ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. அல்லது, இரண்டும் கலந்ததாகக் குழம்பியிருக்கின்றன. அறிவெதிர் தத்துவம் என்பது இயங்காவியலும் கருத்து முதல் வாதமும். அறிவியல் தத்துவம் என்பது இயங்கியலும் பொருள் முதல் வாதமும். இவற்றைப் பற்றிய அறிவே தத்துவ அடிப்படை ஆகும். தம் வாழ்வின் சமூக வசதிகளுக்காக மனிதர்கள் அறிவியல் தொழில்நுட்பங்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். அறிவெதிர் நுட்பங்களைப் புறக்கணிக்கிறார்கள். அதுபோல வாழ்வின் சமூக உணர்வுகளில் மேன்மையடைவதற்காக அறிவியல் தத்துவத்தைச் சார்ந்து வாழப் பழகுதல் வேண்டும். அறிவெதிர் தத்துவ உணர்வுகளை ஆழ்மனக்குழியில் எட்டும் தூரம்வரை அறுத்தெறிய வேண்டும். இதற்காக ஆரம்பநிலை முயற்சியாளர்களுக்கு அறிவியல் தத்துவத்தை அறிமுகம் செய்ய முயன்றுள்ளோம். நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் (புதியவன்.2014) என்ற நூலில் சமூகவிஞ்ஞானத் தத்துவம் என்ற பெயரில் ஐந்து வழிமுறைகளாக அறிமுகம் செய்துள்ளோம்.
1.இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல், 2.பொருளையும் கருத்தையும் உணர்தல், 3.வரலாற்றை உணர்தல், 4.பொதுத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல், 5.நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல் ஆகியனவாகும். இத்தகைய அறிமுகத்தை சமூக அறிவாக மாற்றிக்கொள்வது அவரவரது சமூகவிஞ்ஞான முயற்சியால் மட்டுமே சாத்தியப்பட முடியும். (சிவக்குமார்,கே.2016:7)
இத்தகைய ஆறு தளங்களுக்கும் இடையிலான முழுதளாவிய உறவுகளே பண்பாட்டு உறவுகளாகும். இதனை அறிவெனும் பெரும்பசி என்ற கட்டுரையில் சமூகப் பண்பாட்டியல் என்பதாக விளக்கியுள்ளோம். இக்கட்டுரையின் விவரிப்புகளையே இலக்கிய அறிவியலின் அவசியம் கருதி முழுமையாகக் கையாண்டிருக்கிறோம். (புதியவன்.ஜுன் 2015:36)
3.இயற்கை வர்ணனைகள்
இயற்கை என்பது செயற்கையின் முரண். செயற்கை என்பது மனித இயற்கை. இயற்கையின் அங்கமாகிய மனிதர்களின் அறிவுகள் செயற்கையின் ஆக்கங்களால் கட்டமைந்துள்ளன. எனினும் மனித உணர்வுகள் இயற்கையின் அடித்தளத்தில் கட்டமைந்துள்ளன. திட்டமிட்ட செயல்களால் மனிதர்கள் தம் உலகைக் கட்டமைத்துக் கொண்டுள்ளார்கள். எனினும் பிரமாண்டமான இயற்கையைச் சார்ந்தே தம் உணர்வுகளைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள். மனித உணர்வுகளின் வரலாறு இயற்கையை வணங்குவதிலிருந்தே தொடங்குகிறது. மனித இனத்தின் தொன்மையான வழிபாடாக இயற்கை வழிபாடு அமைந்திருப்பதே இதன் சான்று. மனிதர்களின் எண்ண அலைகளும், கற்பனை வளமும், கருத்துச் செறிவும் நேர்த்தியாக வெளிப்படுவதற்காக இயற்கையைத் தழுவிக்கொள்கின்றன. மனிதக் கருத்தியல்கள் இயற்கை வர்ணனைகளுடன் வடிக்கப்படும்போது எத்தகைய கருத்தாக்கங்களுடன் வடிக்கப்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். சமூகத் தேக்கக் கருத்தாக்கங்களுடன் வெளிப்படுவதை இலக்கிய அறிவியல் எதிர்க்கின்றது. சமூக மேன்மைக் கருத்தாக்கங்களை இயற்கை வர்ணனைகளோடு வெளிப்படச் செய்வதிலேயே, இலக்கிய அறிவியலின் ஆக்கம் அமைகின்றது.
4.மொழி நேர்த்தி
மொழி என்பது மனித சமூகத்தின் முழுதளாவிய கருத்துக்களின் வெளிப்பாடாகும். மொழியின் தனித்துவம் இலக்கணத்தில் அமைந்துள்ளது. மொழியின் பொதுத்துவம் மொழியியலில் அமைந்துள்ளது. மொழியின் வினைத்துவம் கருத்தியலில் அமைந்துள்ளது. இலக்கணமும் மொழியியலும் கருத்தியலும் இணைந்த வடிவமே மொழியாகும். மொழியின் ஆளுமை அதன் வெளிப்பாட்டு நேர்த்தியில் அமைகின்றது. மொழியின் வெளிப்பாடு என்பது சொல் வங்கியையும் மையக் கருத்தின் சமூகத்தேவையையும் சார்ந்துள்ளது. சொல் வங்கியை வளப்படுத்துவதும் மையக் கருத்தில் தெளிந்திருப்பதும் மொழி பயன்பாட்டாளர்களின் இன்றியமையாதக் கடமை. இந்தக் கடமையைச் செயல்படுத்துபவர்கள் மட்டுமே தகுதியான சொற்களில் கருத்துக்களைக் கோர்த்து மனித உணர்வுகளில் சூடுதல் முடியும். மனித உணர்வுகளை சமூக மேன்மை நோக்கி உந்துவதே இலக்கிய அறிவியலின் மொழி நேர்த்தியாகும்.
5.சமூக ஏற்றத்தாழ்வுகள்
சமூகம் என்பது சகமனிதர்களின் சார்ந்து வாழும் ஒருமையாகும். இந்த ஒருமை, மனிதர்களின் தனித்துவங்களுக்கு இடையிலான சமத்துவமாக கட்டமைவது சமூகத்தின் தேவையாகும். ஆனால், மனிதர்களின் தனித்துவங்களை புறக்கணித்து, ஏற்றத்தாழ்வுகளாகக் கட்டமைந்தது சமூகத்தின் வேதனையாகும். சமூகம் ஏற்றத்தாழ்வுகளால் திணறிக்கொண்டிருக்கிறது. சமூகப் பொருளுற்பத்தியைச் சார்ந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏராளம். சமூகப் பண்பாட்டைச் சார்ந்த பாலினம், சமயம், சாதியம், இனம், நிறம் என்பது போன்ற பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் ஏராளம். ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கும் சமத்துவ உலகை அடைவதற்கும் சமூகளாவிய முயற்சிகள் அவசியம். மனித உணர்வுகளை சமூகளாவிய முயற்சிகள் நோக்கி உந்துவதே இலக்கிய அறிவியலின் செல்நெறி ஆகும்.
6.பாலின ஏற்றத்தாழ்வுகள்
உயிரினத் தோற்றத்தில் ஆண்பாலுக்கு இடமில்லை. உயிரினங்கள் அனைத்தும் பெண்ணினமாக மட்டுமே இருந்தன. பெண்ணினங்கள் தனித்திருந்தே இனப்பெருக்கத்தை நிகழ்த்தின. இனவீழ்ச்சிப் போக்கில் இனநிலைப்பு சாத்தியமற்று திணறியது. இனநிலைப்பைச் சாத்தியப்படுத்த படிமலர்ச்சி உந்துதல் பெற்றது. இனவீழ்ச்சிப் போக்கில் வீழாமல், புதிய மரபணுக்களை உருவாக்கும் போக்கில் படிமலர்ச்சி முன்னேறியது. படிமலர்ச்சியின் முன்னேற்றத்தில் ஆண் பாலினம் உருவெடுத்தது. ஆண்பாலினம் என்பது புதிய மரபணுவை உருவாக்கும் வழிமுறையாக இயற்கையில் நிலைபெற்றது. (ஷாலினி.செப்.2018.)
பாலினம் பற்றிய இத்தகைய வரலாற்று அறிவின் கருத்தாக்கம், உயிரின இயக்கத்திற்கு அவசியப்படவில்லை. கருத்தாக்கங்கள் மனித சமூகத்திற்காகவே கட்டமைகின்றன. மனித சமூகம் தோன்றிய காலத்தில் இத்தகைய கருத்தாக்கம் கட்டமையவில்லை. கருத்தாக்கமற்ற காலத்தில் தாய்தலைமையே மனித சமூகத்தை வழிநடத்தியது. தாயின் தலைமைப் பண்பு இயற்கையின் அங்கமாக இருந்ததால், பாலின ஏற்றத்தாழ்வு சாத்தியமற்றதாயிற்று.
கால்நடை மந்தை நாகரிகம் தோன்றியபோது தந்தையதிகாரச் சமூகம் ஆக்கம் பெறத் தொடங்கியது. தந்தையதிகாரச் சமூகத்தின் விளைவாக பாலின ஏற்றத்தாழ்வுகள் உருவெடுத்தன. தாய் தலைமையைத் தந்தையதிகாரம் வன்மமாக ஒடுக்கியது. சமூகம் முழுதும் ஆணின் ஒருமையாகக் கட்டமைக்கப்பட்டது. பெண்மை ஆண்களின் துணைமையாக ஒடுக்கப்பட்டது. தாயின் குழந்தைகள் தந்தையின் வாரிசுகளாக உரிமையாக்கப்பட்டார்கள். பெண்ணுலகம் முழுதும் ஆணதிகாரத்திற்கு அடிமைப்படுவது இயல்பான பண்பாயிற்று.
ஆணுலகின் சொத்தாதிக்கத்திற்கு உட்பட்டு பெண்கள் பொருளாதார அடிமைகளாயினர். ஆணுலகின் பாலிச்சைகளுக்குக் கீழ்பட்டு பெண்கள் பாலுறவு அடிமைகளாயினர். பண்பாட்டின் மீதான ஆணாதிக்க விளைவு பெண்களைப் பண்பாட்டு அடிமைகளாகச் சிதையச் செய்தது. பாலின ஏற்றத்தாழ்வுகள் சமூக எதார்த்தமாயிற்று. பாலின ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து பாலினச் சமத்துவத்தை உருவாக்குவதே சமூக மேன்மையின் அவசியமாகும். பாலினச் சமத்துவம் நோக்கி மனித உணர்வுகளை உந்தச் செய்வதே இலக்கிய அறிவியலின் கடமையாகும். (புதியவன்.மே 2016:20-25)
7.சாதி மத பேதங்கள்
“இல்லாத ஊருக்கு வழி சொன்னால்…
ஊர் அழைக்கவா போகிறது?
பாதை அனுப்பவா போகிறது?” என்பது புதுமொழி.
இல்லாத ஊருக்கு வழி சொல்வதும், ஊர் அழைப்பதுவும், பாதை அனுப்புவதுவும், ஊர் இல்லையே என்று உணர்வதற்குள் சொந்த ஊரையே இழப்பதுவும் சாதி மத பேதங்களில் வேடிக்கையாகக் காண முடிகின்ற அவலங்களாகும். சாதியும் மதமும் மனிதர்களின் புலனறிவுக்கு எட்டாத பேதங்களாகும். கற்பனைகளில் வடித்துக்கொண்டு நம்பப்படுகின்ற சூழ்ச்சிகளாகும். இந்தச் சூழ்ச்சிகளால் பின்னப்பட்டுள்ள சமூக அதிகாரங்களும், அடிமைத்தனங்களும், சமூக மேன்மையின் முயற்சிகளுக்கு இடப்பட்டுள்ள மின்வேலிகளாகும். இத்தகைய மின்வேலிகளால் சமூகம் கலவர பூமியாய் உழன்று கொண்டிருக்கின்றது. மனிதர்களுக்கு இடையிலான உறவுகளில் புலனுக்கு எட்டாத பகைமுரண்கள் கூர்மையடைந்துகொண்டே செல்கின்றன. இந்தப் பகைமுரண்களைப் பற்றிக்கொண்டுள்ள சமூகப் பொருளுற்பத்தியின் இலாபவெறி, மனித வாழ்வியலின் இரத்தம் குடித்துப் பெருத்துகொண்டே இருக்கின்றது. இந்தியாவில் சாதிகள்தான் இந்து மதத்தின் இரத்த நாளங்களாக இயங்குகின்றன. இந்து மதம்தான் சாதிகளைப் பாதுகாக்கும் அரணாக இயங்குகின்றது. சமூகமேன்மையின் எழுச்சிகளால், இறுதி மூச்சுத் திணறி மரணித்துக் கொண்டிருக்கிறது இலாபவெறிபிடித்த முதலாளித்துவம். எப்பேற்பட்ட பேரழிவை நிகழ்த்தியாவது தன் மரணத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா என்று முதலாளித்துவம் முயல்கிறது. இத்தகைய முயற்சியைத்தான் வரலாறு பாசிசம் என்று வரையறுக்கின்றது. இலாபவெறிபிடித்த முதலாளித்துவம் தனது பாசிச முயற்சியின் கருவியாக, இந்தியாவின் இந்து மத சாதி வெறியைக் கையாளத் தொடங்கியுள்ளது. கார்ப்பரேட் பாசிசத்தைப் பாதுகாக்கும் அரணாக, இந்து மத சாதி வெறியானது காவி பாசிசமாக உருவெடுத்துள்ளது. (மருதையன். மார்ச்.2019.)
சமூக மேன்மையின் அடிப்படையில் சமூகப் பொருளுற்பத்தியில் இலாபவெறியை அழிப்பதற்கும், மக்கள் தலைமையை அடைவதற்கும், சாதிமத பேதங்களை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிவது இன்றியமையாத நிபந்தனையாக இருக்கின்றது. சமூகத் தேவைக்கு அவசியமற்ற பெருஞ்சுமையாக சாதி மத பேதங்கள் நிலவுகின்றன. அறிவியல் தத்துவ முயற்சிகளுடன் இத்தகைய பேதங்களை எட்டித் தள்ளுவதே சமூக மேன்மையாக அமைகிறது. அறிவியல் தத்துவ வெளிப்பாட்டினால், மனித ஆழ்மனக் குழியிலிருந்து சாதி மத பேதங்களை அறுத்தெரியும் முயற்சிகளில், இலக்கிய அறிவியலுக்குத்தான் பெரும் பொறுப்பு இருக்கின்றது.
8.பேதம் கடந்த உடன்பாடுகள்
பேதம் என்பது வெறும் வேற்றுமைகள் அல்ல. பகை முரண்களாக ஆக்கம் பெற்றுள்ள வேற்றுமைகளே பேதங்களாக உணரப்படுகின்றன. மனிதர்களுக்கு இடையிலான பகை முரண்களைப் பட்டியலிட்டால் பட்டியல் நீளும். பாலின பேதம், இன பேதம், நிற பேதம், அறிவு பேதம், வயது பேதம், பணி பேதம், உறவு பேதம், ஊர் பேதம், உணவு பேதம், சாதி மத பேதங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இத்தனை பேதங்களையும் கடந்து பிழைப்பிற்கான உடன்பாடுகளுடன் மனிதர்கள் ஒன்றியே வாழ்கிறார்கள். இத்தகைய உடன்பாடுகள் இலாபவெறிபிடித்த சமூகச் சூழ்ச்சிகளால் எப்போது வேண்டுமானாலும் நொறுக்கப்படலாம். இத்தகைய ஆபத்துக்களை அங்கீகரித்துக்கொண்டுதான், பேதம் கடந்த உடன்பாடுகள் சமூகளாவிய நிலையில் நிலவுகின்றன. இலாப வெறி நலன்களுக்கு சாதகமாக நிலவுகின்ற, பேதம் கடந்த உடன்பாடுகளை சமத்துவச் சமூக இலக்குகளுக்குச் சாதகமானதாக உருமாற்ற வேண்டியது, சமூகமேன்மையின் அவசியமாக இருக்கின்றது. இத்தகைய அவசியத்தின் அடிப்படையில், சமத்துவச் சமூகத்தை எட்டுவதற்கான முயற்சிகளில், பேதம் கடந்த உடன்பாடுகளை மனித உணர்வில் உந்துவதற்கு, இலக்கிய அறிவியல் கலங்கரையாகும்.
9.எதார்த்தம் மீதான இலட்சியம்
எதார்த்தம் என்பது நிகழ்காலத்தின் நிதர்சனம். கடந்தகால வாழ்வியலை பரிசீலிக்கும் ஆய்வகம். எதிர்கால மாற்றங்களுக்கு வழியமைக்கும் நுழைவகம். ஒட்டுமொத்த சமூக நிலைமைகளுக்குமான சாராம்சம். மனித சமூகத்தின் பேராற்றல் என்பது சமூக நிலைமைகளின் எதார்த்தங்களுடன் ஊடாடி முன்னேறுவதில் இருக்கின்றது. மனித முன்னேற்றம் என்பது திட்டமிட்ட மாற்றங்களால் எதிர்நோக்கப்படும் இலட்சிங்களாகும். இலட்சியம் என்பது சமத்துவச் சமூகத்தை எட்டுவதாகும். இலட்சியங்கள் நோக்கி முன்னேறும்போது, சமூக நிலைமைகளில் நிலவும் உடன்பாடுகளும், முரண்பாடுகளும், வளர்ச்சிகளும், வீழ்ச்சிகளும், எத்தகைய சமூகத்தேவைகளுடன் இணைந்திருக்கின்றன என்பதை கண்டுணர்வது அவசியம். சமூகத்தேக்கத்தைச் சார்ந்திருப்பவைகளைக் களைவதும், சமூகமேன்மையைச் சார்ந்திருப்பவைகளை உந்திச் செலுத்துவதும், சமூக எதார்த்தங்களின் இயக்கமாக கட்டமைய வேண்டும். இத்தகைய கட்டமைவுகளிலிருந்து சமூகமேன்மையின் இலட்சியம் சாத்தியப்பட வேண்டும். இத்தகைய சாத்தியப்படுத்தலுக்கான களமாக இலக்கிய அறிவியல் முடுக்கப்பட வேண்டும்.
10.முற்போக்கின் எழுச்சி
முற்போக்கு என்பது பிற்போக்கின் எதிர்மறை. பிற்போக்கான சமூக முயற்சிகளுக்கு மாற்றாக முற்போக்கு அமைகிறது. பிற்போக்கு என்பது சமூகத் தேக்கத்தை உணரச் செய்கிறது. முற்போக்கு என்பது சமூகமேன்மையை உணரச் செய்கிறது. பிற்போக்கு என்பது வாழத் தகுதியற்ற, சுயநல வெறிபிடித்த, இலாப வெறிக்கான சமூகப் பொருளுற்பத்தியைப் பாதுகாத்துத் தேங்கச் செய்கின்ற, முயற்சிகளாக அமைகின்றது. முற்போக்கு என்பது சமூக அக்கறையுள்ள மக்கள் நல பொருளுற்பத்தியை ஊக்கப்படுத்தி, சமத்துவச் சமூகம் நோக்கி முன்னேறுகின்ற, சமூக மேன்மை முயற்சிகளாக அமைகின்றது. சமூகளாவிய நிலைமைகளில் பிற்போக்கின் முயற்சிகளை செயலிழக்கச் செய்து, முற்போக்கின் செயல்களை எழுச்சி பெறச் செய்வதே, இலக்கிய அறிவியலின் எழுச்சியாக அமைகிறது.
11.அரசியல் நோக்கு
அரசியல் நோக்கு என்பது அரசின் இயக்கம் பற்றிய முழுதளாவிய புரிதலாகும். மனித குல வரலாற்றில் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலும் வேட்டை நாகரிகத்திலும் அரசு என்ற சமூக நிறுவனம் தோன்றியிருக்கவில்லை. சமூகத்தின் அனைத்து நிலைமைகளும் பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவானதாகவே இருந்தது. தந்தையதிகாரமும் சொத்தாதிக்கமும் உருப்பெற்ற கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்திலேயே, அரசு என்ற சமூக நிறுவனம் உருவெடுத்தது. உழைக்காமல் உண்டு கொழுப்பவர்களின் தனிச்சொத்தின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கவே அரசு தோன்றியது. தனிச்சொத்தின் ஆதிக்க நலனைப் பாதுகாப்பதே அரசியலின் மையக் கொள்கையாக அமைந்திருக்கிறது.
“அரசு எந்திரமானது எல்லோருடைய நலன்களையும் பாதுகாப்பது, அதற்காக ஏற்பட்டது எனும் முதலாளித்துவ பொய்யை உணர்வுப்பூர்வமான நயவஞ்சகரும் அறிவியல்வாதிகளும் மதகுருமார்களும் மட்டும்தான் ஆதரிக்கிறார்கள் என்றில்லை, பழைய தப்பெண்ணங்களில் உண்மையிலேயே ஒட்டிக்கொண்டு பழையை முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து சோசலிசத்திற்கு நிகழும் மாறுதலை புரிந்துகொள்ளாமல் இருக்கும் பெருந்திரளான மக்களும் அவ்வாறே செய்கிறார்கள்…“ என்று மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டிய அரசியல் கடமைகளையும் சேர்த்தே முன்னிறுத்துகிறார் லெனின்.” (துரைசண்முகம். 2016)
அரசு தோன்றிய காலம் முதல் சமூக அமைப்பின் மாற்றங்களுக்கு ஏற்ப அரசின் வடிவங்கள் பலவாறாக மாறியிருக்கின்றன. ஆனால் மையக் கொள்கை மாறியதில்லை. அரசின் இன்றைய நிலைமைகளும் இலாப வெறிபிடித்த நிறுவனங்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்திருக்கின்றன. சமத்துவச் சமூகத்தை நோக்கி மக்கள் தலைமை அரசை தோற்றுவிப்பதற்கு தடையாகச் செயலாற்றுகின்றன. இதன் செயல்பாடுகளை எதிர்கொண்டு சமூகமேன்மைக்கு வசதியாக மக்கள் தலைமை அரசை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு உந்துதல் அளிப்பதே இலக்கிய அறிவியலின் அரசியல் நோக்காகும்.
12.தன்னிச்சை வெளிப்பாடு
தன்னிச்சை வெளிப்பாடு என்பது சமூகளாவிய வெளிப்பாட்டின் எதிர்மறையாகும். சுயநல வெறிபிடித்த பண்பாட்டில் உழன்று கொண்டிருக்கும் சமூகத்தில், சமூகஅக்கறை மறத்துப்போன மனிதர்களின் வெளிப்பாடாக, தன்னிச்சை வெளிப்பாடு அமைகிறது. இலக்கிய முயற்சியில் ஆரம்பநிலையாளர்களின் வளர்ச்சியில் ஓர் அங்கமாக தன்னிச்சை வெளிப்பாடு அமைகிறது என்பதல்ல பிரச்சனை. மாறாக தான்தோன்றித்தனத்தையே ஒரு கொள்கையாகக் கொண்டு இயங்குபவர்களின் இலக்கிய வெளிப்பாடாக அமைவதுதான் பிரச்சனை.
சமூகத்தேக்கக் கொள்கைகளுடன் படைக்கப்படுகின்ற படைப்புகளைவிட இவர்களின் வெளிப்பாடுகள் ஆபத்தானவை. ஏனெனில், இவர்களின் வெளிப்பாடுகள் வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக, சமூகத்தேக்க முயற்சிகளுக்கு ஊக்கமளித்து, இலாபவெறிப் பண்பாட்டைப் பாதுகாக்கின்றன.
சமூகமேன்மையின் தேவையோ தான்தோன்றித்தனம் அல்ல, திட்டமி்டப்படாத இயக்க முறைகளுக்கு இடையில் திட்டமிட்ட செயல்முறைகளைச் சாதிப்பதற்கான முயற்சிகளாகும். சமத்துவச் சமூகம் நோக்கிய இத்தகைய முயற்சிகளுக்கு சமூகளாவிய வெளிப்பாடே அவசியப்படுகின்றது. தன்னிச்சை வெளிப்பாட்டிற்கு முரணாக அமைவதே இலக்கிய அறிவியலின் வெளிப்பாடாகும்.
13.கொச்சை பாலுறவு குறியீடு
பாலுறவு என்பது இனப்பெருக்க உந்துதலான உயிரியல் நடவடிக்கையாகும். ஒவ்வொரு மனிதரும் குழந்தையாக பிறந்ததற்கு காரணமாக அமைந்த அழகுணர்ச்சி மிகுந்த நடத்தையாகும். இத்தகைய நடத்தைகளின் இலக்கிய வெளிப்பாடானது, பெண்ணடிமைச் சமூகத்தில் பெண்களைப் பாலுறவுப் பிண்டங்களாகக் கொச்சைப்படுத்துகின்றன. ஆண்களின் பாலியல் இச்சைகளை ஊதிப்பெருக்குகின்றன. பெண் சமூக விடுதலை பற்றிய தெளிவற்ற பெண்களிடத்தில், பாலியலின் கொச்சை வார்த்தைகளே பெண்ணியமாக வெளிப்படுகின்றன.
“சங்ககால ஆண் புலவர்களுக்கு நிகரான பெண்பாற் புலவர்களையும் சமகால பெண் கவிஞர்களையும் ஒப்பிட்டு சில முடிவுகளை இந்நூலாசிரியர் தருகிறார். சமகால வாழ்நிலையில் பெண்களின் பாலுணர்வை வெளிப்படுத்தும் கவிதைகளில் உணர்வுக்கு முதன்மை இல்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே கவிதையாகிவிட முடியாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்” (சிவக்குமார்,கே.மார்ச்.2014:36-37)
பெண் பாலினச் சீண்டுதல்களும் வன்புணர்ச்சிப் படுகொலைகளும் ஆணாதிக்கச் சமூக வெளியில் தவிர்க்க முடியாதபடி நிலைபெற்றுவிட்டன. இத்தகையச் சமூக நிலைமைகளில், பாலுறவுச் சொல்லாடல்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் தேவை. பாலினச் சமூக மேன்மை முயற்சிகளுடனும், பாலுறவு வன்முறை எதிர்ப்புகளுடனும் இணையாத பாலுறவுச் சொல்லாடல்களைக் கொச்சைப் பாலுறவு குறியீடுகளாக மட்டுமே கவனப்படுத்த முடியும். கொச்சைப் பாலுறவுக் குறியீடுகளை இலக்கிய அறிவியல் அங்கீகரிப்பதில்லை.
14.பொருளாதார ஒடுக்குமுறை
மனிதர்களுக்குச் சமூகம் நிறைவேற்ற வேண்டிய பொருளாதாரத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் நிலைத்திருப்பதே பொருளாதார ஒடுக்குமுறையாகும். மனித வாழ்வானது சமூகப் பொருளுற்பத்தியால் இயங்குகின்றது. சமூகப் பொருளுற்பத்தி இயற்கை ஆதாரங்களைச் சார்ந்துள்ளது. இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் இயற்கையின் அங்கமாகிய மனிதர்களுக்கும் உரியது. சமூகப் பொருளுற்பத்தி என்பது செயற்கைக்கு ஆக்கமாகிய மனித இனத்திற்கு மட்டுமே உரியது. எனவே இயற்கையும் செயற்கையும் மனித வாழ்வியலுக்கு தவிர்க்கக் கூடாத வாழ்வுரிமைகளை நிர்ணயித்துள்ளன.
தாகத்திற்கு நீரருந்தும் உரிமை, தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கான உரிமை, சுகாதாரமான சூழ்நிலைகளில் வாழ்வதற்கான உரிமை, உணவு உண்பதற்கான உரிமை, வேலைவாய்ப்புரிமை, பொருளீட்டுவதற்கான உரிமை போன்ற எண்ணற்ற உரிமைகள் சமூக வாழ்வியலின் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக நிர்ணயம் பெற்றுள்ளன. ஆனால், அத்தகைய உரிமைகள் இலாபவெறிபிடித்த சமூகப் பொருளுற்பத்தியின் அதிகாரத்தால், எளிதாக மறுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய மறுப்புகள் மனித சமூகத்தின் மீதான பொருளாதார ஒடுக்குமுறைகளாக நிலவுகின்றன. இத்தகையப் பொருளாதார ஒடுக்குமுறைகளை களைந்து, வாழ்வுரிமைகளை எட்டுதல் நோக்கி, மனித உணர்வுகளை முன்னேற்றுவதற்கே இலக்கிய அறிவியல் அவசியப்படுகின்றது.
15.கருத்தாக்கக் கட்டமைப்பு
மனிதர்களின் உலகம் கருத்துக்களின் உருவாக்கங்களால் கட்டமைந்துள்ளது. கருத்துக்களைப் பற்றிக் கொண்டே மனித செயல்கள் ஒழுங்கமைகின்றன. மனிதர்கள் எத்தகையக் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறார்களோ அவற்றையே செயல்களாக உருமாற்றுகிறார்கள். மனித செயல்கள் கருத்துக்களால் வழிநடத்தப்படுகின்றன. எனவே, மனித செயல்களை வழிநடத்த சமூக மேன்மை கருத்தாக்கங்களைக் கட்டமைக்க வேண்டும். சமூக மேன்மையின் இலக்காகிய சமத்துவச் சமூகத்தை அடைவதற்கான முயற்சிகள், கருத்தாக்கங்களின் கட்டமைப்பிலிருந்தே தொடங்குகின்றன. மனித செயலாக்கங்களில் சமூக மேன்மைக் கருத்தாக்கங்களைக் கட்டமைப்பதே, இலக்கிய அறிவியலின் செயலாக்கம் ஆகும்.
16. ஆழ்மனப் பிரதிபலிப்பு
ஆழ்மனம் என்பது மனித மூளையின் பெரும்பகுதியாகும். மனித மூளையை மூன்று பகுதியாக விளங்கலாம். 1.அறிவு நிலை, 2.உணர்வு நிலை, 3.ஆழ்மனக்குழி. அறிவு நிலை என்பது புலன்களால் அறியப்படும் நிலையாகும். உணர்வு நிலை என்பது உணர்ச்சி வெளிப்பாட்டுடன் அறிவு ஒன்றும் நிலையாகும். அறிவு நிலைக்கும் ஆழ்மனக்குழிக்கும் இடைப்பட்ட உறவாக உணர்வு நிலை அமைகின்றது. ஆழ்மனக்குழி என்பது எட்ட முடியாத எண்ண ஓட்டங்களின் கருங்குழியாகும். எல்லாவற்றையும் உள்வாங்கிச் செரித்துவிடும் கருங்குழியைப்போல ஆழ்மனக்குழியும் மூளையின் ஒட்டுமொத்த பதிவுகளையும் உள்வாங்கிச் செரிக்கிறது.
மனித செயல்களை உயிரோட்டமாக அமைப்பது அறிவுநிலை அல்ல, மாறாக ஆழ்மனக்குழியின் உணர்வு நிலையே ஆகும். எனவேதான், சமூகமேன்மைக் கருத்துக்களை மனித சமூகத்தின் ஆழ்மனக்குழிவரை பற்றும்படிச் செய்துவிட்டால் ஆரம்பமாகிவிடும் சமூக விடுதலை என்கிறோம். சமூக விடுதலைக்கான முயற்சிகளனைத்தும் அறிவுநிலையின் வெளிப்பாடாக அமைவதல்லாமல், ஆழ்மன உணர்வின் உயிரோட்டமான பிரதிபலிப்பாக அமைய வேண்டும். சமூக மேன்மைக்கான இத்தகைய பிரதிபலிப்புகளை இலக்கிய அறிவியல் முன்னெடுக்க வேண்டும். (புதியவன்.ஜுன் 2015:35)
17.சமூகளாவிய விமர்சனங்கள்
விமர்சனம் என்பது சகமனிதர்களைச் செதுக்கும்போது கருவியாக அமையும். சமூக மேன்மையின் துரோகிகளுக்கு ஆயுதமாகக் குடையும். சமூக மேன்மையைச் செதுக்கும் கலையில் விமர்சனத்தைக் கருவியாகக் கையாள வேண்டும். சமூகத் தேக்கத்தை எதிர்க்கும் போரில் விமர்சனத்தை ஆயுதமாகக் கையாள வேண்டும். விமர்சனங்களால் மட்டுமே மனித வாழ்வியலின் அற உணர்வைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். அறம் என்பது மனிதர்கள் இணைந்து வாழ்வதற்குத் தேவையான சமூக ஒழுக்கங்களின் முழுமையாகும். விமர்சிக்கப்படாத வாழ்வியல்கள் விளைவிக்கப்படாத விளைநிலங்களுக்குச் சமமாகும். உணவை விளைவித்தல் உலகின் பசி நீக்கும் உழுவோரின் கடமை. உணர்வை புதுப்பித்தல் சமூகப்பிணி நீக்கும் சமூகவிஞ்ஞானிகளின் கடமை. இலக்கிய அறிவியல் சமூகவிஞ்ஞானத்தின் இன்றியமையாதக் களமாகும். விமர்சனக் கலையின் வழியாக சமூக மேன்மையை எட்டிப்பிடிப்பதற்கு வினையாற்றும்.
18.தாய்தலைமை சமூகம்
தாய்தலைமைச் சமூகம் என்பது தந்தையதிகாரச் சமூகத்திற்கு முந்தைய சமூக எதார்த்தமாகும். காடுசார்ந்த பொருள் சேகரிப்பும் வேட்டை நாகரிகமும், தாய்தலைமையின் நாகரிகமாக அமைந்துள்ளன. ஆனால், தந்தையதிகாரச் சமூகம் மனித வரலாற்றில் தாய்தலைமை நிலவிய உண்மையை மூடி மறைக்க முயல்கிறது. பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்துவதற்கும், தந்தையதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும் இத்தகைய முயற்சியை விடாப்பிடியாக நிகழ்த்துகிறது. ஆனால், பெண் விடுதலையே சமூக மேன்மைக்கு முன் நிபந்தனையாக இருக்கின்றது. ஏனெனில், பெண் விடுதலையின்றி சமூக விடுதலை சாத்தியமில்லை.
தாய்தலைமை சமூகம் நிலவிய வரலாற்றுண்மையை அங்கீகரிப்பது, பெண்ணின் சமூக மரியாதைக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகும். சமூகளாவிய நிலையில் ஆணாதிக்கத்தை உடைப்பதற்கும், பாலினச் சமத்துவத்தை நிறுவுவதற்கும், தாய்தலைமையைக் கொண்டாடுதல் அவசியமாகின்றது. தாய் தலைமை என்பது இயற்கையின் அங்கமாகவே அமைந்திருந்தது. செயற்கையின் ஆக்கமாக அமையவில்லை.
தாய் அதிகாரச் சமூகம், தாய் ஆதிக்கச் சமூகம், பெண்ணதிகாரச் சமூகம், பெண்ணாதிக்கச் சமூகம் போன்ற மாற்றுச் சொல்லாடல்கள் வரலாற்றுண்மைகளை தவறுகின்றனவாக அமைகின்றன. ஆதிக்கம், அதிகாரம் போன்ற திட்டமிட்டச் சமூக நடவடிக்கைகள் தோன்றாத காலத்தில் நிலவிய தாயின் சமூக முதன்மையைத் தாய்தலைமை என்று சுட்டுவதே வரலாற்றுண்மைக்கு பொருத்தமானதாக அமையும். தாய்தலைமைச் சமூகத்தின் வாழ்வியல் உண்மைகளை விவரிக்க முயல்வது இலக்கிய அறிவியலுக்குச் சவாலாக அமைகின்றது. (புதியவன்.மே 2016:24-26)
19.தந்தையதிகாரச் சமூகம்
தந்தையதிகாரம் மனித வரலாற்றுப் படிநிலையில் மூன்றாம் கட்டத்திலேயே தொடங்கியுள்ளது. சரியாகக் கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தொடங்கியது. இயற்கையின் அங்கமாகத் திகழ்ந்த தாய் தலைமையை ஒழித்துவிட்டு, செயற்கையின் ஆக்கமாகத் தொடங்கியது. சமூகளாவியச் சொத்துக்களின் மீதும், பண்பாட்டின் மீதும், குழந்தைகள் மீதும் ஆண்களின் அதிகாரத்தை நிறுவுவதற்காக தந்தையதிகாரம் தொடங்கியது.
செயற்கையான சொத்தாதிக்க நலன்களால் ஆக்கம் பெற்ற ஆண்களின் சமூக அதிகாரத்தை தந்தை தலைமை, ஆண் தலைமை போன்ற சொற்களால் சுட்டுவது வரலாற்று முரணாகவே அமைகின்றன. மாறாக தந்தையதிகாரம், தந்தையாதிக்கம், ஆணதிகாரம், ஆணாதிக்கம் போன்றச் சொல்லாடல்களே வரலாற்றுண்மைகளுக்குப் பொருந்துகின்றன.
தந்தையதிகாரத்தின் தொடக்கம் சமூக அநாகரிகத்தின் தொடக்கமாகவே அமைந்துள்ளது. சமூகமேன்மையில் சமத்துவ உலகை எட்டுவதற்கும், பாலினச் சமத்துவத்தை அடைவதற்கும், தந்தையதிகார அநாகரிகத்தை ஒழித்துக்கட்டுவது அவசியமாகின்றது. தந்தையதிகார அநாகரிகத்தை ஒழித்துக்கட்டுவதே இலக்கிய அறிவியலின் நாகரிகமாகும். (புதியவன்.மே 2016:24-26)
20.குழந்தைகளின் சமூக ஆக்கம்
சமூக மேன்மையின் வளர்ச்சி குழந்தைகளின் வளர்ச்சியோடு இணைந்திருக்கின்றது. குழந்தைகளின் வளர்ச்சியோ, மனித வாழ்வியலின் முதிர்ச்சியோடு இணைந்திருக்கின்றது. பழைய மனிதர்களின் புதிய குழந்தைகளிடமிருந்தே சமூக ஆக்கம் மேன்மையடைகின்றது. சமூகளாவிய இலக்குகளுடையவர்களாக குழந்தைகள் ஆக்கம் பெற வேண்டும். குழந்தைகளின் தனித்துவங்களை ஊக்கப்படுத்துவதிலிருந்து கற்றல் திறனையும் வெளிப்பாட்டுத் திறனையும், மேம்படுத்த வேண்டும். குழுந்தைகளின் தனித்துவங்களை குழந்தைகளுக்கு உணர்த்துவதன் மூலம் உருவாகும் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்த வேண்டும்.
எல்லா தனித்துவங்களையும் கடந்து சமூக மேன்மைக்காகப் பாடுபடுகின்ற நல்ல மனிதர்களாகவும் சமூக ஆளுமைகளாகவும் உருவாக வேண்டும். குழந்தைகளின் கல்வி முறைகள் மதிப்பெண்களில் சுருங்குதல் கூடாது. ஏனெனில் மதிப்பெண்களின் மதிப்பென்பது பயணங்களில் வாங்கப்படும் டிக்கட்டின் மதிப்புதான். பயணங்கள் டிக்கட் வாங்குவதற்காக நிகழ்பவை அல்ல. அனுபவங்களை வளர்ப்பதற்காகவே பயணங்கள். அறிவுலக பயணங்களுக்கு மதிப்பெண்கள் வெறும் டிக்கட்களே.
நல்ல வகுப்பறை குழந்தைகளின் தனித்துவங்களையும் சமூக ஆற்றல்களையும் குழந்தைகளுக்கே உணர்த்துவதாக அமைய வேண்டும். குழந்தைகளின் கல்வி அவர்களின் தாய்மொழியில் அமைதல் வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக சமத்துவ இலக்குகளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும். பெண், ஆண் குழந்தைகள் சமூகளாவிய நிலையில் வளர்க்கப்படும்போதே பாலின பாகுபாடு கற்பிக்கப்படாமல் வளர்க்கப்பட வேண்டும். பெண்களை ஆண்களும் ஆண்களைப் பெண்களும் சமத்துவமாக மதித்து வாழ பழக்கப்படுத்த வேண்டும்.
வளர் பருவங்களின் உடல் மாற்றங்களையும் மன மாற்றங்களையும் கையாளும் சூழலைக் கற்பிக்க வேண்டும். சமூக உழைப்பில் பங்கேற்பதே சுயமரியாதை என்றுணர்த்த வேண்டும். உழைக்காமல் உண்பது அவமானம் என்ற கருத்தை விதைக்க வேண்டும். குழந்தைகளை சமூகளாவிய விளையாட்டுகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
உடல் மேன்மைக்கு ஓடுதல், குதித்தல், பிடித்தல் போன்ற விளையாட்டுகளோடு முடித்துவிடக் கூடாது. உள்ளம் மேண்மைக்கான விளையாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டும். படைப்பாற்றல் சிந்தனைகளை ஊக்கப்படுத்துகின்ற கலை அறிவியல் கொண்டாட்டங்களில் பங்கேற்கத் தூண்ட வேண்டும். பாடல், ஆடல், நாடகம் நடித்தல், ஓவியம் படைத்தல், கவிதை படித்தல், கதை பேசுதல் என்பதாக பங்கேற்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும்.
குழந்தைகளோடு கதைபேசுவது மிக முக்கியமான சமூக நிகழ்வாகும். ஏனெனில், குழந்தைகளின் மேன்மைக்கு கதையே விதை. நேசமிக்க மனிதர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் மிகப்பெரிய பள்ளத்தாக்குகள் உருப்பெற்றமைக்கு கதை பேசும் பண்பாட்டை கைவிட்டதும் ஓர் காரணமாகும்.
கதை பேசுதல் என்பது குழந்தைகளின் சமூக உணர்வை அவர்களது அறிவிலிருந்து ஆழ்மன உணர்வுவரை, கற்பனை வளத்துடனும் கருத்து செறிவுடனும் பற்றும்படி செய்து, சக மனிதராக உயர்த்துவதாகும்! குழந்தைகளோடு கதை பேசுதலை நிகழ்த்தாவிட்டால்... அது மனித வளர்ச்சியை கொலை செய்தலுக்கு இணையாக்கும்!
சமூகளாவியத் திட்டங்களின் முழுதளாவிய பங்கேற்புகளுடன் குழந்தை வளர்ப்பு ஆக்கம் பெற்றால் மட்டுமே சமூக மேன்மையின் இலக்கு நோக்கி சமூக வளர்ப்பு வெற்றி பெறும். சமூக வளர்ப்பை உந்திச் செலுத்த இலக்கிய அறிவியல் துணை செய்யும்.
இலக்கிய அறிவியலின் சுற்றி வளைக்கும் இத்தகையப் பார்வைகளை முழுதளாவிய நிலையில் நோக்கும்போது நமக்கு மொழி குறித்த ஓர் உண்மை புலப்படும்.
மொழி என்பது சமூகத்தின் தனித்த உறுப்பு அல்ல.
மாறாக, நமது உடலில் ஓடுகின்ற ரத்தம் போன்றது.
உடலின் சகல உறுப்புக்களுக்கும் பாயாவிட்டால் ரத்தத்திற்கு ஏது பெருமை? சகல துறைகளுக்கும் அறிவைப் பாய்ச்சாவிட்டால் மொழிக்கும் இல்லை பெருமை! உடலின் அனைத்து உறுப்புக்களையும் உயிர்த்திருக்கச் செய்வது ரத்தத்தின் கடமை. சமூகத்தின் அனைத்து துறைகளையும் உயிர்த்திருக்கச் செய்வது மொழியின் கடமை. ஏனெனில் மக்களின் மொழியே அவர்களது சமூக உணர்வைக் கட்டமைக்கின்றது.
கற்பனை வளங்களிலிருந்து கருத்துச் செறிவுவரை மக்களின் உணர்வுகள் மொழியால் கட்டமைகின்றன. எனவே சகல துறைகளுக்கும் மொழி செயலாற்ற வேண்டும். அறிவியலும் கலையும் சகல துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அறிவியலுக்கும் கலைக்கும் மொழியே உருவம் தருகின்றது.
அறிவியல் இலக்கிய அறிஞர்கள் கலை இலக்கியப் படைப்புகளை உணர வேண்டும். கலை இலக்கிய அறிஞர்கள் அறிவியல் இலக்கியப் படைப்புகளை உணர வேண்டும். இரு அறிஞர்களும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக வினையாற்றிக்கொள்வது, மொழியின் சமூக மேன்மைக்கு இன்றியமையாதத் தேவையாகும்.
கலையை வழிநடத்துதல் அறிவியலின் கடமை!
அறிவியலுக்குச் சேவை செய்தல் கலையின் கடமை!
“அறிவை ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியமே தேவை. ஆகவே, இனிமேல்தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும்” (பெரியார்.2017:532)
மொழியின் கடமையைச் செயல்படுத்துகின்ற ஆற்றல் இலக்கிய அறிவியலுக்கே இருக்கின்றது. செயல்படுத்துகின்ற கடமை அம்மொழிக்கு உரிமையுள்ள மக்களுக்கும், படைப்பாளர்களுக்கும், படிப்பாளர்களுக்கும், கருத்தாளர்களுக்கும், கடனாக அமைகின்றது. நம் கடன் பணி செய்து சிறப்பதே!
துணை செய்தவை
*சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html
*சிவக்குமார்,கே. மார்ச் 2014. ஆக்கமும் பெண்ணாலே. புதிய கோடாங்கி. பக். 36-38. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_33.html
*சிவக்குமார்,கே. ஆகஸ்ட் 2016. பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமை சமூகத்தின் எச்சம். உங்கள் நூலகம். பக்.81-85. http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug16/31423-2016-09-10-06-55-46
*புதியவன். ஜுலை 2017. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள். புதியகோடாங்கி. பக்.30-33. https://puthiyavansiva.blogspot.com/2017/06/blog-post_89.html
*புதியவன். 2014. நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம். கோயம்புத்தூர்: முகம் பதிப்பகம். https://puthiyavansiva.blogspot.com/2018/11/blog-post.html
*புதியவன். மே 2016. காதல் வரலாறு. புதிய கோடாங்கி. பக். 20-25.
*https://puthiyavansiva.blogspot.in/2016/06/blog-post_71.html
*புதியவன். டிசம்பர் 2016. காதலிலிருந்து கடவுள்வரை. புதிய கோடாங்கி. பக். 29-37. https://puthiyavansiva.blogspot.com/2016/11/blog-post.html
*புதியவன்.மார்ச் 2015. அறிவெனும் பெரும்பசி. ஊடாட்டம் சமூக பண்பாடு அரசியல் பொருளாதார ஆய்விதழ். பக்.40-49. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
*புதியவன்.ஜுன் 2015. அறிவெனும் பெரும்பசி. புதிய கோடாங்கி. பக். 30-37. https://puthiyavansiva.blogspot.com/2016/06/blog-post_4.html
*புதியவன். 2018. சாதி ஸ்வாக. https://puthiyavansiva.blogspot.com/2018/01/blog-post_24.html
*புதியவன். 2019. இந்தியாவில் சாதிகளின் சதி. https://puthiyavansiva.blogspot.com/2019/02/blog-post_18.html
*புதியவன். 2018. சாதி-ஸ்வாக. https://puthiyavansiva.blogspot.com/2018/01/blog-post_24.html
*புதியவன். 2019. புராதனம் முதல் சோசலிசம் வரை. https://puthiyavansiva.blogspot.com/2019/05/blog-post_27.html
*புதியவன். 2019. அகண்ட பாரதத்தின் அகில பாசிசம்: மோடீசம். https://puthiyavansiva.blogspot.com/2019/06/blog-post.html
*புதியவன். 2017. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள். புதிய கோடாங்கி. பக். 29-37. https://puthiyavansiva.blogspot.com/2017/06/blog-post_89.html
*எங்கெல்ஸ், பிரெடெரிக். 2011(2008). குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
*எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
*எங்கெல்ஸ், பிரெடெரிக். 2012. மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம். சென்னை: பாரதி புத்தகாலயம்.
*கைலாசபதி, க. 1987(1968). தமிழ் நாவல் இலக்கியம். திறனாய்வுக் கட்டுரைகள். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
*கைலாசபதி, க.2009(2002). சமூகவியலும் இலக்கியமும். சென்னை: குமரன் பப்ளிகேஷன்ஸ்.
*கோபட்கந்தி. 2014. சுதந்திரமும் மக்கள் விடுதலையும். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
*சிவத்தம்பி,கா. 2010. நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
*சிவத்தம்பி,கா. 1988(1978). நாவலும் வாழ்க்கையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
*சிவத்தம்பி,கா. 1988. தமிழ் இலக்கிய வரலாறு வரலாறெழுதியல் ஆய்வு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
*சிவத்தம்பி,கா. 2011. தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும். சென்னை: பாவை பதிப்பகம்.
*சிவத்தம்பி,கா. 2011. இலக்கியமும் கருத்துநிலையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
*ஷாலினி. செப்.2018. இன்றைய சூழலில் ஆண் குழந்தை வளர்ப்பு. https://www.youtube.com/watch?v=em7H68_2j-E
*ஷாலினி. பிப்.2018. கடவுளை விமர்சிக்கக் கூடாதா? https://www.youtube.com/watch?v=yJhDhV_lkWc
*ராகுல் சாங்கிருத்யாயன். 2003(1949). வால்காவிலிருந்து கங்கை வரை. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
*ராகுல் சாங்கிருத்யாயன். 1999(1946). பொதுவுடைமைதான் என்ன?. சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
*ஜார்ஜ்தாம்சம். 2002. மனித சமூக சாரம். விழுப்புரம்: சரவணபாலு பதிப்பகம்.
*ஜார்ஜ்தாம்சம். 2005. மனித சாரம். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
*ஸ்டாலின்,ஜே.வி. 2017.மார்க்சியமும் மொழியியலும். சென்னை: புதுமை பதிப்பகம்.
*பக்தவத்சல பாரதி. 2003(1990). பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
*பக்தவத்சல பாரதி. 2005. மானிடவியல் கோட்பாடுகள். புதுச்சேரி: வல்லினம் பதிப்பகம்.
*பக்தவத்சல பாரதி. 2014. இலக்கிய மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
*பக்தவத்சல பாரதி. 2002. தமிழர் மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
*பக்தவத்சல பாரதி. 2013 (2007). தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
*பொற்கோ- இலக்கிய அறிவியல். http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=387
*மாசேதுங். 1995(1951). கலையும் இலக்கியமும். சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
*ஸ்டாலின்,ஜே.வி.2013. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல் வாதமும். சென்னை: கீழைக்காற்று.
*மருதையன். நவ.2017. மூலதனம்150வது ஆண்டு சிறப்புரை. வினவு: https://www.youtube.com/watch?v=llzgMJLriVk&t=1169s
*மருதையன். மார்ச்.2019. பாசிசத்தின் இயற்கை கூட்டாளிதான் பா.ஜ.க. வினவு: https://www.youtube.com/watch?v=F2G-tl27Nug
*பெரியார். 2017. பெரியார் இன்றும் என்றும். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
*(அப்துல்.நவ.2017.தொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை. புதியஜனநாயகம். பக்.4-12)
*துரைசண்முகம். ஏப்.2016. யாருக்கான அரசு லெனினோடு பேசு. வினவு: https://www.vinavu.com/2016/04/22/lenin-on-state/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.