தொல் தமிழர்கள் நிலங்களை அதன் தன்மை அடிப்படையில் மிக நுட்பமாக ஆ- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -ய்ந்து ஐந்து வகையாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள். அவை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவைகளாகும். இதில், கடலும் கடல்சார்ந்த பகுதியான நெய்தல் நிலத்தின்கண் வாழும் ஆண் மக்களைப் பரதவர், நுளையர், திமிலர் என்றும் பெண்மக்களைப் பரத்தியர், நுளைத்தியர், நுழைச்சியர் என்றும் அழைப்பர். இங்ஙனம் நெய்தல் நிலத் தலைமகனைக் கொண்கன், துறைவன், சேர்ப்பன், மெல்லம்புலம்பன், புலம்பன் பரப்பன் என்ற பெயர்களால் வழங்கப்பட்டுள்ளதைப் பண்டைய இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இத்தகைய நெய்தல் நிலத்தில் வாழும் மக்களின் வாழ்வியலின் முக்கிய அங்கமான குடில்கள் பற்றியப் பதிவுகளை ஆய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

பரதவர் எனப்படும் மீனவர் குடிலைச் சுற்றி பனைமரங்கள் நிறைந்து அடர்ந்து காணப்பட்டதை,

“ஒலிகா வோலை முள்மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண்மணற் படப்பைஎம் அழுங்கல் ஊரே” (நற்.38:8-10)

என்று குறிக்கக் காணலாம். குடிலின் அருகில் வளைந்த கருங்கழிகளும் காணப்படும். அவற்றிலே நெய்தல் கொடிகள் மலிந்து பூத்துக் குலுங்கும் தன்மையுடையது.

“கொடுங்கழி நெய்தலும்” (ஐங்.183:5)

“பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன்மீன் இருங்கழி
….. ……………………………..
தண்ணம் துறைவன்”    (குறுந்.9:4-7)

இவ்விடத்திலே தாழைப் புதர்கள் நிறைந்து வேலியமைத்ததைப் போன்று காணப்படும்.

“வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலை வேல்நாட்டு வேலி ஆகும்” (குறுந்:245:3-4)

இங்கு அடும்புக் கொடிகள் எங்கும் படர்ந்தும் பரவியும் இருந்ததை,

“………………….. தண்கடல் பரப்பின்
அடும்புஅமல் அடைகரை” (பதிற்.51:6-7)

என்னும் பாடலடிகள் வெளிப்படுத்துகிறது. மேலும் புன்னை மரங்களும் பூத்துக் குலுங்கும் புலிநகக்கொன்றையும் புதுமணம் வீசி நிற்கும்.

“பூவிரி புன்னைமீது தோன்று பெண்ணை
கூஉம் கண்ணஃதே” (அகம்.310:12-13)

பரதவர்கள் வாழ்ந்த பகுதி நெருக்கமாக அமைந்த சிறு சிறு குடில்களாக இருந்தது என்பதை,

“கானலம் சிறுகுடி’ (நற்.4:1, 254:12)

‘கானல் நண்ணிய காமர் சிறுகுடி’ (நற்.45:1, 298:5)

‘சிறுகுடி பாக்கம்’ (நற்.219:6)

‘புலவுநாறு சிறுகுடி’ (நற்.338:8)

‘துறை கெழுசிறுகுடி’ (குறுந்.145:1)

‘கானல் நண்ணிய சிறுகுடி’ (குறுந்.228:3)

‘இரும்புலாக் கமழும் சிறுகுடிப்பாக்கம்’ (அகம்.70:2)

‘கல்லென் சிறுகுடி’ (அகம்.110:13)

‘அவ்வலைப் பரதவர் கானலம் சிறுகுடி’ (அகம்.250:11)

‘புலாஅல் மறுகின் சிறுகுடிப்பாக்கம்’ (அகம்.270:2)

‘சிறுகுடிப் பரதவர்’’ (அகம்.140:1,330:15)

எனச் செவ்விலக்கியத்தில் பலவிடத்தும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

தொன்மைக்காலத்தில் மீனவர்கள் குடியிருப்புகள் ஊர், சிற்றூர், சீறூர் என்று அழைக்கப்பட்டன. இச்செய்தியை,

“அரவச் சீறூர்’ (அகம்.130:17)

‘பெண்ணைவேலி உழைகண் சீறூர்’ (நற்.392:6)

‘தன்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர்’ (நற்.135:4)

‘சிறு நல்லூர்’ (குறுந்.55:5)

‘பெருநீர் வேலி எம் சிறுநல்லூரே’ (அகம்.130:17)

‘குவவு மணல் நெடுங் கோட்டாங்கண்
உவக்காண் தோன்றும் என்சிறு நல்லூரே’’ (அகம். 350:15)

என்று சொல்வதிலிருந்து அவை சிற்றூர்கள் என்பதும் மணல் மேட்டில் உள்ளவை என்பதும் பனை மரங்களால் சூழப்பட்டவை என்பதும் நீரினை வேலியாக உடையவை, ஆரவாரமானவை, புலால் நாற்றம் வீசுபவை என்பதும் வெளிப்படுகிறது.

நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் அக்குடியிருப்புகளிலே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் இடமாக இருப்பதால் அவை மூதூர் என்றும் அழைக்கப்படுகிறது.

“செம்மல் மூதூர்’ (நற்.130:4)

‘அழியா மரபின் நம்மூதூர்’ (நற்.311:5)

‘சிறுபல் தொல்குடி’ (அகம்.290:8)

‘அம்பல் மூதூர்’ (நற்.249:10, 292:9)

அழுங்கல் மூதூர்’’ (நற்.138:11)

என்பவைச் சான்றுகளாக அமைகின்றன. மேலும் இக்குடியிருப்பு சேரி என்றும் சொல்லப்படுகிறது. ஒரே இனத்து மக்கள் சேர்ந்து வாழ்ந்து வருவதால் அது சேரி என்று அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது குப்பம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே இனத்து மக்கள் கும்பலாய் வாழ்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது எனலாம்.

தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ‘தெய்வம் உணாவே’ (தொல்.நூ.18, நச்.உரை பவானந்தம் பதிப்பு ப.54) என்னும் நூற்பா உரைவிளக்கத்தில் ‘நெற்தற்கு ஊர் பட்டினமும் பாக்கமும்’ என்று கூறியுள்ளார்.

“பாக்கம், பெறலரும், பட்டினம்’’ (நம்பியகப்பொருள் சூத்.24-5)

“பட்டினம் நெய்தல்பதி’’ (திவாகர நிகண்டு 105)

“பட்டினமே நெய்தல்’’ (சூடாமணி 39)

“பாக்கம் பட்டினம் நெய்தல் நிலத்து ஊரே’’ (பிங்கலந்தை 151)

இப்பாடல் குறிப்பிலிருந்து நெய்தல் நில ஊர்கள் பாக்கம், பட்டினம் என்று அழைக்கப்பட்ட செய்தி வெளிப்பட்டு நிற்கிறது. இருப்பினும் ஊர், குடி, சிறுகுடி என்ற பெயர்களிலேயே மிகுதியாகச் சொல்லப்படுகின்றன.

பரதவர்களின் குடில்கள்
நெய்தல்நில மாந்தர்களான பரதவர்களின் குடிலின் அமைப்பு, தோற்றம் போன்றவற்றைச் சங்கப் புலவர்கள் நேரில் காண்பது போன்ற எழில் நடையில் சுட்டுவதைக் காணமுடிகிறது.

குடில் அமைக்கும் போது ‘மூங்கிற் கோல்கலை வரிசையாகச் சார்த்தி வஞ்சி, காஞ்சி ஆகிய மரங்களின் வெண்மையான கொம்புகளை இடையிடையே விரவிப் பொருத்தி, தாழை நாரினைக் கொண்டு வலித்துக் கட்டி, மேலே தருப்பைப்புல் வேய்ந்த குறுகிய தாழ்வாரம் இறக்கி அமைத்த குடிசை; தாழ்வாரத்தில் மீன் பெய்யும் பனை ஓலையால் செய்து தொங்கி அசைந்து கொண்டிருக்கிறது. குடிசையை ஒட்டிப் புன்னைக் கொம்புகளைக் கால்களாய் நட்டுக் கட்டிய சிறுபந்தல்; அதில் சுரை போன்ற கொடிகள் செழித்துப் படர்ந்து, காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன’ என்று வலைஞர் குடிலொன்றினை அப்படியே நமது மனக்கண் முன்னே கொண்டு வருகிறார் சங்கப் புலவர்.

“ வேழம் நிரைந்து வெண்கோடு விரைஇ
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறை குரம்பை பறியுடை முன்றில்
கொடுங்காற் புன்னை கோடுதுமித்து இயற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்’’(பெரும்.263-267)

கடியலூர் உருத்திரங் கண்ணனார் மற்றொரு இடத்தில் இக்குடிசையமைப்பினைக் குறிப்பிடும்போது,

“கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
நடுகல்லின் அரண்போல
நெடுந்தூண்டிலில் காழ்சேர்த்திய
குறுங்கரைக் குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில்” (பட்டின.78-83)

என்று பாடுகிறார். இதில் ‘போரில்பட்ட மறவர்க்கு வீரக்கல் நட்டுப் பலியுணவு படைக்கும்போது, அக்கல்லினைச் சூழ வேல்களை நிரலே நட்டு, உட்புறமாகக் கேடயங்களை வரிசை ஒழுங்கிற் பொருத்தியது போன்றுள்ளது. தூண்டிற்கோல்கள் சார்த்தப்பட்டிருக்கும் குறுகிய கூரையோடு அமைந்த மீனவர் சிறுகுடில் அருகே வெள்ளிய மணற்பரப்பில் உலர்தற்காகப் போடப்பட்டிருக்கிறது. சாயமிடப்பட்ட வலை அத்தோற்றம் நிலவினைக் கப்பிக் கிடக்கும் இருளினை ஒத்துள்ளது’ என்ற கருத்தை விளக்குகிறார். இக்குடில்கள் காய்ந்த புல்லால் வேயப்பட்டவை. இவை செத்தை, விழல் என்னும் பெயர்களில் இப்போது அழைக்கப்படுகின்றன.

அடிமரத்திலிருந்து கழித்த பனை ஓலைகளைக் கொண்டு கட்டப்பட்ட வேலி சூழ்ந்த கடற்கரையூர் என்று சொல்லப்படுவதை நற்றிணையில் உலோச்சனார் பாட்டில்,

“……………கானல் 
ஆடுஅரை ஒழித்த நீருஇரும் பெண்ணை
வீழ்கா வோலைச் சூழ்சிறை யாத்த
கானல்”     (நற்.354:1-4)

என்னும் பாடல் வழி அறியலாம். 

சிறுகுடிப்பாக்கம் என்னும் ஊரானது ஓங்கி உயர்ந்ததும், கள்ளினைத் தருவதுமான பனைமரங்களின் நடுவே அமைந்துள்ளது.

“ஓங்கித் தோன்றும் தீம்கள் பெண்ணை
நடுவணதுவே …………. …………..
……………… சிறுகுடிப் பாக்கம்” (நற்.323:1-6)

நன்கு தழைத்த முற்றிய பனையோலைகளையும் முட்களையும் சேர்த்துக் கட்டப்பட்ட வேலிக்குள், உயர்ந்த பனைமரங்கள் சூழ்ந்த வெண்மணல் மேட்டிலுள்ள ஊர் என்பதை,

“ஒலிகா வோலை முள்மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண்மணல் படப்பை எம் அழுக்கல்” (நற்.38:8-10)

என்ற அடிகளிலும், பரவிப்படர்ந்து வளர்ந்துள்ள மலர் மணக்கும் புன்னை மரங்களுக்கு மேல் பனைமரங்கள் ஓங்கி உயர்ந்து தோன்றுவதும், கூப்பிடிகின்ற தொலைவில் உள்ளதுமான ஊர் என்பதை,

“புவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக் 
கூஉம் கண்ணஃதே
…………………. நல் ஊறே” (அகம்.310:12-14)

என்ற அடிகளிலும் கூறக்காணலாம். இச்செய்திகள் பரதவர் குடியிருப்பு கடற்கரை வெண்மணல் மேட்டில் பனைமரம் சூழலில் அமைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. 

பாக்கம்
இன்றும் பரதவர் குடியிருப்புகளைப் பாக்கம் என்னும் பெயரிட்டு அழைக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக சேப்பாகம், கடப்பாக்கம், கொட்டிப்பாக்கம், கூத்திப்பாக்கம், கல்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் முதலிய ஊர்களைக் குறிப்பிடலாம். ஆனால் கடற்கரைப் பரதவர் குடியிருப்புகள் குப்பம் என்றே அழைக்கின்றனர். குப்பம் என்றால் மீனவர்களின் குடியிருப்பு என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக பரதவர்களைக் குப்பத்தார் என்றே அழைப்பர்.

பட்டினம்
கடல்சார்ந்த ஊரைப் பட்டினம் என்று இலக்கண உரையாசிரியர்கள் குறிப்பிடுவர். பொதுவாக ‘பட்டினம் என்பது கடற்கரை நகரம். வானளாவிய மாடமாளிகைகள் நிறைந்தது. அகலமான அழகிய தெருக்களை உடையது. இருமருங்கிலும் கைவல் கம்மியர் கவினூறத் தீட்டிய சிற்பங்களும், சித்திரங்களும் திகழும் அரண்மனைகள் அண்ணாந்து நிற்கப்பெற்றது; வெளி நாடுகளிலும் உள்நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பண்டங்கள் பலவும் விற்கும் நாளங்காடியும், அலங்காடியும் அமையப்பெற்றது. பல்வகை வினைஞர்கள் உறையும் பகுதிகளைக் கொண்டது. செல்வம் படைத்தோர் சிறந்து வாழ்வது; அரசியல் அறிஞர்களும் ஆட்சி செய்கின்ற தலைவர்களும், ஆணையாளர்களும் மாண்புற ஆள்வது; கடல்கடந்த நாடுகளினின்றும் அரிய பலபொருள்களை ஏற்றி வருவனவும், உள்நாட்டினின்றும் அயல் நாடுகளுக்கு ஏற்றிச் செல்வனவுமான, அசையும் மலைகள் போன்ற அலவிலா மரக்கலங்கள் நிறைந்து விளங்கும் துறைமுகத்தினை உடையது.

“மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய
பணிநீர்ப் படுவின் பட்டினம்” (சிறு.152-153)

“வால் இதை எடுத்த வளிதரு வங்கம்
“பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து” (மதுரை.537-538)

“முத்த வார்மணல் ……….. பட்டினம்” (பெரும்.336)

“முட்டாச் சிறப்பின் பட்டினம்” (பட்டின.218)

“காவிரி படப்பைப் பட்டினத்தன்ன” (அகம்.205:12)

“தாம் கவண்டும் பட்டினம்” (பரிபா.10:38)

‘பட்டினம் பெற்ற கலம்” (நாலடி.250:4)

“பாடெய்தும் பட்டினம்” (நான்மணி.83:2)

இவைகள் பட்டினம் என்பதற்கு உகந்த இலக்கியச் சான்றுகளாகும். 

பட்டினம் என்பது மீனவ மக்களான பரதவர்கள் மட்டும் வாழும் இடமில்லை. அங்கு பல்வேறு வகையான மக்களும் ஒருங்கிணைந்து வாழும் பேறுபெற்ற இடம்.

மலர்கள் விரிந்துள்ள நீண்ட கழியின் இடையில், பெரும்புகழையும், தோட்டங்களையும் உடையதாய் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்ற வளமிக்க இல்லம் என்று அகநானூற்றுப்பாடலின்,

“பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழுநகர்” (காவிரிபூம்பட்டினம்) (அகம்.205:11-13)

என்ற அடிகள் விளக்குகின்றன. ‘திருவிழாக் கொண்டாடும் பழமையான ஓரூரிலே போய்க் கூடினாற்போல’ பல்வேறு தேசத்திற்கும் சென்று பழகியதன் காரணமாகத் தத்தம் தாய் மொழியேயன்றி வேறு பல மொழிகளும் பெருகக் கற்றுத் தம் நாட்டிலிருந்தும் பெயர்ந்து வந்த வணிகர், ஆங்கு வாழும் மக்களோடு அன்பால் உளம் கலந்து இனிது வாழும் இடமான குறைவற்ற பிறவகைச் சிறப்புகளையும் உடைய காவிரிப்பூம்பட்டினம் என்பதை,

“சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்” (பட்டின.215-218)

என்னும் பாடல் சுட்டுகிறது. ‘அயல்நாடுகள் பலவற்றுக்கும் சென்று வணிகம் செய்து இலாபம் பெற்று மீண்டும் தனது சொந்த பட்டினத்தை அடையும் மரக்கலம். இதனை,

“பட்டினம் பெற்ற கலம்” (நாலடி.250:1)

கடல்தரும் முத்துபோன்ற பொருள்களால் பெருமையடையும் பட்டினம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

“…………….. நீர் வழங்கும்
பண்டத்தால் பாடெய்தும் பட்டினம்” (நான்மணி.86:1-2)

இச்சங்கப் பாடலடிகள் பட்டினத்தில் பல்வேறு மக்களும் வாழ்ந்து வந்ததை எடுத்துக் காட்டுகின்றன.

தற்காலத்திலும் துறைமுக நகரமே பட்டினம் என்பதற்குச் சான்றாகச் சென்னைப்பட்டினம், விசாகைப்பட்டினம், நாகப்பட்டினம், மசூலிப்பட்டினம், அதிராமப்பட்டினம் போன்ற ஊர்கள் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகின்றன. மேலும், சென்னையின் கடற்கரையில் அமைந்த ஊருக்கு ‘பட்டினப்பாக்கம்’ என்று பெயரிட்டும் மகிழ்கின்றனர்.

காவிரிப்பூம்பட்டினம்
புகார் என்று அழைக்கப்படும் இத்துறைமுகப்பட்டினம் சங்க இலக்கியத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. புகார் என்றால் ஆறு கடலோடு கலக்குமிடம் (சங்கமத்துறை) காவிரியாறு வங்கக் கடலில் கலக்கும் இடத்திலே இயற்கையாய் அமைந்த பட்டினம். இப்பட்டினத்திற்கு புகார் என்பது தொன்மைக் காலத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் பெயராகும்.

“காவிரி மண்டிய சேய்விரி வனப்பின்
புகாஅர்”     (பதிற்.73:8-9)

“காவிரி வைப்பு”    (அகம்.186:16)

“புகாஅர் நன்னாடு”    (அகம்.181:22)

“காவிரி மல்லன் நல்நாடு”    (புறம்.174:8)

“காவிரி கடலில் கலக்கும் பெருந்துறை” (அகம்.123:11)

என்றும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இவ்வூரில் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரு பெரும்பாக்கங்கள் இருந்தன. இக்காவிரிப்பூம் பட்டினம் விண்ணை முட்டும் மதில் சூழப்பெற்றது. கண்காணவியலாச் சிகரங்கள் ஓங்கிய மாடமாளிகைகள் நிறைந்து இருந்தது. இப்பொருள் எம் பட்டினத்தில் இல்லையென அம்மக்கள் வேறெந்த நகரினுள்ளும் புகார்; இங்கே இல்லாத எப்பொருளும் இல்லை என்று எண்ணும்படி பல்வகை வளமும் நிறைந்தது. 

“மகர நெற்றி வான்தோய் பரிசைக்
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல்நாட் டதுவே” (அகம்.181:20-22)

பட்டினப்பாலையின் பாடலடிகள் (29-39இல்) உப்பை விற்று நிறைய நெல்லேற்றித் திரும்பிய பெரும்படகுகள் கழி மருங்கே கட்டப்பட்டிருந்தன என்ற செய்தியிலிருந்து படகுகள் செல்வதற்குரிய கழைகள், வாய்க்கால்கள் புகாரையடுத்த பல உள்ளூர்களையும் புணைக்கு மாறியிருந்தன என்றும் அக்கழிகளின் வழியே படகுகள் அவ்வூர்களுக்கு உப்பேற்றிச் சென்று பண்டமாற்றாக நெல்லேற்றித் திரும்பின என்றும் அறியமுடிகிறது.

அல்லும் பகலும் காவல்மிகுந்த மரக்கலங்கள் புகார்த் துறையில் பொலிவுடன் அசைவது, தறியில் கட்டுண்டு அழகுற அசைந்து நின்ற யானைகளைப் போன்றன. அம்மரக்கலங்களின் பாய்மரங்களின் மீதும் அப்பட்டினத்தின் பகுதிகளெங்கும் எண்ணருங் கொடிகள் விண்ணுற வீசி, நெருங்கிப் பறந்து நிழல்படச் செய்தன. அப்பட்டினம் என்றும் எங்கும் விழாக்கோலம் பூண்டு எழிலுற விளங்கியது. அல்லும் பகலும் ஆரவாரப் பேரொலி எழுந்து ஒலிந்தவாறு இருந்தது. 

“வெளில் இளக்கும் களிறுபோல
தீன்புகார்த் திரை முந்துறை
தூங்கு நாவாய் துவன்று இருக்கை
மிசைக்கூம்பின் நசைக் கொடியும்
……….. …………… கொடியோடு
பிறபிறவும் நனிவிரைஇ
பல்வேறு உருவின் பதாகை நீழல்
செங்கதிர் நுழையாச் செழுநகர்” (பட்டின.172-183)

முசிறி, தொண்டி, கொற்கை
தொன்மைக் காலத்தில் புகார் துறைமுகப் பட்டினம் போன்றே சிறப்புற்று இருந்தவை முசிறி, தொண்டி, கொற்கை போன்ற துறைமுகப் பட்டினங்களாகும்.

முசிறி பட்டினம்
இத்துறைமுகப்பட்டினம் சேரநாட்டின்கண் மேற்கு கடற்கரையில் அமைந்து சிறந்து விளங்கியது. இங்கிருந்து ஏற்றுமதியாகும் மிளகு உலகத்தரமானது. எனவே மிளகு ஏற்றுமதிக்கு பேறுபெற்றுத் திகழ்ந்தது.

சேரநாட்டிலே ஈண்டு பெருகி விளைந்த மிளகினை வாங்குவதற்குச் சுள்ளி என்னும் பேரியாற்றினது கரைக்கண் அமைந்த முசிறித் துறைமுகப் பட்டினத்துக்கு யவனம் போன்ற மேலைநாட்டு வணிகர்கள் வேலைப்பாடமைந்த சிறந்த மரக்கலங்களில் வந்து மிகுந்த பொன்னைத் தந்து மிளகைப் பெற்றுத் திரும்பினர்.

“சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி“ (அகம்.149:8-11)

பல்வேறு வளமும் புகழும் கொண்ட இத்துறைமுகத்தைப் பாண்டிய மன்னர் வளைத்துக்கொண்டு பல யானைகள் மடியுமாறு பெரும்போர் புரிந்தனர் என்ற வரலாற்றுச் செய்தியும் காணப்படுகின்றது.

“கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
முதுநீர் முந்துறை முசிறிமுற்றி
களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும்புண் உறுநரின்” (அகம்.57:14-17)

தொண்டி பட்டினம்
இது சேரநாட்டின் மேற்கு கடற்கரையில் சிறந்து விளங்கிய மற்றொரு சிறந்த துறைமுகப்பட்டினமாகும். தொண்டி நகரம் திண்ணிய தேரையுடைய சிறந்த சேரப்பேரரசனானப் பொறையனின் துறைமுகமாகும்.

“திண்தேர்ப் பொறையன் தொண்டி” (நற்.8:9)

“திண்தேர்ப் பொறையன் தொண்டி முன் துறை” (குறுந்.128:2)

தொண்டி நகரம் கல்லென்னும் போராலி மிக்க புள்ளினம் வாழும் சோலைகளால் சூழப்பட்டது.

“கல்லென் புள்ளின் கானலம் தொண்டி” (நற்.195:5)

இங்கு நண்டுகளும், இறாக்களும் ஏனைய கொழு மீன்களும் கோட்டு மீன்களும் பல்கிப் பெருகியதும் மணங்கமழ் பாக்கத்தை உடையதுமான வளமான கடல்துறைமுகம். 

“பெருநீர் வலைவர் தந்த கொழிமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்
துறைகெழு தொண்டி”     (ஐங்.180)

இத்துறையை ஐங்குறுநூற்றுப் பாடல், முழங்கும் குளிர்ந்த கடல் அலைமிக்க பழம்பெரும் துறைமுகம் என்கிறது. 

“திரை இமிழ் இன்னிசை அளைஇ அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகு தொறு இசைக்கும் 
தொண்டி”     (ஐங்.171:1-3)

தாலமி என்னும் அயல்நாட்டு பயணி ‘Tyndis a city Bramagara Kalaikkarias, Mouzhris an emporium’ [(1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கழக வெளியீடு; 1962) வி.கனகசபை; தமிழாக்கம் அப்பாதுரை] எனச் சொல்வதில், தொண்டி மற்றும் முசிறி துறைமுகங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.

கொற்கை பட்டினம்
பாண்டிய நாட்டின் சீர்மிகு துறைமுகம் கொற்கை. இத்துறைமுகம் முத்துக்குளிப்பதற்குப் பெயர்பெற்றது. தமிழகத்தை முதலில் உலகறியச்செய்த ஒப்பற்ற பட்டினம் இதுவேயாகும். கொற்கையிலிருந்து பெறப்படும் முத்துக்காக மேலைநாட்டினர் ஏங்கிக் கிடந்தனர் எனலாம்.

பரதவ நாட்டிலுள்ள முக்கிய நகரான கொற்கை முத்துக்குளிப்புத் தொழிலுக்கு உரிய ஒரு நடுவிடம். இந்நகர மக்களில் பெரும்பாலோர் முத்துக்குளிப்போராகவும், சங்கறுப்போராகவும் இருந்தனர். முத்துக்குளித்தல் பாண்டிய நாட்டின் வருவாயில் பெரும்பகுதியாக இருந்த காரணத்தினாலேயே பட்டத்து இளவரசர் அங்கேயே தங்கியிருப்பது வழக்கமாயிருந்தது. ஒரு காலத்தில் கடற்கரையிலிருந்த இந்நகரம் கடல்கோளால் அழிந்து பின்னர் காயல் என்னும் துறைமுகம் ஏற்படுத்தப்பட்டு அதுவும் கடல்கோளால் அழிந்துவிட்டது.

கொற்கை துறைமுகம் முத்தால் புகழ்பெற்றச் செய்திகளைச் செவ்விலக்கியங்கள் பல்வேறு இடங்களிலும் இனிதே எடுத்துக்கூறுகின்றன.

“பரப்பின், இவர்திரைதந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கும்

நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை” (அகம்.130:8-11)

“கொற்கை முன்றுறை இலங்குமுத்து உறைக்கும்” (ஐங்.185:1)

“புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்றுறை
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து” (அகம்.201:4-5)

“ஈண்டு நீர்
முத்துப்படு பரப்பின்
கொற்கை முன்றுறை” (நற்.23:5-6)

“மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்து” (அகம்.27:8-9)

இனிய ஆரவாரங்கள் மிகுந்த கொற்கை துறைமுகத்திலே பெருமதிப்புடைய வலம்புரிச் சங்கினையும் (அகம்.350:10-13) வாரிக் குவித்திருப்பர். இத்தகைய குறிப்புகள் துறைமுகப் பட்டினத்தின் பழம்பெரும் சிறப்பினை விளக்குவதோடு, பண்டைக்கால மக்களின் வாழ்வியலையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

இக்கட்டுரைச் சான்றுகளால் பட்டினம், பாக்கம் என்று இலக்கியங்களில் குறிப்பிடப்படுவது நெய்தல் நிலத்தின்கண் விளங்கும் துறைமுகத்தோடு கூடிய பெருநகரங்களை என்பது தெளிவாகிறது. செவ்வியல் இலக்கியங்களில் பரதவர் குடில்களின் அமைப்பும், அவர்களின் வாழ்வியல் முறைகளும், தொழில்களும் பற்றி ஆங்காங்கே சுட்டப்பட்ட பதிவுகள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. அம்மக்கள் கூட்டமாகவும்(உறவுகளுடன்) ஒற்றுமையாகவும் வாழ்ந்து நெய்தல் நிலப்பெருமையை நிலைநாட்டி வருகிறார்கள். மேலும் அம்மக்கள் தொழில் செய்வதில் முனைப்புடன்(ஈடுபாட்டுடன்) செயல்பட்டிருந்தாலும் அவர்களின் குடில் அமைப்பைக் காணும்போது அவர்களது வாழ்வில் செல்வச் செழிப்பில்லாத நிலையையே காட்டுகின்றது.

துணைநூற்கள்
1. உ. வே. சாமிநாதையர், பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் 1889
2. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), 2008, தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.
3. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940,
4. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு,. வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,. 2ஆம் பதிப்பு,. 1958

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: - முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R