1:0. முன்னுரை
கற்பிற்குரிய மெய்ப்பாடுகளை, மனன் அழியாதவழி புலப்படுவன எனவும்; மனன் அழிந்தவழி புலப்படுவன எனவும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.23-24) இவ்வியலில் மேற்கூறிய மெய்ப்பாடுகளையும் அதனை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் உரையாசிரியர்கள் வழிநின்று ஆராயப்படுகின்றன.
1:1. மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளும் அகநானூறும்
மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளாக, முட்டுவயிற் கழறல், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறுத்தல், தூதுமுனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை ஆகியனவற்றைத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.(தொல்.மெய்.23) இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.
1:1:1.முட்டுவயிற் கழறலும் அகநானூறும்
முட்டுவயிற் கழறலென்பது, “களவு இடையீடு பட்டுழியதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனை கழறியுரைத்தல் என்றவாறு.”(இளம்.மெய்.23.) என இளம்பூரணர் கூறியுள்ளார். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். முட்டுவயிற் கழறலென்பது களவுக்காலத்து தலைவியைக் குறியிடத்துச் சந்திக்க இயலா காலத்து நேர்ந்த முட்டுப்பாடு காரணமாக தலைவனை கழறி உரைத்தலாகும். இதனை விளக்க, பாரதியும் பாலசுந்தரமும், குறுந்.296ஆம் பாடலையும்; மேலும் பாரதி, பாலசுந்தரம், பேராசிரியர், குழந்தை, இராசா, தாசன் ஆகியோர்,
“நொச்சி வேலித் தித்த னுறந்தைக்
கன்முதிர் புறங்காட் டன்ன
பன்முட் டின்றார் றோழிநங் களவே”(அகம்.122)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், நொச்சி வேலியாகச் சூழ்ந்து நிற்கின்ற தித்தனது உறந்தையிலுள்ள கன்முதிர்ந்த புறங்காட்டினையொத்த பல முட்டினையுடையது தோழி நமது கள்ளப்புணர்ச்சி நொச்சிவேலிப் புறங்காடு என்க என்பதில் ‘பலமுட்டின்றால் தோழிநங் களவே’ என்பது முட்டுவயிற் கழறலாகும். இதில் இரவு நேரச் சத்திப்பு இத்துணைத் தடைகளை உடையது. ஆகையால் விரைந்து மணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி தலைவனை வற்புறுத்துவது இதிலுள்ள குறிப்பு.
1:1:2 முனிவு மெய்ந்நிறுத்தலும் அகநானூறும்
முனிவு மெய்ந்நிறுத்தலென்பது, “வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின் கண்ணே நிறுத்தல்”(இளம்.மெய்.23) எனவும், “தலைமகளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலமையும்.”(பேரா.மெய்.23.) எனவும், “வரையாக்கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்பாடு குறிப்பால் வற்புறுத்துதல்.”(பாரதி.மெய்.23) எனவும், “தலைவன் வரைவிற்குரியன புரியாமல் களவு நீட்டித்தலின் அவ்வெறுப்புத் தன் மேனியிற் புலப்படத் தோழியை வற்புறுத்துங் குறிப்பொடு நிற்றல்.”(பாலசுந்.மெய்.23)எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இவற்றுள் இளம்பூரணர் ‘வெறுப்பு பிறர்க்குப் புலனாகாமை’ எனவும், பேராசிரியரும் ஏனைய உரையாசிரியர்களும் ‘வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமை’ எனவும் பொருள் கூறியுள்ளனர். முனிவு என்பது வெறுப்பு, மெய் என்பது உடல், நிறுத்தல், என்பது கோடாமை தலைமகன் மீதான வெறுப்பு தன் மெய்யின் வழியே வெளிப்படாது காத்தல் முனிவு மெய் நிறத்தலாகும். இதனை விளக்க, பாரதி, குறுந்.218 ஆம் பாடலையும்; மேலும், பாரதி, இராசா, பாலசுந்தரம், தாசன் ஆகியோர் குறுந்.4 ஆம் பாடலையும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,
“இன்னுயிர் கழிவ தாயினு நின்மக
ளாய்மல ருண்கட் பசலை
காம நோயெனச் செப்பா தீமே”( அகம்.52)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், இனிய உயிர் அவளிடமிருந்து நீங்குவதாயினும் நின்மகளது அழகிய குவளை மலர்போலும் மையுண்ட கண்ணின் பசலை காமநோயால் உண்டானதென்று செல்லாதீம். இதில் இன்னுயிர் கழிவதாயினும் என்பது வாழ்க்கை முனிந்ததாகும். எனவே இது முனிவு மெய்ந்நிறுத்தலின் பாற்படும். இதனை,
“களவொழுக்கத்தே தலைவன் சிறைப்புறமாக வந்து நிற்றலறிந்த தலைவி, தோழி அறத்தொடு நிற்க முயல்வாளை நீ இப்பொழுது அறத்தொடு நிற்றல் வேண்டா என்று தடுப்பால்போலத் தாயறிந்தமை அத்தலைவனுக் குணர்த்தும் பொருட்டு அவன் கேட்பக் தோழிக்குக் கூறியது என்றவாறு. இது வரைவு கடாவற் பொருட்டாம். பழையவுரையாசிரியர் தலைவி தோழியை அறத்தோடு நிற்பிப்பவள் கூட்டமில் நாட்டத்தாற் கூறுக என்று கூறியதென்பர் பேராசிரியர், “இது வாழ்க்கை முனிந்து தலைமகள் சொல்லிய” தென்பார் (தொல்.மெய்ப்பாடு.23)”(பொ.வெ.சோமசுந்தரம்(உரை), அகநானூறு, பா.52)
என பொ.வே. சாமசுந்தரம் கூறியுள்ளார். இதில் தலைவி தன்னுடைய நிலையை தாய் அறியா வண்ணம் தலைமகனுக்கு புலப்படுத்தும் நோக்கோடு தோழியை முன்னிலைப் படுத்தி கூறினாள் என்பதாம்.
1:1:3 அச்சத்தினகறலும் அகநானூறும்
அச்சத்தினகறலென்பது, “இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாம் எனக் கூட்டத்தின் அகன்றொழுகல்.”(இளம்.மெய்.23) எனவும், “தலைமகன்கண் வரும் ஏதமஞ்சி அவனை நீங்கும் குறிப்பும்” (பேரா.மெய்.23) எனவும், “அலரும் தலைவன் ஆற்றூரும் அஞ்சி, அவனணுகாது சேட்படுதல்.”(பாரதி.மெய்.23) எனவும், “இருளிடை வரும்போது தலைமகனுக்கு வரும் இடையூற்றுக் கஞ்சி அவனை நீங்குதல், அதாவது அவனை மறந்திருத்தலாம்.”(குழந்தை. மெய்.23) எனவும், “தலைவற்கு வருந்தொழிலான் ஊறு நேருங்கொல் எனத் தலைவி அஞ்சி குறியிடத்து நேராது சேயளாய் ஒழுகுதல்” (பாலசுந்.மெய்.23) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைவன் வரும் வழியில் ஏதேனும் துன்பம் நேருமோ எனவும், களவொழுக்கம் பிறர்க்குப் புலனாகுமோ எனவும் அவ்வாறு புலனாகிய வழி அலரும் ஆம்பலும் தோன்றுமோ எனவும் அச்சம் கொண்டு அதன்வழி குறியிடம் சேராது அகன்றிருத்தல் அச்சத்தினகறலாகும். இதனை விளக்க பாரதி, குறு.311, 324, 360 ஆகிய பாடல்களையும், இராசாவும் தாசனும், நற்.72 ஆம் பாடலையும் பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,
“மன்றுபா டவிந்து ……………… மயங்கி
இன்ன மாகவு நன்னர் நெஞ்ச
மென்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக்
கிறும்புபட் டிருளிய விட்ருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கான நாடன் வரூஉம் யானைக்
கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் தலைஇ நீர்வார்
பிட்டருங் கண்ண படுகுழி யியவி
னிருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே.” (அகம்.128)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், யாம் இத்தன்மையமாகவும் எமது நல்ல நெஞ்சமானது என்னோடும் நின்னோடும் ஆலோசியாது கைகடந்து சிறுமலைகள் பொருந்தி இருண்டவழி நுணுகிய வருதற்கரிய மலையின்கண் மழையையுடைய மேகம் நீர்வடிந்து. (நிறையப் பெற்ற) நுணிய அரிய கண்களையுடைய யானைப்படுகுழியை வழியில் இரவின்கண் மிதிப்புழி (அக்குழியின் மிதித்தலை நோக்கி) மிதியாமல் அவர் தளிரடியைத் தாங்கும்படி இன்று சென்றது. இது இரவுக் குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. இதில் இரவில் நேரும் துன்பத்தை நினைத்து தலைவி வருந்தும் நிலை கூறப்பட்டுள்ளது. இது இரவுக்குறி வரும் தலைமகனின் வரவுக்காக எதிர்பார்த்து இருக்கும் தலைவி தோழியிடம் தன் மனநிலையை கூறுமுகமாக உள்ளது. இது குறி மறுத்து விரைவில் மணம் முடிக்க அவனை மறைமுகமாக நெருக்குதலாம். இதனை,
“ “முட்டுவயிற் கழறல்” என்னுஞ் சூத்திரத்து அச்சத்தின் அகறல் என்னும் மெய்ப்பாட்டிற்கு, இப்பாட்டினைக் காட்டி இதன் கருதாவது, “நாம் அவர் இருளிடை வருதல் ஏதமஞ்சி அகன்று அவலித்திருப்பவும் என்னையும் நின்னையும் கேளாது என் நெஞ்சு போவானேன் என்றவாறாயிற்று“ என்பர், பேரா.”
( ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடைபவளம், பக்.18-19., மா.பரமசிவம், அகநானூறு, ப.132, புலியூர் கேசிகன், மணிமிடைபவளம், பக்.20-21 )
என ந.மு. வேங்கடசாமி, மா.பரமசிவம், புலியூர் கேசிகன் ஆகியோர் கூறியுள்ளனர். இதன்வழி மேற்கண்ட அகநானூற்றுப் பாடல் அச்சத்தினகறலின் பாற்பட்டது.
1:1:4 அவன் புணர்வு மறுத்தலும் அகநானூறும்
அவன் புணர்வு மறுத்தலாவது, “தலைமகன் புணர்ச்சிக்கண் வராக்காலத்துத் தானும் மனனழியாது நிற்கும் நிலை”(இளம்.மெய்.23) எனவும், “இரவுக்குறியும் பகற்குறியும் விலக்குதற்கெழுந்த உள்ள நிகழ்ச்சியும். அது, தமரையஞ்சி மறுத்தமையானும், இது வரைவு கடாவுதற்குக் கருத்தாகலானுந் திளைப்புவினை மறுத்தலோடு (265) இது வேற்றுமையுடைத்து”(பேரா.மெய்.23) எனவும், “வரையாது வந்தொழுகுந் தலைவன் கூட்ட மறுத்தல்”(பாரதி.மெய்.23) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
தலைவன் வரும் குறியிடத்து புணர்ச்சியினை விலக்கி ஒழுகுதல் அவன் புணர்வு மறுத்தலாகும். இதனை விளக்க, பாரதியும் பாலசுந்தரமும், குறுந்.139 ஆம் பாடலையும் தாசன் குறுந்.25 ஆம் பாடலையும், மேலும் பேராசிரியர், பாரதி, குழந்தை, இராசா, பாலசுந்தரம் ஆகியோர்,
“நல்வரை நாட நீவரின்
மெல்லி லோருந் தான்வா ழலளே” (அகம்.12)
எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர் இதில், நல்லவரை நாடனே! நீ இரவில் வரின் மெல்லியறாள் உயிர் வாழாள். என்பதில் விரைந்து மணமுடிக்க என்பது மறைத்து கூறப்பட்டது. இதனை,
“நல்வரை நாட…… வாழலள்” என்ற பகுதியை எடுத்துக்காட்டி……. தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியதாகலான், இஃது அவன் புணர்வு மறுத்தல் எனப்படும். இஃது, “ஒன்றித் தோன்றும் தோழிமேன” என்னும் இலக்கணத்தாற் றோழி குறிப்பாயினும், தலைமகள் குறிப்பெனவேபடும் என்பது கொள்க என்றுரைத்தார் பேரா.”( ந.மு.வேங்கடசாமி, அகநானூறு களிற்றியானை நிறை, ப.38)
என ந.மு.வேங்கடசாமி நாட்டார் கூறியுள்ளார். இது அவன் களவுக்காலப் புணர்வை மறுத்து கற்புக்கு நெறிபடுத்தலாகும்.
1:1:5 தூது முனிவின்மையும் அகநானூறும்
தூது முனிவின்மையென்பது, “தூதுவிட்டவழி வெறாமை” (இளம்.மெய்.23.) எனவும், “புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமின் அவர்க்கென்று துதிரந்து பன்முறை யானுஞ் சொல்லுதலும்.” (பேரா.மெய்.23) எனவும், “ஒழியாது உடனுறையும் அழிவில் கற்புக் கூட்டம் கருதிய தூதினை வெறாமை; அதாவது, வரைவு கருதி அவனுக்குத் தூதுய்க்கவும், அதன் தூது எதிரவும் விரும்புதல்.” (பாரதி.மெய்.23) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். பறவை, மேகம் முதலாயினவற்றை நோக்கி தலைவனிடம் தூது செல்ல பலமுறையாயினும் சொல்லுதல் தூது முனிவின்மை எனப்படும். இதனை விளக்க, பேராசிரியரும் தாசனும், குறுந்.106 ஆம் பாடலையும், பாரதி, குறுந்.10, 309, 98 ஆகிய பாடல்களையும், மேலும், பேராசிரியர், குழந்தை, இராசா, பாலசுந்தரம் ஆகியோர்,
“காணலுங் கழறாது கழியுங் கூறாது
தேனிமிர் நறுமலர்ப் புன்னையு மொழியா
தொருநின் னல்லது பிறிதுயாது மிலனே
யிருங்கழி மலர்ந்த கண்போ னெய்தற்
கமழிதழ் நாற்ற மமிழ்தென நசைஇத்
தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து
பறவை கிளருந் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமா லலவ” (அகம்.170)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், கடற்கரைச் சோலையில் உறையும் எமது தலைவரிடம் எமக்காகச் சென்று தூது கூறாது; தேன் மொய்த்த கறுமலர்களையுடைய புன்னையுஞ் சொல்லாது; அலவ! ஒருவனாகிய நின்னையல்லது தூது போக்குதற்கு வேறொன்றையுமிலேன். கரிய கழியின்கண் மலர்ந்த கண்போலும் நெய்தற்பூவின் கமழாநின்ற இதழ் நாற்றத்தை அமிழ்தமாக விரும்பி அதன் தண்ணிய தாதையூதிய வண்டுக் கூட்டங்கள் களிப்பாற் சிறந்து சிறகைக் கிளர்த்துகின்ற துறையை யுடையனாகிய நீயே (சென்று) அத்தூதைச் சொல்ல வேண்டுமென நண்டிடம் தலைவி கூறினாளென்பது தூது முனிவின்மையாகும்.
1:1:6 துஞ்சிச் சேர்தலும் அகநானூறும்
துஞ்சிச் சேர்தலென்பது, “கவற்சியான் உறங்காமையன்றி யுரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தல்”(இளம்.மெய்.23) எனவும், “மனையகத்துப் பொய்த்துயிலோடு மடிந்து வைகுதலும், துஞ்சுதலெனினும் மடிதலெனினும் ஒக்கும். வேண்டியவாறு கூட்டம் நிகழப் பெறாமையின் தலைமகனொடு புலந்தாள்போல மடிந்தொன்றுமாதலின் அதனைத் துஞ்சிச் சேர்தலென்றானென்பது.” (பேரா.மெய்.23) எனவும், “வரையா தொழுகும் தலைவன் வரவு மகிழாது மாழ்கிக் கூடல்.” (பாரதி.மெய்.23) எனவும் “வரைதலால் எய்தும் கூட்டம் தான் விரும்பியாங்கு நிகழாமல் நீட்டித்தலான் தலைவி உளம் மடிந்து மனை சேர்ந்திருத்தல்” (பாலசுந்.மெய்.23) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். உரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தலென இளம்பூரணரும் கூட்டம் நீட்டித்தலான் உளம் மடிந்து மனை சேர்ந்திருத்தலென ஏனைய உரையாசிரியரும் உரை கொண்டுள்ளனர். இங்கே கூறப்படும் மெய்ப்பாடுகள் மன அழிவின் கூட்டத்தின் பாற்படும் எனவே இளம்பூரணர் கூற்றுப் பொருந்தாது. இதனை,
“துஞ்சிச் சேர்தலாவது, வரைவு நீட்டுந் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமாழ்கல் சோர்தல் என்னாது சேர்தல் என்றதானும், துஞ்சலும் மடிமையுமுன் “ஆங்கவை ஒரு பாலாக” எனும் சூத்திரத்துத் தனி வேறு கூறப்படுவதானும் இங்கு இத்தொடர் வாளா மடிந்து மனை வைகுதலைச் சுட்டாமல் வரையாதொழுகுந் தலைவன் வரவு மகிழாது அவன் ஒழுக்கினுக்கு மாழ்கிப் பொலிவழி தலைவியின் மெலிவைக் குறிக்கும். “துஞ்சல்” மடிமையாகாமை, “நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்” என்று அவை வெவ்வேறு கூறப்பெறுதலானு மறிக. இதுவே பேராசிரியர்க்கும் கருத்தாதல், “வேண்டியவாறு கூட்டம் நிகழப்பெறாமையின் தலைமகனோடு புலந்தாள் போல மடிந்தொன்றுமாதலின்” என்னுமவர் உரைக்குறிப்பால் உணர்க. இனி “இஃது உரிமைபூண்டமையால் உறக்கம் நிகழ்தலா மாறும்” எனும் இளம்பூரணர் கூற்றும் பொருந்தாமை தேற்றம்.” (பாரதி.மெய்.23)
என பாரதி கூறியுள்ளார். எனவே இளம்பூரணர் உரை பொருந்தாது.
இம்மெய்ப்பாட்டினை விளக்க பேராசிரியர், குறுந்.161, கலி.48 ஆகிய பாடல்களையும்; பாரதி குறுந்.203ஆம் பாடலையும், குழந்தை குறுந்.161 ஆம் பாடலையும், பாலசுந்தரம், குறுந்.133, புறம்182, ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:7 காதல் கைம்மிகலும் அகநானூறும்
காதல் கைம்மிகலென்பது, “அவ்வழியும் அன்பின்மையின்றிக் காதல் கைம்மிக்கு வருதல்.” (இளம்.மெய்.23) எனவும், “காமங்கையிகந்தவழி நிகழும் உள்ள நிகழ்ச்சியும்” (பேரா.மெய்.23) எனவும், “புணர்வு பெறாமல் வரைவு நீட்டித்தவழிக் கையிகந்த காதலால் நையுநிலை.” (பாரதி.மெய்.23) எனவும், “மறைபிறரறியா தொழுகும் நிறைதளர்ந்து புள்ளொடும் பிறவொடும் தலைவி நொந்து கூறலும், நெஞ்சுளைதலுமாம். இடைக்காலத்தார் இதனைக் “காமமிக்கழிபடர்” என்பர்” (பாலசுந்.மெய்.23) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். காதல் கைம்மிகல் என்பது தலைவன் மீதான தன் காதல் கைமிகுதலாகும். இது புணர்வு பெறாது வரைவு நீட்டித்தவழி தலைவியிடம் வெளிப்படும். இதனை விளக்க, பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர் குறுந்.102 ஆம் பாடலையும், பாரதி, குறுந்.257, 102, குறள் 1254, 1293 ஆகிய பாடல்களையும், பாலசுந்தரம் குறுந்.163, 102 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:8 கட்டுரையின்மையும் அகநானூறும்
கட்டுரையின்மை என்பது, “கூற்று நிகழ்த்துதலன்றியுள்ளக் கருத்தினை மறைத்தமர்ந்திருத்தல்” (இளம்.மெய்.23) எனவும், “உரைமறுத்திருத்தலும். அதனாலே அதற்குத் தோழிகண்ணாயினுந் தலைமகன் கண்ணாயினும் உரைமுறை நிகழ்வதல்லது தலைமகள் உரையாளென்பது பெற்றாம்.” (பேரா.மெய்.23) எனவும், “துஞ்சிச் சேர்ந்து கையறவுற்ற நிலையில் பிறரைக் கழறி உரைக்கும் மன எழுச்சியின்றி வாய் வாளாதிருத்தல். கட்டுரைத்தல் - கழறியுரைத்தல்.” (பாலசுந்.மெய்.23) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். காதல் மிகையால் தன் எண்ணத்தைப் பிறர்க்குக் கூறாதிருத்தல் அதாவது பேசாதிருத்தலாகும். இதனை விளக்க, பேராசிரியரும் குழந்தையும், குறுந்.337 ஆம் பாடலையும், பாரதி, சிந்தா.997, குறுந்.318, 306 ஆகிய பாடல்களையும், பாலசுந்தரம், குறுந்.318 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
இதுகாறும் கூறப்பட்ட எட்டும் மனன் அழிவில்லாத நடுவண் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாகும் என இளம்பூரணரும், இவ்வெட்டும் வரைந்தெய்தும் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடுகள் என பேராசிரியரும் உரை கூறுவர். இவற்றின் சொற்பொருளை நோக்குமிடத்து இவை எட்டும் வரைந்து எய்தும் அழிவில் கூட்டத்திற்கு (கற்பிற் புணர்ச்சி) ஏதுவாவனவன்றி அழிவில் கூட்டத்திற்கு ஏதுவாகாது.
1:2. முடிவுரை
1. முனிவு மெய்ந்நிறுத்தலென்பதனை இளம்பூரணர், “வெறுப்பு பிறர்க்குப் புலனாகாமை“ எனவும், பேராசிரியரும் ஏனைய உரையாசிரியர்களும் “வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமை” எனவும் பொருள் கூறியுள்ளனர். முனிவு என்பது வெறுப்பு, மெய் என்பது உடல், நிறுத்தல் என்பது கோடாமை, தலைமகன் மீதான வெறுப்பு தன் மெய்யின் வழியே வெளிப்படாது காத்தல் முனிவு மெய் நிறத்தலாகும். எனவே இளம்பூரணர் உரையே சரியானது.
2. துஞ்சிச் சேர்தலென்பது, உரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தலென இளம்பூரணரும் கூட்டம் நீட்டித்தலான் உளம் மடிந்து மனை சேர்ந்திருத்தலென ஏனைய உரையாசிரியரும் உரை கொண்டுள்ளனர். இங்கே கூறப்படும் மெய்ப்பாடுகள் மன அழிவின் கூட்டத்தின் பாற்படும் எனவே இளம்பூரணர் கூற்றுப் பொருந்தாது.
3. முட்டுவயிற் கழறல் முதல் கட்டுரையின்மை ஈறாகக் கூறப்பட்ட எட்டும் மனன் அழிவில்லாத நடுவண் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாகும் என இளம்பூரணரும், இவ்வெட்டும் வரைந்தெய்தும் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடுகள் என பேராசிரியரும் உரை கூறுவர். இவற்றின் சொற்பொருளை நோக்குமிடத்து இவை எட்டும் வரைந்து எய்தும் அழிவில் கூட்டத்திற்கு (கற்பிற் புணர்ச்சி) ஏதுவாவனவன்றி அழிவில் கூட்டத்திற்கு ஏதுவாகாது.
4. மனன் அழியாதவழி புலப்படும் எட்டு மெய்ப்பாடுகளில், முட்டுவயிற் கழறல், முனிவுமெய்ந்நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன்புணர்வு மறுத்தல், தூதுமுனிவின்மை எனும் ஐந்து மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்களால் அகநானூற்றுப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது.
துணைநூற்பட்டியல்
(அ). தொல்காப்பிய உரை நூல்கள்
1. இராசா.கி., (உரை), தொல்காப்பிய பொருளதிகாரம் (பகுதி-2), பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. பதி.2013.
2. இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், பொருளதிகாரம் (பாகம்.2), சாரதா பதிப்பகம், சென்னை-14, பதி.2014.
3. சோமசுந்தரபாரதி, ச, (உரை), தொல்காப்பியம் பொருட்படலப் புத்துரை, மெய்ப்பாட்டியல், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதி.1975.
4. தாசன். மு.,(உரை) தொல்காப்பியக் களஞ்சியம், பொருளதிகாரம் (பகுதி-2), அபிலா பதிப்பகம், மேலப்பொட்டக்குழி, குமரி மாவட்டம், பதி.2011.
5. பாலசுந்தரம். ச.,(உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சி காண்டிகையுரை (களவு , கற்பு, பொருள், மெய், உவமை), தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பதி.1989
6. புலவர் குழந்தை (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், பதி.2012.
7. பொன்னையா. நா(பதி.), பேராசிரியர்(உரை), தொல்காப்பியம், பொருளதிகாரம் (பாகம்.2), திருமகள் அழுத்தம், சுன்னாகம், பதி.1943.
(ஆ) அகநானூற்று உரைநூல்கள்
1. கேசிகன், புலியூர்., அகநானூறு மூலமும் உரையும்(3-தொகுதிகள்), சாரதா பதிப்பகம், சென்னை-14, பதி.2016.
2. சுப்பிரமணியன். ச.வே., அகநானூறு தெளிவுரை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பதி.2009.
3. செயபால். இரா., அகநானூறு மூலமும் உரையும்(2-தொகுதிகள்) , நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை-98, பதி.2004.
4. சோமசுந்தரம். பொ.வெ., அகநானூறு- களிற்றியானைநிறை, கழகம்,1970.
5. பரமசிவம், மா., அகநானூறு இராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், இராசகுணா பதிப்பகம், சென்னை-91, பதி.2016.
6. மீனவன். நா, அகநானூறு மூலமும் உரையும்(3-தொகுதிகள்), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307, பதி.2004.
7. வேங்கடசாமி. ந.மு., அகநானூறு-களிற்றியானை நிறை, கழகம், 1943.
8. வேங்கடசாமி. ந.மு., அகநானூறு-நித்திலக் கோவை, கழகம், 1944.
9. வேங்கடசாமி. ந.மு., அகநானூறு-மணிமிடை பவளம் , கழகம், 1944.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -