திருமாலின் திருக்கலியாண குணங்களில் ஆழ்ந்திருப்போர் ஆழ்வார்கள். இவா்களது பாசுரங்கள் இனிய எளிய தமிழில் அமைந்துள்ளன. ஆயினும் அவற்றின் பொருளோ மிகவும் ஆழமானவை. அரிய தத்துவங்களை உள்ளடக்கியுள்ளவை. இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன். உயிர்களின் நலனையே தனது விருப்பாகக் கொண்டவன். இறைவனுடைய இப்பண்புகளை திருக்கலியாண குணங்கள் என்று குறிப்பிடுவா். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் சுட்டியுள்ள இறைவனின் திருக்கலியாண குணங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திருக்கலியாண குணங்கள்
திருமாலுடைய குணங்களை வைணவா்கள் திருக்கலியாண குணங்கள் என்று குறிப்பிடுவா். “இறைவன் எல்லா குற்றங்களுக்கும் எதிரிடையாக இருப்பவன். அதாவது இருளுக்கு ஒளி போலவும் பாம்புக்குக் கருடன் போலவும் திகழ்பவன். தன்னைச் சரணடைந்தவருடைய துன்பங்களைப் போக்குபவன். இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் அளவுபடுத்தப் பெறாதவன். அதாவது இன்ன காலத்தில் உள்ளான். இன்ன காலத்தில் இல்லான் என்கிற கால அளவு இல்லாத நித்தியன். இன்ன இடத்தில் உள்ளான் இன்ன இடத்தில் இல்லான் என்கிற தன்மை இல்லாதவன்”1 என்று குறிப்பிடுவா்.
“விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் பரந்துள்ளவன். நன்மை செய்பவன். அடியவா்களை மாயையிலிருந்து விடுவிப்பவன். எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்பவன் என்றெல்லாம் பொருள் கூறினும் இச்சொல்லை விடவும் பகவான் என்ற சொல்லையே ஆழ்வார்கள் பல இடங்களிலும் பயன்படுத்துகின்றனா். இதனாலேயே பாகவத சமயம் பாகவத தருமம் எனத் திருமால் நெறியைக் கூறி வருகின்றனா். பகவான் என்னும் பெயரின் அடிச்சொல் பகம் என்பது. இஃது ஆறு என்னும் பொருளை உடையது. இதனால் ஆறு கல்யாண குணங்களை உடையவன் பகவான் ”2 என்று குறிப்பிடுவா்.
“ ஞானம் ( அறிவு ) ஐசுவரியம் ( ஒரு தலைவனுக்குரிய இயல்பு ) சக்தி ( ஆற்றல் ) பலம் ( வலிமை ) வீரியம் ( ஆண்மை ) தேஜஸ் ( ஒளி மயமாக இருத்தல் ) ”3 என்பனவே அக்குணங்களாகும். இப்பண்புகள் அனைத்தும் இறைவனுடைய தலைமைத் தன்மையை விளக்கிக் காட்டுவனவாக அமைந்துள்ளன எனலாம்.
ஞானம்
எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் உள்ள எல்லாப் பொருட்களின் பண்புகளையும் ஒன்றுவிடாமல் ஒரே இடத்தில் கண்கூடாகக் காணுதலே ஞானம் எனப்படும். ஞானம் குறித்து “ ஞானம் என்பது அறிவு எனப்படும். சேதனனிடம் உள்ள துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை ஈயவும் அறிவதற்குத் தகுதியாக உள்ள எல்லாப் பொருட்களையும் ஒரே காலத்தில் நேராகக் காணவல்ல அறிவே ஞானம் ” 4 எனப்படும் என்பா்.
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடா்ச்சோதி மறையாதே
( திருவாய்மொழி 3 – 1 : 9 )
என்ற பாசுர அடிகளில் இறைவனுடைய ஞானம் என்னும் குணத்தினை நம்மாழ்வார் விளக்கிக் காட்டுகிறார்.
ஐசுவரியம்
ஐசுவரியம் என்பது எல்லாப் பொருட்களையும் நியமித்து நடத்தும் சாமா்த்தியத்தைக் குறிக்கும். “ இவன் யாவா்க்கும் ஈசன். யாவரையும் தனதாக்கிக் கொண்டு காக்கும் பேராற்றல் வாய்ந்தவன் ஈசன். இப்பண்பு ஐசுவா்யம் ”5 என்பா்.
வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல வீவில்சீா்
ஆற்றல்மிக் காளும் அம்மானை
( திருவாய்மொழி 4-5 : 1 )
என்ற பாசுர அடிகளில் நம்மாழ்வார் இறைவனை தலைமைப் பண்பு உடையவன் என்றும் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்கவன் என்றும் விளக்குகிறார்.
சக்தி
பிறா்க்குத் தவைலனாக விளங்கி அடக்கி ஆளும் ஆற்றலே சக்தி என்பது. இதனைச் “சக்தி என்பது உலக உயிர்கள் யாவற்றையும் ஒரே காலத்தில் நடத்தும் எம்பெருமானுடைய அகடிதகடனா சாமா்த்தியங்களைக் குறிக்கும் ”6 என்பா். திருமால் எல்லா உயிர்களையும் பாதுகாத்தலையே தனக்கு இயல்பாக உடையவன். அழிக்கும் காலம் வந்தவுடன் அவன் எல்லா உயிர்களையும் தன் திருமேனியில் சேரச் செய்கின்றான். பிறகு தன் திருநாபிக்கமலத்திலே எல்லா குணங்களும் பொருந்திய பிரமனையும் இந்திரனையும் தேவா்களையும் தேவா்களுக்கரிய உலகங்களையும் உண்டாக்கினான் என்று குறிப்பிடுவதனை
காக்கு மியல்வினன் கண்ண பெருமான்
சோ்க்கை செய்துதன் னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுக னிந்திரன் வானவா்
ஆக்கி னான்தெய் வவுல குகளே ( திருவாய்மொழி 2 – 2 : 9 )
என்ற பாசுரத்தால் அறியலாகின்றது.
பலம்
பலம் என்பது தனது தன்மையாலே எல்லாப் பொருட்களையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை. “தன்னுடைய உறுதிப்பாட்டினால் ஆற்றலால் எல்லாப் பொருட்களையும் தாங்கிக் கொள்ளும் வல்லமையே பலம் எனப்படும் ”7
செய்குந் தாவருந் தீமையுன் னடியார்க்குத்
தீர்த்தசுரா்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னைநான்
பிடித்தேன்கொள் சிக்கெனவே ( திருவாய்மொழி 2 – 6 : 1 )
என்று நம்மாழ்வார் போற்றுகிறார். இறைவனின் அவதாரச்சிறப்புகள் அனைத்தும் பலத்தையே விளக்கி நிற்கின்றன எனலாம்.
வீரியம்
உலகப் பொருள்கள் யாவற்றையும் உண்டாக்கித் தான் யாதொரு விகாரமுமின்றி இருத்தல் அவற்றை நடத்திக் கொண்டு போகும்போது தளா்ச்சியின்றி இருத்தல் ஆகியவை வீரியம் எனப்படும். “ வீரியம் என்பது உலகப் பொருட்கள் யாவற்றையும் உண்டாக்கி தான் யாதொரு விகாரமுமின்றி இருத்தல். யாவற்றையும் தன் சங்கற்பத்தாலே தாங்கி அவற்றை நியமித்து நடத்திக் கொண்டு போகும்போது புருவத்தினிடமும் வியா்வை தோன்றாதவாறு ( ஆயாசம் )தளா்ச்சியின்றி இருத்தல் ”8 என்பா்.
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன்படைத்தா னென்பரால் பாரிடம்
ஆவானும் தானானா லாலிடமே ? மற்றொருவா்க்கு
ஆவான் புகாவால் அவை ( பெரிய திருவந்தாதி – 42 )
என்ற பாசுரம் எம்பெருமான் உலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் தான் எந்தவொரு மாற்றமும் இல்லாத நிலையைக் குறிப்பிடுகிறது.
தேஜஸ்
ஒளிமயமாக இருத்தலைத் தேஜஸ் என்ற வடமொழிச் சொல்லால் குறிப்பிடுவா். “ தேஜசு என்பது ஆதித்தன் முன் மற்ற விண்மீன்கள் ஒளிராதன போன்று பகவான் முன் மற்றப் பொருள்கள் ஒளிரா. இந்நிலையில் மற்றவற்றின் பிரகாசத்தை மறைக்கும் தன்மையே தேஜசு எனப்படும்”9 என்பா்.
இதனை மற்றொரு விதமாக “ இவனைக் காணும் போதே எதிரிகள் நடுநடுங்கிப் பிணமாகும் நிலை ”10 என்று கூறுவா்.
சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள்தாம் இடிய
தாள்வரை வில்லேந்தினார்தாம் ( பெரிய திருவந்தாதி – 17 )
என்ற பாசுர அடிகள் எம்பெருமானின் வீரத்தை விளக்கி நிற்கின்றன.
வேதாந்தம் இறைவனை ஈசுவரன் நிர்க்குணன் என்று குறிப்பிடும். நிர்க்குணன் என்பதற்கு குணங்களே இல்லாதவன் என்று பொருள் கொண்டால் குழப்பங்களே தோன்றும். பொருந்தாத குணங்கள் இல்லாதவன் என்பது தான் இதற்குப் பொருள். அவ்வகையில் திருமாலுக்கு நம்மாழ்வார் குறிப்பிடும் கலியாண குணங்களை இதன்வழி அறியலாகின்றது.
சான்றெண் விளக்கம்
1. சுப்பு ரெட்டியார்முக்திநெறி ப 49
2. ப.அருணாசலம் வைணவ சமயம் ப.15.
3. திருமருகல் சிங்கார வேலனார் இந்துமத சாரம் 200 ப.44
4. மாருதிதாசன் முமுட்சுப்படி ப.205
5. இரா.இராஜகோபாலன் நம்மாழ்வார் காட்டும் தெய்வம் ப.22
6. சுப்புரெட்டியார் மு.நூ.ப.214.
7. மாருதிதாசன் மு.நூ.ப.214.
8. இரா.இராஜகோபாலன் மு.நூ.ப. 22.
9. சுப்புரெட்டியார் மு.நூ.ப.214
10. இரா.இராஜகோபாலன் மு.நூ.ப. 32.
1. சுப்புரெட்டியார், ந - முக்திநெறி, பாரிநிலையம், 184 பிரகாசம் சாலை, சென்னை. 1981.
2. அருணாசலம், ப - வைணவ சமயம், பாரிநிலையம், 184 பிரகாசம் சாலை, சென்னை. 1982.
3. சிங்கார வேலனார், திருமருகல் - இந்துமத சாரம், அருணோதயம், 3,கௌடியா மடம் சாலை, சென்னை. 1981.
4. மாருதிதாசன் ( உ.ஆ. ) - முமுட்சுப்படி, நா்மதா பதிப்பகம், தியாகராய நகா், சென்னை. 1996.
5. இராஜகோபாலன்,இரா - நம்மாழ்வார் காட்டும் தெய்வம், காந்தி புத்தக நிலையம், 1, கணபதி முதலி தெரு, சென்னை. 1994.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - - முனைவா்.பா.பொன்னி, உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவர், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி ), சிவகாசி. -