இசை என்பது ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இனிமையான ஒலிவடிவமாகும். மனித இனம் முதற்கொண்டு, சகல உயிரினங்களையும் இசைய வைக்கும் ஆற்றல் இதனிடம் பொதிந்து கிடப்பதனாலேயே இசை என்ற காரணப் பெயரை இது பெற்றதாகப் பொருள் கூறுவாரும் உளர். ’இசை கேட்டுப் புவி அசைந்தாடும்’ என்றும், ’என் இசை கேட்டு எழுந்தோடி வருவாரன்றோ’ என்றும் திரையிசைப் பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கின்றோமல்லவா? இவையும் இசை பற்றிய இவையொத்த பல பாடல் வரிகளும் கவிதையழகுக்கென வரையப்பட்ட வெற்றுக் கற்பனை வார்த்தைகளல்ல. மாறாக, இசையின் வரலாற்று வழிவந்த உண்மை அனுபவங்களின் வெளிப்பாடுகளே என்பதற்கான சான்றாதாரங்கள் ஏராளம் உள.
இத்தகைய வல்லமை வாய்ந்த, இசை தோற்றம் பெற்ற காலம் தொடர்பாக ஏராளம் எடுகோள்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அறுதியான முடிபுகள் இன்னமும் எட்டப்படாமல் அவை யாவும் அனுமானங்களாகவே இருந்து வருகின்றன. ஆதிமனிதனின் முதல் ஆயுதம் கோடரி எனவும், அதன் ஆயுள் 1.7 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் எனவும், அடுத்த ஆயுதமான ஈட்டியின் வயது 500,000 ஆண்டுகளாக இருக்கலாம் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதே ஆய்வுகள், முதலாவது இசைக்கருவி இற்றைக்கு 40,000 ஆண்டளவில் தோன்றியதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் தொடர்பாடலின் முதல் வழிமுறையான இசையானது இவை அனைத்திற்கும் முன்னதாகவே தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்றும், பறவைகள், மிருகங்களிடமிருந்தே மனிதன் இந்த இசையெனும் தொடர்பாடல் ஊடகத்தைப் பெற்றிருக்கின்றான் என்றும் இன்னொரு ஆய்வு கூறுகின்றது. இதன் விளைவாக, மனிதனிடமிருந்து முதன் முதலாகத் தோன்றிய இசைவடிவம் கைதட்டல் எனவும், பின்னர் தடிதண்டுகளைக் கொண்டு தட்டுதல் ஊடாக அது மேலும் பயணித்திருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்துதான் மனிதன் தன் குரலை இசையின் ஊடகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதற்குப் பின்னரான காலத்தில் வந்த கற்காலத்தில், கல்லாலான கருவிகளால் தானியங்கள், கிழங்குகள், வேர்களை இடித்தும் துவைத்தும் உணவாக்க முற்பட்டபோது தாளலயம் அந்நாளைய மனிதனால் அவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இசையின் துணை கொண்டே எமது மூதாதையர் தொடர்பாடவும் சமூகங்களைக் கட்டியெழுப்பவும் துவங்கி இருகின்றார்கள் என்றும், ஆதிமானுடரிடத்தே ஒரு கூட்டு அடையாளத்தையும், பரஸ்பர நம்பிக்கையையும் ஏற்படுத்தி அவர்கள் முன்னோக்கி நகர்வதற்கு இசை உதவியிருக்கிறதென்றும் முன்வைக்கப்படும் ஊகத்தில் உண்மை உண்டு என்றே சொல்லத் தோன்றுகின்றது. எது எவ்வாறாயினும், இசையை எழுப்புவதற்கும், இசையை இரசிப்பதற்குமான மனித ஆற்றல்தான் ஆரம்பகால மனித பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கிய படிநிலை என்பதே இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரதான அம்சமாகும்.இந்தவிதமாக மனித வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள இசையெனும் இந்த அற்புதக் கலையின் அல்லது அறிவியலின் அடிமுடி தெரிய முடியாதவாறு ஆய்வாளர்கள் திணறிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், இசை என்பது நவீன மனிதனின் கண்டுபிடிப்பு எனக் கூறி இறுமாப்படைவது சுத்த அபத்தம். அதுமட்டுமன்றி, இசையானது வெறுமனே ஒரு வேடிக்கைச் சாதனம் என்றும், வெகுமானம் அளிக்கவல்ல இன்ப நுகர்வுக்கலை மட்டுமே என்றும் இந்நாட்களில் கருதப்படுவது இசை பற்றிய அறியாமையின் இன்னோர் வெளிப்பாடாகும். உண்மையில், இசை மனிதனை மட்டுமன்றி, சகல சீவராசிகளையும் மகிழ்விக்கும் வல்லமை கொண்டது என்பதில் எந்தவித கருத்து முரண்பாடும் இருக்க முடியாது. ஆயினும் மனுக்குலத்துக்கான இசையின் பங்களிப்பு இந்த மனோரம்மிய குணாம்சத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. நவீன உலகம் தத்தெடுத்து வைத்திருக்கும் பல தவறுகளுக்கும், பல்கிப் பெருகிவரும் பிரச்சினைகளுக்கும், பிணி பீடைகளுக்கும் உகந்ததோர் ஔடதமாக இசையைப் பயன்படுத்துவதில் மனுக்குலம் இப்போதெல்லாம் ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்திருக்கின்றது.
வார்த்தைகளற்ற இசையைக் கேட்டும் எங்களால் மனம் நெகிழ்ந்து மகிழவும், சிரிக்கவும், மனம் நொந்து அழவும், சினக்கவும், துணிவுறவும், துவண்டு போகவும் முடிகிறது. தெரியாத மொழியில் இசைக்கப்படும் பாடல்களைக் கேட்கும்போதும் இவ்வாறாகப் பல்வகைப்பட்ட உணர்வுக் கிளர்ச்சிகள் ஏற்படுவதை எம்மால் உணர முடிகிறது. தொனியைக் (Tone) கொண்டு ஓர் இசையின் உணர்ச்சி நிலையை ஊகித்தறிய முடிவதே இதற்குக் காரணம். எனவே இசைக்கு மொழியில்லை - மொழி கட்டாயமாகத் தேவையான ஒன்றில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இதனால்தான் இன்று ஒரு பண்பாட்டு வகையினருக்கு உரித்தான இசையினால், நாடு கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, நிறம் கடந்து உலகப் பரப்பெங்கும் வெற்றிகரமாகப் பரவிக்கொள்ள முடிகின்றது. இந்தவித எல்லைகள் எல்லாவற்றையும் தாண்டி, மனிதனை இணைக்கும் ஒரு பாலமாக இசை பங்காற்றுகின்றது. இதன் காரணமாகவே உலகின் எந்த ஒரு மூலையில் பஞ்சம், பசி, இயற்கை அனர்த்தம், சுற்றுச் சூழல் கெடுதி, மனித முரண்பாடு - மோதல் போன்றன இடம்பெற்றாலும், அதனை எதிர்க்கும் ஒரு குரலாகவும், அதற்குப் பரிகாரம் தேடப் பயன்படும் ஒரு கருவியாகவும் இசை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதேபோல, சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்க ஒரு நெம்புகோலாக இசையைப் பயன்படுத்தி வெற்றிகண்ட கலைஞர்கள் பலரும் உலகெங்கும் பரவலாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒருவரை உதாரணராகக் கூறுவதாயின், மாற்றத்தின் தூண்டுகருவியாக இசையை மேற்குலகில் பயன்படுத்தியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படும் அமெரிக்கக் கலைஞர் பீற்றர் சீகர் (Peter Seeger) ஒரு கிராமியப் பாடகர், சமூக செயற்பாட்டாளர். ‘We shall overcome,’ ‘Where have all the flowers gone,’ ‘If I had a hammer’ போன்ற தமது பிரபலமான பாடல்கள் மூலம் உலக சமாதானம், மனித உரிமைகள், சூழல் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ’பங்குபற்றல்தான் மனித சமுதாயத்தைப் பாதுகாக்கப் போகிறது’ என மனப்பூர்வமாக நம்பியவர். பங்குபற்றலை ஊக்குவித்து மக்களையும், மக்கள் குழுக்களையும், சமூகங்களையும், முழு உலகையும் இணைக்கக்கூடிய சக்தி இசைக்கு உண்டு என வலியுறுத்தியவர்.
தமிழ்ச் சமூகத்தில் இவரையொத்த ஒருவரைச் சொல்வதானால், தமது இருபத்தொன்பதாவது வயதில் இவ்வுலகைவிட்டு நீத்த திரையுலகப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தென்னிந்திய சினிமா வரலாற்றில் இன்றுவரை விதந்து பேசப்பட்டு வரும் ஒரு மக்கள் கவிஞர். ’சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா,’ ’தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்று பெயர் வாங்காதே,’ ’திருடாதே பாப்பா திருடாதே’ போன்ற அவரது ஏராளம் பாடல்கள் இன்னமும் விருப்புடன் பாடப்பட்டு, கேட்கப்பட்டு வருவதற்கு என்ன காரணம்? சிந்தனையைத் தூண்டும் வகையில், அவர் சமூகப் பிரச்சினைகளைப் பாடினார்; சமூகத்தின் அடிநிலை மக்களின் விடிவை நோக்கிப் பாடினார். இசை எனும் உன்னதமான ஊடகத்தைப் பயன்படுத்தி, சமூக மேம்பாட்டுக்கான அரிய சிந்தனைகளை மக்கள் மனங்களில் அவரது பாடல்கள் இலகுவாக விதைத்தமையே அதற்கான பிரதான காரணம்.
இனி, தனியாள் ஆரோக்கியத்தை எடுத்து நோக்குவோமாயின், அதனை இரு பிரிவுகளாகப் பகுத்துப் பார்க்கலாம். ஒன்று உள ஆரோக்கியம்; அடுத்தது உடல் ஆரோக்கியம். உள்ளத்தோடு சம்பந்தப்பட்ட பல கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடியது இசை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இது எவ்வாறு சாத்தியமாகின்றது என சில வேளைகளில் எண்ணத் தோன்றுகின்றதல்லவா? எமது உடலில் உள்ள நரம்பு மண்டலம் மூளையின் கட்டுப்பாட்டிலுள்ளது. நரம்பு மண்டலத்தில் தொடர்ச்சியாக மிக நுண்ணிய மின்னலைகள் உற்பத்தியாகின்றன. மூளைக்கான செய்திகளை இந்த மின்னலைகளே எடுத்துச் செல்கின்றன. மூளையிலிருந்து அச்செய்திகள் உடலின் மறுபாகங்களுக்குக் கட்டளைகளாகக் காவிச் செல்லப்படுகின்றன. மூளையின் மின் அலைவரிசைகளுக்கு ஏற்ப, இசையின் ஒலியலைவரிசை அமையும்போது, நமது எண்ணங்களிலும் மனோநிலையிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகளூடாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒலியின் அலைவரிசையை மாற்றி அமைப்பதன் மூலம், மூளையின் அலைவரிசையில் உரிய தாக்கங்களை நிகழ்த்தி, நோய்களைக் குணப்படுத்தலாம் என இசைமருத்துவம் நம்புகிறது. இவ்வாறாக, மூளையும் மனமும் உடலும் இசையால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்துப் பலவித ஆராய்ச்சிகள் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நரம்பியலும் இசையியலும் ஒன்று சேர்ந்து நரம்பிசையியல் மருத்துவம் எனும் புதிய மருத்துவப் பிரிவு உருவாக்கப்பட்டு, இவ்வாறான ஆய்வுகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை ஒரு நற்செய்தியாகும்.
மனோவுணர்வுசார் துன்ப துயரங்கள், மன அழுத்தம், மனச் சிதைவு, மனப் பதற்றம், நாட்பட்ட உடல் நோவுகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு ’மகிழ்ச்சியுடன் கூடிய மருந்துச் சீட்டு’ (பிறிஸ்கிறிப்ஷன் எனப்படும் மருந்துச் சீட்டுக்கள் பொதுவாக மகிழ்ச்சியானவை அல்ல) இந்த இசையாகும். இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்கள் நல்ல இசையைச் செவிமடுக்கும்போது, அவர்களது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், கோர்ட்டிசோல் (Cortisol) மட்டம் என்பன சீரடைகின்றன. இதனால் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆறுதல் கிடைக்கின்றது. தியானம், யோகா, ஆக்கக் கலைகள் (Creative Arts) போன்ற மாற்றுச் சிகிச்சை முறைகளெல்லாவற்றையும் விட, இசை தீவிரம் மிக்கது; மிகுந்த ஆற்றல் மிக்கது. எங்கும் எப்போதும் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியது. இலகுவில் உடலும் உள்ளமும் இதன் உடனடிப் பயன்பாட்டை அனுபவிக்க முடிகின்றது. குறிப்பாக சமூக முன்னேற்றம்சார் பாடல்களுடன் கூடிய இசையைக் கேட்கின்றபோது நேர்மறை எண்ணங்கள், பச்சாதாபம், பிறருக்கு உதவவேண்டும் எனும் விருப்பு என்பன எமது மனங்களில் இயல்பாகவும் மிக விரைவாகவும் வளர்ச்சியடைகின்றன.
இவற்றின் அடிப்படையில், இசையின் செயல் வலிமையை நாம் உற்று நோக்கும்போது, இன்னொரு உண்மையும் புலப்படும். இசையின் வழியாக மனம் சீர்பெறுகின்றது; மனம் சீரடைகின்றபோது அதற்கேற்ப உடலும் சீரடைகிறது; ஆகவே இசையினால் உளவியல் கோளாறுகள் மட்டுமல்ல, பல உடல் நோய்களும் சீரடையும் என்பது தெளிவாகின்றது. இதிலிருந்து, இந்திய இசை மரபின் வழிவந்த பல இராகங்கள், நோய் தீர்க்கும் மருந்துகளாகப் பரிந்துரைக்கப்படுவதன் தாத்பரியம் என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது. இருதய நோய்களுக்கு சாருகேசியும், பித்தரோகத்திற்கு சாரங்காவும், நீரிழிவுக்கு பாகேஸ்ரீயும், இரத்த அழுத்தத்திற்கு ஆனந்த பைரவியும், சிறுநீரக நோய்களுக்கு ரஞ்சனியும், வாதநோய்களுக்கு சங்கராபரணமும், கபாலக்குத்து நோய்க்கு மோகனமும், மறதிக்கு சிவரஞ்சனியும், ஒற்றைத் தலைவலிக்கு தோடியும், தொண்டை நோய்களுக்குக் காம்போதியும் உகந்தவையெனப் பரிந்துரைக்கப்படுகின்றன. மருத்துவ ரீதியாக ஆராய்ந்து நிரூபிக்கப்படாத போதிலும், இவற்றை ஆதாரமற்ற முடிவுகள் என ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. எதையும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அறிந்து, நம்பிப் பழக்கப்பட்ட நாங்கள், இசை கேட்கும் பசுக்கள் அதிக பால் சுரகின்றன எனக் கூறப்படுவதையும், இசை கேட்கும் செடிகொடிகள் அதிகளவில் பூத்துக் காய்க்கின்றன எனக் கூறப்படுவதையும், அமிர்தவர்ஷினி இராகத்தை இசைத்தால் மழை பெய்யும் எனக் கூறப்படுவதையும் - வெறும் மூட நம்பிக்கைகள் என எப்படித் தட்டிகழிக்க முடியும் என, இசை பற்றிய அறிவியல் அடிப்படையிலான தகவல்களும் அணுகுமுறைகளும் எண்ணத் தூண்டுகின்றன அல்லவா?
’யோகா’ என்ற பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதாகம காலங்களின்போது இந்திய உபகண்டத்தில் உதயமான உடலியல், உளவியல், ஆன்மீகவியல் ஒழுக்கப் பயிற்சி முறையை, பிரித்தானியர் தமது ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவில் தடை செய்திருந்தனர். இன்று அதே பிரித்தானியரது நாடு உட்பட, சகல மேற்கு நாடுகளிலும், முக்கியமாகப் பெரும்பான்மை இனத்தவர் மத்தியில், யோகா ஆல் போல் தளைத்து, அருகு போல் வேரோடிப் பரவிக் கிடக்கின்றது. யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற இந்திய பண்பாட்டு மூலக்கூறுகளின் உண்மைத்துவத்தையும் உபயோகத்தையும் மேற்குலகு காலம் தாழ்த்தியாவது அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இப்போதெல்லாம் அங்கீகரித்துக்கொள்ள முன்வரவில்லையா?.
அதேபோன்று, இந்தியப் பண்பாட்டின் இன்னொரு முக்கிய கூறான இராகங்களுக்குள் அடங்கியிருக்கும் இசையொலியலைகளின் பௌதீகவியல் பண்புகள் சார்ந்த, அறிவியல் உண்மைகளையும் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகளையும் முழு உலகும் ஆய்ந்தறிது ஒப்புக்கொள்ளும் நாளும் வெகுதூரத்தில் இல்லை என நாம் நிச்சயம் நம்பலாமல்லவா?
உசாத்துணை:
Micheal Friedman, ’Does Music Have Healing Powers?’ Psychology Today, Feb 04, 2014
Collin Baras, ‘Did Early Humans or Animals Invent Music?’ Earth, Sept 07, 2014
இரா. மகதேவன்,’மருந்தில்லா மருத்துவம்,’ தினமனி, செப் 20, 2012
கலைக்கேசரி, இசை மருத்துவம், பெப் 20, 2015
க. நவம், ’சாத்திரிய சங்கீதமும் புதிய சாத்தியப்பாடுகளும்,’ இசைத்தென்றல், 2002
-----------------------------------
கனடா தமிழிசைக் கலா மன்றத்தின் இசைத்தென்றல் 2016 ஆண்டு மலரில் பிரசுரமானது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.