ஆய்வு: அக்க பக்க (நீலகிரி படகர்களின் வாழ்வியல் பரிணாமமும் பரிமாணமும்)! - முனைவர் கோ.சுனில்ஜோகி -
உலகப் பூர்வக்குடிகளான நீலகிரி படகர் இன மக்களிடம் பல தொன்மையான தனிக்கூறுகள் விரவிக்கிடக்கின்றன. நீலகிரியில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற படகர்களின் வாழ்வியல் பரிணாமம் மற்றும் பரிணாமத்தினை விளக்கும் மரபு, பண்பாட்டின் நிலைச்சான்றாக விளங்கிவருகின்றது “அக்க பக்க” எனும் அமைப்பு.
“நாடு” அல்லது “சீமெ”, “ஊரு”, “ஹட்டி” எனும் தம் வாழ்க்களத்தினை வகுத்து வாழும் படகர்களின் “ஊரு” எனும் பகுப்பில் உள்ள படகு மூதாதையர்களின் தொல்வாழிடம் மற்றும் தொல்குறியீடாக இந்த “அக்க பக்க” திகழ்கின்றது.
அக்க பக்க –
படகர்களின் இந்த “அக்க பக்க” அமைப்பு “ஹெப்பாயிலு” (பெருவாயில் அல்லது பெருவாசல்), “கருகம்பு” (எருமைக் கன்றுகளைக் கட்டும் கல்தூண்), “அஜ்ஜிகூடு” (முன்னோர்களின் உறைவிடம்) எனும் மூன்று குறியீடு மற்றும் அமைப்பு நிலைகளைக் கொண்டது. இதை “அக்க பக்க” என்ற இணைச்சொல்லோடுப் படகர்கள் சுட்டினாலும் பொதுவாக இப்பகுதியைப் “பக்க” என்றே அழைக்கின்றனர். ஆதியில் இவை படகு முன்னோர்கள் வாழ்ந்த இடங்களாக இருந்து இன்று குறியீடாக, புனித இடமாக, முன்னோர் மற்றும் மரபு வழிபாட்டுத் தளமாகத் திகழ்கின்றன.