மகிழ்ச்சியான ஒரு தீவு(3) - அருபா! - ஶ்ரீரஞ்சனி -
- Atlantis Submarines Aruba - நீர்மூழ்கிப் பயணம் -
பூகோளரீதியாகத் தென் அமெரிக்காவில் இருக்கும், நெதர்லாந்தின் ஒரு பகுதியான Aruba, One Happy Island என்ற அவர்களின் sloganக்கு ஏற்ப மகிழ்ச்சியான ஒரு தீவாகவே தெரிந்தது. பிச்சைக்காரர்களையோ, வீடற்றவர்களையோ அங்கு காணவில்லை. ஆனாலும், பூமியிலேயே மிகப் பெரிய கடலான கரேபியன் கடலால் சூழப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் தாவரங்களைக் காண்பது அருமையாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கடலிலிருந்து ஆவியாகும் நீருக்கு என்ன நடக்கிறது, ஏன் அது மழையாகப் பொழியவில்லை என்பதே என் கேள்வியாக இருந்தது. பதிலை அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடியபோதே, இங்கு வீசும் காற்று (trade winds) வளியை மேலெழவிடாது கீழேயே வைத்திருப்பதால் அது முகில் உருவாக்கத்தையும் மழையையும் தடைசெய்கிறதென அறிந்தேன். அதேவேளையில் ஈரப்பதனையும் அது அகற்றுவதால், வெக்கையைத் தாங்கமுடியாத நிலை உருவாகாமலும் தடைசெய்கிறது.
வெக்கை மிகுந்த, மழை மிகக் குறைந்த, வேகமான காற்று வீசும் வரட்சியான இந்தக் காலநிலை Arubaஇன் தரைத்தோற்றத்தை மணல் மேடுகளாகவும், மண்ணரிப்பினால் உருவான தட்டையான மேட்டு நிலங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்ட தாவரங்களற்ற வெற்றுநிலமாகவும் மாற்றியுள்ளது. எனினும் இதன் தரைத்தோற்றத்துக்கு காலநிலை மட்டுமன்றி, குடியேற்றங்களை மேற்கொண்ட ஸ்பானியர் அங்கிருந்த காடுகளை அதிகளவில் அழித்தமையும், தீவின் வளங்களைச் சுரண்டியமையும்கூடக் காரணம் எனக் கூறப்படுகிறது.
வெய்யிலில் திரிந்தது போதும், ஒரு நாளைக்கு உள்ளகத்திலுள்ள விடயங்களைச் செய்வோமென முடிவெடுத்தோம். அதன்படி அடுத்த நாள் Atlantis Submarines Aruba என்ற அமைப்பினருடன் கடலுக்கு அடியிலுள்ள உயிரினங்களைப் பார்க்கும் பயணத்தை ஆரம்பித்தோம். கப்பல் ஒன்றில் ஆழக்கடல்வரை போய் நீர்மூழ்கிக் கப்பலொன்றில் ஏறினோம். Flamingo Beach அருகே கப்பல் சென்றபோது ஓரிரு Flamingoகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், அந்தக் கடற்கரையின் இளம் சிவப்பு மணலைப் பார்க்கமுடியவில்லை. அந்த இளம்சிவப்பு மணலைப் பார்க்கவிருப்பமிருந்தாலும், Flamingoகளின் செட்டைகளை வெட்டிபோட்டு அங்கு அவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்களாம் என்றபோது, அதைப் போய்ப்பார்ப்பதற்கு எங்களுக்கு மனம் வரவில்லை.