பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது. இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக 2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.
கேள்வி - 'With You, Without You' திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் 'A Gentle Creature' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?
பதில் - வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.