"ஊரெல்லாம் உறங்கிவிடும் உள்ளம் மட்டும் உறங்காது
ஓசையெல்லாம் அடங்கி விடும். ஆசை மட்டும் அடங்காது
ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நினைத்திருப்பேன்." - கவிஞர் வாலி -

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் 'கற்பகம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் வாலியின் பாடல் 'பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்'. பி.சுசீலாவின் உயிரோட்டமான குரலில், நடிகையர் திலகம் சாவித்திரியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உயிரோட்டமான நடிப்பில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையரின் உயிரோட்டமான இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத இன்னுமொரு கானம். இப்பாடலும் காதல் வயப்பட்ட உள்ளத்துணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும்  பாடல்.

சங்ககாலப்பாடலான 'குறுந்தொகை'யில் பதுமனார் என்னும் புலவர் ஒருவரின் பாடலொன்று பெண்ணொருத்தியின் காதல் உணர்வுகளை அழகாகப் படம் பிடிக்கும். ஓசைகள் யாவுமடங்கி ஊரே உறங்கும் நள்ளிரவில் அவள் மட்டும் உறங்காமல் விழித்திருக்கின்றாள். இதனை அழகாகப்படம் பிடிக்கும் குறுந்தொகைப்பாடல்:

"நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே" - பதுமனார் -

இதன் பாதிப்பைக் கவிஞர் வாலியின் பல திரைப்படப் பாடல்களில் காணலாம். அதில் இப்பாடலும் ஒன்று. இப்பாடலில் வரும் கீழ்வரும் வரிகள் அதனைப் புலப்படுத்தும்:

"ஊரெல்லாம் உறங்கிவிடும் உள்ளம் மட்டும் உறங்காது
ஓசையெல்லாம் அடங்கி விடும். ஆசை மட்டும் அடங்காது
ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நினைத்திருப்பேன்."

இப்பாடலில் எனக்குப் பிடித்த இன்னுமொரு வரி "மனதுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்"

https://www.youtube.com/watch?v=eylqhmjR2-Q

பாடல்: பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்

- கவிஞர் வாலி -
கவிஞர் வாலி

பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சி
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்

மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்
மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்
மரிக்கொழுந்து வாசத்திலே
மாந்தோப்பில் வழி மறிச்சான்
மாந்தோப்பில் வழி மறிச்சி
மயக்கத்தையே வரவழைச்சான்

தை மாசம் தாலி கட்ட
மார்கழியில் கைய புடிச்சான்
தை மாசம் தாலி கட்ட
மார்கழியில் கைய புடிச்சான்
யமுனையிலே வெள்ளம் இல்லை
விடியும் வரை கதை படிச்சான்
விடியும் வரை கதை படிச்சி
முடியாமல் முடிச்சி வச்சான்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்