பொள்ளாச்சி என்றவுடன் வந்துநிற்பார் மகாலிங்கம்
வள்ளலாய் அவரிருந்து வாரியே வழங்கிநின்றார்
தெள்ளுதமிழ் நூல்படைப்பார் சிறந்தபக்தி நூல்படைப்பார்
நல்லபடி வாழ்வதற்கு அள்ளியே அவர்கொடுத்தார்

மகாலிங்கம் எனும்பெரியார் வாழ்ந்ததனால் பொள்ளாச்சி
மக்களிடம் பேரூராய் புகழ்பெற்று விளங்கியதே 
இனிமைநிறை இளநீரை கொடுத்துநின்ற காரணத்தால் 
எல்லோரின்  மனத்தினிலும் நின்றதுவே பொள்ளாச்சி

பொள்ளாச்சி எனும்பெயரை இப்போது  உச்சரிக்க
பொறுக்காத வெறுப்புத்தான் மேலோங்கி வருகிறது
நல்லவர்கள் வாழ்ந்தவிடம் நலனழிந்து நிற்பதனால்
நாடெல்லாம் பொள்ளாச்சி பேச்சுத்தான் எழுகிறது

செல்வாக்கு மிக்கவரும் செல்வமுடன் இருப்பாரும்
நல்வழியை விட்டுவிட்டு தம்வழியில் செல்லுகிறார்
பொல்லாத செயலையவர் பொறுப்பென்றே மனதிருத்தி
தொல்லையினை கொடுப்பதையே சொர்க்கமாய் எண்ணுகிறார்

வாழவெண்ணும் மங்கையரை மயக்கமொழி பேசியவர்
வாழ்விழக்கச் செய்துநிற்கும் வலைவிரித்தே நிற்கின்றார்
ஏழ்மைநிலை தனையவரும் சாதகமாய் ஆக்கிநின்று
இறுமாப்பு கொண்டபடி இன்பம் கொண்டாடுகிறார்

அரசியலில் உள்ளாரும் அதற்குத் துணையாகின்றார்
அதிகார வர்க்கமுமே அவர்பக்கம் சாய்கின்றார்
ஆனாலும் மக்களெலாம் ஆர்ப்பரித்தே எழுந்ததனால்
அதிகாரம் இப்போது அறமுரைக்க வந்திருக்கு

பெண்கள்தான் நாட்டினது கண்ணென்று சொல்லிவிட்டு
பெண்கள்தமை குறிவைத்து வேட்டையாடி நிற்கின்றார்
காந்திதேசம் இப்போது கண்ணீரில் மிதக்கிறது
சாந்தியினை கொடுப்பதற்கு  காந்திமகான் வருவாரா

கன்னியரைச் சீரழிக்கும் கசடர்தமை கழுவேற்றும்
கடுஞ்சட்டம் வந்தால்த்தான் கசடர்தமை அழித்திடலாம்
நற்புத்தி இழப்பாரை நடுவீதி தனில்வைத்து
மக்களெலாம் தண்டித்தால் மாகுற்றம் மறையுமன்றோ !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்