கட்டுரைச் சுட்டு

 அத்தியாயம் பதினேழு: ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம்!

   தொடர் நாவல்: அமெரிக்கா II - வ.ந.கிரிதரன் -அன்றிரவு முழுவதும் இளங்கோவுக்கு மறுநாள் சந்திக்கவுள்ள ஹரிபாபு பற்றியும் அவனது தொழில் என்னவாகவிருக்கக் கூடுமென்பது பற்றியுமே சிந்தனையாகவிருந்தது. அவனது விளம்பரத்தைப் போல் அவனும் புதிரானவனாகயிருப்பானோ என்றொரு எண்ணமும் அவ்வப்போது எழுந்தோடியது. எது எப்படியோ இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் அதுவும் நிலையானதாகவிருந்து விட்டால் நல்லதென்று பட்டது. தாயாரின் கடிதம் கூட அவனுக்கு உடனடியாக வேலையொன்றினை எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது. அவனுக்கு அப்பொழுது ஆச்சி அடிக்கடி கூறுமொரு பொன்மொழி ஞாபகத்துக்கு வந்தது. 'பாவி போன இடமெல்லாம் பள்ளமும் திட்டியும்' என்பதுதானது. அந்தப் பழமொழி அவனுக்காகவே உருவானதுபோல் பட்டது. ஆச்சியைப் பற்றி நினைத்ததும் அவனுக்கு எப்பொழுதுமே பெரும் பிரமிப்புத்தான் ஏற்படுவது வழக்கம். ஆச்சி அன்றைய காலத்து மனுசி. ஏட்டுக் கல்வியைவிட அதிகளவு அனுபவ அறிவு மிக்கவளவள். எந்த நேரமும் சிரித்த முகமும், மகிழ்ச்சியுமாகவும் காணப்படுவாள். ஒருநாளாவது ஆச்சி கோபப்பட்டு அவன் பார்த்தே கிடையாது. 'மகராசனாய்ப் போயிட்டு வா' வென்று அவள் அடிக்கடி வாழ்த்தி அனுப்பும்போது ஒவ்வொரு முறையும் அவனும் அவனது நண்பர்களும் உற்சாகத்துடன் கூடிய மகிழ்ச்சியினையே அடைவது வழக்கம். ஆச்சியின் சமையல் மாதிரி இதுவரையில் வேறெங்கும் அவன் கண்டதில்லை. அவளது மூளைக்கீரையும், குழம்பும், தயிரும் எத்தனை தடவைகள் உண்டாலும் அலுக்காதவை. உடல், உள்ளமிரண்டிலும் உறுதி மிக்கவளவள். ஆச்சியின் இன்னுமொரு விஷேசம் அவள் வாயிலிருந்து அவ்வப்போது உதிரும் வார்த்தைகள். சொற்களை வைத்து ஜாலம் காட்டுவதில் வல்லவளவள். எழுபதுகளில் அவன் 'பெல்பாட்டமும்' நீண்ட தலைமுடியுமாய்த் திரிந்து கொள்ளும்போது காணுகையில் 'வாடா பீத்தல் பறங்கி" என்று வரவேற்பாள். அடிக்கடி சைக்கிள் செயினில் சிக்கிக் கொழுப்புப் படிந்து கிடக்கும் பெல்பாட்டத்துடன் பீத்தல் பறங்கியாக நுழையுமவன் அசடு வழியச் சிரிப்பான்.

அன்றிரவு கோஷிடமும் அடுத்த நாள் ஹரிபாபுவைச் சந்திப்பது பற்றி இளங்கோ குறிப்பிட்டான். கோஷுக்கும் சிறிது ஆச்சரியமாகவிருந்தது. "ஹரிபாபு ஆச்சரியமான பேர்வழியாக இருக்கிறானே!" என்று சிறிதளவு வியந்தானவன். அத்துடன் கூறினான்: "பெயரினைப் பார்த்தால் மராத்திக்காரன் போலிருக்கிறான். எதற்கும் நாளைக் காலை அவனைச் சென்று பார்த்துவிட்டு வந்து எங்களுக்குக் கதையினைக் கூறு. கேட்பதற்கு ஆவலாகவிருக்கிறோம்."

"கோஷ். அதெப்படி அவ்வளவு தீர்மானமாகக் கூறுகிறாய் அவன் மராத்திக்காரனென்று.."

இதற்கு கோஷ் ஒருமுறை இலேசாகச் சிரித்தான். "ஹரிபாபு நாராயண் என்றொரு பிரபலமான மாரத்திக்காரனின் 'நான்' என்றொரு நாவலை , இந்திய சாகித்திய அக்கடமியால் பதிப்பிக்கப்பட்டது; வாசித்திருக்கின்றேன். நல்லதொரு நாவல். தகழியின் 'ஏணிப்படிகள்', வாசுதேவநாயரின் 'காலம்' போன்று நல்லதொரு நாவலது. அதனால்தான் நீ ஹரிபாபுவென்றதும் மராத்திக்கரனாகவிருப்பானோ என்று சந்தேகப்பட்டேன். எதற்கும் அவனைப் போய் நேரிலேயே பார். அப்பொழுதுதான் சரியான நிலை புரியும்"

இளங்கோவுக்கும் அவன் கூறுவதே சரியாகப் பட்டது. "இந்த வேலை மட்டும் கிடைத்து விட்டால் திருமதி பத்மா அஜித்துக்குத்தான் நன்று கூறவேண்டும்."

இதற்குக் கோஷ் சிரித்தான்: "இளங்கோ, அளவுக்கதிகமாக அவளைப் புகழாதே. எல்லாம் காரியத்துடன்தான். நீ வேலை செய்தால்தானே ஒழுங்காக அவளுக்கு வாடகை கிடைக்கும். அந்தக் கரிசனைதான் காரணம். வேறொன்றுமல்ல"

"எனக்கென்றால் அவளை அவ்வளவு குறைத்து மதிப்பிடுவது சரியாகப் படவில்லை. இருந்தாலும் உனது பேச்சுரிமையினை மதிக்கிறேன்" என்றான் இளங்கோ. அருள்ராசாவுக்கு இளங்கோ கூறுவதே சரியாகப் பட்டது.

அன்றிரவும் ஒருவாறு கழிந்து மீண்டுமொருமுறை பொழுது புலர்ந்தது. இளங்கோவினதும், அருள்ராசாவினதும் வேலை தேடும் ப்டலம் ஆரம்பமாகியது. அதற்கு முதற்படியாகக் ஹரிபாபுவைச் சந்திப்பதற்காக 'நான்காம் தெரு மேற்கு' நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்கள். அவன் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த சந்திக்குச் சென்றபொழுது காலை பத்துமணியினைத் தாண்டி விட்டிருந்தது. நான்காவது வீதி மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில், வடமேற்குப் புறத்தில் அவன் கண்டது ஓர் இந்தியத் தம்பதியினரின் நடைபாதை வியாபாரத்தினைத்தான். ஆணுக்குச் சிறிது வயதாகியிருந்தது. ஆனால் அந்த இந்தியப் பெண்மணியோ வயதில் மிகவும் இளமையுடன் காணப்பட்டாள். பார்ப்பதற்குச் சங்கராபரணத்தில் நடித்த மஞ்சு பார்கவி போலிருந்தாள். உண்மையைச் சொல்லப்போனால் அவன் கூட அத்திரைப்படத்தில் நடித்த சங்கீத வித்வானைப் போல் முதுமையான தோற்றத்துடனிருந்தாலும், உடலமைப்பைப் பொறுத்தவரையில் திடகாத்திரமாகக் காணப்பட்டான். அவர்களுடன் இன்னுமொரு வெள்ளையினத்து யுவதியும் 'ஜீன்ஸும், டீசேர்ட்டுமாக'க் காணப்பட்டாள்.

அத்தம்பதியினரை அண்மித்த இளங்கோ "என் பெயர் இளங்கோ.." என்று வார்த்தைகளை முடிக்கவில்லை அவர்களில் அந்த ஆண் "அது நீதானா? நல்லதாகப் போய் விட்டது. நான்தான் விளம்பரம் கொடுத்திருந்த ஹரிபாபு. நீ சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறாய்" இவ்விதம் இளங்கோவையும் அருள்ராசாவையும் பார்த்துக் கூறிய ஹரிபாபு அந்தப் பெண்மணிபக்கம் திரும்பி "இந்திரா! நான் இவர்களுடன் சிறிது கதைத்து விட்டு வருகிறேன். அதுவரை வியாபாரத்தைச் சிறிது கவனித்துக் கொள்" என்றான். அத்துடன் அந்த வெள்ளையினத்து யுவதியினைப் பார்த்து "இங்கிரிட், இந்திராவுடன் துணையாகச் சிறிது நேரம் இருந்து கொள். உடனேயே வந்து விடுகிறேன்" என்றான்.

பதிலுக்கு இந்திரா என்னும் அந்தப் பெண்மணிக்கு வணக்கம் கூறிவிட்டு இளங்கோவும், அருள்ராசாவும் ஹரிபாபுவைத் தொடர்ந்து சென்றனர். ஹரிபாபு அவர்களை அருலிருந்த தேநீர்க்கடையொன்றுக்கு அழைத்துச் சென்றான். "நீங்கள் இருவரும் என்னை வந்து சந்தித்ததற்கு மகிழ்ச்சி. ஆறுதலாகத் தேநீர் அருந்தியபடி எல்லாவற்றையும் விபரமாகக் கூறுகிறேன். உங்களுக்கும் பிடித்திருந்தால், எனக்கும் உங்களைப் பிடித்திருந்தால் நாம் இணைந்து பணியாற்றலாம்." என்று செல்லும் வழியில் ஹரிபாபு கூறினான். அவன் தொடர்ந்தும் விபரிக்கப் போகும் வேலைவாய்ப்பு பற்றிய விபரங்கள் எததகையதாகவிருக்கக் கூடுமென்று எண்ணியபடியே அவன் கூறுவதையும் செவிமடுத்தபடி அவனைத் தொடர்ந்தனர் அவர்கள். அவனுடன் அவ்விதம் செல்கையிலேயே அவனுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தவித ஆட்சேபனையுமேற்படப் போவதில்லையென்று பட்டது.

அத்தேநீர்க்கடையின் ஒரு மூலையில் சென்றமர்ந்தனர். ஹரிபாபுவே அனைவருக்கும் தேநீர் வாங்கி வந்தான். தேநீரைச் சிறிது சுவைத்தபடி "இப்பொழுது ஓரளவுக்குப் புரிந்திருக்குமே" என்றான். இதற்கு இளங்கோவே முதலில் பதிலிறுத்தான்:
"நடைமுறையினைப் பார்க்கும்பொழுது ஓரளவு ஊகிக்க முடிகிறது. பத்திரிகையில் விற்பனையாளர்கள் தேவையென்று விளம்பரம் செய்திருந்தீர்கள். ஆக, உங்களுக்குத் துணையாக நாங்கள் விற்பதற்கு உதவப் போகின்றோமென்று படுகிறது.."

இப்பொழுது ஹரிபாபு இடைமறித்துப் பினவருமாறு கூறினான்: "சரியாகக் கூறினாய். நீ கெட்டிக்காரன். நான் உடனடியாக விஷயத்திற்கே வருகிறேன். விசயம் இதுதான். இப்பொழுது நாங்கள் அதுதான் நானும் என் மனைவியும் அந்த வெள்ளைக்காரியும் நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறோம். இன்னுமொருவன் ஹென்றி, அவனொரு எஸ்கிமோ இனத்தைச் சேர்ந்தவன் , எங்களுக்காக அடுத்த சந்தியிலிருந்து விற்றுக் கோண்டிருக்கிறான். எங்கள் வியாபாரத்தை இன்னுமொரு சந்திக்கு விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுது வியாபாரம் சுறுசுறுப்பாகவிருக்கிறது. காற்றுள்ள் போதே தூற்றிக் கொள்ள் வேண்டியதுதானே. அதுதான் எங்களது திட்டம். அதற்காகத்தான் விளம்பரம் செய்திருந்தோம். உங்களுக்குப் பிடித்திருந்தால் ஹென்றியைப் போல் நீங்களிருவரும் அந்த விற்பனையினைக் கவனித்துக் கொள்ளலாம். என்ன நினைக்கிறீர்கள்? பிடித்திருக்கிறதா? உங்களால் சமாளிக்க முடியுமென்று நினைக்கிறீர்களா?"

இப்பொழுது அருள்ராசா வினாத் தொடுத்தான்: "அது சரி, எவற்றையெல்லாம் நாம் விற்க வேண்டும்?"

இதற்குக் ஹரிபாபு இவ்விதம் பதிலளித்தான்: "சரியான கேள்வி. பிரதானமாக என் ஸ்டோரில் ஏராளமாகவிருக்கும் செப்புச் சிலைகள் போன்ற பல இந்தியப் பொருட்களை நீங்கள் நடைபாதையில் வைத்து விற்கவேண்டும். அத்துடன்..."

"அத்துடன்..." இவ்விதமிழுத்தது இளங்கோ.

"அத்துடன் காலநிலைக்கேற்ற ஆடை வகைகள், ஆபரண வகைகள் போன்றவையும் என்னிடம் நிறையவுள்ளன. அவற்றையும் விற்கவேண்டும். நீங்களிருவரும் ஒன்றாக நின்று ஒருவருக்கொருவர் உதவியாகவிருக்கலாம்."

"எவ்வளவூ நேரம் வேலை செய்ய வேண்டும்? எத்தனை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும்? எத்தனை மணிக்கு முடிக்க வேண்டும்? எவ்வளவு எங்களுக்கு ஊதியமாகக் கிடைக்கும்?"

இவ்விதம் இளங்கோ படபடவென்று கேள்விகளைத் தொடுக்கவே ஹரிபாபு இலேசாகச் சிரித்தான். அத்துடன் கூறினான்: "காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை வேலை செய்தால் போதுமானது. வியாபாரம் மிகவும் 'பிசி'யாகக் காணப்பட்டால் நீங்களிருவரும் மேலதிகமாக வேலை செய்ய விரும்பும் பட்சத்தில் வேலை செய்யலாம். அன்றாடம் உங்களது ஊதியம் வழங்கப்படும்.  என்ன நினைக்கிறீர்கள்? அட மறந்து விட்டேனே.. விளம்பரத்தில் கூறிருந்தபடியே மணித்தியாலத்திற்கு நான்கு டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். என்ன சொல்லுகிறீர்கள்?"

இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் அப்போதிருந்த பொருளியற் சூழலின் விளைவாக எந்தவொரு வேலையினையும் நிராகரிக்கும் மனநிலை இருக்கவில்லை. வழிய வந்த சீதேவியினை யாராவது எட்டி உதைவார்களா? எனவே ஒருமித்த குரலில் கூறினார்கள்: "எங்களுக்குப் பூரண சம்மதமே.."

அவர்களது அந்தவிதப் பதில் அவனை மகிழ்வித்திருக்க வேண்டும்.

"நல்லது. உங்களிருவரையும் எனக்கும் மிகவும் பிடித்துப் போயுள்ளது. அதற்குமுதல் உங்களிருவரையும் ஹென்றிக்கும் ஒருமுறை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். தேநீர் அருந்தி முடித்ததும் நாம் அனைவரும் ஒருமுறை ஹென்றியைச் சென்று சந்திப்போம். அவனுக்கும் மகிழ்ச்சியினை அளிப்பதாவிருக்கும். சிறிது நேரம் அவனுடன் நீங்களிருவரும் நின்று வியாபாரத்தை நடத்தும் வழிமுறைகள் பற்றி மேலதிகமான தகவல்களையும் பெறமுடியுமல்லவா?"

இவ்விதமாக அவர்களுக்கிடையில் தொடர்ந்த உரையாடல் தொடர்ந்தது. அனைவரும் தேநீர் அருந்தி முடித்ததும் ஹரிபாபு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு ஹென்றியின் இருப்பிடத்தை நோக்கி நடையைக் கட்டினான். அவர்களும் அவனைத் தொடர்ந்தனர்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R