1_book_sivasampu5.jpg - 20.68 Kbஈழத்து இலக்கியச் சூழலில் மிகப் பெரும்பாலும் தொகை நூல்களின் அல்லது திரட்டு நூல்களின்  வருகை அரிதானதாகும். இதற்கு இரண்டு பிரதான காரணங்களைச் சுட்டிக்காட்டமுடியும்.

1) தொகை நூலின் உருவாக்கத்திற்கான தேடல்
2) தொகை நூலின் உருவாக்கத்திற்கான செலவு

குறித்த திரட்டு நூல் உருவாக்கத்திற்கான தேடல் என்பது அந்நூல் உருவாக்கத்தில் மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்புணர்வும், முனைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதென்று. நூலுருவாக்கத்திற்கான செலவென்பதும் ஒப்பீட்டளவில் மிக அதிகமானதொன்று. எவராவது வெளியீட்டுச் செலவினைப் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வந்தால் மட்டுமே இவ்வாறான நூல்கள் வெளிவருவது சாத்தியமாகும். இந்தப் பின்புலத்திலேயே அண்மையில் காங்கேயன் நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு  வெளிவந்திருக்கும் “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும்”  எனும் திரட்டு நூல் முக்கியத்துவம் பெறுகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்;டில் ஈழத்தில் சிறப்புற மிளிர்ந்த தமிழ்ச்சுடர் என வருணிக்கப்படும் சிவசம்புப் புலவர் (1829 -1910) யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் அமைந்திருக்கும் உடுப்பிட்டியில் பெரும்பிரபு அருளம்பலமுதலியாருக்கும் கதிராசிப்பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தார். இவர் நல்லூர் சரவணமுத்துப் புலவர், சம்பந்தபுலவர் ஆகியோரது மாணாக்கராய்ப் பயின்றவர்.

கவிமுதல்வராய் விளங்கிய இசையோங்கு தமிழாசிரியர். ஈழத்து மரபுத் தமிழ்க்கல்வி மூலவருள் ஒருவர். இலக்கணம், இலக்கியம், தத்துவம், சமஸ்கிருதம் ஆகியவற்றுள் நற்புலமையுடையவராக விளங்கியவர்.  14 நூல்களின் வளமிகு உரையாசிரியர். வாளபிமன் எனும் நாடகத்தை செம்மைப்படுத்தியவர். சபிண்டி நாடக சங்காரம் முதலான கண்டன இலக்கியங்களை யாத்தவர். புராண படல மரபை வளப்படுத்தியவர். சுவாமி விபுலாநந்தர் வழியே பெருகும் பல்கலைக்கழகத் தமிழ்ப்புலமை மரபின் ஊற்றாய்த் திகழ்ந்தவர்.  19 ஆம் நூற்றாண்டு தமிழ்க்கவிதை மரபில் அறுபதுக்கும் மேற்பட்ட பிரபந்தங்களை 3000 ற்கும் மேற்பட்ட பாடல்களில் யாத்து வளம் சேர்த்த மதுரகவி. கீர்த்தனைகள் பலவும் தனிப்பாடல்களும் தந்த மருவுசுவைக்கவிஞர். இழந்த கண் ணொளியை பாடி மீளப்பெற்ற அருட்கவிவாணர்.

ஈழத்திலும் அதற்கு அப்பாலுமான தலங்களையும் புரவலர்களையும் மட்டுமன்றி ஈழத்துத் தமிழ்ச்சமூக பண்பாட்டம்சங்களையும் கவிதையில் கொணர்ந்த இயற்புலவர். ஈழம், தமிழ்நாடு ஆகிய இருதளத்திலும் புலமையை நிலைநாட்டிப் புலமைப்பாலமாகவும் அமைந்தவர்.  பிரபந்தக் கட்டமைப்பில் ஈழத்திற்கெனத் தனிமரபை ஆக்கியவர். சைவத்தமிழ்மரபு, பிரபுத்துவம், கிராமியம், நவீனத்தின் சிறிது மினுக்கம் ஆகியவை தம் கவியில் சிறக்கவைத்த பாவேந்து. கவித்துவ சாமர்த்தியம் மிகுந்தவர். சொல்லும் பொருளும் தொடை வகைகளும் சிறப்புற்று வர  இனித்த கொழுதமிழ்க்கவிகள் செய்தவர். யாப்பு இலக்கண அமைதி காத்து தமிழ்க்கவிதையைத் தந்தவர் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் தெய்வங்களையும் தலங்களையும் பாடிய பக்திச் சுவை நனி சொட்டும் கவிதைகளை உள்ளடங்கிய தேவபாகம் சைவத்தையும் தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் தம் கொடையால் பாதுகாக்கும் புரவலர்களையும் பாடிய கவிதைகளை உள்ளடக்கிய மானுடபாகம் எனுமிரு பகுப்பாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இத்தொகைநூலானது சிவசம்புப் புலவரது கவிதைகள் பற்றிய ஆய்வுக்கும் பொதுவாக தமிழ்க்கவிதை வரலாற்றுக்கும் சிறப்பாக ஈழத்தமிழ்க்கவிதை வரலாற்றுக்கும் முதன்மையானதாக அமைவதுடன் புலவரது கவிதைகள் பற்றிய தேடலில் ஈடுபடுவோருக்கும் ஈழத்தின் கவிதை வரலாறு குறித்து ஆய்வு செய்ய முற்படுவோருக்கும் ஒரு சிறப்பான முதன்மை ஆதராமாகப் பயன்படும். இதுதவிர 19 ஆம் நூற்றாண்டுக்குரிய ஈழத்தின் சமூக பண்பாட்டு கலை மரபை அடையாளம் காட்டுவதோடு இந்நூற்றாண்டுக்கான ஈழத்தமிழ் நூல்கள் பலவற்றினதும் தோற்றப் பின்புலத்தின் முக்கியத்துவத்தையும் இனங்கான உதவும். 

மேலும் இந்நூலில் தன்முனைப்பும் தேடலும் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளர் செ. சுதர்சன், “அருட்புலமைக்களமேவு சிவசம்புக் கவியரசு : ஈழத்துத் தமிழ்க்கவிதை வரலாற்றின் சிவசம்புப் புலவர் கவிதை மரபு”, “சிவசம்புப் புலவர் கால ஆராய்ச்சி”  எனுமிரு தலைப்புக்களில் எழுதியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை. இவ்விரு கட்டுரைகளும் வாசக நிலைப்பட்டு நின்று எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான ஆய்வாளர்களிடம் வாசகநிலைப்பட்டு நின்று ஆய்வுசெய்யும் பண்பு இருப்பதில்லை. இந்நிலைப்பாடானது வாசகனுக்கும் ஆய்வாளனுக்கும் இடையிலொரு பாரிய இடைவெளியை தோற்றுவிக்க ஏதுவாகின்றது. இவ்விடைவெளியை சுதர்சன் நீக்கியுள்ளார். இது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதொன்று. இளநிலை ஆய்வாளன் என்ற நிலையில் இத்தொகை நூலுருவாக்கம் தொடர்பில் சுதர்சன் மேற்கொண்டுள்ள தேடலும், அதற்கான உழைப்பும், அர்ப்பணிப்புணர்வும் விதந்து போற்றத்தக்கதொன்று. ஞானம் போர் இலக்கியச் சிறப்பிதழில் இவரது தமிழீழ எழுச்சிப் பாடல்கள் குறித்த கட்டுரையை வாசித்தவர்கள் இதனை நன்கு உணர்த்திருக்க முடியும்.

சுதர்சன் மரபு இலக்கியங்களில் காட்டிவரும் அதே ஈடுபாட்டினை நவீன இலக்கியங்கள் மீதும் காட்டி வருபவர். இவர் தொழிற்புலத்தில் சாதிய ரீதியாக ஒடுக்குதலுக்குள்ளாகி பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து சளைக்காமல் போராடி மீண்டு வந்திருக்கிறார் என்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்று. பேராசிரியர் சிவத்தம்பி போன்றோரும் இவ்விதமான அழுத்தங்களுக்கு முகங்கொள்ள நேர்ந்திருக்கிறது. உண்மையில் சுதர்சன் போன்ற தன்முனைப்பும், தேடலும், வாசகநிலைப்பட்ட ஆய்வியல் நோக்கும், கற்பனாசக்தியும் கொண்ட இளம் ஆய்வாளர்களை ஊக்கங்தந்து தூண்டிவிடவேண்டிய கடப்பாடு நம் உயர்கல்விச் சமூகத்திற்கு இருப்பதை மறந்துவிடலாகாது. இத்தொகைநூல் வெளியீடானது சுதர்சனின் வாழ்நாள் சாதனையாகக் கொள்ளப்படவேண்டியதொன்றாகும். மேலும் ஈழத்து மாந்தரெல்லாம் முதுசமொன்றை மீட்டெடுத்த பேருவகை கொள்ளவேண்டிய தருணமிதுவாகும்.

பதிவுகளுக்கு அனுப்பியவர்: சு.குணேஸ்வரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R