கட்டுரைச் சுட்டு

பதிவுகள்: ஜனவரி 2005; இதழ் 61

சுனாமி! 

ஜெயமோகன்டிசம்பர் 25 அன்று சுந்தர ராமசாமி குடும்ப விழா என்று எழுத்தாளார்கள் பலர் நாகர்கோவிலுக்கு வந்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கு அவ்ர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு . நாஞ்சில்நாடன் பாவண்ணன் கலாப்ரியா எல்லாரும். ஆகவே இந்த நாளை உற்சாகமான ஒன்றாக கொண்டாடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். கிறிஸ்துமஸ் அன்று எனக்கு தக்கலையில் மலைக்கரை சர்சின் கிறிஸ்துமஸ் நிக்ழ்ச்சியில் பேச அழைப்பு இருந்தது. அங்கு சென்றுவிட்டு இரவு திரும்பினேன். சு ரா வீட்டு நிகழ்ச்சி முடிந்ததாகச் சொன்னார்கள். நான் தொலைபேசியில் கூப்பிட்டபோது நாஞ்சில்நாடன் சூத்ரதாரி இருவரும் மறுநாள் சுசீந்திரம் தேரோட்டம் காணப் போகலாமா என்றார்கள். சரி என்றேன். மோகனரங்கன் கலாப்ரியா முதலியவர்கள் கன்னியாகுமரி போவதகாச் சொன்னார்கள்.

காலையில் சுசீந்திரம் போனோம். தேரோட்டம் நன்றாக இருந்தது. அங்கு சில வாசகர்களை சந்தித்தோம். பேசிக் கொண்டிருந்தபோது 11 மணிவாக்கில் ஒருவர் காலையில் பெரிய அலை அடித்து சென்னையில் பலத்த சேதம் என்று டிவியில் சொன்னதாகச் சொன்னார்.

அப்படியானால் கன்யாகுமரியிலும் அலை இருக்கும் போய் வேடிக்கைபார்க்கலாமே என்றேன். நாஞ்சில்நாடன் சரி என்றார். ஒருவர் பஸ் இல்லை போவது சிரமம் என்றார். யாராவது இறந்திருக்கக் கூடுமா என்று சிலரிடம் கேட்டோம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

சாதாரண அலைதான் என்றார்கள். பொதுவாக எவருக்கும் எந்த விவரமும் இல்லை. செல்போன்கள் எதுவுமே வேலைசெய்யவில்லை.

·போன்கள் என்கேஜ்டாக இருந்தன. 

திரும்பும் வழியில்தான் சிக்கல் பெரிதென புரிந்தது. அப்போதும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.  கன்யாகுமரிக்கு காலி ஆட்டோக்கள் சென்றபடியே இருந்தன. அங்கிருந்து அடிபட்டவர்களைச் சுமந்தபடி பஸ்கள் வந்தன. சாலையில் ஒரே சிக்கல். நாங்கள் என்ன ஏது என புரியாமலேயே வெயிலில் திரும்பி நடந்துகொண்டிருந்தோம். ஆசிராமம் தாண்டியபோது நான் ஒருவர் ஆட்டோவில் வந்து இறங்குவதைக் கண்டேன் . உயர்தர காமிரா வைத்திருந்தார். ''வெளிநாட்டு பயணி ஒருவரும் மாட்டியிருக்கிறார் போல்'' என்றேன்.

நாஞ்சில்நாடன்  கவனித்துவிட்டு ''அது ரமணி. சு ரா வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர் '' என்றார். ஓடி அருகே சென்றோம் ரமணி ஒரு சினிமாட்டோகிராபர். அவரும் குடும்பமும் காலையில் எட்டு மணிக்கு கன்யாகுமரி சென்றிருக்கிறார்கள். அங்கே ஏதோ அலை என்று சொல்லக்கேட்டு சரி சொத்தவிளை கடற்கரைக்குப் போகலாம் என்று சென்றிருக்கிறார்கள். சொத்தவிளை மிக அமைதியான தனியான கடற்கரை. சாலையில் இறங்கி நின்றிருந்தபோது சட்டென்று பெரிய அலைவந்து அவர்களை அடித்துச்சென்றுவிட்டது இரு குழந்தைகள் உட்பட மொத்தம் ஏழுபேர். இருவர் மட்டும் தப்பினார்கள். அலையில் 15 நிமிடம் அடித்துச்செல்லப்பட்டு எப்படியோ மீண்டதாகச் சொன்னார் ரமணி. இருவராலும அழ முடியவில்லை. மூக்கில் இருந்து மணல் கொட்டியது. ராம் என்று ஒரு பையன் பிழைத்துக்  கொண்டதாகவும் அவனை ஏதோ ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் தெரியவந்தது என்றார். அவனை தேடுந்தாகச் சொன்னார்.

பதற்றம் அதிர்ச்சி காரணமாக சாழுகை ஏதும் இல்லாமல் முன்பின் தொடர்பில்லாமல் பேசிக்கொண்டிருந்தார் ரமணி.  அந்த ஆஸ்பத்திரி தனியார் கிளினிக். அங்கே ஏராளமான ஆட்கள். பலாரும் வீடு இடிந்த காயம் கொண்டவர்கள். சாலையெங்கும் ஒரே நெரிசல். வண்டிகள் நகரமுடியாத ஓலம். சூத்ரதாரி ஒருவரிடம் கெஞ்சி அவர்களை ஒரு வண்டியில் ஏற்றி நாகர் கோவில் அனுப்பிவித்தார். அதன் பிறகு சுரா வீடு தொடர்பு கிடைத்தது. அங்கே யாருமே இல்லை. அவர்கள் காலையிலேயே கொல்லம் போய்விட்டதாக தெரிந்தது. அய்யனார் மட்டுமே இருந்தார். அவரிடம் தகவலை நாஞ்சில்நாடன் சொன்னார்.

நாகர்கோவில் வந்தபிறகுதான் என்ன நடந்தது என்பதே புரிந்தது. எல்லா ஆஸ்ப்த்திரிகளிலும் கூட்டம். காயம்பட்டவர்கள் பல்லாயிரம். அதை விட பல்லாயிரம்பேர் சர்ச் வளாகங்களில் குழுமி கிடந்தனர். கன்யாகுமரி மாவட்டத்தின் பல கடற்கரைகளில் கடுமையான அழிவு. பல இடங்களில் வீடுகள் இடிந்து சரிந்திருக்கின்றன . கடல் அரை கிமி கூட உள்ளே வந்துள்ளது என்றார்கள். குமரிமாவட்டத்தில் வீடுகளைகடலை ஒட்டிக் கட்டுவது வழக்கம். ரமணியின் குடும்பத்தில் மேலும் ஒருவர் கிடைத்து விட்டதாகச் சொன்னார்கள்.

தேடிக்கொண்டிருக்கிறார்கள். 

·போன் செய்து விசாரித்தபோது வேறு நண்பர்கள் எவரும் அலையில் மாட்டவில்லை என்று தெரிந்தது. பாவண்ணனும் மகாலிங்கமும் காலை 8 மணிவரை சொத்தவிளை பீச்சில் இருந்திருக்கிறார்கள், தெரியாமல். 9 மணிக்கு முதல் அலை அடித்திருக்கிறது. நான் வீடுதிரும்பும் வழியில் ஒரு வேன் சாலையோரம் நின்றது. கிறிஸ்மசுக்கு வந்த ஒரு கும்பல் சங்குமுகம் கடற்கரைக்கு 11 மணிக்குபோய் அதில் நான்குபேர் கடலோடு போய்விட்டதாகச் சொன்னார்கள். பாவண்னன் தப்பியது அதிருஷ்டம்தான். குடிப்பதற்காக கன்யாகுமரி செல்வதாக இருந்த பல எழுத்தாள நண்பர்கள் கிறிஸ்துமச்கூட்டம் இருக்கும் என்று மனதைமாற்றிக் கொண்டு முந்தியநாள் இரவு குற்றாலம் போனதனால் தப்பியிருக்கிறார்கள். 

மாலையில் நான் ஆஸ்பத்ரிகளை போய்பார்த்தேன். ஏராளமான காயம்பட்டவர்கள். எந்த வித கணக்கும் இல்லை. முதலுதவிக்கு கூட அலறி கூவி கலைந்து கொண்டிருந்தார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை தெரிய ஒருவாரமாவது ஆகும் என்றார்கள்.

பெரும்பாலானவர்கள் இப்போது காணாமல் ஆகியிருக்கிறார்கள் அவ்வளவுதான். ஒருவரை ஒருவர் தேடி அலைபவர்கள்தான் நகரில் அதிகம். பலரிடம் பணமும் இல்லை. தொடர்புவசதிகளும் இல்லை. போலீஸ்காரர்களுக்கு எதுவுமே தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியில் ஒன்று தெரிந்தது , தமிழ்நாட்டில் அபாயத்தவிர்ப்புக்கான எந்த அமைப்பும் எந்த மனநிலையும் அறவே இல்லை. காலை 8 மணிக்கெல்லாம் சுனாமி பற்றிய செய்தி அரசுக்கு கிடைத்தாகிவிட்டது. 12 மணிக்கு கூட எவருக்கும் எதுவும் சொல்லப்படவில்லை.

அரசாங்க எச்சரிக்கை விடப்படவில்லை. கடற்கரையோரங்களில் அதிக சேதம்  மணிக்கு வந்த மூன்றாம் அலையால்தான் என்றால் ஆச்சரியப்படக் கூடாது. சொல்லப்போனால் அரசாங்கம் என்ற அமைப்பே இங்கு இருந்ததாக படவில்லை. தகவல் இல்லாமல் 11 மணிக்கெல்லாம் கடலுக்கு வேடிக்கைபார்க்கப் போய் மாட்டியவர்கள் மிக அதிகம். சுசீந்திர்ம் தேர் திருவிழா கன்யாகுமர் நாகர்கோவில் பாதையில். அங்கே பல்லாயிரம் பேர் கூடியிருந்தார்கள். அவர்களை ஒருவழியாக திருப்பிவிட்டு அச்சாலையை தெளிவாக வைத்திருக்க ஏற்பாடுசெய்யகூடிய ஒரு அதிகாரி இல்லை. கூட்டம் மடத்தனமாகச் சாலையை மறித்ததில் வண்டிகள் அசையாமல் நிற்க எல்லா வணிகளிலும் காயமடைந்தவர்கள் அழுதுகூவினர். அதேசமயம் கூட்டத்துக்கு என்ன நடந்திருக்கிறது என்றே  தெரியவில்லை. ஜாலியாக மிட்டாய் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது அதேசாலையில் . செல் போன்சேவையை நம்பியே அததனைபேரும் இங்கு இருக்கிறார்கள்.

அது சுத்தமாக கைவிட்டுவிட்டது. மொத்தத்தில் அறியமையும் உதாசீனமும் கலந்த ஒரு அராஜகநிலைதான் மாலைவரை நாகர்கோவிலில் நிலவியது. காலையில் ·போனில் நெய்தல் கிருஷ்ணனிடம் விசாரித்தபோது தகவல்கள் தெரிந்தன. காரில் சொத்தவிளைக்குப் போனவர்கள் சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பரான சேதுராமன் மற்றும் அவரது மனைவி மருமகள் அகிலா, இரு குழந்தைகள் கார் டிரைவர் ஐயப்பன் அவர்களுக்குத் துணையாக காமிராமேன் ரமணி . அலையில் அனைவருமே வெகுதூரம் அடித்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். ரமணியும் சேதுராமனின் மனைவியும் தப்பி விட்டனர். அவர்களைத்தான் நாங்கள் சுசீந்திரம் சாலையில் பார்த்தோம். ஒரு சிறுவன் ராம் மீட்கப்பட்டுவிட்டான். கிருஷ்ணனும் எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித்தும் ஆஸ்ப்த்திரிகள் தோறும் தேடி பையனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பிறகு சேதுராமன் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு விலா எலும்பு முறிந்து ரத்தம் கட்டி மிக ஆபத்தான நிலையில் இருந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போதும் அந்நிலையில்தான் இருக்கிறார். சிறிதுநேரம்கழித்து பிறமூவரின் உடல்கள் கண்டடையப்பட்டன. அகிலா உடல் மோசமாக காயம்பட்டிருந்தது என்றார்கள்.

நாகர்கோவில் நகரில் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் அடிபட்டவர்கள் மற்றும் பிணங்கள். நேற்று என்னை சந்திக்கவந்த ஒரு மலையாள வாசகர்குழு நான் இல்லாததனால் கடிதம் விட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள். அவர்கள் முட்டம் போவதாக எழுதியிருந்தார்கள். என்ன ஆனார்கள் என்று தெரியாமல் நான் அஸ்பத்திரிகளுக்கு சென்றேன். இரவில் ஒரே போர்க்களத்தோற்றம். யாரிடம் என்ன விசாரிப்பதென்று தெரியாமல் அல்லாடி திரும்ப நேர்ந்தது. விசாரிக்க ஒரு இடம் இல்லை. பொறுப்பாக எவருமே இல்லை. மருத்துவமனைகளில் வெறுமே ரத்தம் துடைத்து மருந்து போட்டுவிட்டுக் கொண்டிருந்தார்கள். மோசமான உள் அடி பட்டவர்களைக்கூட பயிற்சி இல்லாதவர்கள் சும்மா தூக்கிவந்து கொண்டு போட்டுச் சென்றார்கள். எந்த மருத்துவ மைப்பும் கண்ணுக்குத்தென்படவில்லை.  இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் கரையோர மீனவர்கள். அவர்களில் ஏழைகள்தான் கடலோரம் குடிசை போட்டு வாழ்வார்கள்.

மரணமும் காயமும் அரசு சொல்லும் கணக்குகளைவிட பல மடங்கு அதிகம் இருக்கும் என்பதை சாதாரணமாகவே அனுமானிக்க முடிந்தது. மரணடைந்தவர்களில் குழந்தைகள்தான் பெரும்பகுதி. குவித்துக் குவிதுப் போட்டிருந்தார்கள். அலறல்கள் கேட்டபடியே இருந்தன.  இங்கே தாழ்வான பகுதியான குளச்சலில் அழிவு மிக அதிகம் என்றார்கள். 

தொட்ர்ச்சியாக 3 நாள் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் என்பதனால் கன்யாகுமரி மற்றும் கடற்கரைக்கு நல்ல கூட்டம் வந்திருந்தது. சபரிமலை பக்தர்களும் மிக அதிகம். அவர்களில் எத்தனைபேர் கடலில் சென்றார்கள் என்பதெல்லாம் இதுவரை யாருக்கும் தெரியாது. ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். காணாமலானவர்கள் பற்றி பொதுவாக தகவல்கள் திரட்டப்படவில்லை. கன்யாகுமரி லாட்ஜுகளில் பலர் அறைக்குத் திரும்பவில்லை என்று சொன்னார்கள் . இதுவரை கன்யாகுமரியில் 750 குளச்சலில் 500 தேங்காய்பட்டினத்தில் 200 அளவுக்கு பிணங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டுள்ளது. மணலில் ஏராளமான பிணங்கள் புதந்து நாற்றமெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழிவுகளில் பாதி அலட்சியத்தின் விளைவாக நிகழ்ந்தவை. காலை எட்டரைக்கே முதல் சுனாமி அலை சென்னையில் அடித்துவிட்டது .  உடனே  என்ன நடக்கிறது, என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்றெல்லாம் அரசுஅதிகாரபூர்வமாக எச்சரிக்கை செய்திருந்தால் மக்களை கடற்கரையிலிருந்து அகற்றியிருக்கலாம். பயணிகளை விலக்கியிருக்கலாம். காலை 11 மணிவரைக்கூட மக்கள் சாவகாசமாக கடற்கரையில் புழங்கியிருக்கிறார்கள். யாருக்கும் என்ன நடக்கிறது அதன் அபாயம் என்ன என்றெல்லாம் தெரியவில்லை. முதல் அலை 9 மணிக்கு வந்தபின் அதை வேடிக்கைபார்க்க போய் மாட்டியவர்கள்தான் சேதுராமன் குடும்பம் போன்றவர்கள். குமரிமாவட்டத்தில் 4 பெரிய அலைகளும் 3 சிறு அலைகளும் வந்துள்ளன. சென்னையில் ஒன்றோடு சரி. தினமலர் செய்தியை வைத்துப் பார்த்தால் சென்னையில் பல்லாயிரம்பேர் உடனே கடற்கரைக்குப் போய் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். தமிழினி வசந்தகுமார் கூட சென்று ஒருமணிநேரம் வேடிக்கை பார்த்ததாகவும் கடலுக்குள் இறங்கிப் பார்த்ததாகவும் சொன்னார். அங்கு இன்னொரு அலைவந்திருந்தால் மரணம் ஒருலட்சம்கூட ஆகியிருக்கும். புகைப்படங்களில் ஒரு போலீஸ் தலைகூட கண்ணில்படவில்லை. நிலநடுக்கம் முடிந்ததுமே கடல் உள்வாங்குவது போன்ற சில தடையங்கள் இருந்தன என்று சொல்கிறார்கள். எந்த எச்சரிக்கையும் அறிவியலாளர் தரப்பிலிருந்து அளிக்கபடவில்லை. விடுமுறை ஆதலினால் பெரும்பாலான அதிகாரிகள் ஊரிலேயேஇல்லை என்று சொன்னார்கள்.  இனிமேல் விளக்கங்கள் ஏராளமாக வரலாம். 

சுனாமிக்கு அலட்சியம் உரிய உதவி செய்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- பதிவுகள்: ஜனவரி 2005; இதழ் 61 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R