படைப்பில் காணும் பாத்திரங்களை அன்றாட வாழ்விலும் தேடும் இலக்கியவாசகர் இரகமத்துல்லாபல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள், மெல்பனில் எனது வீட்டுக்கு வந்தார். சிட்னியில் வசிக்கும் அவரது மகளிடம் வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரை மெல்பனுக்கு அழைத்திருந்தேன். ஒருநாள் இரவுப்பயணமாக பஸ்ஸில்தான் வந்தார். அவரது கையிலிருந்தது ஒரு ஆங்கில துப்பறியும் நாவல். தந்திரபூமி, குருதிப்புனல், காலவெள்ளம், சுதந்திரபூமி முதலான பல நாவல்களும் பல கதைத்தொகுப்புகளும் சிறந்த நாடகப்பிரதிகளும் எழுதியிருக்கும் அவர் எனது அபிமான எழுத்தாளர். இவருக்கு எப்படி துப்பறியும் நாவல்களில் ஆர்வம் வந்தது எனக்கேட்டபோது, தான் பயணங்களில் விறுவிறுப்பான அத்தகைய நூல்களைத்தான் படிப்பது வழக்கம் என்றார். பயணக்களைப்பை அது போக்கிவிடுமாம். தேர்ந்த வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படும் பல எழுத்தாளர்களிடத்தில் இவ்வாறு விசித்திரமான இயல்புகளும் இருக்கின்றன. ஜெயகாந்தனிடம், "நீங்கள் சரித்திர நாவல்கள் படிப்பதில்லையா?" என்று, கல்கியையும் சாண்டில்யனையும் , அகிலனையும் மனதில் வைத்துக்கொண்டு யாரோ கேட்டார்களாம். அதற்கு ஜெயகாந்தன், " நான் அவற்றை படிப்பதில்லை. அதனைவிட தனக்கு அம்புலிமாமா கதைகள்தான் விருப்பம்" என்றாராம்.

பாரதியியல் ஆய்வாளரும் , மக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலை தமிழுக்குத்தந்தவரும், தமிழகத்தின் மூத்தபடைப்பாளியுமான சிதம்பர ரகுநாதனிடத்தில் வித்தியாசமான ஒரு இயல்பை அவதானித்திருக்கின்றேன். பாரதியின் பாடல்களில் பெரும்பாலானவை அவருக்கு மனப்பாடம். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஒன்றும் இருந்தது. அதுதான் இலங்கையில் புகழ்பெற்ற சிங்கள பொப்பிசைப்பாடல்: " சுராங்கணி, சுராங்கணி, சுராங்கணிட்ட மாலு கெனாவா"

தமிழ்வாசகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பல எழுத்தாளர்களிடத்தில் விசித்திரமான இத்தகைய இயல்புகளை அவதானித்திருக்கின்றேன். எழுத்தாளர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் எனச்சொல்லமுடியாது, சிறந்த படைப்பிலக்கிய நூல்களை விரும்பிப்படிக்கும் வாசகர்களிடத்திலும் அத்தகைய விசித்திரமான இயல்புகள் இருக்கின்றன.

சமகாலத்தில் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகளை படிக்கின்ற அதே சமயத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சாகசக்கதைகளை படிப்பதிலும் ஆர்வம் காண்பிக்கின்ற ஒரு வாசகர் பற்றிய அறிமுகம்தான் இந்த அங்கம். அவரது பெயர்: இரகமத்துல்லா. தமிழ்நாட்டில் செங்கல்பட்டைச்சேர்ந்த ஷேக் தாவூத் - காதர் பீ தம்பதியரின் புதல்வர். காரைக்குடியில் புகழ்பெற்ற அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்றவர்.  படிக்கின்ற காலத்தில் இவருக்கு இலக்கியத்தில் அதிகம் ஈடுபாடில்லை. தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது தமிழ்ப்பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தமையால் அங்கு தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளராக பல ஆண்டுகள் இயங்கியிருக்கிறார். இரகமத்துல்லா எனக்கு அறிமுகமானது மெல்பனில்தான். வாசகி சாந்தி சிவக்குமார் மெல்பனில் மாதாந்தம் ஒருங்கிணைக்கும் வாசகர் வட்டத்தின் சந்திப்புகளில்தான் இவரை பார்த்துபேசியிருக்கின்றேன். வாசிப்பு அனுபவங்களில் மற்றவர்கள் ஒரு நேர்கோட்டில் பயணிக்கும்போது இரகமத்துல்லா மாத்திரம் வேறு ஒரு திசையில் பயணித்து கருத்துச்சொல்வார். இவரது வாசிப்பு அனுபவம் ஏனையவர்களின் அனுபவத்திலிருந்து முற்றாக மாறுபட்டிருக்கும். ஒருகாலத்தில் நக்சலைட் தீவிரவாதத்தை ஆதரித்தவரும், அதனாலேயே வீட்டைவிட்டு வெளியேறி பசி பட்டினியோடு தேசாந்தரியாக அலைந்துழன்றவரும், பின்னாளில் கேரள இலக்கிய உலகில் கவிஞராக கொண்டாடப்பட்டவரும் திரைப்பட நடிகரும் பாடலாசிரியருமான பாலச்சந்திரன் - சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர ரகசியம் நூலைப்படித்துவிட்டு, தமிழகப்பயணங்களில் பஸ்நிலையங்களில் யாராவது எழுத்தாளன் பரட்டைத்தலையுடன் சித்தன்போன்று அலைந்துகொண்டிருக்கிறானா? என்பதை கூர்ந்து அவதானித்திருப்பவர்தான் இரகமத்துல்லா.

" ஒரு  எழுத்தாளன் பல்வேறு சூழ்நிலைகளில் எழுதுகிறான். அதனால், நமக்கு வேண்டியதை படித்து, அந்த எழுத்தாளன் சொல்ல வந்த கருவில், அதை ஒத்த நம் சொந்த கருத்தை தெரிவிக்க வேண்டும். இதை ஒவ்வொரு வாசகனும் ஒரு கடமையாக எடுத்துச் செய்வதே அந்த எழுத்தாளனுக்கு நாம் செய்யும் உதவி. எழுத்தாளன் - வாசகன் உறவு இப்படி இருந்தாலே அது பலன் தரும்." எனச்சொல்லும் இரகமத்துல்லாவுக்கு, வாசிப்பு பழக்கத்தை எவரும் தூண்டவும் இல்லை, தடுக்கவும் இல்லை என்பது தெரிகிறது.

"எவ்வாறு தீவிர வாசகராக மாறினீர்கள்?" எனக்கேட்டதும் அவரது பதில்: " ஊரில் இருக்கும்போது, அக்கம்பக்கத்து வீடுகளில்  தேடித் தேடி போய் வார, மாத சஞ்சிகைகளை இரவல் வாங்கிப் படிப்பதுதான் பெரிய பொழுதுபோக்கு. வாராந்தரி ராணி, குமுதம், விகடன், கல்கண்டு, இதயம், கல்கி என்று கையில் கிடைத்த அனைத்து சஞ்சிகைளையும்  புத்தகங்களையும் படிப்பேன். இந்துமதி, தாமரை மணாளன், புஷ்பா தங்கதுரை, சுஜாதா, ராஜேஷ்குமார் என்று நிறைய எழுத்துக்களை படித்தேன். அப்போது வரைமுறையே கிடையாது. சரித்திரம், சமூகம், கதை, கட்டுரை என்று அனைத்தையும் படிப்பதுண்டு. மெது மெதுவாக சுஜாதாவின் எழுத்துக்கள் பிடிக்க ஆரம்பித்தன. தேடிப்  போய் அவரின் படைப்புகளை படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் நகைச்சுவையில் தீராக் காதல் கொண்டவன். பின்னாளில் கல்லூரி சென்றதும், அங்கு நிலவும் சாதிப் பிரச்சினைகளால் மாற்றம் ஏற்பட்டு சமூகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு வந்தது. அன்றில் இருந்து அது சம்பந்தமான கட்டுரைகளும், தொடர்களும் பிரதானமாக படிக்க ஆரம்பித்தேன். இருந்தும், நகைச்சுவை எப்போதும் என் விருப்பப் பாடமாக இருந்தது. ஒரு பிரச்சினையை நகைச்சுவையோடும் சொல்லலாம் என்பதில் நம்பிக்கை வந்தது. மனதிற்கு உற்சாகம் தர நான் அடிக்கடி படிப்பது ஆங்கிலத்தில்  Asterix மற்றும் Tintin. பின்னாட்களில் சுஜாதா தவிர ஜெயகாந்தன், பிரபஞ்சன், ஞாநி, வண்ணதாசன், எஸ் ரா, நாஞ்சில் நாடன் போன்றோரின் எழுத்துக்கள் நிறைய படித்தேன். எனது எண்ணத்தில் ஒத்த கல்லூரி நண்பர்களோடு நிறைய அளவளாவல் இன்றும் நடக்கிறது. எமது கலந்துரையாடல்களில் மனிதம், சமூக நலம், வாழ்வியல் மேம்பாடு போன்றவையே அதிகம் பேசப்படும்."

மெல்பனுக்கு தொழில் நிமித்தம் புலம்பெயர்ந்த பின்னரும் வாசிப்பில் இவருக்கிருந்த ஆர்வம் குறையவில்லை. இயந்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் புகலிட வாழ்வில் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கியிருந்த இரகமத்துல்லாவை, மெல்பன் வாசகர் வட்டமும் இணைத்துக்கொண்டது. இந்த அமைப்பு சிறிதாக இருந்தாலும், தன்னிடத்தில் சிறிய பொறியாக இருந்த அனுபவத்தை ஊதி பெரிதாக்க பெரும் உதவி செய்தது என்றும்  நண்பர் அ. முத்துகிருஷ்ணன் அவர்களின் அறிமுகம், அவர் ஒரு எழுத்தாளர் என்பதையும் தாண்டி ஒரு சமூக ஆர்வலர் என்ற வகையில் மிகவும் பிடித்தது எனத்தெரிவித்தார். 

" தமிழ் பிடிக்கும் என்றாலும் "பழம் பெருமை" பேசுவது பிடிக்காது. ஒரு எழுத்தாளனுடைய படைப்பு, இன்றைய  சமூகத்திற்கு, அதன் மேம்பாட்டுக்கு  எதேனும் ஆக்கபூர்வமாக  செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். இன்றைய சூழலுக்கு, நடைமுறை யதார்த்தம் என்னவோ அதை கையில் எடுக்க வேண்டும். இது கீதை, குரான், பைபிள் போன்ற திருமறைகளுக்கும் பொருந்தும் என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை." எனவும் சொல்கிறார். 

வாசகர் சந்திப்புகளில் கருத்துக்களை பரிமாறும்போது, ஒரே படைப்பை ஒரு வாசகன் எத்தனை கோணங்களில் பார்க்கிறான் என்ற பிரமிப்பு கூட ஒரு நல்ல அனுபவம்தான் என்கிறார் இரகமத்துல்லா. இவர் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, இவராலும் ஆக்க இலக்கியம் படைக்கமுடியும் என்றுதான் எனக்குத்தோன்றியது. ஆனால், தான் பிரசுரத்திற்காக இதுவரையில் எதனையும் எழுதவில்லை. என்றாலும், நிறைய விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி நண்பர்களுக்கு தந்திருக்கிறேன். ஒரு சில மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளேன்." என்றார்.

அவுஸ்திரேலியா மெல்பனில் வாழநேரிட்டாலும் அடிக்கடி தமிழகம் சென்றுவரும் இரகமதுல்லா, தனது கல்லூரி நண்பர்களுடன் தொடர்ந்தும் இணைப்பிலிருப்பவர். அவர்களைச்சந்திக்கும் தருணங்களில், படித்த நூல்கள்தான் பேசுபொருளாகியிருக்கின்றன. இலக்கிய நண்பர்கள் சந்தித்துக்கொண்டால், "இறுதியாக எந்தப்புத்தகம் படித்தீர் ? அடுத்து என்ன படிக்கவிருக்கிறீர் ?" என்று பரஸ்பரம் கேட்டுக்கொள்வார்கள். அந்தக்கேள்வியை இவரிடமும் கேட்டேன். தனது கல்லூரி நண்பர்களிடம் இருந்து சமீப கால பரிந்துரை வீர யுக நாயகன் வேள் பாரி. சரித்திரம்தான் என்றாலும், படிக்க முயல்கிறேன். புத்தகம் இன்னும் வரவில்லை. ஆனால் மின் பிரதியில் வந்துவிட்டது. அடுத்த திட்டச் செயல் அதுதான் என்றார். 

வாசிப்பு அனுபவம், வாசகர்களுக்கு வாசல்களை திறந்துவிடும் தன்மையும்கொண்டது. இலக்கிய நண்பர் இரகமத்துல்லா, மற்றவர்களின் அனுபவங்களை கூர்ந்து அவதானிக்கும் இயல்பினைக்கொண்டவர். அந்த அனுபவங்களிலிருந்து புதிய வாசல்களை திறக்கத்தக்கதாக கருத்துக்களை முன்வைப்பார். அங்கிருந்து வாதங்கள் விரிவடையும். தேடலைநோக்கிய பயணமும் தொடரும். இவரிடத்தில் ஒரு வேண்டுகோள்: தான் படித்த சிறந்த நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். அடையாளம் காண்பிக்கவேண்டும். இரகமத்துல்லா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R