முதல் சந்திப்பு : புஷ்பராணியின் 'அகாலம்' கூறும் செய்தி! - முருகபூபதி -
அமரர் புஸ்பராணி சிதம்பரியின் 'அகாலம்' நூல் பற்றி எழுத்தாளர் முருகபூபதி எழுதி, 21.08.2022 அன்று பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரை. அவரது நினைவாக மீள்பிரசுரமாகின்றது.
முதல் சந்திப்பு : புஷ்பராணியின் 'அகாலம்' கூறும் செய்தி! - முருகபூபதி - 21 ஆகஸ்ட் 2022 இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.
உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத் தொடங்கினர். 1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும், 19 தொகுதிகள் லங்கா சமசமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க. 17 தொகுதிகளில்தான் வென்றது. தமிழரசுக்கட்சிக்கு 13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று ஆசனம். இக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அமிர்தலிங்கமும், ஜி. ஜி. பொன்னம்பலமும் தங்கள் தங்கள் கோட்டைகளிலேயே தோற்றனர். அவர்கள் அவ்வாறு தோற்றதன் பின்னணியில் இலங்கை அரசியலில் பெரிய திருப்புமுனையும் தோன்றியது. அந்த முனை தொடர்ந்தும் சங்கிலிப்பின்னலாக பல பரிமாணங்களை பெற்றிருக்கிறது. அந்த வரலாற்றை ஏற்கனவே வெளிவந்துள்ள அரசியல் ஆய்வேடுகளில் பார்க்கலாம்.
1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில், புனித பிரதேசம் என அழைக்கப்படும் கதிர்காமத்தில், அங்கு வாழ்ந்த அழகி மனம்பேரி பிரேமாவதி மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த அவலத்தை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த நூலின் அறிமுக நிகழ்வு பாரிஸில் 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்தபோதுதான் முதல் முதலாக புஷ்பராணி அக்காவை சந்தித்தேன். அவரைக் கண்டதும் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். பொங்கி வந்த கண்ணீரை எப்படியோ அடக்கிக்கொண்டேன். எனது வாழ்நாளில் நான் சந்திக்க விரும்பியிருந்த பெண் ஆளுமை அவர். 'அக்கா' என்று விளித்ததும், தன்னை அவ்வாறு அழைக்கவேண்டாம். 'புஷ்பராணி' என்றே அழைக்கலாம் என்று அவர் சொன்னதும் சற்று திகைத்துவிட்டேன்.