கவிதை பற்றிய உரையாடலொன்று... - வ.ந.கிரிதரன் -
கவிஞர் கற்சுறா தன் முகநூற் பக்கத்தில் பின்வருமாறு கேள்வியொன்றினை எழுப்பிக் கவிதையொன்றினைப் பகிர்ந்திருந்தார். அக்கவிதையை அவர் 2014இல் பகிர்ந்திருக்கின்றார்.
கற்சுறாவின் குறிப்பு - கவிதை பற்றிய ஈர்ப்புடையோர் சொல்லுங்கள். சொல்லுங்கள். என்னாச்சு? 11 வருட உரையாடல்.
அவரது கவிதை -
நிழலை நகர்த்தி
உயர்த்தியது
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில்
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?
கற்சுறாவின் இக்கேள்விக்கும் சிலர் விருப்பு தெரிவித்திருந்தார்கள். ஆனால் கருத்துத் தெரிவிக்கவில்லை. பொதுவாகவே முகநூல் நண்பர்களின் பதிவுகளை வாசிக்காமலேயே விருப்பு தெரிவிப்பவர்கள்தாம் அதிகம். இந்நிலையில் கற்சுறா எதற்காக மீண்டும் 11 வருடங்கள் காத்திருகக் வேண்டுமென்று தோன்றியதால் என் எதிர்வினையை இங்கு முன் வைத்து , கற்சுறாவின் ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கலாமென்று முடிவு செய்திருக்கின்றேன். அதன் விளைவே கீழுள்ள என் எதிர்வினை.
ஒரு கவிதையைப் பலரும் பலவாறு புரிந்து கொள்வர். இது நிச்சயம் என் புரிதல். நிச்சயமாகக் கற்சுறா இவ்விதமெல்லாம் சிந்தித்து இக்கவிதையை எழுதியிருக்க மாட்டார். அவரது ஆளுமையை ஓரளவு உணர்ந்தவன் என்னும் வகையில் நிச்சயமாக இக்கவிதை ஒரு வகை விமர்சனப்பாணியிலுள்ள கவிதையாகவே இருக்க முடியும். மானுட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தும் ஆளுமை அவருடையது அல்ல.
இதுவரை அதற்கான உரையாடலை நம் கவிஞர்களும் சரி, விமர்சகர்களும் சரி முன்னெடுக்கவில்லை. கவிஞர்கள் பலருக்குத் தாம் எழுதும் கவிதைகளையே புரிவதில்லை. இந்நிலையில் இந்நிலை எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. விமர்சகர்கள் பலரும் பிறர்தம் கருத்துகளை மேற்கோள் காட்டி விமர்சனம் செய்யப் பழகியவர்கள். அதனால் அதுவும் ஆச்சரியம் தரவில்லை. இக்கவிதையை நான் இப்பொழுதுதான் பார்த்தேன். இது பற்றிய என் எதிர்வினையே இது.