புறக்கணிக்கப்படலாகாத கவிஞர் ஆசு சுப்பிரமணியனின் முழுக்கவிதைத் தொகுப்பு 'ஆசு கவிதைகள்'! - லதா ராமகிருஷ்ணன் -
UNSUNG HEROES என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுபவர்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. ஒரு துறையில் அவர்கள் ஆற்றிய சீரிய பணியும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருப்பவர்கள். இந்த அங்கீகாரம் என்பதில் உள்ள ’அரசியல்’ காரணமாக ஓரங்கட்டப்படுபவர்கள் தமிழ் இலக்கியத் துறையில், குறிப்பாக கவிதைப் பிரிவில் நிறையவே உண்டு. காத்திரமாக தொடர்ந்து கவிதைவெளியில் இயங்கிவந்தாலும் இலக்கியத் திறனாய்வாளர்கள் என்ற அடைமொழியோடு அவ்வப்போது பட்டியலிட்டுக் கொண்டிருப்பவர்களுடைய கருணைவிழிகள் இவர்கள் பக்கம் திரும்புவதேயில்லை! அரசியல்துறையில் உள்ள, திரைப்படத்துறையில் உள்ள பிரபலங்களோடு தான் தோளோடு தோள்சேர்த்து நிற்கும் படங்களைத் திரும்பத்திரும்ப வெளியிட்டுக் கொள்ளாததனால் இருக்கலாம், கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் தன் கவிதைகளைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொள்ளத் தெரியாததால் இருக்கலாம். சமூக சீர்திருத்தக் கண்ணோட்டங்களைக் கொண்டு வாழ்ந்துவருபவராயிருப்பினும் அதை வெளிச்சம்போட்டுக் காட்டத்தெரியாததாயிருக்கலாம்; சமூகத்தை உய்விப்பதே தன் கவிதைகளின் முழுமுதற்கடன் என்று உரத்து முழக்கமிடத் தெரியாததாயிருக்கலாம்.
ஊர் அபிமானத்தில், அன்னபிற அபிமானங்களில் சில கவிஞர்கள் ஒருவரையொருவர் திறனாய்வு செய்துகொள்வதும் நடக்கிறது. இதில் தவறேதும் இல்லை. ஆனால், இப்படிச் செய்வதன் மூலம் சில கவிஞர்களே திரும்பத்திரும்ப முன்னிலைப்படுத்தப் படுவதும், நவீன தமிழ்க்கவிதையின் ‘அறங்காவலர்களாக’ பாவிக்கப்படுவதும்’ தொடர்ந்த ரீதியில் நடக்கும்போது அது குறித்து பேசவேண்டிய தேவையேற்படுகிறது.