புகலிட இலக்கியமும் - வ.ந.கிரிதரனின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்களும் - ஈழக்கவி -
‘டயஸ்போர’ (Diaspora) என்பது ஒரு பயங்கரவாத/ தீவிரவாத அமைப்பு என்ற மாயை பெரும்பான்மை மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்து அரசியல் நிலவரங்களும் இனவாத ஊடகங்களும் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளன. அண்மையில் சியத டிவி (Siyatha TV) இன் ‘டெலிவகிய’ (Telewakiya) நிகழ்ச்சியில் ஊடகவிலாளர் லால் மாவலகே (Lal Mawalage) இந்த மாயத்தை அல்லது பிம்பத்தை சுட்டிக் காட்டி, ‘டயஸ்போர’ என்பது புலம்பெயர் மக்களை குறிக்கின்ற ஒரு சொற்றொடர் என்றும் குறிப்பாக, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் மக்களையும் சுட்டுகின்றது - போன்ற கருத்துக்களை நேர்மையாகவும் வரலாற்று ரீதியான கருத்தியல்களோடும் உலகலாவிய விவரணங்க ளோடும் மிகத்தெளிவாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான டயஸ்போரா என்பது யூதர்களில் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. யூதர்கள்தான் பல காலமாகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின் இஸ்லாமியர் வாழ்ந்த நாடுகளிலிருந்து சில பகுதிகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களுக்கென ஒரு நாடு ஏற்படுத்தப்பட்டது, இதுவே உலகத்திற்கு சாபக்கேடாகிவிட்டது. உலகில் பல சமூகங்கள் புலம் பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சான்றாக ஆப்பிரிக்க மக்கள் பலநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. உலகில் அதிகமாகப் புலம்பெயர்ந்தது ஈழத்தமிழர்கள்தான். அரசியல் அடாவடித்தனம் காரணமாக சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு உருவானது. குடிபெயர் தலைக்குறிக்க மைக்ரேஷன் (Migation) டிஸ்ப்ளேஸ்மெண்ட் (Displacement) என்னும் இரு சொற்களும் ஆளப்படுகின்றன. மைக்ரேசன் என்பது ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குப் பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்த லாகக் காணக்கூடாது என்பது பன்னாட்டு வரையறை ஆகும்.