பாரதி உரைநடை வகுக்கும் வாழ்வியல் மதிப்புகள்! - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
“புவி அனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்து
தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும்
வசை என்னால் கழிந்த தன்றே”
என்று எட்டயபுரம் மன்னா் வெங்கடேசு ரெட்டப்ப பூபதிக்கு கி.பி.1919 ஆம் ஆண்டில் எழுதிய பாடலில் தன்னைப்பற்றி தன்னம்பிக்கை மேலோங்கும் குரலில் உரைத்த திறம் ஒன்றே போதும் பாரதி பற்றிய அறிமுகத்திற்கு… பாரதியின் தேச பக்தி கருத்துக்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதி-மத-தீண்டாமை எதிர்ப்பும், பெண் விடுதலையும்,தேசம் தழுவிய மனித நேயமும், தமிழ்ப்பற்றும் இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் நமக்கு முழுமையாக வேண்டப்படுகிறது. ஆக காலம் பல கடந்தும் இன்றும் மகாகவியாய், மக்கள் கவியாய்,தேசத்தின் கவியாய் உயா்ந்து நிற்கும் பாரதி தனது உரைநடைதிறத்தாலே நாட்டில் விழிப்புணா்வையும், மொழியிலே புதிய மலா்ச்சியையும் உருவாக்கியவா். அவா் தம் உரைநடைப்படைப்புகள் மானுடா்களுக்கு எங்ஙனம் வாழ்வியல் மதிப்புகளை எளிமையாகவும், உள்ளத்தை நேராகத் தாக்கும்படியான வலிமையான சிந்தனைத் தெளிவுடன் அமைந்துள்ளன என்பதை, “பாரதி தமிழ் வசனத் திரட்டு” என்ற நூலின் தரவுகளை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.