நினைவுகளின் தடத்தில் - (23 & 24) - வெங்கட் சாமிநாதன் -
- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள்
பதிவுகள் ஜனவரி 2009 இதழ் 109
நினைவுகளின் தடத்தில் - 23
உடையாளூருக்கு வந்தது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது போலத்தான். அப்பா அம்மாவோடு, தம்பி தங்கைகளோடு சேர்ந்து வாழ்வது என்பது என் பதினைந்தாவது வயதில் தான் முதன் முறையாக நிகழ்கிறது. எல்லோரும், தம்பி தங்கைகளும் தான், என்னைப் புதியவனாகப் பார்க்காமல் வெகு அன்புடன் 'அண்ணா' என்று அழைக்க அதைக்கேட்க வெகு சுகமாக இருந்தது. பெரிய வீடு. நாட்டு ஓடு போட்ட வீடு. மண்தளத்தில் சாணிபோட்டு மெழுகிய கூடம், தாழ்வாரம். எட்டிப் பார்த்தால் கை நீட்டினால் தொட்டுவிடலாம் போல நீர் மேலெழுந்து நிரம்பியிருக்கும் கிணறு. உடையாளுரின் ஒரு திசையில் இரண்டு ·பர்லாங் நடந்தால் ஒரு ஆறு. அதற்கு நேர் திசையில் அரை மைல் தூரம் நடந்தால் இன்னொரு ஆறு. ஆற்றின் அக்கரையில் சந்திரசேகரபுரம் என்னும் ஒரு பெரிய கிராமம். நிலக்கோட்டையின் கோடைகால தண்ணீர் பஞ்சத்தில் வாழ்ந்த எனக்கு இதெல்லாம் மிக சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் பெரிய கொல்லை. தென்னையும் புளியமரங்களும் நிறைந்த கொல்லை.
உடையாளூரே ஒரு மேடிட்ட தளத்தில் தான் இருந்தது. ஊருக்குள் நுழையும் போதே மாட்டு வண்டி மேட்டில் ஏறித்தான் ஊருக்குள் நுழைய முடியும். சுற்று வட்டாரத்தில் எந்த கிராமமும் அப்படி ஒரு மேட்டில் இருப்பதாக நான் காணவில்லை. உடையாளூரில் மொத்தம் இருந்ததே நான்கு தெருக்கள் தான். ஒவ்வொரு தெருவிலும் சுமார் இருபது வீடுகள் இருக்கலாம். எங்கள் தெருவில் வீடுகள் ஒரு சாரியிலேதான் இருந்தன. 'ப' வடிவில் மூன்று தெருக்கள். 'ப'வின் நடுவில் குறுக்கே ஒரு கோடிட்ட மாதிரி நான்காவது தெரு. அந்த நடுத்தெருவில் தான் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அந்தக் கோவிலை நான் பார்த்திருக்கிறேனே தவிர அங்கு ஏதும் உற்சவங்கள் நடந்ததாக எனக்கு நினைவில் இல்லை. அந்தக் கோவில் பற்றி யாரும் பேசிக் கூட எனக்கு நினைவில் இல்லை. உடையாளூரில் மிகவும் கொண்டாடப்பட்ட கோவில்கள் ஊருக்கு ஒரு எல்லையில் வெளியே இருந்த சிவன் கோவிலும் அதன் மறு எல்லையில் இருந்த செல்வ மாகாளி அம்மன் கோவிலும் தான். சிவன் கோவில் மிகப் பழமையான கோவில். 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி வரும்போது, சுற்றிலும் கோவில் சுவர்களில் கல்வெட்டுக்கள் காணும். அந்தக் கோவிலுக்கு எதிரே இரண்டு குளங்கள். ஒன்று மனிதர்கள் குளிப்பதற்கும் மற்றது மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கும் என இருந்தன. நான் அங்கு படித்தக் கொண்டிருந்த 47-48, 48-49 வருடங்களில் நீர் நிரம்பிருந்த அந்தக் குளங்கள் சில வருடங்களுக்கு முன் நான் போயிருந்த போது முற்றிலுமாக வற்றியிருந்தது மட்டுமல்லாமல், குளங்கள் இரண்டும் இருந்த சுவடு கூட அழிந்து வந்து போயிருந்தன.