ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் முன்னகர்த்தும் அரசியல்! (3) - ஜோதிகுமார் -
VII
“எல்லாவற்றையும் விற்றுவிட்டு மீண்டும் தரைக்கே வர அதிகபட்சம் ஒரு வருடம். பிறகு? ஒரு இருபது ஏக்கர் தோட்டம் மிஞ்சினால் போதும். அதில் விவசாயம் செய்து வாழலாம்… விவசாயம் செய்ய சொன்னார் தாத்தா (பொன்னுமணி பெருவட்டர்)” (பக்கம் 151).
வெறிகொண்டு, நாய் நாயைக் கடித்துக் குதறும், பொருளாதாரப் போட்டியை, இறுதியாக இப்படி முடித்து வைப்பதில் சமாதானம் காண்கின்றார் ஜெயமோகன்.
இதற்கு முன், மேலே குறிப்பிட்டதுப்போல், இம் மூன்று தலைமுறைகள் செய்யும் அட்டூழியங்களும் துரோகங்களும் கேவலங்களும் அழகுற நாவலில் இலக்கிய மயப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஒரு தாழ்ந்த சமூகத்தினருக்கு மாத்திரம் சொந்தமானது எனக் காட்டப்பட்டும், அதேவேளை, பொதுவில், இது மேல்தட்டு வர்க்கத்தையும் ஆட்டிப்படைக்கும் பொதுமையான ஒன்று எனும் உண்மை, வாசகனில் இருந்து மறைக்கப்படுவதே, அல்லது குறைத்து வாசிக்கப்படுவதே, நாவலின் சிறப்பு – நாவலின் அரசியலின் முக்கிய பகுதி எனக் கூறலாம்.
இதேவேளை, கார்க்கி போன்றோர் இதேபோன்று, மூன்று தலைமுறைகள் சம்பந்தமான ஒரு நாவலை படைத்ததும் அதில் ஒரு வர்த்தக் குடும்பத்தின் தோற்றுவாயையும், அதன் மூன்று தலைமுறையினரையும் படம்பிடித்து காட்டுவதும், டால்ஸ்டாய் அத்தகைய ஒரு கருவை மிகுந்து சிலாகித்ததும் உண்டு என்பதும் பதிவு.
ஆனால், கார்க்கி, ஜெயமோகனைப்போல், தன் நாவலை ஒரு சாதீயக் கண்ணோட்டத்தில் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், ஒரு மேட்டுக்குடி கண்ணோட்டத்தில் படைத்தாரில்லை. பகைவனை வர்ணிக்கும்போது கூட, மேல் குறித்த மனவக்கிரம் கார்க்கி அல்லது டால்ஸ்டாய் போன்ற கலைஞர்களிடம் காணப்படவில்லை என்பது, இவ்விருபாலருக்கும், இடையே தென்படும் நிரந்தர வித்தியாசமாகின்றது.