டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி (1) - ஜோதிகுமார் -
- டால்ல்ஸ்டாயும் மாக்சிம் கார்க்கியும் -
இருபதாவது முறை வாசிக்கும் போதே, இக்குறுகிய வரிகளில் மறைந்து கிடக்கும் அழுத்தங்களை ஓரளவில் என் மனதளவில் கிரகிக்க கூடியதாக இருந்தது. இத்தனை இரத்தின சுருக்கமாக கூறுதல் கடினம். ‘கடுகைத் துளைத்து’ என்று கூறுமாப்போல், கிட்டத்தட்ட, இங்கேயும் அதே பண்பலைதான். ஆனால், இது முற்றிலும் வேறு ஒரு தளத்தில் செயற்படுவதாய் இருக்கின்றது எனலாம்.
இறைவன் பொறுத்து டால்ல்ஸ்டாய் கொண்டுள்ள அபிப்ராயங்கள் விசித்திரமானது எனலாம். தொளதொளத்து போன தன் சட்டை பைக்குள் கையை விட்டு, ஒரு டயரியின் நைந்த பகுதியை கொடுத்துவிட்டு: “இறைவன்…அதுவே எனது ஆர்வம்” என கார்க்கி திகைத்து போகும்படி வரையறுக்கும் இவரது வார்த்தைகள் எம்மையும் ஒருகணம் அதிர செய்கின்றது. என்ன இது? ஆசையா? அல்லது ஆர்வமா?? அல்லது மனிதகுலத்தின் மேலேயே தன் ஒட்டுமொத்த மரியாதையையும் வைத்ததன் விளைவா?.
ஆயிரம் இலக்கியங்களை முகர்ந்து பார்த்ததன் விளைவும், பின் இங்குள்ள தத்துவ செல்வங்களை அனைத்தையும் ஒன்று திரட்டி, அவற்றுடன் ஆயிரம் மனிதர்கள் நடந்த காலடி சுவடுகளையும் உள்ளெடுத்து, தன் கருத்தை சிருஷ்டித்ததன் விளைவா இவரது வார்த்தைகள் என்ற ஒரு கேள்வி எம்மை திக்குமுக்காட செய்கின்றது. மகாபாரதத்தின் தோற்றுவாயை அல்லது இராமாயணத்தின் தோற்றுவாயை உள்ளடக்க கூடிய இக்கேள்விகள் தனித்தன்மை வாய்ந்தவை என்பது தெளிவு.
இதன் தொகுப்பு ஒருவேளை இவரது கடவுளாக பரிணமித்திருக்கலாம். இது கார்க்கியின் அவதானிப்பு. மறுபுறத்தில் இது பாரதியின் கடவுளுடனும் பயணிக்கலாம் - காலங்களை கடந்த நிலையில்.
கார்க்கிக்கு கைகொடுத்த பல விடயங்கள் பாரதிக்கு கிட்டாதவையாக இருந்திருக்கலாம். ஆனால் அவை உழைப்பின் பிரம்மாண்டத்தையும், ரஷ்யாவின் புதிய விழிப்பினையும், அந்னியமாக்காது ‘கடைக்கண்’ வைத்த நிலையினையே பாரதிக்கு அளித்திருக்கின்றது. அவனது கடவுளும், சிறுமை காட்டாது உழைப்பை உள்ளடக்கி கொள்கின்றது. இதுவே, ஒருவேளை பாரதிக்கும் டால்ஸ்டாயிக்கும் இருந்த ஒற்றுமை என அபிப்பிராயப்படலாம். இது பொறுத்து டால்ஸ்டாயின் குறிப்புகளை மேலும் புரட்டி பார்த்தலும் தகும்.