''கஸ்டப்படனும்னு தலவிதி'' - யாழ்ப்பாண முஸ்லிம்களின் கண்ணீர் பேசுகிறது! கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள்!
‘கஸ்டப்படனும்னு தலவிதி. எங்களுக்கு விடிவு எப்பவரும்னு நாள் எண்ணிக்கிட்டிருக்கம் ‘எல்லாம் செய்றம்.. எல்லாம் செய்றம் என்று சொல்றவங்க.. ஒன்னும் செய்றதாக் காணல எனும் வார்த்தைகள் யாழ் முஸ்லிம்கள் இவ்வளவு காலமும் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தின. புத்தளத்தில் இருந்து வந்து எட்டு மாதமாகியும் எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில் வாழ்கின்றனர் இம்மக்கள். அவர்களது குரலில் வாழ்வின் விரக்தியும் ஏமாற்றமும் சேர்ந்தே ஒலிக்கின்றது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர்களுக்கு அகதி நிலைதான். ஒருவித உதவியும் இல்லாமல் வெறும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை சந்தித்தபோது அறிந்து கொண்டேன். ‘நம்பிக்கை வீணாயிருமோன்னு பயமாருக்கு என கூறிய நடுத்தர வயதுப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணீரும் ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தன.