இந்தியா: ஆட்சியில் இருந்தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறியது திமுக!
குதிரையைக் குளத்துக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். ஆனால் குதிரையைத் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது. அது தானாகத் தண்ணீர் குடித்தால்தான் (Well, you can lead a horse to water, but you cannot make him drink) உண்டு. இது ஒரு ஆங்கிலப் பழமொழி. ஒருவர் தனது மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் செய்வார். எடுத்துக் காட்டாக ஒருவருக்கு விமானப் பயணத்துக்குரிய சீட்டை வாங்கி அவரை விமானநிலையத்துக்கு உரிய நேரத்தில் அழைத்துச் சென்று அவரை விமானத்தில் ஏற்ற ஒருவர் முயற்சி செய்யலாம். ஆனால் அந்த ஆள் விமானத்தில் ஏற மறுத்தால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. சென்ற ஆண்டு அய்.நா. மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா முதலில் எதிர்த்தது. "தனியொரு உறுப்பு நாடொன்றைக் குறிவைத்துக் கொண்டுவரப்படும் தீர்மானம் எதனையும் இந்தியா எதிர்க்கும். காரணம் அய்.நா. மனித உரிமை பேரவையின் ஆக்க பூர்வமான பேச்சு வார்த்தையையும் கூட்டு அணுகுமுறையையும் அது பலவீனப்படுத்தும் (India said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC.) என இந்தியா வாதிட்டது.