எழுநா குழுமம் தன் முகநூற் பதிவில் ஊடகவியலாளரும், முன்னாட் போராளியும், வவுனியா பிரசைகள் குழுவின் ஊடகப்பேச்சாளரும்,, எழுநா ஆவணப்பட வரிசைப் பொறுப்பாளருமான இசைப்பிரியன் என்று அறியப்பட்ட அ.சேகுவேராவின் மறைவுச் செய்தியினை அறிவித்திருந்தது. ஆழ்ந்த இரங்கல்.
அ.சேகுவேரா என்ற பெயரைக்கேட்டதும் உடனடியாக நினைவுக்கு வந்தது பதிவுகள் இணைய இதழுக்கு இவர் அனுப்பிய கவிதைகள், கட்டுரைகள்தாம். wetamizhar@live.in என்னும் மின்னஞ்சலிலிருந்து தன் படைப்புகளை அனுப்புவார். சில வேளைகளில் yathumaki@Live.com என்னும் மின்னஞ்சலிலிருந்தும் அனுப்புவார். அவரது கவிதைகள், கட்டுரைகள் சமுதாயப் பிரக்ஞை மிக்க அவரது ஆளுமையை வெளிப்படுத்தின. அதனால் அவற்றைப் பதிவுகள் பிரசுரித்தது.
படைப்புகளூடு மட்டுமே எனக்கு இவருடனான தொடர்பிருந்தது. நேரடியாக நான் அறிந்திருக்கவில்லை. எழுநா குழுமத்தின் இவரது மறைவுச் செய்தி பற்றிய பதிவே எனக்கு இவரைப்பற்றிய நினைவுகள் மீள் ஏற்படுத்தின. இவரது நினைவாக இவர் அனுப்பிப் பதிவுகளில் வெளியான கட்டுரைகளை,கவிதைகளை மீளப்பதிவிடுகின்றேன். ஒரு வகையில் இவை ஆவணப்பதிவுகளாகவும் இருக்கும் என்பதால் முக்கியத்துவம் மிக்கவை.
எழுத்தாளர் அ.சேகுவேராவின் பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகள்:
1. 08 மார்ச் 2014 - “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” - இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்! - அ.ஈழம் சேகுவேரா (இளம் ஊடகவியலாளர்-இலங்கை.) -
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 21வது கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன், சூடான வாதப்பிரதிவாதங்களுடன் ஆரம்பித்திருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை, அதிருப்தியை சர்வதேச நாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள்-ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா அரசால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியலுரிமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டுள்ளமை தொடர்பாகவும், காத்திரமான அனைத்துல விசாரணைகள் நடத்தப்பட்டு, இலங்கை ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் சகாக்கள் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உயிர் வலிக்கும் ரணங்களோடும், கணங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தரப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்களுக்கு இலங்கையைச்சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அ.ஈழம் சேகுவேரா மனு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.” எனும் இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, காலப்பதிவாக அதன் முழு விவரமும் இங்கு பிரசுரமாகிறது. குறித்த மனு தொடர்பான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை wetamizhar@live.in எனும் மின்னஞ்சல் முகவரியூடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
மாண்பு மிகு அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்களுக்கு. வணக்கம்! (இன்றே செய்வோம். நன்றே வெல்வோம்.) முடிவில்லாப்புள்ளியாக நீளுகின்ற உலக பயங்கரவாதத்தின், தீவிரவாதத்தின் ஆணிவேரை அசைத்துவிட்ட மகிழ்ச்சியில் நீங்களும், இழக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுவிட்ட மகிழ்ச்சியில் உலக மக்களும் திளைத்திருக்கிறார்கள். இது உலக பயங்கரவாதத்துக்கு விழுந்திருக்கும் பலத்த அடி! உலக சமாதானத்துக்கான திறவுகோல்! நிச்சயம் ஒசாமா கொல்லப்பட வேண்டியவரே. தமது உரிமைக்காக, நிலத்துக்காக, இனத்துக்காக, இருப்புக்காக நியாயமாக போராடிய பல தேசிய இன விடுதலைப்போராட்ட அமைப்புகளையே இல்லாதொழிக்கும் அளவுக்கு சர்வதேச அரசியல் ஒழுங்கை புரட்டிப்போட்ட ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதில் நாம் எல்லோரும் உறுதியாகவிருந்தோம். ஐக்கியப்பட்டிருந்தோம். நீங்கள் கூறியது போன்று “இது மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு தான்!” “வாழ்வின் முக்கியமான தருணம் தான்!”
தாக்குதல் வெற்றிக்குப்பின்னர் உலக மக்களுக்கு நீங்கள் உணர்வுபூர்வமாக ஆற்றிய உரையை ஊடகங்கள் மூலம் கேட்கவும், பார்க்கவும், வாசிக்கவும் முடிந்தது. “ஒரு ஒபாமா வந்து தான் ஒரு ஒசாமாவை முடிக்க முடிந்தது.” என்கிற கதை வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது. அந்த மகிழ்ச்சியோடு இந்த மடலை உங்களுக்கு உரிமையுடன் வரைகிறேன். இந்த உலகில் மிகவும் வேலைப்பளுவுள்ள முதல் மனிதர் என்றால், எனது சுட்டு விரல் முதலில் உங்களை நோக்கித்தான் நீளும். “மாற்றங்களும் திருப்பங்களும் தான் இந்த உலகை இயக்குகின்றன.” அந்த மாற்றங்களையும் திருப்பங்களையும் நீங்கள் கொடுத்துக்கொண்டிருப்பதால், இன்றைய உலக ஒழுங்கை நிச்சயிப்பதால் நிச்சயம் நான் உங்களைத்தான் சொல்வேன், உலகின் வேலைப்பளுவுள்ள முதல் மனிதர் என்று! இந்த மடலினுடைய விடையப்பரப்பு நீண்டிருக்கலாம். இருந்தும், இந்துமா சமுத்திரத்தின் இலங்கைத்தீவிலே அழிந்து கொண்டிருக்கின்ற ஒரு இனத்தினுடைய வாழ்வுரிமை பிரச்சினை பற்றி, அந்த இனத்தினுடைய இருப்பு பற்றி, அத்தியாவசியத்தேவை பற்றி இங்கு நாம் பேசுவதால், கூடிய கவனம் எடுத்து இந்த மடலை நீங்கள் வாசிப்பீர்கள். எமது அரசியல் அபிலாசைகளை புரிந்து கொள்வீர்கள். எமது உணர்வுகளுக்கும் உரிமைக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நாம் பெரிதும் நம்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம்.
குறித்த உரையின் தொடக்கத்தில் நீங்கள் மிகவும் அழுத்தமாக பத்து வருட கால வலி பற்றி, உலக சரித்திரத்தில் மிகவும் மோசமானதும், சோகமானதுமான சம்பவம் பற்றி பேசியிருந்தீர்கள். பத்து வருடங்கள் அல்ல, சுமார் அறுபது வருட காலமாக நாம் எமது உரிமைக்காக, எமது நிலத்துக்காக, எமது விடுதலைக்காக, எமது இருப்புக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். முப்பது வருடங்களாக உண்ணாநிலை, உறங்காநிலை, மனித சங்கிலி என்று சாத்வீக போராட்டங்களை நடத்திய நாம், அந்த முயற்சியும் முடக்கப்படவே ஆயுத வழியில் மிகுதி முப்பது வருடங்கள் போராடி தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.
நிச்சயம் “தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.” என்றே சொல்வோம். (தமது பிராந்திய வல்லரசு போட்டிப்பலப்பரீட்சைக்காக, பலப்பிரயோகத்துக்காக, சுயநலத்துக்காக ரஸ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டுச்சேர்ந்து போர் செய்து, ஒரு இனத்தினுடைய வாழ்வுரிமை போராட்டத்தை, விடுதலைப்போராட்டத்தை, உரிமைப்போராட்டத்தை சிதைத்து இறுதியில் ஒரு இனப்படுகொலை இங்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.) தொன்று தொட்டு தமது பூர்வீக நிலபுலங்களில் உழுது, உண்டு, உறங்கி, உழைத்து, மகிழ்ந்து, வாழ்ந்திருந்த எமது மக்களை விரட்டியடித்து, நிலங்களை ஆக்கிரமித்து, அபகரித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழ் இனப்பரம்பல் விகிதத்தை சீர்குலைத்து எமது மக்களை ஒருவேளை உணவுக்கும், குடி தண்ணீருக்கும் தம்மிடம் கையேந்த வைத்துள்ள இங்குள்ள சிங்கள ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக, தமிழின அழிப்பு சுத்திகரிப்பைச்செய்துகொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு எதிராக நாம் போராடியது தப்பா? குரல் உயர்த்தியது தப்பா? இத்தகைய ஊழ்வினையை தந்தவர்களது, இழிசெயலை செய்தவர்களது இரத்தக்கறை தோய்ந்த கைகளை இறுகப்பற்றி பூச்செண்டுகளையும், பொன்னாடைகளையும் பரிசளித்து மகிழவா முடியும்?
உங்கள் உரையில் நியூயோர்க் இரட்டைக்கோபுர (உலக வர்த்தக மையம்) தாக்குதலைப்போன்று மோசமான காட்சிகளை உலகில் வேறு எங்கும் காண முடியாது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இல்லை இல்லை, இல்லவே இல்லை. அவற்றை விடவும் மிகவும் மோசமான சம்பவங்களை, காட்சிகளை ஈழத்தில் நீங்கள் பார்க்க முடியும். கருகிக்கிடக்கும் விளைநிலம், தலை இழந்து நிற்கும் வனாந்தரம், நாற்றுக்குழி பறிக்கிற இடமெல்லாம் எட்டிப்பார்க்கும் மனித என்புகள்-மண்டையோடுகள், இரத்தக்கறை தோய்ந்து கிடக்கிற பள்ளிச்சீருடைகள், கூரைகளே இல்லாத பள்ளிகள், விக்கிரகங்களே இல்லாத கோவில்கள்-தேவாலயங்கள், எந்த நேரமும் மரண ஓலமும் பிணவாடையும் சுமந்து வரும் காற்று, இன்றோ நாளையோ நாம் நிச்சயம் கடித்துக்குதறப்பட்டு வேட்டையாடப்பட்டு விடுவோம் என்று பீதியுடன் பிதுங்கும் விழிகள்-எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் மனிதர்கள், அவையங்களே இல்லாத உடல்கள், வீதியெல்லாம் பிச்சை கேட்டு நிற்கும் சிறுவர்கள்-பெண்கள்!
இப்படி ஏன் இந்த மானுட பிறப்பு? என்று சலித்துக்கொள்கிற அளவுக்கு மிகவும் அபத்தமான, அருவருப்பான காட்சிகளை, நெஞ்சைப்பிழிந்தெடுக்கின்ற, உருக்குகின்ற துயரச்சம்பவங்களை ஈழத்தில் நீங்கள் கண்களில் இரத்தம் கொட்ட பார்க்க முடியும். தமிழ் மக்களின் மீட்பர்களாக, விடுதலை உணர்வின் குறியீடாக செயல்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்திய போது, மக்கள் நாம் கிளர்ந்தெழுந்து எமது உரிமைக்காக, எமது இருப்புக்காக, எமது விடுதலைக்காக, எமது நிலத்துக்காக போராடிப்பார்த்தோம். அப்போதும் மக்கள் நம் எழுச்சிக்கு புலிச்சாயம் பூசி வேடிக்கை பார்த்த இந்த உலகம், இப்போது மீள முடியாத சிக்கலுக்குள் எமது மக்களை தள்ளியுள்ளது.
உங்கள் உரையில், யுத்தத்தின் விலை என்ன? என்பது பத்து வருடங்களுக்கு பின்னரான போராட்டங்கள், சேவைகள், தியாகங்களின் அடிப்படையில் நன்றாக தெரியும் என்று கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் சுமார் அறுபது வருட காலத்துக்கும் மேலான எமது போராட்டங்கள், சேவைகள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் என்பனவற்றின் விலை பற்றி, வலி பற்றி உங்கள் அபிப்பிராயம் தான் என்ன?
“முட்கள் நிறைந்த பாதைகளில் எங்கள் கால்கள் பயணித்திருக்கின்றன, பயணித்துக்கொண்டிருக்கின்றன. எங்கள் பாதங்களுக்கு நீங்கள் மருந்திடாவிட்டாலும், குறைந்தபட்சம் அதன் வலிகளையாவது உணரலாமல்லவா?”
அமெரிக்க மக்கள் எப்படி மோதலை விரும்பித்தெரிவு செய்யவில்லையோ? அதேபோன்றுதான் எமது மக்களும் யுத்த விரும்பிகள் அல்லர். போர்ப்பிரியர்கள் கிடையவே கிடையாது. விரும்பியோ விரும்பாமலோ போர் எங்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டது. எங்கள் உறவுகளை கொன்று தீர்த்தது. இருள் சூழ்ந்த நாளும் போர் சூழ்ந்த வாழ்வும் எமக்கு மட்டும் எழுதப்படாத விதியாயிற்று! ஆலய மணியோசையும் பறவைகளின் இனிய கீதமும் கேட்டு புலர வேண்டிய “எமக்கான பொழுதுகள்” கந்தக வெடியோசையும் வேட்டுச்சத்தங்களும் கேட்டே புலர வேண்டியதாயிற்று. உலகில் அறநெறி, ஆயுத நெறி என்று இருவேறு போராட்ட வழிமுறைகள்தான் இருப்பதாக நாம் அறிந்திருக்கிறோம். இந்த இரண்டு உத்திகளை கையாண்டும் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். எமக்கு நீதி தரப்படவில்லை. நாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். நோகடிக்கப்பட்டிருக்கிறோம். ஏமாற்றப்பட்டிருக்கிறோம். இந்த இரண்டு வழிமுறைகளை விடவும் வேறு ஒன்று இருந்தால் சொல்லுங்கள் அதையும் முயற்சித்துப்பார்த்து விடுகிறோம்.
“உலக மக்கள் தான் மக்களா, தமிழீழ மக்கள் என்ன கற்களா?” எனக்கெஞ்சி நின்றோம். இரந்து நின்றோம். உங்கள் யார் மனசும் இலகவில்லையே? இது ஏன்? எமக்கு ஒரு நீதி உலகத்தாருக்கு ஒரு நீதி என்பது நெஞ்சில் முள்ளே(ற்)றி வலிக்கிறது.
“உயிர் வலிக்கு நிறப்பிரிகை ஏது?
மனிதநேயத்துக்கு ஜாதி மதமென்ன?”
உங்களுக்கு உயிர் வலி பற்றி நாம் போதிக்க வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது. ஏனெனில் நீங்கள் உங்கள் சிறுபராயம் முதல் வலியில் வளர்ந்தவர். மொத்தத்தில் “வலிகள் தந்த வரம் அல்லவா நீங்கள்.” உங்கள் பள்ளிக்காலத்தில் சக மாணவர்களின் கிண்டல்கள், கேலிகள், கூச்சல்கள், வதைகள் என்று பலதையும் சகித்துக்கொண்டு வாழ்ந்தவர்-வளர்ந்தவர். அவர்களது நடவடிக்கைகள் அனைத்துமே நிறவெறி சார்ந்தும், இனத்துவேசம் சார்ந்துமே இருந்தன. உங்கள் சுயசரிதை படித்து நான் கண் கலங்கியதுண்டு. “அட! அந்தச்சிறுவனா இன்றைக்கு இந்தளவு வைராக்கியம் பெற்றான்.” என்று பிரமித்ததும் உண்டு. அன்றைய வெற்றுக்கூச்சல்களை நீங்கள் வெற்றிக்கோசங்களாக மாற்றியதுக்கும் அப்பால், ஒரு கறுப்பினத்தவரை உலகத்தினுடைய அதிபராக தூக்கி வைத்து அழகு பார்க்கிற அளவுக்கு வெள்ளையர்களிடத்தே மனநிலை மாறியிருக்கிறது என்பதே இங்கு மிகப்பெரிய விடையம்!
ஆனால், எமது நாட்டின் நிலைமையோ வேறு. நாட்டில் சகோதரத்துவம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு குறிப்பிட்ட சகோதரர்களிடம்(மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸ) நாடு வசமாக சிக்கித்தவிக்கிறது என்பது மட்டுமே உண்மை! (ஆதாரம்:- சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு அறிக்கை - 2011.09.13)
காதைப்பிளக்கும் (இ)யந்திர சத்தம் ஒருபுறம்,
உரசிச்செல்லும் வாகன உஸ்ணம் மறுபுறம்,
சுட்டெரிக்கும் காபனீரொட்சைட் வாயுவோடு…
குமட்டல், வாந்தி, தலைவலி, உடல் அசதியென்று
தறப்பாள் கொட்டகைக்குள் நாளும் கழிகிறது
தமிழரின் வாழ்வு சாலைகளின் இருமருங்கும். (சாலைகளின் இருமருங்கும் நாளும் வானுயர எழும் விளம்பர பதாதைகள் அளவுக்கு கூட எமது மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை.)
கொட்டும் மழை, பனி, சுட்டெரிக்கும் வெயில் நடுவே, கொட்டிக்கிடக்கிற துன்பங்களோடும், வாய்க்காலாய் ஓடும் வியர்வையோடும் பசித்திருந்து, விழித்திருந்து, உழைத்தும் இன்னும் உலை ஏறவில்லை. “கவனத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வலிகளில் எழுப்பப்பட்ட போர் வெற்றிச்சின்னங்களைத்தான் திரும்புகிற இடமெல்லாம் பார்க்க முடிகிறது.”
உலகத்தினுடைய மொத்த மனச்சாட்சியையும் உலுக்கிப்போட்டிருக்கும் இங்குள்ள மனித பேரவலத்துக்கெல்லாம் கொடுக்க வேண்டிய அக்கறைகள், மீட்பு முயற்சிகளை விடுத்துவிட்டு, சுற்றுலா நோக்கத்தோடுதான் சிங்கள பெரும்பான்மை சமூகத்தவர் தமிழர் பகுதிக்கு இப்போதும் வந்து போகிறார்கள். காட்சிப்பொருள்களாக தமிழர் நம்மை வேடிக்கைப்பார்க்கிறார்கள். “பக்கத்து வீட்டில் இழவு விழுகின்ற போது, உங்கள் வீட்டில் - எமது வீட்டில் தனியொரு மனிதனின் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழப்பது தான் உலக வழக்கம்.” ஆனால் இங்கோ நரபலி எடுக்கப்பட்ட தமிழரின் இரத்தத்தில், கண்ணீரில் யுத்த வெற்றி விழா கொண்டாடி மகிழ்கின்றார்கள். களியாட்டங்களையும், கேளிக்கை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள்.
யுத்தம் சுடுகாடு ஆக்கிய இந்த ஊர்களுக்கும், யுத்தம் கொன்று தின்ற/சப்பித்துப்பிய இந்த மண்ணுக்குரிய மனிதர்களுக்கும் நீங்கள் செய்வதற்கு என்று ஏராளம் விடையங்கள் இருக்கின்றன. எத்தினையோ காழ்ப்புணர்ச்சிகள், புறக்கணிப்புகள், பழிவாங்கல்கள், இனவாதங்கள், இனக்குரோதங்கள், ஏய்த்துப்புழைப்புகள், ஏறி மிதிப்புகள், அடக்குமுறைகள், நில-காணி அபகரிப்புகள், தொழில் மறுப்புகள், வறுமை, வன்முறை, இன ஒதுக்கல், அகதி நிலை, அகதிகள் மீளக்குடியேற்றத்தில் குளறுபடி, மறுவாழ்வு இன்மை, புனர்வாழ்வு புஸ்வாணம் என்று பலதும் பத்தும் இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாம் “என்ன செய்யப்போகிறோம் இதற்காக?” என்று எமது கையறுநிலையை, இயலாமையை உங்களிடம் வெளிப்படுத்தி நிற்கிறோம். நீங்கள் “என்ன செய்யலாம் இதற்காக!” என்று மட்டும் ஒருமுறை சிந்தியுங்கள். ஒருமுறை கேளுங்கள்! (வி.ருத்ரகுமாரனை தலைமையாகக்கொண்டியங்கும் நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவை, பிரித்தானியா தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு, அவுஸ்திரேலிய தமிழர்கள் ஒருங்கிணைப்புக்குழு, இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம், தமிழகத்தின் நாம் தமிழர் இயக்கம், மே17 இயக்கம், புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மற்றும் மாணவர் அமைப்புகளுடனும், உலக-இந்திய தமிழின உணர்வாளர்கள், மனிதநேய செயல்பாட்டாளர்களுடனும் பேசுங்கள்) அதுபோதும். சுமார் அறுபது வருட காலத்துக்கும் மேலாக இந்த உலகத்தில் எந்த மக்களினுடைய பிரச்சினை தீர்க்க முடியாததொன்றாய் இருக்கிறதோ, எது மிகவும் சிக்கலான, காரசாரமான விடையமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறதோ அதற்கெல்லாம் தீர்வு கிடைத்ததாகிவிடும்.
அடிமைகளாகவும், அவமானத்தின் சாட்சிகளாகவும் வாழ்ந்து வந்த கறுப்பின மக்களை சுயமரியாதையோடு நிமிர்ந்து நிற்க வைத்த உங்கள் வரலாற்று தந்தை, வாழ்க்கை வழிகாட்டி, உரிமைப்போராளி “மார்ட்டின் லூதர் கிங்” அவர்களை பின் தொடர்ந்து வரலாற்றில் மீண்டும் ஒருமுறை சமூக புரட்சி செய்யுங்கள். அதிகார துஸ்பிரயோகம், குடும்ப ஆட்சி, அடக்குமுறை, ஒடுக்குமுறை, முதலாளித்துவம் என்கிற நாற்றம் வீசும் சாக்கடைக்குள் அமிழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும், அறியாமை எனும் மடமைக்குள் மூழ்கி இறுகக்கட்டுண்டு கிடப்பவரால் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகத்தவரும் நல்லதொரு அறுவடைக்காக காத்திருக்கிறார்கள். ஆதலால் மீண்டும் ஒருமுறை சமூக புரட்சி செய்யுங்கள். மண் பயனுறட்டும்!
“மானுடராய் பிறத்தலுக்கு நிச்சயம் மரணம் உண்டு. இந்த மரணங்கள் இப்படியெல்லாம் நிகழுமெனில், மானுட பிறவிக்கு மதிப்பு தான் என்ன?” என்று வாய்விட்டு கதறுகின்ற அளவுக்கு, மனிதாபிமானம் கொண்ட எவராலும் சகித்துக்கொள்ள முடியாத படுபயங்கரமான, வக்கிரமான, கொடூரமான காட்சிகளோடு மனித குலத்துக்கு எதிராக நடைபெற்று முடிந்திருக்கிறது வன்னி மீதான சிறிலங்கா அரச படைகளின் நில ஆக்கிரமிப்பு போர்! அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் சிறிலங்கா அரசால் மீறப்பட்டுள்ளன.
மனிதாபிமானப்போர் என்று சொல்லி ஒரு இனப்படுகொலை இங்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. பாரியதொரு போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்கிறது. இறுதி யுத்த காலத்தில் மட்டும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். தாய் முலைவாசம் அறிய முன்னே பல ஆயிரம் குழந்தைகள் உயிர் குடிக்கப்பட்டுள்ளனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் சிறுவர் சிறுமியர் தாய் தந்தையர் இன்றி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் குறுகிய இரண்டரை கிலோமீற்றர் நிலப்பிரதேசத்தை யுத்த பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து ஐந்து மாவட்டங்களைச்சேர்ந்த சுமார் ஐந்தரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒருங்கச்செய்து, செறிவாக மக்கள் தஞ்சமடைந்திருந்த அந்த பகுதிக்குள் ஈரானிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட, தடைசெய்யப்பட்ட இரசாயன(பொஸ்பரஸ்) குண்டுகளையும், எரி அமிலம் மற்றும் நச்சு/விசவாயு குண்டுகளையும் வீசியுள்ளது. பல்குழல் பீரங்கி தாக்குதல்கள் மற்றும் தானியங்கி இயந்திர துப்பாக்கிச்சூடுகளையும் நடத்தியதுடன், விமான குண்டு வீச்சுத்தாக்குதல்களையும் செய்துள்ளது. சிங்கள அரசின் இத்தகைய கொடூரமான வெஞ்சினத் தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக நில அகழிகளை அமைத்து அதற்குள் பதுங்கியிருந்த மக்கள் மீதும் இராணுவ டாங்கிகளையும், கவச வாகனங்களையும் ஏற்றி மிதித்து படுகொலை செய்துள்ளது. நெருக்கடி நிறைந்த அந்த போர் வலயத்துக்குள் உணவுத்தட்டுப்பாட்டால் ஏற்பட்டிருந்த பசி, பட்டினிச்சாவுகளை ஓரளவுக்கேனும் தவிர்ப்பதற்காக, சர்வதேச கிளைகளைக்கொண்டுள்ள உள்ளுர் தன்னார்வ தொண்டு அமைப்பான தமிழர் புனர்வாழ்வு கழகம் அமைத்திருந்த தற்காலிக அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் மீதும், கஞ்சி வழங்கும் கொட்டகைகள் மீதும், அவசர நிவாரண மையங்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், அவசர கால முதலுதவி சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவ-சுகாதார நிலையங்கள் மீதும் கொத்துக்குண்டு மற்றும் எறிகணை தாக்குதல்களையும், வான்வழி குண்டுத்தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், நோயாளர்கள் கொலைகளும், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களும் தாராளமாக இடம்பெற்றுள்ளன. (ஆதாரம்:- செஞ்சிலுவை சர்வதேசக்குழு 2011 ஆகஸ்ட் 10 ஜெனீவாவில் விடுத்துள்ள “மருத்துவ உதவி ஆபத்தில்” எனும் அறிக்கை.) யுத்த முடிபுக்குப்பின்னர் சர்வதேச அனுசரணையுடன் வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய வந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் போராளிகள் சர்வதேச போர் சாசன விதிமுறைகளுக்கு முரணான வகையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட/சரணடைந்த ஊடகப்பணியாளர் இசைப்பிரியா உள்ளிட்ட பல பெண் போராளிகள் ஆடை களைந்து நிர்வாணம் ஆக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆண் போராளிகளும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். (பெண்களின் மார்பகங்களை அறுத்து ஆண்களின் வாய்களுக்குள்ளும், ஆண்களின் ஆண் குறிகளை அறுத்து பெண்களின் பிறப்புறுப்புகளுக்குள்ளும் திணித்தார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிறுகளை கத்திகளால் குத்திக்கிழித்தார்கள். குழந்தைகளை வானை நோக்கி வீசியெறிந்து வாள்களால் வெட்டி வீசினார்கள். முதியவர்களை இராணுவ பாதணிகளால் ஏறிமிதித்தார்கள். யுத்த வெற்றியை அரச படைகள் அண்மித்துக்கொண்டிருக்கும் வேளையில், “முள்ளிவாய்க்கால் எனும் ஒரு குறுகிய சிறு நிலப்பரப்புக்குள் சிக்கிப்போயுள்ள ஆண்களின் இரத்தமெல்லாம் நந்திக்கடலில் கலக்கட்டும். பெண்களெல்லாம் படையினருக்கு இரையாகட்டும்” என்ற சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் கட்டளையையடுத்து (போர் வெற்றிச்செருக்கு வார்த்தைகளையடுத்து) இரத்தம், கொலைகள், மரணங்கள் என்று பார்த்துப்பார்த்து மனித உணர்வுகள் மரத்துப்போயிருந்த (மனித உணர்வுகளை இழந்து போயிருந்த) படையினர் இரத்தக்காட்டேரிகள் போன்று செயற்பட்டனர்.)
நலன்புரி நிலையம் என்ற போர்வையில் அமைக்கப்பட்ட திறந்த வெளி சிறைச்சாலைகளுக்குள் அடைக்கப்பட்ட பல இளம் பெண்களும், விதவைத்தாய்மாரும் வன்மப்படுத்தலுக்கும், வன்புணர்ச்சிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் சூனியமயமாகியுள்ளது. முழுவதுமாக இராணுவ மயமாக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் எஞ்சியுள்ளோர் பாலியல் கொடுமைகள், துன்புறுத்தல்கள் என்று சமூக அவலங்களை சுமந்தவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்:- இந்தியாவின் “ஹெட்லைன்ஸ் ருடே” தொலைக்காட்சியின் “கண் கண்ட சாட்சிகள்”(வாக்குமூலங்கள்) செய்தித்தொகுப்பு.) கந்தக வெடி அதிர்வில் எங்கள் தாய்குலத்துக்கு நாசி புரை தள்ளி மடி கிழிஞ்சி குறைப்பிரசவம் நிகழ்ந்த குழந்தைகளின் எதிர்காலம் தான் என்னாவது?
1956ம் (150 தமிழர்கள் படுகொலை),
1958ம், 1961ம் (300 க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை),
1974ம் (யாழ்ப்பாணம் உலக தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை),
1977ம் (500 க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை),
1980ம், 1981ம் (யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரியூட்டபட்டமை)
வருட இனக்கலவரங்கள்,
1983ம் வருட ஜீலை இனப்படுகொலைகள் (3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர், 25,000 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டனர்-அங்கவீனமாக்கப்பட்டனர், 150,000 தமிழர்கள் வீடற்றவர்களாக்கப்பட்டனர்) இந்த இனப்படுகொலை (கறுப்பு ஜீலை) தொடர்பாக பி.பி.சி ஊடக நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் உள்ளது.
ஒதியமலை படுகொலை (1984.12.01)
குமுழமுனை படுகொலை (1984.12.02)
மன்னார் முருங்கன் படுகொலை (1984.12.04)
அரியாலை கிராம படுகொலை (1985.04.29)
வல்வை நூலகப்படுகொலை (1985.05.09)
குமுதினி படகுப்படுகொலை (1985.05.15)
மண்டைதீவு மீனவர் படுகொலை (1986)
கொக்கட்டிச்சோலை படுகொலை (1987.01.28)
யாழ் வல்வைவெளி படுகொலை (1989.01.19)
வீரமுனை ஆலயம் மற்றும் பாடசாலை படுகொலை (1990.08.12)
குருநகர் புனித யாகப்பர் தேவாலய படுகொலை (1993.11.13)
சென்பீட்டர் தேவாலய படுகொலை (1995.10.30)
முல்லைத்தீவு சுதந்திரபுரம் குடியிருப்பு படுகொலை (1998)
மடு தேவாலய படுகொலை (1999.11.20)
திருகோணமலை மாணவர் படுகொலை (2006.01.02)
மன்னார் வங்காலைப்படுகொலை (2006.06.10)
செஞ்சோலை சிறுவர் இல்லப்படுகொலை (2006.08.14)
அல்லைப்பிட்டி படுகொலை (2006.ஓகஸ்ட்)
தட்சணாமருதமடு மாணவர் படுகொலை (2008.01.29)
ஐயன்கண்குளம் மாணவர் படுகொலை (2008.09.26)
அனலைதீவு படுகொலை,
மட்டக்களப்பு வவுணதீவு படுகொலை,
புதுக்குடியிருப்பு மந்துவில் பொதுச்சந்தை படுகொலை,
இன்னும் பல படுகொலைகள்…
இப்படியாக, வரலாற்றில் எங்கள் வண்ணாத்து பூச்சிகளின் இறக்கைகள் ஒடிக்கப்பட்டே வந்திருக்கின்றன. அவற்றின் பல வண்ண நிறங்களுக்கு புலிச்சாயம் பூசப்பட்டே வந்திருக்கிறது. யுகொஸ்லாவியா சாம்ராஜ்ஜியத்தில் இடம்பெற்றதை ஒத்த பாரிய மனிதப்புதைகுழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (1996ம் வருட செம்மணிப்படுகொலைகள்) இந்த புதை குழிகள் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், கொலை செய்யப்பட்டவர்களில் பலர் பெண்கள் என்றும், அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறுகின்றன. இவற்றுக்கும் அப்பால் பல சர்வதேச தொண்டு நிறுவனப்பணியாளர்களும், மனிதநேய செயல்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்கள். (ஆழிப்பேரலை அனர்த்தத்துக்குப்பின்னரான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த, பிரான்ஸ்ஸைத்தளமாக கொண்டியங்கும் சர்வதேச தொண்டு அமைப்பான “அக்ஸன்பாம்” நிறுவன பணியாளர்கள் 17 பேர் 2006 ஆகஸ்ட் 4 மூதூரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையும் இதற்குள் அடங்கும்.)
நூற்றுக்கும் அதிகமான ஊடகவியலாளர்களும், ஊடகப்பணியாளர்களும், மனிதநேய பண்பாளர்களும், கல்வியாளர்களும், மதத்தலைவர்களும் ஆட்சியாளர்களாலும், ஆயுத குழுக்களாலும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். தாக்கப்பட்டுள்ளனர். அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்கள் தீ வைத்துக்கொழுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தாக்கப்பட்டுள்ளார்கள். தனிப்பெரும் சிங்களவனாக இருந்துகொண்டு தமிழரின் உரிமைப்போராட்டம் நியாயமானது, தமிழரது கோரிக்கைகள் ஏற்புடையவை என்று கூறிய சிங்கள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் அரசியல் படுகொலைகளே!
இலங்கை “ஒரே நாடு ஒரே மக்கள்” கிடையாது. “ஒரு நாடு - இரண்டு தேசிய இனங்கள்” இதுவே அடிப்படை! இலங்கை சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படுகின்ற 1948ம் வருடத்துக்குப்பின்னரும், முள்ளிவாய்க்கால் யுத்த முடிபுக்குப்பின்னரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமது தனி நாட்டுக்கான கோரிக்கையை, அதற்கான அவசியத்தை, விடுதலை உணர்வை வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்கள். தமிழ் தேசிய இனம், தாயகம், சுயநிர்ணய உரிமை எனும் இறைமையை பேணிப்பாதுகாக்கும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துங்கள். நீதியானதும் நீடித்து நிலைபெறக்கூடியதுமான அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த முனையுங்கள்.
தமிழ் மக்களின் தாயகப்பிரதேசமான வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை குறுகிய கால அவகாசத்துக்குள் சிங்கள அரசு பலவந்தமாக வெளியேற்றியது. இத்தகைய வெளியேற்றத்துக்கான காரணம் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு நிலம், காணி, மொழி, மதம், கலை, கலாசாரம், அரசியல், உடல் - உளம் ரீதியாக தொடர்ச்சியாக இழைத்து வரும் அநீதிகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு இந்த தொண்டு நிறுவனங்கள் வெளிக்கொணர்ந்தமையே.
இப்போதும் இந்த பகுதிகளுக்குள் சர்வதேச ஊடக நிறுவனங்களதும், சர்வதேச தொண்டு அமைப்புகளினதும் பிரசன்னம் சிறிலங்கா அரசால் அடாவடியாக தடைசெய்யப்பட்டுள்ளது.
தமிழர் தாயக பிரதேசத்துக்குள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவத்தினரது குடும்பங்களுக்கான குடியேற்றங்கள் என்று எமது பூர்வீக நிலங்கள், வளங்கள் அபகரிக்கப்படுகின்றன. இதனால் எமது வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
“உயர் பாதுகாப்பு வலயங்கள்” என்ற போர்வையில் பல ஆயிரம் ஹெக்டேயர் விவசாய விளை நிலங்களை, கடல் சார்ந்த பிரதேசங்களை இராணுவத்தினர் தமது பாவனைக்கு கையகப்படுத்தி வைத்துள்ளனர். இதனால் சுதந்திரமாக தொழில் செய்யும் உரிமை, தொழில் விருத்தி, தொழில் வாய்ப்புகள் தடைப்பட்டுள்ளன.
அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டங்களை அவ்வப்போது பிறப்பித்து சுதந்திரமாக நடமாடும் எமது உரிமையை சிறிலங்கா அரசு தடை செய்கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் விசக்கடி உள்ளிட்ட பாரிய உயிராபத்து அவசர நிலைமைகள் சம்பவிக்கும் போதுகூட, மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் எமது மக்கள் பல உயிரிழப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
சாதாரணமாக, முன்பள்ளி சிறார்களது கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு விழாக்களுக்கு கூட இராணுவத்தினர் தம்மை அழைக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். அழைக்க மறுத்தால் பலவந்தமாக நுழைந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தாக்குகின்றனர். கைது செய்கின்றனர்.
சில போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. சில மறைக்கப்படுகின்றன. பல அலட்சியப்படுத்தப்படுகின்றன. இவற்றையும் மீறி ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம், கிளர்ச்சி என்று மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தால், அரசால் சத்துணவூட்டி ஊக்குவிக்கப்படும் ஆயுத குழுக்களையும், காடையர்களையும், குண்டர்களையும் ஏவிவிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. இது ஒரு அரசியலுரிமை மீறலாகும்!
ஜனநாயகத்தை முறையாக கோருவோரை அடக்கும் வகையிலும், அரசை விமர்சிப்பவர்களை இம்சிக்கும் வகையிலும் பயங்கரவாத சட்டங்களை, அவசரகால சட்டங்களை இயற்றி - பயன்படுத்தி குற்றவியல் விசாரணைகள், தடுப்புக்காவல்கள் என்று குறித்த நபர்களின் ஆயுள் காலத்தை அரசு முடிபுக்கு கொண்டு வருகிறது. இல்லாவிட்டால் ஆயுள் காலத்தை குறைவடையச்செய்கிறது. மக்களின் பாதுகாப்பு நிலைமைகள், மனித உரிமைகள் போன்றவற்றில் எத்தகைய முன்னேற்றமும் கிடையாது.
போரில் மோசமாக பாதிக்கப்பட்ட (இறப்பு, அவைய இழப்பு, காயப்படுத்தப்பட்டமை, காணாமல் போகச்செய்தமை) மக்களுக்கும், அழிக்கப்பட்ட/இழக்கப்பட்ட சொத்துகளுக்கும் இழப்பீடு தருவதற்கு அரசு மறுத்து வருகிறது.
எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்தை வெளியிடும் உரிமை, அச்சிடும் உரிமை, திறனாயும் உரிமை, அறிவிக்கும் உரிமை அற்ற ஊடக ஜனநாயகமே இங்கு பெரிதும் காணப்படுகின்றது. அரசு மற்றும் பலம் பொருந்திய சக்திகளால் வலிந்து சுமத்தப்பட்ட வௌ;வேறு விதிகளின் கீழ் செயல்பட ஊடகவியலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். செய்தித்தளங்கள் - ஊடக நிறுவனங்களை முடக்குதல், செய்தி தணிக்கை என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தல், மாற்றுக்கொள்கைகளை கடைபிடிப்போர் மற்றும் ஆதரிப்போரை கொலை செய்தல், தாக்குதல், கடத்துதல், காணாமல் போகச்செய்தல், அச்சுறுத்துதல் என்று கொடுமையான அடக்குமுறைகளை, வன்முறைகளை சர்வாதிகார ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விடுவதால் பல ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர். இப்போதும் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். ஊடகத்துறையையும், ஊடகவியலாளர்களையும் குரோத உணர்வுடன் நோக்குகின்ற கலாசாரமே இலங்கையில் இப்போதும் மேலோங்கி நிற்கின்றது.
போர் முடிபுக்குப்பின்னரான அகதிகள் மீள்குடியேற்றம், போரில் கொல்லப்பட்ட, படுகாயமடைந்த, பாதிக்கப்பட்ட அகதிக்குடும்பங்களின் மறுவாழ்வு, அரசியல் கைதிகள் - போர்க்கைதிகளுக்கான பொது மன்னிப்பு – புனர்வாழ்வு என்பவற்றில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்படாமல், மக்களுக்கு இயல்பு வாழ்க்கை கிட்டாமல் சமூக அவலங்களே தொடர்கின்றன.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்துக்குப்பின்னர் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களில் “ஒரு இலட்சத்து நாற்பதாயிரம்” மக்கள் தற்போதும் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். (ஆதாரம்:- சர்வதேச செஞ்சிலுவை செம்பிறைச்சங்க அறிக்கை – 2011.)
யாழ் குடா நாட்டில் மட்டும் 12 ஆயிரத்து 459 குடும்பங்களைச்சேர்ந்த 44 ஆயிரத்து 599 மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் இன்னும் அகதிகளாகவே உள்ளனர். (ஆதாரம்:- யாழ் மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் – 2011.) சிறிலங்கா அரச படைகள் யாழ் குடா நாட்டை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 15 வருடங்கள் ஆகின்றன என்பதும், இலங்கையில் போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன என்பதும் இங்கு மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள். அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் உள்ளது. ஆனால் யுத்த முடிபுக்குப்பின்னர் மக்களோடு மக்களாக தமது குடும்பத்தினருடன் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த - சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் போராளிகள் பலர் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது? என்று பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை அரசால் மறுக்கப்பட்டுள்ளது. எதிரும் புதிருமான மௌனமும், இரகசியமும் தொடர்ந்தும் பேணப்படுகின்றன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் போர்க்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி தருவதாயின் தம்முடன் பாலுறவு வைத்துக்கொள்ளுமாறு கைதிகளின் மனைவியர் மற்றும் பெண் உறவினர்கள் சிறிலங்கா அரச படைகளால் வற்புறுத்தப்படுகின்றனர். துன்புறுத்தப்படுகின்றனர். (ஆதாரம்:- அல்ஜெசீரா தொலைக்காட்சியின் “விலை பேசப்படும் தமிழ்ப்பெண்கள்” (வாக்குமூலங்கள்) செய்தித்தொகுப்பு.)
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இடம்பெயர்ந்து பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியவர்களில் பெண்களை தலைமைத்துவமாக கொண்டியங்கும் குடும்பங்களின் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. இந்த குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய கொள்கைகளும், செயல் திட்டங்களும் அரசால் உருவாக்கப்படவில்லை. (ஆதாரம்:- மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் (IRIN) இணைய செய்தியறிக்கை.) வடக்கில் மட்டும் கணவரை இழந்த 40 ஆயிரம் (காணாமல் போகச்செய்யப்பட்டமை மற்றும் அரசாங்க தடுப்பு முகாம்களில் கணவர்மாரைக்கொண்ட பெண்களின் விவரங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.) விதவை பெண்களின் பொறுப்பின் கீழ் அவர்களது குடும்பங்கள் இயங்குகின்றன.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் சேவைகளை வழங்குவதற்கும் பொது அமைப்புகள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் செயல்படுகின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்கள், நகரசபை - பிரதேசசபை பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள் உள்ளனர். இப்படியிருக்கும் போது இராணுவத்தினர் குடும்ப விவரப்பதிவுகளையும், தகவல் திரட்டுகளையும் மேற்கொள்கின்றனர்.
தனித்திருக்கும் பெண்களின் வீடுகளுக்குள் எவ்வேளையிலும் அடாவடியாகப்புகுதல், தனிநபர் சார்ந்த குடும்ப பிரச்சினைகளில் அநாவசியமாக தலையிடுதல் என்று வடக்கு கிழக்கில் இராணுவ தலையீடுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் நூறு மீற்றர்களுக்கு ஒன்று என்கிற அடிப்படையில் இராணுவ முகாம்கள், காவலரண்கள் மற்றும் சோதனைச்சாவடிகளை நிறுவியுள்ளமை இராணுவ ஆட்சியின் - ஆதிக்கத்தின் வெளிப்பாடேயாகும்!
தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை முன்னிறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி கூட்டமைப்பூடாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் பெரு வெற்றியீட்டியிருக்கிறார்கள். இணைந்த தொடர்ச்சியான நிலப்பகுதியான வடக்கு கிழக்கை இரண்டாகப்பிரித்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை கூறுபோடுதலை அரசு செய்து வருகிறது. இது எமது கூட்டு முயற்சியையும், கூட்டு பலத்தையும், சகோதரத்துவத்தையும் சிதறடிக்கும் செயலாகும்.
தனிநபர் சார்ந்த சமய சடங்குகள் - வீட்டு வைபவங்களுக்கும், சமூக நிகழ்ச்சிகள், ஆலய திருவிழாக்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கும் இராணுவத்தினரது முன் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏதாவதொரு பொது இடம் ஒன்றில் பொது மக்கள் கூட்டம் கூடுவது, சிறு குழுக்களாக கூடிக்கதைத்தல் உள்ளிட்ட குழுச்செயற்பாடுகள் இராணுவத்தால் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.
சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்புப்போர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் நிறுத்தப்படாமல், இப்போது அது எமது இனத்தினுடைய மொழி, கலை, கலாசார விழுமியங்களை, வரலாற்று பண்பியல்புகளை சிதைக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழர் பகுதிகளில் பௌத்த சிங்கள மதத்தலங்கள்-சின்னங்கள் அமைத்தல், சிங்கள மக்களுக்கான வீடுகள்ஃகுடியிருப்புகள் அமைத்தல், சிங்கள மொழிப்பாடசாலைகள் அமைத்தல், தமிழ் ஊர்களுக்கு சிங்களப்பெயர்களை சூட்டுதல் என்று தமிழர் பண்பாட்டு பாரம்பரிய பூமியை பௌத்த சிங்கள கலாசாரம் அசுர வேகத்தில் விழுங்கிக்கொண்டிருக்கிறது.
பாடசாலைகள், முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள், நூலகங்கள், ஆலயங்கள், காணிகள், வர்த்தக நிலையங்கள், வீடுகளை கையகப்படுத்துதல், பயன்படுத்துதல் என்று தமிழர் பிரதேசங்களை இராணுவத்தினர் தமது ஆளுகைக்கு உட்படுத்தியுள்ளனர். இது சிங்கள மேலாதிக்கத்தின் மனோநிலையாகும்! (ஆதாரம்:- இந்தியாவின் “தி வீக்என்ட் லீடர்” இணையத்தள செய்தியாளரின் தமிழர் பகுதிக்கான பயண அநுபவ கட்டுரையாக்கம் (“வடக்கில் சிங்கள ஆதிக்கத்தின் மனோநிலை”, “வேட்டையாடப்படும் தமிழர்களின் வளங்கள்” என்று தலைப்பிடப்பட்ட இருவேறு கட்டுரைகள்.) இந்த நிலைமைகள் பற்றி மேலும் விவரிக்கிறது.) முன்பு இருந்ததை விடவும், இப்போது தமிழர் நாம் மிகவும் மோசமான கட்டத்தில் இருந்து வருகிறோம்.
வன்னி பெருநிலப்பரப்பில் இறுதிப்போர் நடைபெற்ற புதுமாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை இந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்போவதில்லை என்று சிறிலங்கா அரசு அடாவடியாக அறிவித்துள்ளது. இறுதிப்போரின்போது பெருமளவில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்த்தப்பட்ட இந்தப்பகுதிகளில் அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டமைக்கான எச்சங்களையும், ஆதாரங்களையும் இல்லாது செய்வதற்கு நிச்சயம் சிறிலங்கா அரச படையினருக்கு குறிப்பிட்ட ஒரு கால அவகாசம் தேவைப்படுகின்றது. ஈ, எறும்பு, காகங்கள் நுழைவதற்கு கூட அனுமதிக்கப்படாத இந்த இடங்களில் என்ன நடைபெறுகின்றது? என்பதை அமெரிக்கா செய்மதிகள் மூலம் கண்காணிக்க வேண்டும். இந்த நடவடிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமையட்டும். இலங்கையின் சகல மாவட்டங்களினதும் பாதுகாப்பு அதிகாரம், மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 12வது பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களின் அடிப்படையில் முப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்:- இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் கையெழுத்திடப்பட்டு 2011 ஆகஸ்ட் 6 அன்று வெளியிடப்பட்ட 1717 – 41 ஆம் இலக்க அரசாங்க விசேட வர்த்தமானி அறிவித்தல்.)
தெற்காசியாவிலேயே அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. (ஆதாரம்:- “நியூசிலன்ட் ஹெரால்ம்” ஊடக அறிக்கை, மற்றும் அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் “Journal of Foreign Relations” ஊடக அமைப்பைச்சேர்ந்த ஊடகவியலாளரின் தமிழர் பகுதிக்கான பயண அநுபவப்பகிர்வுகள் (“இராணுவ மயப்படும் இலங்கை” என்று தலைப்பிடப்பட்ட ஊடக அறிக்கை.) இலங்கை ஜனநாயக நாடு கிடையாது. இலங்கையில் இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது என்பதற்கு இவை மிகச்சிறந்த எடுகோள்கள்! இந்த நிலைமையால் குடியியல் சமூகத்துக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி புத்திஜீவிகள், மதத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் அச்சம் - கவலை வெளியிட்டு வருகின்றனர்.
சிங்கள பேரினவாத அரசு ஈழத்தமிழர் மீது காலம் காலமாக திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் தொடர்பாகவும், நடத்திய இனப்படுகொலைகள் தொடர்பாகவும் “வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தால்” சேகரிக்கப்பட்ட ஆவணங்களைக்கொண்டு “தமிழினப்படுகொலைகள்” என்கிற நூல் தமிழகத்தை மையமாகக்கொண்டு செயல்பட்டு வரும் “மனிதம்” - மனித உரிமை அமைப்பு” மற்றும் “சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினால்” தொகுக்கப்பட்டு ஆறு மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், ஹிந்தி, சிங்களம்) அச்சிடப்பட்டு வெளியாகியிருக்கிறது. குறித்த நூல், ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பான புள்ளி விவரங்களை முழுமையாக வெளியிட்டு உண்மையை பேசியிருக்கிறது. இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்ப்பாயத்தில் பன்னாட்டு நீதியரசர்களால் போர்க்குற்ற ஆவணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறித்த இந்த நூலை நீங்கள் வாசித்தால் நாம் பேருவகை அடைவோம். அது ஈழத்தமிழர் இனப்பிரச்சனை தொடர்பாக நீங்கள் எடுக்கப்போகின்ற தீர்மானங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் பேருதவியாக அமையும் எனலாம்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முனைப்புகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை(சமாதானத்துக்கான அடமானங்கள்) அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்துக்கான முன்னாள் துணைச்செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் தலைமையில் நோர்வே வெளியிட்டிருக்கிறது. நாம் உங்களிடத்தில் கேட்டு நிற்பதெல்லாம், ஈழத்தில் நடைபெற்றதைப்போன்று இனியும் ஒரு இனப்படுகொலை உலகத்தில் வேறு எங்கேனும் நடைபெறுதல் தகாது. ஈழப்படுகொலையே இறுதியாக இருக்கட்டும்! இனப்படுகொலையை நடத்தியுள்ள, போர்க்குற்றம் இழைத்துள்ள, மனித உரிமை மீறலை செய்துள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அவரது சகோதரர்கள் மற்றும் சகாக்கள் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறுவதற்கான நம்பகமான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். உயிர் வலிக்கும் ரணங்களோடும், கணங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தரப்பட வேண்டும்! இதை நாம் மிகவும் வலியுறுத்தி கூறுகிறோம். சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கான போதியளவு ஆதாரங்களை பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, (“இலங்கையின் கொலைக்களங்கள்,” “தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” எனும் இருவேறு ஆவணப்படங்கள் மற்றும் இறுதிப்போரில் 58 ஆவது படைப்பிரிவில் பங்கெடுத்த இராணுவ உயர்அதிகாரி, முன்னணி படைச்சிப்பாய் ஆகியோரின் நேரடி “வாக்குமூலங்கள்”(சாட்சியம்) அடங்கிய செய்தித்தொகுப்பு) ஐ.நா நிபுணர் குழு அறிக்கை(போர்க்குற்றவாளி), சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கைகள், போர் நடைபெற்ற இறுதிக்காலங்களில் இலங்கைக்கான ஐ.நா சபையின் பேச்சாளராகக்கடமையாற்றிய “ஹோடன் வெய்ஸ்” எழுதி அண்மையில் வெளிவந்துள்ள “The Cage” நூல் ஆகியன வெளியிட்டிருப்பதால் காத்திரமான அனைத்துலக விசாரணையை எத்தகைய கால தாமதங்களும், தடைகளுமின்றி நடத்துவதற்கு நீங்கள் ஆவண செய்தாக வேண்டும். ஈழ இனப்படுகொலையை செய்தவர்கள் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கை உலகத்திலுள்ள ஏனைய இனவெறி ஆட்சியாளர்களுக்கும், சர்வாதிகார போக்காளர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்!
குடும்ப ஆட்சி, அதிகார துஸ்பிரயோகம், ஊழல், இலஞ்சம், அபிவிருத்தியின்மை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றம், வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு, வறுமை, வன்முறை, ஊடக சுதந்திரம் மறுப்பு, கருத்துச்சுதந்திரம் இல்லாமை, ஒடுக்குமுறை, அடக்குமுறை. இவற்றுக்கு எதிராக அரபு நாடுகளில் தொடரும் மக்கள் எழுச்சிக்கு உத்வேகம் அளித்து, அந்த மக்களின் விடுதலைக்கு அங்கீகாரம் அளிக்கும் நீங்கள், அதே பிரச்சினைகளை சந்தித்து நிற்கும் எமது மக்களுக்கு எப்போது அவற்றிலிருந்து விலகி விடுதலை காணும் சந்தர்ப்பத்தை வழங்கப்போகிறீர்கள்? வலுவிலும், அதிகார சிறப்பிலும் உயர்ந்தவராகவிருக்கும் உங்கள் தார்மீக கடமையல்லவா? அது. வரலாற்றிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த பணியல்லவா?
இந்த உலகத்தினுடைய பாவங்களையெல்லாம் கழுவுகின்ற கர்த்தராக உமை வைத்து, உங்களிடத்தில் வந்து மண்டியிட்டு கேட்கிறோம். உம்மிடத்தில் எமது சுமைகளை இறக்கி, குறைகள் சொல்லி அழுகின்றோம். ஒப்புக்கொடுக்கின்றோம்.
“கெட்டவைகள் சூழ்ந்துள்ள இந்த உலகில்
எமது மக்களுக்கு நல்லவை காண்பிப்பீராக!
மரணம் சூழ்ந்துள்ள இவ்வுலகில்
எமது மக்களுக்கு அமிர்தம் கொடுத்து
வாழ்விப்பீராக! அதுவே எமது மக்களை உய்விக்கும்!”
உலகில் மிகவும் பாரதூரமான இனப்படுகொலைகள், அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளை சந்தித்த தென் சூடான், கொசோவோ, மொண்டிநீக்ரோ, கிழக்குத்திமோர் நாட்டு மக்களுக்கு தனியரசு பிரகடனம் எப்படித்தீர்வாக அமைந்ததோ, அதேபோன்றுதான் ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்கும் தனியரசை நிறுவுவதை விடவும் மாற்று வழி வேறொன்று இருக்க முடியாது. இதைத்தான் ஈழத்தமிழருக்கு எதிராக காலம் காலமாக நடத்தப்பட்ட, நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இனப்படுகொலைகள், அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் எடுத்தியம்புகின்றன. (தென் சூடான், கொசோவோ, எரித்திரியா நாட்டு மக்களுக்கு தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எமது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழகத்தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பை – கருத்துக்கணிப்பை நடத்துங்கள். சர்வதேச கண்காணிப்பாளர்கள் தலைமையில் இந்த பொதுஜன வாக்கெடுப்பு பணி நடைபெறட்டும்.) ஊழிப்பெரு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுக்கொண்டிருக்கும் எமது மக்களை கருணைப்பேழையாக மிதந்து வந்து காப்பாற்றுவீர்கள். கரையேற்றிச்செல்வீர்கள் என்று பெரிதும் நம்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம். இதை ஒரு கோரிக்கையாகவும் உங்களிடத்தில் முன்வைக்கின்றோம். குறித்த விடையம் தொடர்பான தங்களது இதய சுத்திகரிப்பான நடவடிக்கையையும், நம்பிக்கையான பதிலையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.
(அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தால் நீங்களும் என் தோழர் - சேகுவேரா.)
மெத்த கனிவுடனும், நிறைந்த நம்பிக்கையுடனும்…
அ.ஈழம் சேகுவேரா.
(இளம் ஊடகவியலாளர்-இலங்கை.)
(2011.09.15)
Please email us at: wetamizhar@live.in
நகல்கள்:-
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு.
சர்வதேச மன்னிப்புச்சபை.
மனித உரிமைகள் காப்பகம்.
முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு.
சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு.
சர்வதேச குற்ற விவகாரங்கள் குழு.
சர்வதேச அனர்த்தக்குழு.
இனத்துவேசம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு.
சித்திரவதைகளுக்கு எதிரான உலக அமைப்பு.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு.
ஆசிய சட்டவாக்க நிலையம்.
மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம்.
மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புக்கான ஐரோப்பிய நிலையம்.
மனித உரிமை மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய அமைப்பு.
கிழக்கு மற்றும் ஆபிரிக்க மனித உரிமைகள் பாதுகாப்பு திட்டம்.
குற்றமயப்படும் சமூகங்களுக்கு எதிரான பிரசார அமைப்பு.
சர்வதேச கத்தோலிக்க புத்திஜீவிகள் அமைப்பு.
சர்வதேச கத்தோலிக்க குழு (பெக்ஸ் றொமோனா)
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு.
அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட இனங்களுக்கான அமைப்பு.
ஆபிரிக்க ஜனநாயக அமைப்பு.
சர்வதேச நாடாளுமன்ற யூனியன் பொதுச்சபை.
கெய்ரோ மனித உரிமைகள் கற்கை மையம்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு.
பொதுநலவாய மனித உரிமைகள் அமைப்பு.
மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை.
அனைத்துலக மனித உரிமைகள் கிளினிக்.
அரசியலமைப்பு உரிமைகளுக்கான நிலையம்.
சட்ட வல்லுநர்களின் சர்வதேச ஆணைக்குழு.
சர்வதேச ஜூரிமார்கள் ஆணைக்குழு.
ஜி 8 நாடுகள் அமைப்பு.
ஐரோப்பிய ஒன்றியம்.
ஐக்கிய நாடுகள் சபை.
அமெரிக்க செனட் சபை.
போர்க்குற்ற விடயங்களுக்கான பணியகம் (அமெரிக்க இராஜாங்க திணைக்களம்.)
ஹிலாரி கிளிங்டன் (இராஜாங்க செயலாளர் - அமெரிக்கா.)
டேவிட் கமரூன் (பிரதமர் - பிரித்தானியா.)
ஸ்ரPபன் ஹாபர் (பிரதமர் - கனடா.)
ஜீலியா கில்லார்ட் (பிரதமர் - அவுஸ்திரேலியா.)
பிரித்தானியா வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
கனேடிய வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
நோர்வே பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
சுவிஸ்லாந்து பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
டென்மார்க் பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
அயர்லாந்து பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
நெதர்லாந்து பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
நியூஸ்சிலாந்து பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
ஜேர்மன் ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
பிரான்ஸ் ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
தென்னாபிரிக்கா ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
சுவீடன் ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
ஸ்பெயின் ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
பிரேசில் ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாராளுமன்றம்.
எரிக் சொல்ஹெய்ம் (இலங்கை அமைதி முயற்சிகளுக்கான முன்னாள் தூதுவர், சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் - நோர்வே.)
றொபேர்ட் ஓ பிளேக் (துணைச்செயலாளர் - மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களம்.)
பற்றீசியா புட்டினன்ஸ் (இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர்.)
வென்டி ஸேர்மன் (செயலாளர் - அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களம்.)
லின் பொஸ்கோ (துணைச்செயலாளர் - ஐ.நா அரசியல் விவகாரம்.)
பெலிஸ் கியர் (தலைவர் - ஐ.நா சித்திரவதைகளுக்கெதிரான குழு.)
அலிஸ்டர் ஜேம்ஸ் ஹென்றி பேர்ட் (செயலாளர் - தெற்காசிய விவகாரங்கள் - பிரித்தானியா.)
நெல்சன் மண்டேலா (முன்னாள் அதிபர் - தென்னாபிரிக்கா, தலைவர் - மனித நேயப்பேரவை – உலக சமாதான நட்புறவு பூங்கா.)
கனேடிய லிபரல் கட்சியும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயல்குழு.
அவுஸ்திரேலிய கிறீன் கட்சியும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயல்குழு.
சுவிஸ் பசுமைக்கட்சியும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயல்குழு.
புனித பாப்பரசர் 16வது ஆசீர்வாதப்பர் (வத்திக்கான்.)
செல்வி ஜெயலலிதா ஜெயராம் (முதல்வர் - தமிழகம்.)
செல்வி ராதிகா சிற்சபேசன் (நாடாளுமன்ற உறுப்பினர் - கனடா.)
வி.ருத்ரகுமாரன் (பிரதமர் - நாடு கடந்த தமிழீழ அரசு.)
அதி வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவல் அடிகளார் ( தலைவர் - உலகத்தமிழர் பேரவை.)
ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு.
சுரேன் சுரேந்திரன் (செயலாளர் - பிரித்தானியா தமிழர் பேரவை.)
இரா.சம்பந்தன் (தலைவர் - தமிழ் தேசியக்கூட்டமைப்பு - இலங்கை.)
wetamizhar@live.in
https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-07/2007-2014-03-08-01-40-49
2. கவிதை: மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! -
- இலங்கை முல்லைத்தீவிலிருந்து…இளம் ஊடகவியலாளர், தாயகக் கவிஞர் அ.ஈழம் சேகுவேரா -
- வன்னி மண் மீதான நில ஆக்கிரமிப்புப்போரில் பல்லாயிரக்கணக்கில் உயிர் குடிக்கப்பட்ட மக்களுக்கு, குற்ப்பாக பெண்களுக்கும், தாய்மாருக்கும் இக்கவிதை உணர்வர்ப்பணம்! -
இடம்பெயர்தலின் வலி பற்றியும்
மரணங்களை எண்ணிக்கொண்டிருத்தல்
பற்றியும்,
பேசிக்கொண்டிருக்கும் ஈழத்தில்
தாய்க்குலம் தம் சேலை உருவி
கூடாரம் அமைத்தும்,
தடுப்புச்சுவர் அமைத்தும்
நம் சரீரம் காத்த
தியாகம் பற்றியும் பேசுகிறேன்.
ஆகாயத்தை விடவும்
அழகானதும், விசாலமானதும் ஆன
பொருள் உண்டென்றேல்,
தாய்மாரே
அது நிச்சயம் உங்கள் சேலை தான்.
மல்லாக்காக
படுத்துக்கொண்டே
உங்கள் சேலையில் உள்ள
வட்டங்களையும் சதுரங்களையும்,
கோணங்களையும் கோடுகளையும்,
புள்ளிகளையும் பூக்களையும்,
பட்சிகளையும் பறவைகளையும்,
கிறுக்கல்களையும் கீறல்களையும்,
பார்த்துப்பார்த்து
தொட்டுப்பேசி,
பல ஆயிரம் குழந்தைகள்
சித்திரமும் கணிதமும்
கற்றிருக்கிறார்கள்.
துப்பாக்கிச்சன்னங்களும்
எறிகணைச்சிதறல்களும்
உங்கள் சேலையை
சல்லடை இட்டபோதும்,
பொத்தல்கள் வழி
“இன்னுமோர் உலகத்தைக்காட்டி”
முடிந்தவரை
எம் அவல வாழ்வை
அழகாக்க உழைத்திருந்தீர்கள்.
மொத்தத்தில்,
சேலையை சோலையாக்க
நீங்கள் காட்டிய
சிரத்தை போல் பரிசுத்தம்,
இவ்வுலகில்
வேறொன்றுமில்லை.
wetamizhar@live.in
3. தந்தையர் தின சிறப்புக்கவிதை: அப்பா!
- தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேரா - -
01)
நான் அறிந்த
கட்டபொம்மனும்
கர்ண மகாராசனும்
எல்லாமே எனக்கு
என்னுடைய அப்பாதான்.
எனது எதிர்காலத்துக்கு
இன்றும்
சொல்லத்தெரிந்தது
“அப்பா போல வரணும்.”
நான் அறிந்த
கணிதமும் இலக்கியமும்
அப்பாதான்.
02)
அப்பாவின்
கடின உழைப்புக்கு
அவரது தலைப்பாகைதான்
சாட்சியம்.
அதில் உப்பு பூத்திருக்கும்
அழகைக்காணும் போதெல்லாம்
எனக்குள்தான்
எத்தினை பூரிப்பு.
எத்தினை மாற்றம்.
அம்மாவின் அடுக்களை
பண்டத்தை விடவும்
எனது நாசிக்கு அதிகம்
பழக்கப்பட்டது
அப்பாவின் வியர்வை
நாற்றம்தான்.
முகம் ஒற்றிக்கொள்ளும்
தோள் துப்பட்டாவை
தலைப்பாகையாக
உடுத்திக்கொள்ளும் போதுதான்
இருக்கிறதே மிடுக்குää
ஏழு தலைமுறைக்கான
நிமிர்வு எனக்கு.
03)
ஆனாலும்
வாழைக்குணம் அப்பாவுக்கு.
குலை போட்டும்
குனிவாய் வாழைகள்.
அப்பாவும் குனிகிறார்
நான் கனிவதற்காக.
சிறு வயதில்
அந்தக்குனிவில்
சவாரி விட்டவன் நான்.
ஆனால் எனது முதுகில்
யாரும் சவாரி
விட்டுவிடக்கூடாது
என்பதற்காகத்தானே
அப்பா இத்தனைக்கும்
கஸ்ரப்படுகின்றார்.
04)
பள்ளி முடிந்தும்
வீடு திரும்பாத
என்னைத்தேடி
அம்மா தெரு ஏறுவா.
நான் வயல் இறங்குவன்.
எனது கால் கழுவி
வரப்பிருத்தி விடும் அப்பா
எனது சட்டையில்
அழுக்குச்சேராதிருக்க
சேறு குளிக்கிறார்
நெடுநாளும்.
05)
அப்பா சேறு மிதித்திட்டு
வரப்புகளோடு
நடந்து வருவார்.
அதை படம்பிடிச்சு பெரிசாய்
சுவரில மாட்டோணும் என்று
எனக்குள் நெடுநாளும்
ரொம்பவே ஆசை.
நிறைவேறவே இல்ல.
கடதாசியை எடுத்து வரைஞ்சும்
திருப்தி காணாத நான்
கண்ணாடி முன்னே
அதிக நேரத்தை
செலவழிச்சிருவன்
வேசமிட்டு அப்பாபோல
மீசை வைச்சு
அழிச்சு அழிச்சு
நேர்த்தி வரும் வரைக்கும்.
ஆனால் அப்பாபோல
சுருட்டிழுப்பு ஒத்திகை பார்த்து
அவர் ஒத்தடம் கொடுத்த வடுக்கள்
இப்பவும்
எனது நடத்தையை
ஒழுங்காற்றிக்கொண்டிருக்கும்
அப்பாவின் இன்னுமொரு முகம்.
06)
அப்பாவுக்கு
மூத்த பிள்ளை நான்தான்
ஆனாலும் தலைப்பிள்ளை
வயல்தான்.
அம்மாவை விடவும்
அவருக்கு நல்ல துணை
மயிலையும் சிவலையும்.
அப்பா அதிகம் நேசிப்பது
அவைகளைத்தான்.
அவரது
சொத்துச்சுகம் எல்லாமே
அந்த திண்ணை வீடும்
கொல்லைப்புறமும் தான்.
அப்பா கைகளை
தலையணையாகக்கொண்டு
(இ)ராஜ தூக்கம் போடும்
அந்த மாமர நிழலுக்கு
மட்டும்தான் அப்பாவின்
கனவுகளின் கனதி புரியும்.
அந்த தென்னைகளுக்குத்தான்
எத்தினை வயசு.
அதன் கீழிருந்து அப்பா
அண்ணாந்து விடும்
பெரு மூச்சில்தான்
அவற்றின் மூப்பை
அளவிட முடியும்.
07)
அப்பாவுக்கு ஆயுசு கெட்டி.
பழஞ்சோற்றுல பசி போக்கிறதும்
மோரில தாகம் தணிக்கிறதும்தான்
அவரது உடல் தெம்பு.
ஆங்கே வீழ்ந்து கிடக்கும் மரங்களை
குற்றிகளாக வீடு சேர்க்கும்போது
நான்
அப்பாவின் உடல்
திரட்சிகளை
கணக்கெடுத்தவாறல்லவா
பின் தொடர்ந்திருக்கிறேன்.
08)
எனக்கு
“புதியதொரு உலகை”
காட்டியது அப்பாதான்.
வயலில இறங்கி
நடக்க ஆரம்பிச்சிட்டா
அவர் பின்னே
எனது விடுப்பு கேள்விகள் போகும்.
நாட்டு நடப்புகள் அத்தினையும்
அப்பாவுக்கு அத்துப்படி.
ஆர்வமிகுதியால்
விடுமுறை நாள்களில் கூட
கட்டுச்சோற்றோடு வயலுக்கு
ஓ(டி)டுவன்.
அப்பா வயலில நிற்கிற
ஒவ்வொரு நிமிசமும் கூடக்கூட
வயல் காட்சி மீது பிடிப்பும்
அதிகரிச்சுக்கொண்டே போகும்.
பொழுது சாய்கிற
நாழிகை மீதுதான்
கோபம் அதிகமாக வரும்.
பலம் கொண்டவரை
நிலத்தை உதைப்பன்
வலிக்கு அப்பா மருந்திடுவார்.
09)
இராத்திரி பூராவும்
எனது சுகமான தூக்கம்
அப்பாவின் நெஞ்சில்.
அவரது நெஞ்சு மயிர் பிடித்து
பழகிப்போன
இந்தக்கைகளுக்குள்
எழுதுகருவியை திணித்தது
என்னவோ அப்பாதான்.
ஆனாலும் அந்த
மண்வெட்டி பிடித்த
கைகளைப்பற்றி
எழுதும்போதுதானே
எந்த எழுதுகருவி
பிடிக்கும் கைக்கும்
பெருமை சேர்(க்)கிறது.
* முல்லைத்தீவிலிருந்து (இலங்கை) அ.ஈழம் சேகுவேரா)
yathumaki@Live.com
4. 21 ஜூலை 2016 - காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்! - தகவல்: நாம்தமிழர் -.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்! சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் - நியாயமான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, விசுவாசமாகவும் - அர்ப்பணிப்பாகவும் பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு ஒரு வழிமுறையாக பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை? என்பதை கடந்த ஏழு வருட காலத்தில் தம்மால் அறிந்தும் - தெளிந்தும் கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Vavuniya District) வவுனியா மாவட்ட சங்கத்தின் தலைவர் திருமதி கா.ஜெயவனிதா,
தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் - தமக்கான தொழில்துறையாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை பயன்படுத்தி, இதற்காகவே காலத்தையும் நீட்டிப்பு செய்துகொண்டு திரியும் ‘இடைத்தரகர்’ அமைப்புகள், உறவுகளை தேடியலையும் தமது பயணத்தில் குறுக்கீடு செய்யாமல் தாமாகவே விலகி ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், இனியும் இவ்வாறான அநாகரிக நடத்தைகள் தொடருமாகவிருந்தால் அந்த அமைப்புகள் - அந்த அமைப்புகளின் பணியாளர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு பகிரங்கப்படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைமைகள் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தை விடவும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளே பாரிய தடைக்கற்கள்!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களுக்கு ‘அது செய்யப்போகின்றோம் - இது செய்யப்போகின்றோம்’ என்று கூறி, வெளிநாட்டு என்.ஜி.ஓக்களிடமிருந்து பெருந்தொகை நிதியை பெற்று, அதையே தமக்கான ஒரு தொழில்துறையாகவும் - வேலைத்திட்டமாகவும் எடுத்துக்கொண்டு, இந்த அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பதனால், தம்மில் பல குடும்பங்கள் சோர்வடைந்து - மனச்சலிப்படைந்து, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபாடில்லாமல் ஒதுங்கியிருப்பதாகவும், நீதியை கோரும் அழுத்த மற்றும் கவனவீர்ப்பு போராட்டங்களில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாகவும் ஜெயவனிதா கவலை தெரிவித்தார்.
பெருந்துயர் தோய்ந்துள்ள பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்க்கையை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கத் துடிக்கும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளை தாங்கள் நன்கு இனங்கண்டு வகைப்படுத்தியுள்ளதாகவும், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களின் சங்கங்களும் ஒன்றுகூடி ‘தேசிய அளவில் ஒரு கூட்டு இயக்கமாக’ செயல்பட்டு வரும் நிலையிலும், (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Tamil Homeland) தம்மை கூட்டு இயக்கமாக தொழில்பட விடாமல் இந்த ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தமக்கான நிதி வரத்துகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சங்கத்தின் உறுப்பினர்களை சிறு சிறு குழுக்களாக உடைத்து கையாள்வதாகவும், தமது பிரச்சினைக்கு தாங்களே சுயமாக தீர்மானங்களை எடுத்து இலக்கு நோக்கி நகருவதற்கு, அரசாங்கத்தை விடவும் பெரும் தடைக்கல்லாக இந்த ‘இடைத்தரகர்’ அமைப்புகள் இருப்பதால், இவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து மேலெழுந்து வருவதற்கே தமது வாழ்க்கை காலத்தின் பெரும் பகுதி கழிந்து விடுவதாகவும் தெரிவித்தார்.
கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தின் சிறப்பு கலந்தாய்வுக்கூட்டம், தலைவர் திருமதி கா.ஜெயவனிதா, செயலாளர் திருமதி பே.பாலேஸ்வரி ஆகியோர் தலைமையில் 16.07.2016 சனிக்கிழமை அன்று வவுனியாவில் இடம்பெற்றது. கலந்தாலோசனை செயலணியானது மாவட்டந்தோறும் வருகை தரும்போது, அதற்கு சமுகமளிக்கத்தக்கவாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களை தயார்ப்படுத்தி - வழிப்படுத்தும் நோக்கத்தில் கலந்தாய்வு இடம்பெற்றது.
சங்கத்தின் அழைப்பின் பிரகாரம் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, தலைமைக்குழு உறுப்பினர் சு.வரதகுமார் ஆகியோரால், உண்மை, நீதி ஆகியவற்றைக் கண்டடைந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி, இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்புகள், செயல்முறைகள், நடவடிக்கைகள் பற்றி, FFSHKFDR - Tamil Homeland இன் ஒத்திசைவோடு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் கலந்தாலோசனை செயலணியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் - முன்மொழிவுகள் தொடர்பில் மக்களுக்கு பகிரங்கப்படுத்தி தெளிவுபடுத்தப்பட்டதோடு, கருத்துகளும் பெறப்பட்டன.
கூடவே, காணாமல் போனோர் தொடர்பான விடையங்களை கையாள்வதற்கான அலுவலகம் (Office for Missing Persons) அதாவது OMP நிறுவனத்தை அணுகுவது தொடர்பில் உள்ள அனுகூலங்கள் - பிரதிகூலங்கள், இழப்பீடுகளுக்கான அலுவலகத்திடம் எதை கேட்க வேண்டும்? காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் மீளநிகழாமையை எப்படி உறுதிப்படுத்தலாம்?, இன்றைய உலக ஒழுங்கில் உச்சபட்ச நீதியை எப்படி பெற்றுக்கொள்ளலாம்? சாட்சியங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டா? என்பவை தொடர்பிலும், நிலைமாறு காலகட்ட நீதியின் பெயரால் நாட்டுக்கு உள்ளே வரவழைக்கப்படும் அமெரிக்க டொலர்ஸ்கள், அந்த நிதியை பெற்று பாதிக்கப்பட்டுள்ள மக்களை ‘மூளைச்சலவை’ செய்துவரும் அமைப்புகளின் போக்குகள் தொடர்பிலும், மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.
FFSHKFDR - Tamil Homeland இன் தலைவர் திருமதி ஜெ.நாகேந்திரன் (ஆஷா) அவர்களும், அதன் பிரதிநிதிகளும் இந்த கலந்தாய்வில் பங்குபற்றியிருந்தனர்.
'பதிவுக'ளுக்கு அனுப்பியவர்: wetamizhar@gmail.com
https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-07/3447--ffshkfdr-vavuniya-district-