பதிவுகள்: இலங்கைத்தமிழ் இலக்கியத்தை பலவகை எழுத்துகள் பாதித்துள்ளன. தமிழகத்தின் வெகுசனப் படைப்புகள் , மணிக்கொடிப்படைப்புகள், மார்க்சிய இலக்கியம், மேனாட்டு இலக்கியம் எனப்பல்வகை எழுத்துகள் பாதித்தன. இலங்கையைப்பொறுத்தவரையில் மார்க்சியவாதிகள் இரு கூடாரங்களில் (சீன சார்பு மற்றும் ருஷ்ய சார்பு) ஒதுங்கிக்கொண்டு இலக்கியம் படைத்தார்கள். மார்க்சிய இலக்கியத்தின் தாக்கத்தினால் இலங்கைத்தமிழ் இலக்கியம் முற்போக்கிலக்கியம் என்னும் தத்துவம் சார்ந்த, போராட்டக்குணம் மிக்க இலக்கியமாக ஒரு காலத்தில் கோலோச்சியது. அதே சமயம் எஸ்.பொ.வின் நற்போக்கிலக்கியம், மு.தளையசிங்கத்தின் யதார்த்தவாதம், தமிழ்த்தேசியத்தை மையப்படுத்திய இலக்கியம் எனப்பிற பிரிவுகளும் தோன்றின. இவை பற்றிய உங்களது கருத்துகளை அறிய ஆவலாகவுள்ளோம். இவை தவிர வேறு தாக்கங்களும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையிலுள்ளதாகக் கருதுகின்றீர்களா?
தேவகாந்தன்: சோவியத் நூல்கள் மட்டுமில்லை. வங்கம், மராத்தி முலிய மொழிகளின் எழுத்துக்களும் இலங்கை எழுத்துக்களைப் பாதித்தன. இது அதிகமாகவும் முற்போக்குத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவே இருந்தது. இவ்வகையான மொழியாக்கங்களால் விளைவுகள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தபொழுது, ஆங்கிலத்திலிருந்தும் பல நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாகின. அ.ந.கந்தசாமி போன்றோர் இலங்கையிலேயே இது குறித்து பல்வேறு முயற்சிகளையும் செய்தனர். அது முற்போக்குக்கு வெளியே இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கும் கருதுகோளை உருவாக்கியது. தமிழ்நாட்டில் எவ்வாறு மார்க்சிய எழுத்துக்கு அப்பால் ஒரு இலக்கியம் உருவாக இவ்வகையான மொழிபெயர்ப்புக்கள் வழிவகுத்தனவோ, அதுபோலவே இலங்கையிலும் உருவாகிற்று. ‘அலை’ இலக்கிய வட்டம் அப்படியானது. ‘மெய்யுள்’ மற்றும் ‘நற்போக்கு’ போன்றனவும் அப்படியானவையே. ‘மெய்யுள் மேற்கத்திய புதிய கருத்தியல்களின் பாதிப்பினைக் கொண்டிருந்தவேளையில், நற்போக்கு இலக்கியம் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு முற்போக்கு இலக்கியத்துக்கான எதிர்நிலைகளிலிருந்து, தனிநபர்களின் நடத்தையிலிருந்த நேர்மையீனங்களை எதிர்ப்பதிலிருந்து பிறந்திருந்தது. அதேவேளை அய்ம்பதுகளில் ‘சுதந்திரன்’ பத்திரிகையை மய்யமாகக் கொண்டு தமிழ்த் தேசியம் சார்ந்தும் எழுத்துக்கள் பிறந்ததையும் சொல்லவேண்டும். இது தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டிருந்த திராவிட இலக்கியத்தின் பாதிப்பிலிருந்தும், தன் சொந்த அரசியல் நிலையிலிருந்தும் தோன்றுதல் கூடிற்று.
தமிழகத்திலே ஒரு காலகட்டத்தில் அந்த முற்போக்கு வீச்சு உதிர்ந்தாலும், ஒரு இலக்கிய வகையினமாக தொடர்ந்தும் இருந்துவருவதற்குச் சாத்தியமான சூழ்நிலைமை அங்கே இருந்தது. அப்போது அங்கே பரவலாக வளர்ந்துவந்த திராவிட எழுத்துக்கள் அதற்கான ஒரு தேவையை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. ஆனால் இலங்கையோ அக் காலகட்டம் தாண்டியும் முற்போக்கு இலக்கியக் கொள்கையை இழுத்துக்கொண்டு திரிந்தது. அதைக்கூட இன்னும் அதற்கிருந்த சமூகரீதியான தேவையின் அடிப்படையில் ஒப்புக்கொள்ள முடியும். திராவிட எழுத்துக்களுக்கு தமிழிலக்கியம் பார்பனீயமயப்படுவதை தடுப்பதற்கான தேவை இருந்ததுபோல், பண்டிதத் தனமான எழுத்துக்களுக்கு மாற்றான இலக்கியத்தை முன்வைக்கிற தேவை இலங்கை முற்போக்கு இலக்கியத்திற்கும் இருந்தது. அது தமிழ்த் தேசியத்தின் தீவிரமான வழியில் அப்போதைய ஈழத்திலக்கியம் திசைமாறிப்போவதைத் தடுக்கவேண்டியும் இருந்தது. ஆனால், விமர்சனரீதியிலான அதன் தலையீடு இலக்கியத்தின் தரத்தைத் தவிர்க்க முடியாதபடி பாதித்தது. ஈழத் தமிழிலக்கியம் என்பதை உருவாக்குவதைத் தவிர பெரிய சாதனையெதையும் முற்போக்கு இலக்கியம் செய்யவில்லையென்பது உண்மையே.
எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’ நாவல் அதுவரை ஈழத் தமிழிலக்கியத்தில் இல்லாதவாறான கருப்பொருளை முன்வைத்துக்கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து ‘சடங்கு’ நாவலும் அதையே செய்தது. இலங்கையைப் பொறுத்தவரை வித்தியாசமான கருப்பொருளை முன்வைத்த நாவல்களாக அவற்றைக் கூறமுடியுமேயாயினும், அவற்றுக்கு உந்துவிசையாக அக்காலத்தில் தோன்றி தமிழ்மொழி பெயர்ப்பில் வந்துகொண்டிருந்த மராட்டிய எழுத்தாளர் வி.ஸ.காண்டேகரினதும், மற்றும் கே.ஏ.அப்பாஸினதும் நூல்களும், தமிழில் வந்த சிதம்பர ரகுநாதனின் சில சிறுகதைகளும் முன்னோடிகளாக இருந்தன என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது. தமிழக எழுத்துக்களின், இந்திய எழுத்துக்களின் பாதிப்பின் விளைச்சலாக இதை நாம் கொள்ளலாம்.
மற்றும்படி மணிக்கொடிக் காலம், சரஸ்வதி காலம், எழுத்துக் காலம் போன்றனவற்றின் பாதிப்பில் இலங்கையில் எழுத்துக்கள் பிறந்தனவாகச் சொல்ல முடியாது. இரண்டொரு தனிநபர்களிடத்தில் பாதிப்பு ஏற்பட்டதே தவிர, அலையாக பெருவீச்சுப் பெற்று அவற்றின் தாக்கம் இருக்கவில்லை. வானம்பாடிகள் காலத்து புதுக்கவிதைத் தாக்கம் எவ்வாறு ஈழத்துக் கவிதையைப் பாதிக்கவில்லையோ, அதுபோலவே மணிக்கொடி, சரஸ்வதி, எழுத்து காலங்களும் எதுவித பாதிப்பையும் செய்யவில்லை.
இதற்கான ஒரு காரணம், அத்தனைக்கு வலுவானதாக ஆரம்பத்தில் பண்டித பரம்பரையும் அல்லது கல்வி வட்டமும், பின்னால் முற்போக்கு இலக்கிமும் அவற்றிற்குப் பெருந்தடையாக இருந்தன. ஒரு ஊடாட்டம் இருந்ததெனில் அது மிக நுண்மையாக செவ்விலக்கியம் சார்ந்ததாகவே இருந்ததாய் நான் சொல்வேன்.
பேராசிரியர்கள் க.கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி போன்றவர்களின் செல்வாக்கினால் தமிழ்நாட்டு விமர்சன அரங்கிலேயே மார்க்சீயத்தின் வலுத்த தாக்கம் ஏற்பட்டது. விந்தனும், டி.செல்வராஜும் இந்த விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட வேளை, அகிலனும், நா.பார்த்தசாரதியும், கல்கியும் மிகவும் காட்டமாகத் தாக்கப்படவும் செய்தார்கள். படைப்புரீதியான எந்த உந்துதலையுமோ தாக்கத்தையுமோ ஈழ இலக்கிய உலகு தமிழ்நாட்டுக்கு வழங்கியிராவிட்டாலும், விமர்சனரீதியில் அது ஓரளவு தன்னளவுக்கு மேலான பங்களிப்பைச் செய்தே இருக்கிறது.
பதிவுகள்: கலையைப்பற்றிய இரு பிரதானமான கருதுகோள்களுள்ளன. ஒரு சாரார் கலை கலை கலைக்காக என்று கருதுவர். மறு சாரார் கலை மக்களுக்காக என்று வாதிடுவர். இது பற்றிய உங்களது நிலைப்பாடென்ன? கலை கலைக்காக அல்லது கலை மக்களுக்காக என்று கருதுகின்றீர்களா? அல்லது ஓர் இலக்கியப்படைப்பானது கலைத்துவம் மிக்கதாக இருக்கும் அதே சமயம் மக்களுக்கானதாகவும் , சமுதாயப் பிரக்ஞை கொண்டதாகவும் விளங்கவேண்டுமென்று கருதுகின்றீர்களா?
தேவகாந்தன்: தமிழிலும் மிகவும் பழையதாய்ப் போன இலக்கிய விவகாரமிது. மிக எளிமைப்படுத்திப் பார்க்கிறபோது பொதுப்புத்திக்கு ஏற்றவிதமாக இது சமூகத்தைவிட்டு கலை விலகியிருக்கலாம் என்ற அர்த்தம் படும். என்னளவில் இது அது மட்டுமில்லை. இதனை வரலாற்றுரீதியாக நோக்கினால் பிரான்ஸிய தத்துவார்த்தப் புலத்திலிருந்து ஒரு கருத்தியலாக இதை முன்னெடுத்தவர் கோடியர் என்பதை அறியலாம். அவருக்கு முன்பாகவும் எட்கார் அலன் போ போன்றவர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இவ்விஷயம் இலக்கிய உலகில் எடுத்துப் பேசப்பட்டிருக்கிறது. சேர் வால்டர் ஸ்காட் போன்றவர்களின் மலினமான எழுத்துக்களுக்கு எதிரான சுலோகமாக இதைச் சொல்லமுடியும். சோவியத்தில் சோஷலிச யதார்த்த வாதம் தலையெடுத்ததோடு அதை எதிர்கொள்ளும் அலையாகவும் இது வீசியது. அவை இரண்டினுள்ளும் வெடித்தெழுந்த முரண் இந்தக் கருத்தியலை மேற்கிலிருந்து கீழைத் தேயம்வரை இழுத்து வந்தது.
இலக்கியம் ஆரம்ப காலங்களில் முக்கியமான இரண்டு கூறுகளுள் வகைப்படுத்தப்பட்டது. ஒன்று, இன்ப இலக்கியம். மற்றது பயன் இலக்கியம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேசப்பட்ட ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாடு ஏறக்குறைய முதல் இலக்கிய வகையைச் சார்ந்தது. அதுபோல ‘கலை மக்களுக்காக’ என்ற போட்பாடு இரண்டாம் வகையினைச் சார்ந்தது. கலையை கலைக்காக யார் செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் அவ்வாறே செய்யவேண்டியதுதான். கலை சமூகத்திற்காக என்பவர்களும் அதுபோலச் செய்யவேண்டியதே. அவை இலக்கியமாக காலத்தில் எஞ்சுகின்றனவா என்பதே முக்கியமானது.
சாதாரண கல்வியாளர்களுக்கும் விளங்கும்படியும், சுவை செறிந்தும் படைப்பு இருக்கவேண்டும் என்று பதிப்பகங்களின் உற்பத்தித் தாகத்தினால் உருவான நோக்கங்களுக்காய் நீர்த்துப்போன நடையில் எழுத்துக்கள் தோன்றி, அவை மிகவும் மலினப்பட்டபோது, கலைக்கான ஒரு வரையறை அன்று செய்யப்பட்டது. இன்றைக்கு வெகுஜன எழுத்து என்று சொல்லப்படுகிற எழுத்தாளர்களின் ஆக்கங்களை தீவிர வாசக உலகம் இலக்கியமாகக் கொள்வதேயில்லை. அதுபோல் அன்றைய வாசகனது தேர்வாக அது இருந்தது.
என்னைப் பொறுத்தவரை, சமூக மனிதனால் தோற்றுவிக்கப்படும் எந்த எழுத்தும் சமூகத்துக்கு விரோதமாகச் செல்வதில்லை என்பதாகவே நான் பார்க்கிறேன். அது கருத்துநிலைகளை வற்புறுத்தாதபோதும் கலைத்தன்மை கொண்டிருந்தால் சிறந்த படைப்பாக நின்று நிலைக்க முடியும். பரந்துபட்ட சோழ மண்டலத்தின் பொதுஜனங்களுக்காக கம்பராமாயணம் எழுதப்படவில்லை. அது யாருக்காக என்ற கேள்வி கம்பனிடத்தில் தனியாக இருந்திருக்க முடியாது. அது கல்வியாளர்களுக்கு ஆனதாய்த்தான் இருந்தது. அதாவது நிலமான்ய சமூகத்தின் கல்வியறிவு பெற்ற உயர் வகுப்பினர்தான் அதை வாசிக்கவும் சுகிக்கவும் கூடியதாக இருந்தது. ஆங்கிலர் வருகையோடு தோன்றிய கல்விப் பரம்பல் பொதுசனத்துக்கான எழுத்துக்களை உருவாக்க உந்தியது. இலக்கியம் அந்தப் பொதுஜனத்திலும் சிறந்த வாசகர்களை கருத்திலெடுப்பது. இலக்கியம் சமூகத்தைப் பிரதிபலிப்பதெனினும் அது பொதுஜனங்களுக்காக அல்ல, சிறந்த வாசகர்களையே கருத்திலெடுக்கிறது.
பதிவுகள்: "கலையை கலைக்காக யார் செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் அவ்வாறே செய்யவேண்டியதுதான். கலை சமூகத்திற்காக என்பவர்களும் அதுபோலச் செய்யவேண்டியதே. அவை இலக்கியமாக காலத்தில் எஞ்சுகின்றனவா என்பதே முக்கியமானது" என்று கூறுகின்றீர்கள். அதாவது கலை கலைக்காக என்ற அடிப்படையில் படைக்கப்படும் படைப்புகளும், கலை மக்களுக்காக என்னும் அடிப்படையில் படைக்கப்படும் படைப்புகளும் இலக்கியமாக நிற்கின்றனவா என்பதுதான் முக்கியமென்று கூறுவதுபோல் தெரிகிறதே?
தேவகாந்தன்: நான் கம்பனைப்பற்றிச் சொன்னதுதான் இதற்கான பதில். சமூகத்திற்கு நல்ல விஷயங்களை எடுத்துக்கூற விருப்பமிருப்பவர்களுக்கு தமிழில் இன்னொரு வடிவமிருக்கிறது. கட்டுரை என்று அதற்குப் பெயர். மார்க்சீயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பினாலோ, மக்கள் ஒற்றுமையாகவும் சுத்தமாகவும் இருக்கவேண்டியதன் அவசியத்தை விளக்க நேர்ந்தாலோ மிக இலகுவாக கட்டுரை நடையில் அவற்றை விளக்கிவிடலாம். இல்லை, நான் அவற்றை கவிதையில்தான் சொல்வேன், சிறுகதை நாவல் வடிவில்தான் சொல்வேன் என போராட வரக்கூடாது. எழுதக்கூடாதென விதியேதும் இல்லை. எழுதி இலக்கியமாகாவிட்டால் சண்டைக்கு வரக்கூடாது என்பது முக்கியம். சிற்றிதழ்களின் மகத்தான பங்களிப்பில்லாவிட்டால் இன்றைய நவீன தமிழிலக்கியம் இன்றைய நிலையினை அடைய இன்னும் அரை நூற்றாண்டு அதிகமாகச் சென்றிருக்கும் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இதை நான் நம்புகிறேன். அந்தவகையில் பார்க்கிறபோது சிறுபத்திரிகை எதுவும் மக்களுக்காக அதாவது வெகுஜனத்திற்காக ஆரம்பிக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் இங்கே நினைத்துப்பார்க்க வேண்டும்.
பதிவுகள்: நாடுகளுக்கு நாடுகள் மக்களின் வாழ்க்கைத்தரமும் வேறுபடுகின்றது. உதாரணத்துக்கு இந்தியாவைக்கவனத்திலெடுத்தால்... 600 மில்லியன் மக்களுக்கு மேல் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள். பாமர மக்கள். இவர்களில் பலருக்கு வாசிக்கவே தெரியாது. தெரிந்தவர்களும் வாசிப்பின் அடித்தட்டில் நிற்பவர்கள். எனவே இவ்விதமானதொரு சூழலில் வாசிப்பின் மேற்தட்டில் இருப்பவர்களை மையப்படுத்தி படைக்கப்படும் இலக்கியப்படைப்புகளுக்கான தேவையை விட, வறிய மக்களுக்காக அவர்களைச்சென்றடையும் வகையில் மக்கள் இலக்கியம் அவர்களுக்குப் புரியும் மொழியில் படைக்கப்பட வேண்டுமென்று நீங்கள் கருதவில்லையா?
தேவகாந்தன்: இதற்கும் நான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். இதிலே கூடுதலாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம் என நினைக்கின்றேன். வெகுஜன எழுத்தென்று ஒரு வகை இப்போது உண்டு. புதிதாகத் தோன்றவில்லை. எப்போதும் இருந்ததுதான். மாத நாவல்களும், பொக்கற் நாவல்களும் இந்த வகையான எழுத்தினை இந்த மக்களைநோக்கி எடுத்துச் செல்பவைதான். இவை நல்ல எழுத்துக்கள் இல்லை, அவர்களுக்கான நல்ல எழுத்து இதுவல்ல என்றால், இந்த எழுத்தின் மூலமே அவற்றைக் கொடுக்க ஏன் ஆரம்பத்தில் பி.எஸ்.ஆர். வகையறாக்களும், பின்னால் ராஜேஸ்குமார் வகையறாக்களும் கேட்கப்படவில்லை? இலங்கையிலும் இதுபோல பொதுமக்களின் வாசக தளத்துக்காக வீரகேசரி வெளியீடாகவும், மித்திரன் தொடர்கதையாகவும் சிலர் எழுதியிருக்கிறார்கள். இது அவர்களினைக் கேட்க வேண்டிய கேள்வி. இன்றைக்கு மேற்கிலே ஒரு நூல் சிறுகதைத் தொகுப்பா, நினைவுக் குறிப்பா என்பதை பதிப்பகமே தீர்மானிக்கிறது. ஒரு அறுபத்து நான்கு பக்க கதைப் புத்தகம் சிறுகதையா, குறுநாவலா, நெடுங்கதையா, நாவலா என அதுவே தீர்மானிக்கிறது. விமர்சகனின் வேலையை அது செய்கிறது என்று ஒருவகையில் சொல்லலாம்.
மேலும், அந்த பதிப்பகமே இன்றைக்கு வேறு ஒரு இலக்கிய வகையினத்தை உருவாக்கியிருக்கிறது. அதன்படி ஜேம்ஸ் ஹட்லி சேஸ்ஸினதும், அகதா கிறிஸ்ரியினதும், இயன் பிளெமிங்கினதும் நூல்கள் சில இலக்கியமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒருவகையில் இந்த வெகுஜன வாசகர்களிடையே இருந்துதான் தீவிர வாசகர்கள் தோன்றுகிறார்கள் என்ற வகையில் இந்த எழுத்தை முன்னோடி எழுத்தாக ஒப்புக்கொள்ளலாம். அதன் தேவையை நான் உணர்கிறேன். ஆனால் தரத்தை அல்ல.
பதிவுகள்: இன்று இணையத்தின் வளர்ச்சியால் உலகம் மிகவும் சுருங்கி விட்டது. ஒரு காலத்தில் மேனாட்டு இலக்கியக் கோட்பாடுகளைப் பெரும்பாலும் நூல்கள் மூலமே அறிந்துகொண்டோம். இன்றோ இணையம் மூலம் பல் வகைகளில் அறிந்துகொள்ள முடிகிறது. இன்று நவீன இலக்கியம் என்று கருதுபவை அனைத்தினதும் தோற்றுவாய் எந்நாடுகளென்று கருதுகின்றீர்கள்? மேனாடுகள் என்று பலர் கருதுவர். இந்த விடயத்தில் உங்கள் நிலைப்பாடென்ன? முக்கியமான இலக்கியக்கோட்பாடுகளாகத் தாங்கள் கருதுபவை எவை? ஏன்?
தேவகாந்தன்: எந்த நவீன இலக்கிய வகைமையும், நாவலும் சிறுகதையும் புதுக்கவிதையும் கூடத்தான், தமிழுக்கு மேனாட்டிலிருந்து வந்தவைதான். தமிழில் சிறிய கதை இருந்தது. ஆனால் சிறுகதை இருக்கவில்லை. பெரிய கதை இருந்தது. நாவல் இருக்கவில்லை. செய்யுள், கவிதைகள் இருந்தனவே தவிர புதுக்கவிதை இருக்கவில்லை. விமர்சனம்கூட அவ்வாறே. வடமொழியில் திறனாய்வு சார்ந்த சில நூல்கள் ஆக்கப்பட்டிருப்பினும், மேலைநாட்டிலிருந்தே இன்று திறனாய்வு எனப்படும் துறை கீழ்திசைக்கு வந்துசேர்ந்தது. கலை கலைக்காகவே என்ற கருதுகோளும் அங்கிருந்தே வந்தது. இருத்தலியல், அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம் ஆதியனவும் அய்ரோப்பிய இறக்கம்தான். ஆரம்ப காலத்தில் கலை கலைக்காகவே என்ற கருதுகோளின் பாதிப்பு தமிழிலும் இருந்ததென்பது உண்மை.
சமூக இயக்கத்தில் தனிமனிதன் தவிர்க்கமுடியாத தன்னிலை. அப்போது தனிமனித அவலங்களும் தனிமனித உணர்வுகளும் இலக்கியத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறான எழுத்து வகைமைகளை முதலாளித்துவ எழுத்து என மிகச் சுலபமாக முற்போக்கு இலக்கியம் ஒதுக்கியதுண்டு. உலகப் பெரும் போர்களின் பின் மனிதம் அழிந்த கதையை தனிமனித மனநிலைகளினூடாகவே பதிவேற்ற இலக்கியம் முயன்றது. அதுவே சாத்தியமாகவும் இருந்தது.
அக் கருத்துநிலையை மிகப் பெரும் போர்களைச் சந்தித்து மனிதம் சிதைவடையாத தமிழ்ப் பரப்பும் சில காலத்தின் பின் உள்வாங்கியது. அப்போது அங்கே முரண் தெரிந்தது. எதிர்ப்பு கிளம்பியது. இன்று சீரான ஒரு திசையில் நவீன யதார்த்தவாதமாக, பின் அமைப்பியலின் கூறுகளை உள்வாங்கியதாக தமிழக இலக்கியம் சென்றுகொண்டிருக்கிறதென நான் நினைக்கிறேன். தாராளப் பொருண்மைவாதம் தலையெடுத்து நாடுகளினது மட்டுமல்ல, கண்டங்களதும் துருவங்களதும் இடைவெளிகளே சுருங்கிவிட்டிருக்கிற சமகால நிலைமையில், உலக இலக்கியப் போக்கினை தமிழிலக்கியம் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாது நிகழவே செய்யும். அதேநேரத்தில் தன் நிலத்துக்கான, வாழ்முறைக்கான தனித்தன்மைகளையும் அது உதாசீனப்படுத்திவிடாது இருக்கவேண்டும் என்பது முக்கியமானதாகும்.
பதிவுகள்: உங்களைக்கவர்ந்த அல்லது உங்களைப்பாதித்த அக்காலத்து ஈழத்து இலக்கியவாதிகள் யாருமுளரா? அவ்வாறிருப்பின் அவர்களைப்பற்றிய உங்களது எண்ணங்களைச்சிறிது பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?
தேவகாந்தன்: இதற்கான பதிலை என் வாசிப்பு சார்ந்த, அக்காலத்திய வாசிப்பின் சாத்தியங்கள் சார்ந்த தளத்திலிருந்து அணுகலாம் என நினைக்கிறேன். யாழ் நூலகத்தைப் பயன்படுத்துவதற்கான வயதாக அப்போதைய என் வயது இருக்கவில்லை. நான் பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் வயதில் வாசிக்க ஆரம்பித்தது அம்புலிமாமாவும், கல்கியும், ஆனந்தவிகடனும், கலைமகளுமாகவே இருந்தது. அதேவேளை நிறைய துப்பறியும், மர்ம நாவல்களையும் வாசித்தேன். அவையே அப்போது மலிவான விலையில் இறக்குமதியாகிக் கொண்டிருந்த நூல்களும். அந்த எழுத்து வகையே என் தேர்வாக இருக்கவில்லையாயினும், அவையே அப்போது மற்றவர்களிடமிருந்து கிடைக்கக்கூடியனவாக இருந்தன. எங்கள் குடும்பங்களின் மூத்த வாசகர்களிடமிருந்து இலகுவில் இவை கிடைத்தன. இதனால் அவர்களின் தேர்வையே நாம் வாசித்தோம். என்னைப் பொறுத்தவரை, இதிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றது சாவகச்சேரி பட்டின சபை நூலகத்தை நான் பயன்படுத்தும் வசதி வந்தபோதுதான். அப்போதும் தமிழக நூல்களே அங்கு பெருவாரியாகக் கிடைத்தன. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன், கு.ப.ரா., கு.அழகிரிசாமியென பலரையும் நான் அங்குதான் வாசித்தேன். ஈழத்து இலக்கியமென்ற பிரக்ஞை வாசிப்புத் தளத்தில் ஏற்பட்ட காலம் முற்போக்கு இலக்கியத்தின் வீச்சுக் காரணமாக ஏற்பட்டபோது அது அறுபத்தைந்தின் நடுப்பகுதியைச் சமீபித்திருந்தது. என் ஞாபகத்திற்கெட்டியவரை நான் வாசித்த முதல் இலங்கைத் தமிழ் நூல் இலங்கையர்கோனின் ‘வெள்ளிப் பாதரச’மாக இருந்தது. தொடர்கதையாக வெளிவந்த இளங்கீரனின் எழுத்துக்கள்பற்றி அறிந்திருந்தபோதும், வாராவாரம் தொடர்ந்து ஒரு நாவலைப் படிப்பது அப்போது வசதியாக இருக்கவில்லை. கே.டானியலும், டொமினிக் ஜீவாவும், நீர்வை பொன்னையனும், எஸ்.பொன்னுத்துரையும் எனக்கு நூல்களாகவே அறிமுகமானார்கள்.
இன்னுமொன்றையும் இங்கே குறிப்பிடலாம். இலங்கையர்கோன், சி.வைத்திலிங்கம் போன்றோர் கலைமகளாலும் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தனர். சி.வைத்திலிங்கத்தை நான் கலைமகள் சஞ்சிகை மூலமாகவே அறிந்தேன். பழனியப்பா பிரதேர்ஸ் அக்காலத்தில் இலங்கை எழுத்தாளர்களுக்கு குறிப்பிடத் தகுந்த ஆதரவு அளித்ததாக நான் நினைக்கிறேன். பல்வேறு சிறுகதைத் தொகுப்புகளிலும் இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளும் அடங்கியிருந்தன.
அனைவரையுமே நான் வாசித்திருந்தாலும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், எஸ்.பொன்னுத்துரை, கே.டானியல் என ஒரு வரிசை என் தேர்வில் உண்டு. இந்த வரிசையிலும் சி.வைத்திலிங்கத்தையே மற்றவர்களைவிட எனக்கு அணுக்கமானவராக நான் கருதுகிறேன். தமிழ்நாட்டில் கு.பா.ராஜகோபாலன்போல சி.வைத்திலிங்கம் ஈழத்தில். எனினும் தன் புதுமையான நடையாலும், சொற் பிரயோகத்தாலும் அதிகமாக என்னை வசீகரித்தவர் எஸ்.பொன்னுத்துரைதான். பதின்ம வயதினனாக இருந்தபடியால் அந்த எழுத்து அந்த வசீகரத்தை எனக்குத் தந்ததா என்றொரு கேள்வியும் அவ்வப்போது என்னுள் தோன்றுவதுண்டு. ஆனாலும் அப்போது அந்த வசீகரம் இருந்ததென்பது நிஜம். ஆக, தமிழக எழுத்துக்களினதும், ஈழ எழுத்துக்களினதும் சம பாதிப்பில் என் ஆரம்ப கால வாசிப்பு இருந்ததெனில், அந்த வாசிப்பின் பாதிப்பிலிருந்து ஒரு இளம் எழுத்தாளன் இலேசுவில் தவறிவிட முடியாதுதான். ஆனாலும் இந்த வகையான பாதிப்புகளை மீறி வழியும் நெறியுமற்று தான்தோன்றித்தனமாக என் எழுத்துக்கள் எழுந்ததாகவே நான் நினைக்கிறேன். இதனுடைய அர்த்தம் கருதுகோள்களைத் தெரிந்துகொண்டு நான் வரவில்லை என்பதே.
அப்போது இளம் சமுதாயத்தில் நிலவிவந்த ஒரு விகடமான வார்த்தைத் தொகுப்பை நீங்கள் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். ‘கண்டது கற்க பண்டிதனாவான்: கண்டது தின்ன வண்டியனாவான்’ என்பது அது. அக்காலத்தில் கண்டதும் கற்றவனாகவே நான் இருந்தேன். எனக்கான தேர்வும், எனக்கான வாசிப்பு முறையும் வர நான் மேலும் சில காலம் காத்திருக்கவே நேர்ந்தது.
பதிவுகள்: ஈழதமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டபின்னர் அண்மையில் நீங்கள் இலங்கை சென்று வந்திருக்கின்றீர்கள். அங்கு நீங்கள் கலை, இலக்கியவாதிகள் பலரைச்சந்தித்திருக்கின்றீர்கள். பல கலை, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கின்றீர்கள். உங்களது அனுபவத்தின் அடிப்படையில் யுத்தத்தின் பின்னரான ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? மேலும் கவிதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை போன்ற இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தின் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை , அவ்விதமிருப்பின் , சிறிது பகிர்ந்துகொள்ள முடியுமா?
தேவகாந்தன்: போராட்டம் வளரத் தொடங்கிய காலத்தில் மிக வீச்சுப் பெற்று வளர்ந்த இலக்கிய வடிவம் அங்கே கவிதைதான். சேரன், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோர் புதுக்கவிதையின் வீச்சுக்களுடன் பேச வந்த காலம் அது. சுதந்திரத்திற்கான, உரிமைக்கான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட எந்த நாட்டிலும் வீச்சுப்பெற்று வளர்ந்த இலக்கிய வடிவம் முதலில் கவிதையாகவே இருந்திருக்கிறது. அவ்வாறே இலங்கைத் தமிழ்ப் பரப்பிலும் ஆயிற்று.
அதுபோல் உரைநடை வடிவங்களும் புதிய உத்தியும், புதிய நடையும், புதிய மொழியும் கொண்டு வளர்வதும் இயல்பாகவே அங்கே நடந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அது பெரும் துர்ப்பாக்கியம். இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுகதையோ, நாவலோ போராட்டத்தின் முன்புகூட வல்லபம் பெற்ற வடிவங்களாயில்லை. எடுத்துக்கொண்ட பேசுபொருளால் எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’யும், புதிய கள விவரணத்தால் பாலமனோகரனின் ‘நிலக்கிளி’ மற்றும் தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’யும் அப்போது மிகவும் பேசப்பட்டன. இவற்றுக்கு முன்னதாக, இவ்வாறான இஸங்கள் மற்றும் இலக்கியக் கருதுகோள்களின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னால், மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம்’ அசலான இலக்கியமாக வெகுகாலத்துக்கு முன்பே 1914இல் உருவாகியிருந்தது. எடுத்துக்கொண்ட கதாம்சத்துக்கேற்ற களனும், பாத்திரங்களும், உரையாடலும், நடையும் கொண்ட சிறப்பான நாவல் அது. ஏறக்குறைய இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை அதற்கிணையாக ஈழத்தில் புனைவுசார் நூலெதுவும் உருவாகவில்லையென்று துணிந்து சொல்லலாம்.
ஆனால் அதன் பின்னரான ஈழத்து இலக்கியமோ, குறிப்பாக நாவல் வகையினம், போராட்ட காலத்தில் வளரவேண்டிய அளவுக்கும் வளராமலே இருந்தது. சிறுகதைக்கும் ஏறக்குறைய அந்த நிலைமைதான். பல்வேறு எழுத்தாளர்கள் எழுதினார்கள். பத்திரிகைகளும் தம் தேவை காரணமாக அவற்றை வாராவாரம் பிரசுரித்து வந்தன. ஆனால் சிறுகதையாகத் தேறாமல் பலவும் போயின. பரவலாக ஆன அளவிற்கு அவை வலிமையானவையாக ஆகவில்லை. இதைக் கேட்டால் சிலர் வல்வழக்காடவும் வரக்கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை.
இப்போது கவிதை ஆட்கொண்டிருந்த இடத்தை இலங்கைத் தமிழ்ப் பரப்பில் உரைநடை பிடித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. கவிதை தன் முக்கியத்துவத்தை இலங்கையைப் பொறுத்து இழந்திருக்கிறது எனத் தோன்றகிறது. தமிழ்ப் பரப்பு அளாவிய முடிவாகவும் இதை நான் சொல்வேன். கவிதையின் வீச்சுக்கான காலமாக இதை என்னால் பார்க்க முடியவில்லை. உலக நிலையை வைத்துப் பார்த்தும் அதைப் புரிந்துகொள்ள முடியும். இலங்கை மக்கள் இவ் யுத்த காலத்தில் அனுபவித்த துன்ப, துயரங்களுக்கு விரிந்த களப் பரப்பும், விவரணமும் தேவையாக இருக்கிறது. அதை நாவலே முதன்மையாக அளிக்க முடியும். சிறுகதைகூட ஓரளவுதான் இதைச் செய்யக்கூடும். இந்த மாற்றத்தின் நியாயம் இதுவெனில், இது தேவையான அளவுக்கும் வளராததற்கு நிறைய வேறு காரணங்கள் இருக்கின்றன.
மிகச் சிறிய வாசகப் பரப்பைக் கொண்டது ஈழத் தமிழிலக்கியம். இலக்கிய வெளிப்பாட்டுக்கான ஆர்வமோ, அர்ப்பணிப்போ மிகச் சிறியதாகக் கொண்டிருக்கும் ஒரு படைப்புலகமும் இருக்கிறது. ஒரு பெரும் யுத்தத்தின் மீட்சிக்குப் பின்னால் இவற்றையெல்லாம் சரியான அளவுகளில் எதிர்பார்த்துவிடக் கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பதிப்புலகம் பின்தங்கியிருக்கிற ஒரு தேசத்தில் பெரிதாக எழுத்தக்கறையும் உருவாகிவிடாது. யுத்தத்திலிருந்தான சுதாரிப்பிற்கே அங்கு வெகுகாலம் எடுக்கக்கூடும். ஆனாலும் அதற்கான முதற் தேவையாக பதிப்புக் களம் இருக்கிறது. ஒரு எழுத்தின் பூரணம் அது எழுதப்படுவதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. அது தன் வாசகப் பரப்பைச் சென்றடைவது அதைவிட முக்கியமானது.
ஈழத் தமிழிலக்கியம் என்றும் பின்தங்கியிருப்பதற்கு இந்த பதிப்புத்துறையையே நான் முதன்மைக் காரணமாகக் கொள்வேன். இலங்கை சந்தித்திருக்கும் யுத்தம் இலக்கியத்துக்கான கச்சாப் பொருளாக வெகுகாலத்திற்கு நிற்கக்கூடியது. முதலில் அதற்கொரு உறுதியான பதிப்புலகம் வேண்டும்.
பதிவுகள்: ஈழத்தமிழ் இலக்கியத்தின் இன்றைய பின்னடைவுக்கு அங்கு வளமானதொரு பதிப்புத்துறையொன்று இல்லாமையே என்று கூறுகின்றீர்கள். ஆனால் செங்கை ஆழியானின் கமலம் பதிப்பகம், மல்லிகைப்பந்தல், வரதரின் பதிப்பகம் போன்றவை முன்னர் நூல்களை வெளியிட்டு வந்துள்ளன. அவற்றின் இன்றைய நிலை என்ன? பூபாலசிங்கம் பதிப்பகமும் நூல்களை வெளியிட்டு வருகின்றார்களா? ஜீவநதி சஞ்சிகையினரும் நூல்களை வெளியிட்டு வருவதாக அறிகின்றோம். இவ்விதமாகப் பதிப்புத்துறையினர் ஓரளவுக்கு இயங்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இருந்தும் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்வகையான பதிப்பகங்கள் போதிய அளவில் மக்களிடத்தே எடுத்துச்செல்லவில்லை என்று கருதுகின்றீர்களா? அதனால்தான் ஈழத்தமிழ் இலக்கியத்தின் இன்றைய பின்னடைவுக்கு அங்குள்ள பதிப்புத்துறையின் செய்ற்பாடுகள் போதவில்லையென்று கூறினீர்களா?
தேவகாந்தன்: ஆசிரியரே நூலைப் பதிப்பிக்கவேண்டிய நிலைமையும், அவர் ஒரு பதிப்பகத்தின் பெயரைப் போட்டு நூலை வெளிக்கொண்டுவருவதும் பதிப்புலகம் அங்கே விரிந்துள்ளதாக அர்த்தமாகாது. செங்கை ஆழியானின் கமலம் பதிப்பகம் பெரும்பாலும் அவரது நூல்களையே வெளியிட்டது. வரதர் வெளியீடு பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டிருப்பினும் இப்போது இயக்கத்தில் இல்லை. பூபாலசிங்கம் பதிப்பகம் ஆண்டுக்கு ஒருநூலை வெளியிடுகிறது. ஜீவநதி ஒருநூலையோ இரண்டு நூல்களையோ இதுவரை வெளியிட்டிருக்கிறது. மல்லிகைப் பந்தல் ஜீவாவின் முதுமையினால் தொடர்ந்தும் மல்லிகை இதழைப் போலவே இயக்கத்தில் இல்லை. இவையெல்லாம் பதிப்புத் துறையின் வளர்ச்சியின் அடையாளங்களாக முடியுமா?
நூல் தேர்வு, அதன் செம்மையாக்கம், மெய்ப்பு பார்த்தல் ஆகிய யாவற்றையும் தனித்தனித் துறைகளாய்க் கொண்டு நூலை அச்சாக்கி வெளியிடும் பதிப்பகங்கள் அங்கே இல்லை. இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவிலும் இவ்வாறு இல்லை. ஆயினும் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களமும், குமரன் புத்தக இல்லமும் ஓரளவு தரமான நூல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றிலும் பெரும்பாலும் ஆய்வு சார்ந்த கட்டுரைகளே நூலாக்கப்படுகின்றன. குமரன் புத்தக இல்லம் சார்பில் இப்போது புனைவகம் என்ற புதிய பகுதி பழைய புனைவு நூல்களின் மறுவாக்கத்தைச் செய்து வருகிறது. மருதா பதிப்பகம் வன்னி மண்ணில் இப்போதுதான் காலூன்றியிருக்கிறது. கொடகே பதிப்பகம் சில தமிழ் நூல்களை வெளியிட்டிருக்கிறது. இவையெல்லாம் கவனிப்பாகிற முயற்சிகள் என்பதில் அய்யமில்லை. ஆனால் போதுமானவையல்ல.
பதிவுகள்: பதிப்புத்துறையைப்பற்றிக் கூறினீர்கள். தற்போது அங்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூல்கள் பல வெளிவருவதை அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகைகள் பலவும் வெளிவருகின்றன. இருந்தும் எழுத்தாளர்கள் இன்னும் தம் படைப்புகளை வெளியிடுவதில் சிரமங்களை எதிர்நோக்கித்தானிருக்கின்றார்கள். அரசின் பதிப்புத்துறைக்கான ஆதரவு ஏதுமின்றி அங்கு பதிப்புத்துறை வளர்வதற்கான சாத்தியங்களுண்டா? இலங்கையிலுள்ள நூலகங்கள் ஏதாவது பதிப்பகங்களிடமிருந்து நூல்களை வாங்கும் திட்டங்கள் ஏதாவது நடைமுறையிலுள்ளதா? மேலும் தமிழகத்திலுள்ளதைப்போல் புத்தகக் கண்காட்சிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடாத்திப் புத்தகங்களை விற்பதற்கான சாத்தியங்களுள்ளனவா?
தேவகாந்தன்: இவைபற்றி 2015 ஜனவரி சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்த புலம்பெயர் படைப்பாளிகளில் சிலர், குறிப்பாக நான், நடேசன், சாஸ்திரி, ஸர்மிளா செய்யித் போன்றோர் கருணாகரனின் முயற்சியில் ஓரிடத்தில் ஒன்றுகூடி கலந்தாலோசித்தோம். இதுபற்றி சில முன்னெடுப்புக்களைச் செய்ய கருத்துரீதியான சில ஒத்த முடிவுகளும் எடுக்கப்பட்டன. அவற்றை மேலும் சிந்தித்து காரிய சாத்தியமான முயற்சிகளைச் செய்ய 2016 ஜனவரி சென்னை புத்தகத் திருவிழாவில் நாம் மறுபடி சந்திப்பதாக இருந்தது. துர்ப்பாக்கியமென்னவெனில் இவ்வாண்டு சென்னை புத்தகத் திருவிழா சென்னையின் வெள்ளப் பெருக்கு காரணமாய் நடக்காது போய்விட்டது. நமது சந்திப்பும் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இலங்கை நூலகங்களுக்கும், கல்லூரி நூலகங்களுக்கும் தேவையான நூல்கள் விற்பனையாளர்களாலும் நூலைப் பதிப்பிக்கும் அவ்வவ் நூல்களின் ஆசிரியர்களாலும் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. நூலகங்களில் நூல்களை வாங்குவதுபற்றிய அரச திட்டமேதும் இதுவரை இல்லையென்றே தெரிகிறது. அந்தவகையில் தனிமனித முயற்சிகளால்தான் சில நூல்கள் வெளிவருவதையும், விற்பனையையும் இப்போதைக்குச் செய்யமுடியுமென்று நினைக்கிறேன்.
இது தவிர மக்களின் வாங்கும் திறனும் சிறப்பானதாக இல்லை. இறக்குமதியாகும் நூல்களின் விலை அதிகமாக இருக்கிறது. ஏறக்குறைய இந்திய விலையின் மூன்றே முக்கால் மடங்கு இலங்கை விலையில் நூல்களை வாங்குவது சிலபேராலும், சில நிறுவனங்களாலும் மட்டுமே சாத்தியமாகக் கூடியது. இறக்குமதியாகும் நூல்களின் விலைக்குச் சமமாக இலங்கையிலேயே அச்சாக்கக்கூடிய சூழ்நிலை அங்கே இப்பொழுது உருவாகிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பில் விலையைக் கட்டுப்படுத்த முடிந்தால் நூல் விற்பனையை நிச்சயமாக அதிகரிக்க முடியுமென்று நினைக்கிறேன்.
இலங்கைப் பதிப்புத் துறை சார்பில் ஆண்டுதோறும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு அரங்கில் நூல் கண்காட்சி நடக்கிறது. புதிதாக கொழும்பு தமிழ்ச் சங்கம் சார்பில் நூல் கண்காட்சிகளை நடத்த இப்போது ஆரம்பித்திருக்கிறார்கள். இவை போதிய பலனைத் தராவிட்டாலும் கணிசமான அளவில் தத்தமக்கான அளவிலும் வழியிலும் சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும்.
பதிவுகள்: உங்களது அவதானிப்பின்படி குறிப்பிடத் தகுந்த படைப்புகள் ஏதேனும் அங்கே தோன்றிருக்கின்றனவா?
தேவகாந்தன்: பரவலான இலக்கிய ஆக்கங்கள் தோன்றிக்கொண்டிருக்கும் மண்ணாக கிழக்கிலங்கையைச் சொல்ல முடியும். மலையகமும் தன் பழைய நிலைமையில் இப்போது இல்லை. கதை, கவிதை ஆதிய துறைகளிலும் ஆய்வுகளிலும் அவர்கள் வேகமாக முன்னேறி வருகிறார்கள். தம்மை ஒரு தேசிய இனமாக உணர்ந்து அவர்கள் தம் பூர்வீகம் தேடும் முயற்சியில் ஆய்வாகவும், புனைவாகவும் பல்வேறு ஆக்கங்களையும் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இது ஒரு நல்ல அடையாளம்.
மலையகம்போலவே நேரடியாக யுத்தத்தில் பாதிக்கப்படாத யாழ்ப்பாணத்திலும் பரவலாக இவ்வாறான முயற்சிகள் இருந்திருக்கவேண்டும். ஆனால் இப்போதுதான் நீடு துயில் கலைந்து அவர்கள் விழித்துக்கொண்டிருப்பதாகப் படுகிறது. இப்போது பல்கலைக் கழக மாணவர்களின் பல்வேறு இலக்கிய முயற்சிகள் கவனிப்பேற்படுத்துகின்றன. குறிப்பிடத் தகுந்த கவிஞர்கள் கிழக்கில் உருவானதுபோல் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்கள் வடக்கில் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது மலையகத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். புதிதாக மேற்கென்ற ஒரு பகுப்பையும் இப்போது வகுக்கவேண்டியுள்ளது. கிழக்கு, வடக்கு, மேற்கு, மத்தி எதுவானாலும் சரி, இதுவரை நடந்துவந்த பாதையில் பயணிப்பதன் மூலம் சீரிய இலக்கியத்தைப் படைத்துவிட முடியாதென்று நிச்சயமாக நான் கருதுகிறேன். கலகமும், அர்ப்பணிப்பும், தேடலும் கொண்ட ஒரு இளந்தலைமுறைக்காக ஈழத் தமிழிலக்கியம் காத்திருக்கிறது. அது விரைவில் நிறைவேற வேண்டுமென்பதே என் விருப்பம். நம்பிக்கையும் அது குறித்து எனக்கு நிறைய உண்டு.
ஆனாலும் பொது வாழ்வு இன்னும் தன் அழிமானத்திலிருந்து முற்றாக மீண்டுவிடவில்லை என்பதையும் நான் கண்டேன். சிறப்பான வழித் தடங்கள், வெளிநாட்டிலிருக்கும் தமிழர்களின் யாழ்ப்பாண செல்லுகைகள் இலங்கையில் சீரான நிலைமை தோன்றிவிட்டிருப்பதன் அர்த்தமல்ல. அதற்கு இன்னும் எவ்வளவோ காலங்கள் செல்லக்கூடும். ஆனாலும் கடந்த தசாப்தங்களில் இருந்த நிலைமையைவிட இப்போதுள்ள நிலைமையை பலவழிகளிலும் சிறப்பானதாக நான் சொல்வேன். படைப்பு முயற்சிகளுக்கு சீரான நிலைமையொன்று ஏற்பட்டு ஈழத்தில் படைப்பு வேகம் கொள்ளும் காலத்தில்தான் முக்கியமான தமிழ் நூல்கள் தோன்ற வாய்ப்புண்டாகும்.
பதிவுகள்: அண்மையில் ‘இந்த வனத்துக்குள்’ என்ற ஈழத்து நாவலொன்றுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். மேலும் தாட்சாயணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’, யோ.கர்ணனின் ‘கொலம்பஸின் வரைபடம்’ ஆகிய நூல்களுக்கும் நீங்கள் விமர்சனம் எழுதியிருக்கின்றீர்கள்.
தேவகாந்தன்: 'இந்த வனத்துக்குள்' அண்மையில் நான் வாசித்த நல்ல நாவல். அதுபோல் களநிலைமைகளுக்கேற்ற உரையும், மொழியும்கொண்டு அங்கே எழுத்துக்கள் உருவாகவேண்டும். நான் முன்பு குறிப்பிட்ட செம்மையாக்கம் என்ற பகுதி சரியாகக் கவனிக்கப்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக அந்த நாவல் உருவாகியிருக்குமென்று நம்புகிறேன்.
மேலும், உதயனின் ‘லோமியா’ நாவலும் குறிப்பிடக்கூடிய நாவலாக அமைந்திருக்க வேண்டியது. அது எடுத்துக்கொண்ட களம் அற்புதமானது. கதைசொல்லல் முறை சிறப்பாக இல்லாவிட்டாலும் அது ஈழத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்த நாவலாய் நின்றிருக்கும். ஆனால் சினிமாத் தனமாக அது நடுப்பகுதிக்கு மேலே கீழிறங்கிவிட்டது.
தாட்சாயணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’, யோ.கர்ணனின் ‘கொலம்பஸின் வரைபடம்’ ஆகியவற்றுக்கும் விமர்சனம் எழுதியிருக்கின்றேன். அவை மிகச் சிறந்த படைப்புகள் எனச் சொல்ல முடியாவிட்டாலும் அவை முக்கியமான படைப்புக்களே. மேலும் அவை தமிழ்நாட்டில் பதிப்பாகியவை. அதனால் கனடாவிலிருந்து சிரமமின்றி அவற்றைப் பெறக்கூடியதாயிருந்தது. அவ்வாறு சிரமமின்றி பெறக்கூடிய இடத்தில் பதிப்பானாலும் அவைபற்றிய தகவல் இங்கே (கனடாவுக்கு) தாமதமாகவே கிடைக்கிறது. தகவலே தெரியாமல் அவை மறைந்துவிடக்கூடாது என்பதற்கான முயற்சியில் அவை பற்றிய நூல் விமர்சனங்களை எழுதினேன். அவ்வாறு கிடைக்காமல் அநாமதேயமானவை எத்தனை இருக்குமோ? கிடைத்தவற்றுள் அவை முக்கியமான நூல்களே.
பதிவுகள்: புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகிலும் பல புதிய படைப்புகள் நூலுருப்பெற்றுள்ளன. அவை பற்றிய உங்களது கருத்துகளை அறிய ஆவலாயிருக்கின்றோம்.
தேவகாந்தன்: புலம்பெயர் படைப்புகள் என ஒரு வகையினம் தோன்றி சுமார் கால்நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. அது பொதுமைப்பட தமிழிலக்கியமாகவும், குறிப்பாக ஈழத் தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியாகவுமே இருக்க முடியுமென அப்போது பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றவர்களால் உரைக்கப்பட்டது. அதில் எனக்கு பூரண உடன்பாடு. புலம்பெயர் இலக்கியம், ஈழத்து இலக்கியம், தமிழக இலக்கியம், அயலக இலக்கியம் என்ற வகைமைகளை மீறி ஒரு படைப்பு தமிழ்ப் படைப்பாக உருவாகவும், கணிக்கப்பெறவும் வேண்டும். அப்போதே கலைத்துவம் முக்கியத்துவம் பெற்ற ஒரு படைப்பாக இருக்கமுடியும். இந்த வகையினங்களெல்லாம் ஒரு வசதிக்கானவைதான்.
பல்வேறு நூல்களும், புதுக்கவிதையாக சிறுகதையாக நாவலாக, புலம்பெயர் சூழலில் இப்போது நிறையவே வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஒரு வகையில் இது நல்ல அடையாளமே. எனினும் தமிழிலக்கியப் பொதுப் பரப்பில் இவற்றின் இருப்பு எவ்வாறிருக்கிறது என்பது முக்கியமான கேள்வியாகும்.
சில படைப்புகள் தம்மைத்தாமே முன்னிறுத்திக் கொள்கின்றன. சில அந்தமாதிரி முன்னெடுப்புக்களை கவனிப்பதேயில்லை.
ஒரு படைப்பு தன்னைத்தானே ஏதோவொரு பொழுதில் மேலெழுந்து வந்து நிலைநிறுத்திக்கொள்ளும் தகமையுடையதாய் இருக்கிறது. ஆயினும் சிலசில சந்தர்ப்பங்களில் இந்த விதியை மீறியும் சில படைப்புக்கள் காணாமல் போய்விடுகின்றன. உதாரணமாக ஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’யைச் சொல்லலாம். அதை வாங்கி ஆறு மாதங்களுக்குப் பின்னாலேதான் வாசிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அப்போது எனது புதிய நாவலான ‘கந்தில் பாவை’யைச் செப்பனிடும் வேலையில் தீவிரமாக நான் ஈடுபட்டிருந்ததினால் அதுபற்றி உடனடியாக எழுத முடியவில்லை. அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களில் குறிப்பிடத் தகுந்த நூல் அது. அது இலங்கைப் பிரச்னையைப் பேசாததில் அந்த நிலைமை அதற்கு ஏற்பட்டதா என்பது யோசிக்கப்பட வேண்டியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அது இலங்கையைப்போன்ற பல நாடுகளின் நிலைமையை, பொது அகதித்தனத்தை மௌனமாகப் பேசியதாக இருக்கிறது. அதுபற்றி எழுத குறிப்புகள் எடுத்துவைத்திருக்கிறேன். விரைவில் அதை எழுதவே யோசித்திருக்கிறேன்.
மற்றும்படி தீவிரவாசிப்புக்கான நூல்கள் குறைவாகவே இருக்கின்றன. சிறந்த படைப்பாளிகள் இல்லையென்பது இதன் அர்த்தமல்ல. அர்ப்பணிப்பு, தேடல், முயற்சி போன்றனவற்றின் இன்மைகளால் இது. இலங்கையில் வசதிகள் இல்லாததால் இலக்கியவாக்கம் குறைந்துள்ளதெனில், புலம்பெயர்ந்த நாடுகளில் அந்த வசதிகள் அதிகமாக இருப்பதால் அது குறைவாக இருக்கிறதென்றே நான் கருதுகிறேன். [தொடரும் ]
தேவகாந்தனுடனா நேர்காணல் பகுதி ஒன்று: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3282:2016-04-15-02-42-23&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34
தேவகாந்தனுடனான நேர்காணல் பகுதி மூன்று: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3359:2016-06-05-07-04-13&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34